எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, June 25, 2019

பாரம்பரியச் சமையல்களில் காரக்குழம்பு வகையும் பருப்புருண்டைக்குழம்பும்!

பலரும் விரும்பும் காரக்குழம்பு என்பது ஏதேனும் ஒரு தானோ, அல்லது இரண்டு மூன்று தான்களோ போட்டுச் செய்யும் வெறும் குழம்பு தான். இதற்குத் தேவையான பொருட்கள்:

புளி எலுமிச்சை அளவுக்கு ஊற வைத்துக் கொண்டு புளி ஜலம் 3 கிண்ணம்

உப்பு தேவையான அளவு, குழம்புப் பொடி/சாம்பார்ப்பொடி இரண்டு டீஸ்பூன்கள்
தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன் அரைத்து விழுதாகச் சிலர் சேர்ப்பார்கள். சிலர் துருவலை அப்படியே சேர்ப்பார்கள். அவரவர் விருப்பம் போல்!

தான்களாக முருங்கை, கத்திரி, தக்காளி, சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி அல்லது பெரிய வெங்காயம் ஒன்று பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தாளிக்க நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

கடுகு மற்றும் பருப்பு வகைகள் வகைக்கு ஒரு டீஸ்பூன், வெந்தயம் ஒரு டீஸ்பூன், மிவத்தல் 2 பச்சை மிளகாய் 2 தாளித்துக் கொண்டு கருகப்பிலை, பெருங்காயம் சேர்த்து வதக்கித் தான்களுக்குக் கொடுத்துள்ள காய்களையும் போட்டு நன்கு வதக்கவும். தக்காளியைக் கடைசியில் சேர்த்து வதக்கவும். காய்கள் வதங்கியதும் புளிக்கரைசலை ஊற்றி உப்பு, குழம்புப் பொடி சேர்க்கவும். காய்களை வதக்கும்போதே சிலர் குழம்புப் பொடியையும் போட்டு வதக்கிக் கொள்வார்கள். பொதுவாக நான் பொடி அரைக்கையில் மி.வத்தல் தவிர்த்து மற்ற சாமான்களை வெறும் வாணலியில் வறுத்தே சேர்ப்பதால் பொடியைத் தாளிப்பில் போட்டு வதக்கிக் கொள்ளுவது இல்லை. இது அவரவர் விருப்பம்.

காய்களை வதக்கிப் புளிக்கரைசலை ஊற்றிக் கொண்டு உப்பு, பொடி போட்டுக் கொதிக்கையிலேயே தேங்காய்த் துருவலை விழுதாக அரைத்துக் கொள்ளவும். புளி வாசனை போகக் குழம்பு கொதித்ததும் அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு கொதி விட்டதும் கீழே இறக்கவும். இப்போதெல்லாம் பெரும்பாலான ஓட்டல்களில் புளிக்குழம்பு, காரக்குழம்பு, வத்தக்குழம்பு என்னும் பெயர்களில் கொடுப்பது இவ்வகைக் குழம்பு தான்.  சில ஓட்டல்களில் தான்கள் போடாமல் இம்மாதிரிக் குழம்பைப் பண்ணி எடுத்துக் கொண்டு தனியாக சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றலை வறுத்துக் கொண்டு குழம்பில் மேலே சேர்த்துக் கலக்குவார்கள்.  இதனால் எல்லாம் ருசியில் கொஞ்சம் கொஞ்சம் மாறுபாடு இருந்தாலும் அடிப்படை ஒன்று தான்.  

அடுத்து பருப்புருண்டைக்குழம்பு. இந்தக் குழம்பு பெரும்பாலும் தஞ்சை ஜில்லாக்களில் செய்வதில்லை. ஒரு சிலர் செய்கின்றனர் என்றாலும் பெரும்பாலும் அங்கே எல்லாம் பருப்புருண்டைக்குழம்பு எனில் மோர்க்குழம்பு தான். ஆனால் இது புளி ஜலத்தில் செய்வது. 

