எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, July 14, 2017

உணவே மருந்து! முருங்கை 4

முருங்கைக்காய்க் குழம்பு! இதை வெறும் குழம்பு என்றே சொல்லணும். என்றாலும் என் மாமியார் வீட்டில் முருங்கைக்காய் வத்தக்குழம்பு என்பார்கள். இது செய்யத் தேவையான பொருட்கள். வழக்கம்போல் முருங்கைக்காய்கள் உங்க இஷ்டத்துக்கு எடுத்துக்கலாம்.

நேத்திக்கும் நம்ம ரங்க்ஸ் 3,4 முருங்கைக்காய்கள் வாங்கி வந்துட்டார். அப்படியாவது சர்க்கரை குறையாதா என்ற சபலம். ஆனால் அவருக்கு என்னமோ அரை இட்லி அதிகம் ஆனால் கூட சர்க்கரை எகிறும். அதுவே எனக்குச் சாப்பிட்டால் ஏறாது. சாப்பிடும் முன்னர் கொஞ்சம் கூட இருக்கிறாப்போல் தெரியும். 110க்குக் கீழே இருக்க வேண்டியது 124 அல்லது 130 என இருக்கும். அதுக்கெல்லாம் நான் கவலைப்படறதே இல்லை.

முருங்கைக்காய்கள் 2

புளி ஒரு எலுமிச்சை அளவு ஊற வைத்து ஒன்றரைக்கிண்ணம் சாறு எடுத்துக் கொள்ளவும்.

சாம்பார்ப் பொடி 2 டீஸ்பூன். (நம்ம வீட்டிலே ரசப்பொடிதான், அதைத் தான் இந்த மாதிரிக் குழம்புகளுக்குப் போடுவோம்.)

உப்பு தேவையான அளவு

தாளிக்க நல்லெண்ணெய் ஒரு குழிக்கரண்டி அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன்

கடுகு,

கடலைப்பருப்பு, துபருப்பு, உபருப்பு, வெந்தயம் தலா அரை டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் வற்றல் ஒன்று அல்லது இரண்டு

பெருங்காயம் ஒரு சின்னக் கட்டி அல்லது அரை டீஸ்பூன் பவுடர்

கருகப்பிலை ஒரு ஆர்க்கு

அடுப்பில் உருளியை வைத்து அல்லது கடாய் அல்லது நான் ஸ்டிக் பான் ஏதோ ஒண்ணை வைத்து நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் முதலில் பெருங்காயம் கட்டி எனில் போடவும். கூடவே கடுகையும் சேர்க்கவும். கடுகு வெடித்ததும் பருப்புவகைகள், வெந்தயம் சேர்க்கவும். மி.வத்தல், கருகப்பிலை சேர்க்கவும். முருங்கைக்காய்களை நீளவாட்டத்தில் நறுக்கி தாளிதத்தில் சேர்த்து நன்கு பிரட்டிக் கொடுக்கவும். ஒரு இரண்டு நிமிஷம் முருங்கைக்காய்கள் வதங்க வேண்டும். பின்னர் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை ஊற்றி உப்புச் சேர்த்துக் கொதிக்க விடவும். குழம்பு ஓரளவுக்குக் கெட்டியாகவும் வரும். அதே சமயம் புளிவாசனை, பொடிவாசனை போகக் கொதித்தும் இருக்கும். அப்போது இறக்கி வைக்கவும். அல்லது குழம்பிலிருந்து எண்ணெய் பிரிய ஆரம்பிக்கையில் இறக்கவும். சூடான பருப்பு சாதம் (நெய் ஊற்றியது) அல்லது நெய் ஊற்றிய வெறும் சாதத்தோடு இந்தக் குழம்பைப் பரிமாறவும்.

முருங்கைக்காய்ப் பொரிச்ச குழம்பு

இதற்குத் தான்கள் நிறைய இருந்தால் தான் நன்றாக இருக்கும். நான்கு பேர் என்றால் குறைந்தது நடுத்தர அளவு முருங்கைக்காய் ஏழு, எட்டு அல்லது பத்து வரை தேவை. எல்லாவற்றையும் நீளவாட்டத்தில் நறுக்கிக் கொள்ளவும். ஒரு உருளி அல்லது, கடாயைக் காய வைத்து தே.எண்ணெய் ஊற்றிக் கொண்டு முருங்கைக்காய்களை அதில் போட்டு வதக்கிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து ஒரு தம்பளர் தண்ணீரில் வேக விடவும். இது ஒருபக்கம் இருக்கட்டும்.

பாசிப்பருப்பு குழைய வேக வைத்தது அரைக்கிண்ணம்

வறுத்து அரைக்க

தே எண்ணெய் இரண்டு டீஸ்பூன்

மிளகு ஒரு டீஸ்பூன், மி.வத்தல் ஒன்று, உளுத்தம்பருப்பு இரண்டு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் ஆகியவற்றை ஒவ்வொன்றாக வறுத்து ஆற வைத்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வெந்து கொண்டிருக்கும் முருங்கைக்காய்களில் காய்கள் நன்கு வெந்ததும் வெந்த பாசிப்பருப்பைச் சேர்த்து அரைத்த விழுதையும் சேர்த்துக் கொதிக்க விடவும். பின்னர் கீழே இறக்கி வைத்து ஒரு இரும்புக்கரண்டியில் தே.எண்ணெய் ஊற்றிச் சூடாக்கிக் கடுகு, உபருப்பு, ஒரு சின்ன மி.வத்தல், கருகப்பிலை தாளித்துக் குழம்பில் ஊற்றவும். தேவையானால் பச்சைக்கொத்துமல்லி ஊற்றிச் சூடான சாதத்தோடு பரிமாறவும்.

