எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, July 31, 2017

உணவே மருந்து! மாங்காய் 5

அடுத்து இப்போ மாங்காய்த் தொக்குப் போடலாம். தொக்குப் போடவென இங்கே திருச்சி/ஶ்ரீரங்கம் சந்தையில் தனியாக மாங்காய்கள் விற்கின்றனர். ஆனால் நான் கல்யாணத்துக்கு முன்னால் வரை மதுரையில் இருந்தப்போ எல்லாம் இங்கே ஒட்டு மாங்காய் என்று சொல்லப்படும் கல்லாமை மாங்காயிலேயே தொக்குப் போட்டுப் பார்த்திருக்கேன். அதுவே கொஞ்சம் தித்திப்பாக இருக்கும் என்பதால் எங்க அம்மா வீட்டில் வெல்லமெல்லாம் சேர்ப்பதில்லை. ஆனால் மாமியார் வீட்டில் கட்டாயமாக வெல்லம் போட வேண்டும். இங்கே வெல்லம் போடுவதை உங்கள் விருப்பத்தில் விட்டு விடுகிறேன். :)

நல்ல தொக்கு மாங்காய் பெரியதாக இருந்தால் ஒன்று

நடுத்தரமாக இருந்தால் இரண்டு அல்லது மூன்று

மிளகாய் வற்றல் சுமார் 100 கிராம், வெறும் வாணலியிலோ அல்லது கொஞ்சமாக எண்ணெய் விட்டோ வறுத்துப் பொடித்துக் கொள்ளலாம். இதோடு பெருங்காயக் கட்டியையும் பொரித்துப் போட்டுப் பொடிக்கலாம்.

மிளகாய்த் தூள் எனில் ஒரு சின்னக் கிண்ணம்

உப்பு தேவையான அளவுக்கு அரைக்கிண்ணம் போதும்.

மஞ்சள் பொடி ஒரு டீஸ்பூன் அல்லது இரண்டு டீஸ்பூன் மாங்காய்த் துருவலுக்கு ஏற்ப

கடுகு, வெந்தயப் பொடி தேவையானால் இரண்டு டீஸ்பூன் (போடாவிட்டாலும் தப்பில்லை)

வெல்லம் தேவையானால் ஒரு டேபிள் ஸ்பூன் பொடி செய்தது. விருப்பத்தைப் பொறுத்தது.

வதக்க நல்லெண்ணெய் இரண்டு குழிக்கரண்டி அல்லது ஒரு கிண்ணம்

தாளிக்கக் கடுகு இரண்டு டீஸ்பூன்

மாங்காயை நன்கு கழுவித் துடைத்துக் கொண்டு தோலை நீக்கவும். பின்னர் காரட் துருவியில் துருவிக் கொள்ளவும். சிலருக்கு அது பிடிக்காது! வெறும் கத்தி அல்லது அரிவாள் மணையால் சின்னச் சின்னச் சீவல்களாகப் போட்டுக் கொள்ளவும்.

அடுப்பில் கடாய் அல்லது இரும்பு வாணலியை வைத்து நல்லெண்ணெயை ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகைப் போடவும். கடுகு பொரிந்த உடனே மாங்காய்த் துருவலைப் போட்டு மஞ்சள் பொடி, உப்பைச் சேர்க்கவும். நன்கு கிளறவும். காரப் பொடியை இப்போது போட வேண்டாம். அளவு தெரியாமல் கூடப் போடும் வாய்ப்பு இருக்கிறது. நான் உப்பையே கொஞ்சம் கிளறிய பின்னர் சரியான அளவு வந்ததுமே சேர்ப்பேன். அப்படியும் செய்யலாம். நன்கு கிளறிக் கொஞ்சம் சுருண்டு வரும்போது காரப்பொடியைச் சேர்க்கவும், காரப் பொடியைச் சேர்த்துப் பின்னர் நன்கு கிளற வேண்டும். எண்ணெய் போதாது போலிருந்தால் கொஞ்சம் சேர்க்கலாம். என்றாலும் தொக்கு பதமாக ஆனதும் எண்ணெய் பிரிந்து வரும். அப்போது தேவையானால் வெல்லம் சேர்த்துக் கிளறிக் கீழே இறக்கவும். கடுகு, வெந்தயப் பொடி பிடித்தால் சேர்க்கலாம். இதுவும் விரைவில் கெட்டுப் போகாது. வெளியேயே வைக்கலாம்.