நான்கு பேருக்குப் பருப்புருண்டை தயாரிக்க ஒரு சின்னக் கிண்ணம் துவரம்பருப்பு+ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு+ இரண்டு டீஸ்பூன் அரிசி. கடலைப்பருப்புச் சேர்ப்பதால் உருண்டை மென்மையாக மிருதுவாக வரும். எளிதில் உடைக்க வரும். துவரம்பருப்பு+அரிசி மட்டும் போட்டால் உருண்டை கெட்டியாக இருக்கும். ஆகவே அவரவருக்குப் பிடித்தபடி பருப்புக்களை அரிசியோடு சேர்த்து ஊற வைக்கவும்.

3 மிளகாய் வற்றல்+உப்பு+பெருங்காயம் சேர்த்து மிக்சி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும். விழுது கெட்டியாக உருட்டும் பதத்தில் இருக்க வேண்டும். அப்படி இல்லை எனில் கடாயில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, உபருப்பு, கருகப்பிலை தாளித்துக் கொண்டு இந்த விழுதைப் போட்டுக் கிளறிக் கொண்டு கெட்டியாக உருட்டும் பதத்தில் எடுத்துக் கொள்ளவும். கொத்துமல்லியும் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். இதை எலுமிச்சை அளவுக்கு உருண்டைகளாக உருட்டிக் கொண்டு தனியாக வைக்கவும். 

புளி ஒரு எலுமிச்சை அளவுக்கு எடுத்துக் கொண்டு நீர்க்க 3 கிண்ணங்கள் வரும்படிக்குக் கரைத்துக் கொள்ளவும்.

தேவையான குழம்புப் பொடி 2 டீஸ்பூன் போதும்.

தாளிக்க நல்லெண்ணெய், கடுகு, வெந்தயம், கருகப்பிலை, பெருங்காயம் மட்டும் போதும். இதற்குப் பருப்புக்கள் எல்லாம் போட்டுத் தாளித்தால் குழம்பு ரொம்பக் கெட்டியாக ஒரு மாதிரியாக ஆகிவிடும்.  இப்போது அடுப்பில் கடாய் அல்லது உருளியை வைத்துக் கொண்டு நல்லெண்ணெய் ஊற்றித் தாளிக்கும் பொருட்களைப் போட்டுத் தாளித்துக் கொண்டு புளி ஜலத்தில் பாதியை ஊற்றிக் கொண்டு தேவையான பொடியைப் போட்டு உப்பையும் சேர்க்கவும்.  மொத்தப் புளி ஜலத்திலும் உப்பு,பொடியைப் போட்டுக் கலந்து வைத்துக் கொண்டும் சேர்க்கலாம். உருண்டைகளை இரண்டு இரண்டாகக் குழம்பில் போடவும்! ஓர் இலைக்கரண்டியால் கிளறி விடவும். முதலில் போட்ட உருண்டைகள் கொதித்து மேலே வந்ததும் மறுபடி இரண்டு உருண்டைகளைப் போடவும். அவை கொதித்து மேலே வந்ததும் இப்படியே எல்லா உருண்டைகளையும் போட்டுக் கொதித்துக் கெட்டியாகும்போது மிச்சம் இருக்கும் புளி ஜலத்தை விடவும். அது கொதிக்கும் குழம்போடு சேர்ந்து கொதித்துப் புளி வாசனை போனதும் குழம்பை இறக்கி விடவும்.. ரொம்பக் கெட்டியாகவும் இல்லாமல் நீர்க்கவும் இல்லாமல் குழம்பு கரண்டியால் எடுத்து ஊற்றும் பதத்தில் இருக்க வேண்டும். 

