எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, June 11, 2019

எ.பி.யில் போட்ட கத்திரிக்காய்ப் பொரிச்ச கூட்டு!

எல்லோரும் பச்சடி, மோர் ரசம்னு போடும்போதெல்லாம் அட, இதெல்லாம் கூடப் போடலாமானு நினைச்சுப்பேன். ஆனாலும் பல சமையல் குறிப்புக்கள் படங்கள் சரியில்லை என்பதால் பகிர்வதில்லை. எ.பி.யில் படம் எடுப்பதில் மன்னாதி மன்னிகள்/மன்னர்கள் இருக்காங்க! எழுதுவதில் கேட்கவே வேண்டாம். இதுக்கு நடுவில் நம்மளோட மொக்கை எடுபடணுமே! யோசனை தான். ஆனால் பாருங்க மார்ச் மாசம் வந்திருந்த என் தம்பி மனைவி என்னிடம், "அக்கா, அம்மா பண்ணுகிற மாதிரிப் பொரிச்ச கூட்டு எப்படிப் பண்ணணும்?" என்று கேட்டாள். பண்ணியே காட்டிடலாம் என நினைத்து முதல் நாள் கத்திரிக்காய்க் கறிக்கு நறுக்கிய கத்திரிக்காய்த் துண்டங்கள் சமைக்காமல் கிடந்ததை வைத்துச் செய்தேன். எல்லோரும் சாப்பிட்டாங்க தான்! ஆனால் அன்னிக்கு அது சரியா அமையலைனு என்னோட மனசாட்சி ஏகப்பட்ட கூவல்! அதுமட்டுமா? அன்னிக்குக் குழம்பும் சரியா அமையலை! ஆனாலும் யாரும் எதுவும் சொல்லலை, வழக்கம் போல் நம்ம நக்கீரரைத் தவிர்த்து! அவர் குழம்பைக் கரண்டியில் எடுக்கையிலேயே "சரியா வரலையே! ஏன் கல்சட்டியில் பண்ணலை!" என ஆட்சேபக் குரல் எழுப்பிட்டார். க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என மனசுக்குள் சொல்லிக் கொண்டேன். அதோடு அன்னிக்குத் தான் முதல் முதலாக தேஜஸ் எக்ஸ்பிரஸ் பயணம் வேறே இருந்ததால் ஒரே மன இறுக்கம். ரயிலில் ஏறும் வரை இருந்தது. அப்புறம் ஒரு நாள் பேச்சு வாக்கில் அன்னிக்குப் பொரிச்ச கூட்டே சரியா வரலை! பாவம்! எல்லோரும் வாயை மூடிக் கொண்டு சாப்பிட்டாங்க!" என்றேன்.

க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இப்போ க்ர்ரினது அவர். அன்னிக்கே சொன்னேனே என்றார். என்ன செய்ய முடியும் இனிமே? திரும்ப வந்தால் நல்லாப் பண்ணிப் போட்டுக்கலாம். ஆனால் இந்தப் பொரிச்ச கூட்டு மட்டும் அவங்க இரண்டு பேருக்கும் அதாங்க என் மன்னி, என் தம்பி மனைவி இரண்டு பேருக்கும் சரியாவே வரதில்லையாம். அதுக்கப்புறமா 2,3 முறை பொரிச்ச கூட்டுப் பண்ணினப்போ எல்லாம் படம் எடுக்கவோ எழுதவோ மறந்துட்டேன்.முந்தாநாள் கத்திரிக்காய்ப் பொரிச்ச கூட்டு மறுபடி பண்ண நறுக்கும்போதே காய் நல்ல காய் எனத் தெரிந்தது. சரி, இன்னிக்கு எப்படியானும் படம் எடுத்து எ.பி.க்கு அனுப்பிடணும்னு முடிவு செய்தேன். அப்போவும் நறுக்கும்போதெல்லாம் படம் எடுக்கலை.

நான்கு பேருக்குத் தேவையான பொருட்கள்:

நல்ல கத்திரிக்காயாக அரைக்கிலோ/ நான் நாலு கத்திரிக்காயில் பண்ணினேன்.

தேங்காய் ஒரு  சின்ன மூடி/தேங்காய்த் துருவல் மட்டும் ஒரு டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு கொஞ்சம் அல்லது ஒரு டேபிள் ஸ்பூன் பச்சரிசியை ஊற வைக்கவும். அரிசி மாவு ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டேன்.

சாம்பார்ப்பொடி தேவையானால் ஒரு டீஸ்பூன்,மஞ்சள் பொடி தேவையானல் அரை டீஸ்பூன்.  சாம்பார்ப் பொடி சும்மா நிறத்துக்காகக் கொஞ்சம் போல் போட்டேன்.

உப்பு தேவையான அளவு

தாளிக்க தே.எண்ணெய் கடுகு, உளுத்தம்பருப்பு, சின்னதான் மி.வத்தல் கருகப்பிலை, பெருங்காயத் தூள்.