மாங்காய்த் தொக்கு வெல்லம் சேர்த்தது.

மேலே சொன்னபடி எல்லாம் செய்து காரப்பொடி போட்டுக் கிளறிய பின்னர் வெல்லத்தைத் தூள் செய்து ஒரு சின்னக் கிண்ணத்தால் அளந்து போடவும். வெல்லமும் சேர்ந்துகொண்ட பின்னர் தொக்கு உருண்டு திரண்டு ஒட்டாமல் வரும்போது கீழே இறக்கி வறுத்த ஜீரகப் பொடியைச் சேர்க்கவும். ஜீரகப் பொடி இல்லாமலும் செய்யலாம்.

தித்திப்பு மாங்காய் ஊறுகாய்

இதற்கும் ஆவக்காய்க்கு நறுக்குகிறாப்போல் மாங்காய்த் துண்டங்களை நறுக்கிக் கொண்டு அவற்றோடு காரக் கலவை சேர்க்கும்போது சுமார் கால்கிலோ வெல்லத்தைத் தூள் செய்து மாங்காய்த் துண்டங்களோடு சேர்க்கவும். இந்தக் கலவையைப் போட்டதும் மாங்காய் ஊறுகாயை ஜாடி அல்லது கல்சட்டியோடு மேலே வெள்ளைத் துணியால் வேடு கட்டி வெயிலில் 4,5 நாட்கள் வைத்து எடுக்கவும். பின்னர் வறுத்த ஜீரகம், சோம்புப் பொடி சேர்த்துப் பயன்படுத்தவும். வெயிலில் வெல்லம் உருகிக் கொண்டு மாங்காயோடு சேர்ந்து காரம், புளிப்பு, இனிப்பு நிறைந்த கலவையாக இருக்கும். சப்பாத்தி, பூரி, பரோட்டா போன்றவற்றோடு சாப்பிட நன்றாக இருக்கும். 

9 comments:

  1. மாங்காய்த் தொக்கு - நினைத்தாலே நாவில் நீர். நானும் பண்ணியிருக்கிறேன்.

    தித்திப்பு மாங்காய் ஊறுகாய் - அட ராமா!

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெ.த. புளிப்பு, தித்திப்பு, காரம் நிறைந்த அந்த ஊறுகாயை ஒருமுறை தொட்டுக்குங்க! அப்புறம் புரியும்! நானும் உங்களாட்டமாத் தான் சொல்லிட்டு இருந்தேன். சிலவற்றிற்குத் தித்திப்பும் காரமும் தேவையாவே இருக்கு. உதாரணமாக வட இந்தியா பாணி புளிச்சட்னி, பேரிச்சைச் சட்னி! இதிலே புளிப்பு, தித்திப்பு, காரம் எல்லாமும் இருக்கும். சாட் வகையறாவுக்கு, தயிர் வடைக்கு, சோளே தயாரிக்கையில் எனப் பயன்படும்.

      Delete
  2. அள்ளி அள்ளித் தின்பது... ஆசையுடன் தொட்டுக் கொள்வது! பழைய வாசனை வரும்வரை கொண்டாடலாம்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், அள்ளி அள்ளி? ஹிஹிஹிஹி, சாப்பிடுங்க!

      Delete
  3. ஆஹா இங்கே மாங்காய் தொக்கு! நடக்கட்டும்....

    திருவரங்கத்தில் இதற்கென்றே தனிக்காய் உண்டு - உண்மை! பெரிய அளவில் இருக்கும் இந்தக் காய்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், கெத்தாமரிக்காய் பத்தி எழுதிட்டீங்களே! நன்றிப்பா.

      Delete
  4. காய். ..காய். .மாங்காய்.

    ReplyDelete