ஒரு வேளை உருண்டைகளை இப்படி நேரடியாகப் போடுவதில் சரியாக வராது போல் தெரிந்தால், முதல் இரு உருண்டைகளைப் போடும்போதே தெரிந்து விடும். உருண்டை விரிய ஆரம்பித்தால் அத்தோடு நிறுத்திக் கொண்டு உருட்டிய உருண்டைகளை இட்லித் தட்டில் வைத்து ஆவியில் வேகவைத்துக் குழம்பு கொதிக்கையில் சேர்க்கலாம். அல்லது முதலிலேயே எல்லா உருண்டைகளையும் இம்மாதிரி இட்லித் தட்டில் வேகவைத்துக் கொண்டும் சேர்க்கலாம். இது கொஞ்சம் பயம் இல்லாமல் குழம்பைக் கொதிக்கவிட முடியும். ஆனால் நேரடியாக உருண்டைகளைப் போடுவது தான் சிறந்தது. நான் நேரடியாகவே போட்டு விடுவேன்.  

32 comments:

  1. நேரடியா உருண்டைகளைப் போட்டால், அதில் இருக்கும் பருப்பு கொஞ்சம் குழம்பில் கரைந்து குழம்பு பருப்பு சேர்த்த குழம்புபோல் இருக்கும். நன்றாக இருக்கும்.

    ஏன் புளிக்கரைசலை இரண்டாக பிரித்துக்கொள்ளச் சொல்கிறீர்கள்? மொத்த புளி கரைசலையும் முதலிலேயே கொதிக்கவைத்து அதில் உருண்டைகளைச் சேர்த்தால் என்ன?

    ReplyDelete
    Replies
    1. மொத்தப் புளி ஜலத்தையும் ஒரேயடியாக விட்டுக் கொண்டு உருண்டைகளையும் போட்டால், குழம்பு ரொம்பக் கெட்டியாக ஆகி விடும். கரண்டியால் எடுத்து ஊற்றும்படி இருக்காது.

      Delete
    2. நல்ல பாயிண்ட். இது நிறைய தடவை எனக்கு ஆகியிருக்கு. நன்றி.

      Delete
    3. மோர்க்குழம்பில் உருண்டைகளைப் போட்டாலும் கலவையை இம்மாதிரியே இரண்டாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்.

      Delete
  2. காரக்குழம்பு - செய்முறை நல்லா இருக்கு என்றாலும், இப்படியா ஹோட்டல்ல செய்யறாங்க? எனக்கென்னவோ சரவணபவன் மாதிரியான ஹோட்டல்கள்ல, தேங்காய் இன்னமும் அதிகமாக அரைத்துச் சேர்க்கிறாங்கன்னு தோணுது.

    நிறைய ஹோட்டல்கள்ல காரக் குழம்பு கெட்டியா இருக்கும். ஒருவேளை கொஞ்சம் வெங்காயம், தேங்காய் சேர்த்து அரைத்துச் சேர்க்கணுமோ?

    ReplyDelete
    Replies
    1. நான் சரவணபவனில் 2,3 தரம் அதுவும் வேறு வழியில்லாமல் டிஃபன் சாப்பிட்டிருக்கேன். அதுவே பிடிக்கலை. சாப்பாடெல்லாம் பெரும்பாலும் ஓட்டல்களில் நான் சாப்பிடுவதே இல்லை. சாப்பிடும்போது பார்த்ததை வைத்துத் தான் சொல்கிறேன். தேங்காய் மட்டும் தான் அரைத்து விடுவதாக எங்கள் காடரர் ஒரு முறை சொல்லி இருக்கார். வெங்காயம் அரைத்து விட்டால் ருசி மாறிவிடும்.