கத்திரிக்காய்களைச் சின்னத் துண்டங்களாக நறுக்கிக் கொண்டு கடாயில் எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும். பின்னர் தேவையான அளவுக்கு ஜலம் விட்டு வேக வைக்கவும். எந்தக் காயையும் வதக்கிய பின்னர் வேக வைத்தால் சீக்கிரம் வேகும். அம்மாவோட முறை!
கடாயில் வேகும் கத்திரிக்காய்கள். தேவையானால் மஞ்சள் பொடி அரை டீஸ்பூனும் சாம்பார்ப் பொடி அரை டீஸ்பூனும் சேர்க்கவும். அரைக்கிலோ கத்திரிக்காய்க்கு ஒரு டீஸ்பூன் சாம்பார்ப் பொடி தேவை. கத்திரிக்காய் வெந்ததும் உப்புச் சேர்க்கவும். அடுப்பைத் தணித்து வைத்து வேக வைக்கவும்/கத்திரிக்காய் குழைய வெந்ததும் தேங்காய்த் துருவலோடு ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு (அரைக்கிலோ கத்திரிக்காய் எனில்) நான் இங்கே சேர்த்தது ஒரு
டீஸ்பூன் தான். சேர்த்து அரைக்கவும். நன்கு நைசாக அரைக்கலாம். அல்லது அரிசி ஊற வைத்திருந்தால் தேங்காய்த் துருவலோடு சேர்த்து அரைக்கலாம். அரைத்த விழுதை வெந்து கொண்டிருக்கும் கத்திரிக்காயில் கலக்கவும்.


அரைத்த விழுது.கொஞ்சம் தளரவே இருக்கலாம். பொரிச்ச கூட்டு வகைகளே கொஞ்சம் தளர இருந்தால்நன்றாக இருக்கும். ரொம்பக் கெட்டியாகச் சேர்ந்தாற்போல் இருந்தால் அவ்வளவு சுவை இருப்பதில்லை.

20190518_112430.jpg

கூட்டில் அரைத்த விழுதைச் சேர்த்தாயிற்று. நான் நிறம் வேணும் என்பதற்காகக் கொஞ்சம் சாம்பார்ப் பொடியும், மஞ்சள் பொடி கால் டீஸ்பூனும் சேர்த்தேன். எதுவும் சேர்க்காமலும் பண்ணலாம். வெள்ளையாக வரும்.  அரைத்த விழுதைப் போட்டு ரொம்பக் கொதிக்க விட வேண்டாம். ஓர் கொதி வந்தால் போதும்.கீழே இறக்கிப் பாத்திரத்தில் மாற்றித் தாளித்த பின்னர் கூட்டு. தாளிப்பில் கடுகு, உபருப்பு, பெருங்காயப் பொடி, கருகப்பிலை, சின்னத் துண்டு மி.வத்தல்.  பொரிச்ச கூட்டு என்றால் வெறும் தேங்காய் மட்டுமே போட வேண்டும். தேவையானால் தாளிதத்தில் மி.வத்தல் போட்டுக்கலாம். இம்மாதிரிப் பொரிச்ச கூட்டுகள் அவரைக்காய், கொத்தவரைக்காய், சௌசௌ, புடலை, பூஷணி, வாழைக்காய் போன்ற எல்லாவற்றிலும் பண்ணலாம். பீன்ஸிலும் நான் பண்ணுவேன். என்றாலும் கத்திரிக்காய், கொத்தவரைக்காய் போல் மற்றவற்றில் ருசி இருப்பது இல்லை. இதையே தேங்காய் அரைத்து விடாமல் கூட்டுக் கொதிக்கையில் மாவு மட்டும் கரைத்து விட்டு விட்டுத் தாளித்ததில் கடுகு, உபருப்புப் போட்டதும் கருகப்பிலை, பெருங்காயம் போட்டுப் பொரித்துக் கொண்டு தேங்காயைப் போட்டு வறுத்துச் சேர்க்கலாம். இதுவும் ஒரு வகை பொரித்த கூட்டு. பொரித்த குழம்பு வேறே, இது வேறே! 

6 comments:

 1. திரும்பவும் ருசித்தேன்.

  நாளை முடிந்தால் இதனைச் செய்துபார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. செய்ங்க. எந்தக் காயிலும் பண்ணலாம், என்றாலும் நாட்டுக்காய்களில் தான் ருசியாக இருப்பதோடு கத்திரிக்காயில் தனி ருசி!

   Delete
 2. கீதாக்கா நான் உங்க ரெசிப்பி கத்திரிக்கா பொரிச்ச கூட்டு செஞ்சிட்டேன் இதோட 3 டைம்ஸ் :)

  நாளைக்கு அநேகமா 4 வது முறை செய்யப்போறேன்

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா,ஹா, ஏஞ்சல்! ஹாப்பி கத்திரிக்காய்க் கூட்டு!

   Delete
 3. அருமை. ஏஞ்சல் இதை மூன்று நான்கு முறை செய்துவிட்டாராம்.

  ReplyDelete
  Replies
  1. @ஸ்ரீராம், அப்போ நீங்க? :))))))

   Delete