      Delete
    2. //தான்களாக முருங்கை, கத்திரி, தக்காளி, சின்ன வெங்காயம் ஒரு கைப்பிடி அல்லது பெரிய வெங்காயம் ஒன்று பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.// சரியாப் படிக்கணும் நெல்லைத் தமிழரே! நீங்க எப்போவுமே ஒரு பார்வை மட்டும் கொடுப்பீங்களோனு நினைக்கிறேன். இதிலே திட்டவட்டமாகத் தக்காளி சேர்க்கணும்னு எழுதி இருக்கேன். நீங்க எனக்கு வாட்சப்பிலே கேட்டப்போ காலை டிஃபனில் பிசி! வேறே எதுக்கோ மொபைலை எடுத்தப்போப் பார்த்தேன். பதிலுக்கு என்ன அவசரம்னு இருந்துட்டேன். ஆனால் இன்னிக்குச் சமையலுக்குனு தெரியாது! நல்லா இல்லைனு உங்க பெண் சொன்னதாகச் சொல்லி இருக்கீங்க! செய்முறையில் வித்தியாசம் இருக்கலாம். எங்க வீட்டில் என் மாமியாருக்கு இம்மாதிரிப் புதுசு புதுசாச் சமைத்தால் பிடிக்காது. ஆனால் மற்ற எல்லோரும் வாய் திறக்காமல் ரசிப்பாங்க! இது அரிசி உப்புமா, பொங்கல் போன்றவற்றுக்கும் அடைக்கும் கூடத் தொட்டுக்க எங்க வீட்டில் எல்லோருக்கும் பிடிக்கும்.

      Delete
    3. ஓட்டல்களில் செய்யும் காரக்குழம்பு வகைனு கீழே சொல்லி இருக்கேன். நீங்க கேட்டப்போ கணினியை எடுத்துப் பார்க்க முடியலை. நான் மொபைலில் இம்மாதிரிப் பதிவுகளுக்கு பதில் சொல்வது எல்லாம் வைச்சுக்கலை. மொபைலில் ஒரே ஒரு ஜிமெயில் தான் சேர்த்திருக்கேன். அதிலே பதில் எல்லாம் கொடுப்பதில்லை. வாட்சப் பார்க்கவும், எப்போவானும் முகநூல் பார்க்கவும், வெளியே சென்றால் குழந்தைகளோடு தொடர்பு கொள்ளவும் தான் மொபைல்.

      Delete
  3. இரண்டு குழம்பும் நன்றாக வந்திருக்கு கீதாமா.
    நான் கற்றுக்கொண்ட செட்டி நாட்டுக் காரக்குழம்பில்
    சின்ன வெங்காயம்,பூண்டு எல்லாம் சேர்த்து தேங்காயுடன் அரைப்பார்கள்.
    தானே கிடையாது.
    இங்கே பூண்டு சேர்ப்பதில்லை.
    ரொம்ப சாத்வீகம்.
    பருப்புருண்டையை மோர்க்குழம்பில் போடும்
    வினோதம் புக்ககத்தில் உண்டு.
    எனக்கு புளி சேர்த்து செய்யவே பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, நீங்க சொல்லுவது சின்ன வெங்காயம், பூண்டு போட்ட குழம்பு! இதுவேறே ரகம் இல்லையோ? பொதுவாகக் காரக்குழம்பில் சின்ன வெங்காயம், பூண்டைத் தானாகப் போட்டும் செய்வதையும் பார்த்திருக்கேன். அரைத்து விடுவது வேறே வகைனு நினைக்கிறேன். எங்க புக்ககத்திலும் மோர்க்குழம்பில் தான் பருப்புருண்டை போடுவார்கள். இப்போத் தான் நானாகக் கொஞ்ச காலமாக புளி விட்டுப் பருப்பு உருண்டைக்குழம்பு செய்கிறேன்.

      Delete
    2. மோர்க்குழம்பில் வடை (துவரை, அரிசி அரைத்து) சாப்பிட்டிருக்கேன். பருப்புருண்டை போட்டு இதுவரை மோர்க்குழம்பு சாப்பிட்டதில்லை. நல்லா இருக்குமா? நம்பிச் செய்துபார்க்கலாமா?

      Delete
    3. பருப்பு உருண்டை மோர்க்குழம்பு செய்முறை முந்தைய பதிவுகளில் பார்க்கவும். முதல்முறை செய்யப் போவதால் உருண்டைகளை இட்லித்தட்டில் உருட்டி ஆவியில் வேகவிட்டுச் சேருங்கள்! பின்னால் குழம்பில் நேரடியாகப் போட்டுப் பரிக்ஷை செய்துக்கலாம்.

      Delete
  4. ​காரக்குழம்புஎனப்படும் வகையில் தேங்காய் ​சேர்க்காமல் தான் பெரும்பாலும்.. ஆனால் காரக்குழம்பு கஷ்டப்பட்டு செய்வதில்லை! வெந்தயக்குழம்புதான்!

    ReplyDelete
    Replies
    1. இதிலே என்ன கஷ்டம் ஸ்ரீராம்? வெந்தயக்குழம்பு செய்வதிலே என்ன எளிமை? புரியலை!

      Delete
  5. காரக்குழம்பில் தாளிக்க பச்சை மிளகாய்? புதுசு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், பச்சைமிளகாய், தக்காளி இரண்டும் பெரும்பாலோர் சேர்க்க மாட்டார்கள். ஒரு முறை சேர்த்துச் செய்து பாருங்கள்!

      Delete
  6. ஆம், ஹோட்டல்களில் கொடுக்கும் காரக்குழம்பு இந்த வகைதான்.புளிப்....பாக இருக்கும்! தேங்காய் அரைப்பார்களா, தெரியாது.

    ReplyDelete
    Replies
    1. ஓட்டல்களில் தேங்காய்ப் பாலும் விடுவார்கள் எனக் கேள்வி! அதிகம் சாப்பிட்டதில்லை. கல்யாணங்களில் மூன்றாம் நாள் கட்டுசாதக் கூடை வைக்கும் அன்று பொரிச்ச குழம்பு, வத்தக்குழம்புனு பண்ணி இருப்பாங்க! அதிலே பார்த்தது மற்றும் அவங்க சொல்லிக் கேட்டது! வெங்காயம் போட்ட குழம்பிலும் சுண்டைக்காய், மணத்தக்காளிக்காய் வறுத்துச் சேர்க்கின்றனர்.

      Delete
  7. பருப்பு உருண்டைக் குழம்பு பாஸ் செய்துதான் சாப்பிட்டேன் என்று நினைக்கிறேன். அம்மா செய்ததாக நினைவில்லை. பாஸ் தின்னவேலி பத்தமடை!

    ReplyDelete
    Replies
    1. அவங்க நல்லா பழகும் விதத்திலிருந்தே இது தெரிஞ்சுருக்கணுமே....

      பத்தமடை என்பது நினைவுக்கு வரலை. நாங்க திருநெவேலி புஷ்கரத்துக்குச் சென்றபோது அந்த ஊரைத் தாண்டித்தான் போனோம்.. கல்லிடைக்குறிச்சி, பிரம்மதேசம் போன்றவை

      Delete
    2. நெல்லைத்தமிழரே, பொதுவாகத் தென் மாவட்டப் பெண்கள் நேருக்கு நேர் பார்த்துப் பேசுவார்கள். ஆகவே திருநெல்வேலிக்கு மட்டுமே அந்தப் பெருமை இல்லை! ஆனால் என் புக்ககத்தில் என்னோட இந்த நேருக்கு நேர் பேச்சுப் பிடிக்காது! தலையைக் குனிஞ்சுண்டு இழுத்துப் போர்த்திண்டு அடக்கமா இல்லைனு வருத்தப்படுவாங்க! :)))))))) நேரடியாகக் கண்களைப் பார்த்துப் பேசும் வழக்கம் அங்கே குறைவு.

      Delete
    3. கீதாக்கா யெஸ்ஸு யெஸ்ஸு பாஸ் பத்தமடை அதுவுமில்லை அவங்க திருக்குறுங்குடி பத்தியும் சொல்லிருக்காங்க. அதே அதே கீதாக்கா நாங்கல்லாம் நேரே பார்த்துத்தான் பேசுவோமாக்கும்!!ஹா ஹா மீக்கு ஒரே ஜந்தோஷம் பாஸ் எங்கூர்னு தெரிஞ்சதும். கீழ நீங்க சொல்லிருக்கறதுக்கு இங்க பதில்!!!!!!!!!!!!!!!!!
      பத்தமடை பாய்க்கு ரொம்ப ஃபேமஸ்...

      கீதா

      Delete
    4. நேரடியாகக் கண்களைப் பார்த்துப் பேசுவதுதான் சிறந்தது என்றுதான் சொல்லப்படுவதுண்டு. நான் அப்படித்தான்.

      கீதா

      Delete
    5. //நேரடியாகக் கண்களைப் பார்த்துப் பேசுவதுதான் சிறந்தது // - நிமிர்ந்த நன் நடையும் நேர்கொண்ட பார்வையும் - பாரதி.

      இப்போதான் ஒரு வாட்சப் செய்தி வந்தது.
      GOLF - இந்த விளையாட்டின் அர்த்தம் Gentlemen Only Ladies Forbidden
      Rule of Thumb - இது வந்த காரணம் - இங்கிலாந்தில் 1800களில், சட்டம், ஆண்கள் பெண்களை கட்டையால் அடிக்கலாம் (மனைவியை). ஆனால் கட்டையின் பருமன் கட்டைவிரலின் பருமனைவிட அதிகமாக இருக்கக்கூடாது. இது தெரியாமல்தான் நாம் thumb rule என்று பெருமையாகப் பேசுகிறோம்..ஹாஹா

      Delete
  8. அட! உங்க பாஸ் தினேலியா? தி/கீதாவுக்கும், நெல்லைக்கும் சந்தோஷமாக இருக்குமே! ஆனால் பருப்புருண்டைக்குழம்பு உங்க அம்மா செய்யலைனு சொல்வது ஆச்சரியமா இருக்கு! மறந்திருப்பீங்க!

    ReplyDelete
  9. இரண்டுமே சுவை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி, நன்றி.

      Delete
  10. கீதாக்கா காரக்குழம்பு இதே போலத்தான் செய்வேன். சில சமயம் தேங்காய் அரைத்து விடுவதற்குப் பதில் தேங்காய்ப் பால் சேர்ப்பதுண்டு. அப்புறம் சில சமயம் கொஞ்சம் சோம்பும் தாளிப்பேன். இல்லை என்றால் தேங்காய் மற்றும் கொஞ்சமே கொஞ்சம் சோம்பு வைத்து அரைத்துவிடுட்டுக் கொதிக்க விட்டு விடுவேன். இது ஒரு வகை என்று செய்வதுண்டு அக்கா.

    ஹோட்டல்களில் இதில் சும்மா சு வ அல்ல ம வ போட்டு விடுவாங்க. நமக்கு வீட்டில் எல்லாம் சு வ ம வ எல்லாம் போடுவது வேறு வகையில்...

    அப்புறம் ப உ கு நான் க ப வை து ப வுக்குச் சமமாகப் போடுவேன். மாமியாருக்கு எல்லாம் ம்ருதுவாக இருக்க வேண்டும் என்று. அப்படியே பழகிவிட்டது. அப்படியே கொதிக்கும் குழம்பில் போடுவேன். தனியாக வேக வைப்பதில்லை. அது போல நான் இதுவரை அரிசி யும் சேர்த்ததில்லை அக்கா. பருப்பு மட்டுமே. அதுவே நன்றாகக் கெட்டியாக அரைத்து உருண்டை பிடிக்க வருகிறது என்று.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இந்தக் குழம்பிலோ, சாம்பாரிலோ நான் சோம்பு சேர்ப்பதில்லை. சில சமயம் சுண்டைக்காய்க் குழம்பு நீங்க சொன்ன மாதிரிப் பண்ணியது உண்டு. பருப்பு உருண்டை கொதிக்கும் குழம்பில் தான் நானும் போடுவேன் என்றாலும் குழம்புக்கான புளி ஜலம் மொத்தமும் விட்டுக் கொதிக்க விடுவதில்லை! :)

      Delete
  11. இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்தக் குழம்புகள்...

    கீதா

    ReplyDelete
    Replies
    1. இங்கேயும் பிடிக்கும். ஆனாலும் அடிக்கடி இப்போல்லாம் பண்ணுவது இல்லை.

      Delete
  12. சுவையான குறிப்புகள்.

    ReplyDelete