முருங்கைக்கீரை

முருங்கைக்கீரையை அடையில் சேர்க்கலாம். பருப்பு உசிலி செய்யலாம். பாசிப்பருப்புச் சேர்த்துத் தேங்காய் போட்டுக் கறி மாதிரிச் செய்யலாம். வெங்காயம் தக்காளி சேர்த்து நெய் ஊற்றி வதக்கலாம். (இதைச் சாதத்தோடு சேர்த்துச் சாப்பிடலாம்.)

முருங்கைக்கீரை அடை:

எப்போதும் அரைக்கிறாப்போல் அடைக்கு அரைத்துக் கொள்ளவும். முருங்கைக்கீரையை ஆய்ந்து நறுக்கிச் சுத்தம் செய்து கழுவி வடிகட்டி வைத்துக் கொள்ளவும். அடை மாவில் இந்த கீரையைச் சேர்க்கவும். தோசைக்கல்லைக் காய வைத்து அடையாக வார்க்கவும். கொஞ்சம் கனமாகவே வரும். முடிந்த வரை மெலிதாக ஆக்கவும். அடை ஒரு பக்கம் வெந்த பின்னர் திருப்பிப் போட்டு வேக வைத்துச் சூடாகப் பரிமாறவும்.

முருங்கைக்கீரைப் பருப்புசிலி

முருங்கைக்கீரையை ஆய்ந்து நறுக்கிச் சுத்தம் செய்து கழுவி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

துவரம்பருப்பு+ கடலைப்பருப்பு இரண்டும் சேர்ந்து ஒன்றரைக்கிண்ணம் ஊற வைக்கவும். இரண்டு மணி நேரம் ஊறினால் போதும். காலை ஒன்பது மணிக்குள் சமைக்கிறாப்போல் இருந்தால் காலை எழுந்ததுமே ஐந்து மணிக்கு ஊற வைக்கலாம். ஏழு மணி ஏழரைமணிக்கெல்லாம் அரைக்க முடியும்.

அரைத்த விழுதை நறுக்கிய முருங்கைக்கீரையோடு சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் இட்லிப்பானையில் ஒரு ஒற்றைத்தட்டில் துணி அல்லது இலையைப் போடவும். இதைப் பழங்காலம் என்போர் ஓட்டைகள் இல்லாத ஒற்றைத் தட்டில் நன்கு ததும்ப எண்ணெய் தடவி முருங்கைக்கீரைக்கலவையை அதில் பரத்தவும். துணி அல்லது இலை போட்டிருந்தால் அவற்றில் பரப்பவும். மூடி வைத்து வேக விடவும். பதினைந்து நிமிஷம் ஆகும் முருங்கைக்கீரை வேக! அதன் பின்னர் வெளியே எடுத்துக் கைகளாலேயே உதிர்க்கலாம்.

வாணலியில் சமையல் எண்ணெய் அல்லது தே.எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, உளுத்தம்பருப்புத் தாளித்துக் கொண்டு உதிர்த்த கலவையைப் போட்டு நன்கு கிளறவும். உதிர் உதிராக வரும். அதோடு கொஞ்சம் முறுகலாகவும் வர ஆரம்பிக்கும். அப்போது கீழே இறக்கிச் சூடான சாதம், குழம்புடன் பரிமாறவும். இதிலேயே சூடான சாதத்தைப் போட்டுக் கொண்டு நெய் ஊற்றிக் கொண்டு சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும். 

6 comments:

  1. தக்காளி விலை ஏறியதும் முருங்கைக்கீரையில் இறங்கிவிட்டீர்களா? இதே செய்முறையை நான் முருங்கைக்குப் பதில் கத்தரிக்காயகளைப் போட்டுச் செய்துபார்க்கிறேன். முருங்கைக் கீரைக்குப் பதில் வெறும் கீரை.

    ஆனாலும் ரொம்ப இடைவெளி எடுத்துக்கிறீங்க.

    ReplyDelete
    Replies
    1. முருங்கைக்கீரை எப்போவுமே பிடித்தமானது. சென்னையில், அம்பத்தூரில் இருந்தவரைக்கும் காசு கொடுத்து வாங்கினதில்லை. இங்கே காசு கொடுத்து வாங்குவதால் எப்போவானும். :) தக்காளிக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லை.

      Delete
    2. கத்திரிக்காய்ப் பொரிச்ச குழம்பு மேலே சொல்லி இருக்கும் மாதிரியில் செய்யலாம். பிஞ்சுக் கத்திரிக்காயில் நன்றாக இருக்கும். பிள்ளை பெற்றவர்களுக்குப் பத்தியத்தில் இது உண்டு. சில வீடுகளில் கத்திரிக்காய், "கரப்பான்" எனச் சொல்லிச் சேர்க்க மாட்டார்கள்.

      Delete
  2. வெந்தயக்குழம்புக்கு நாங்கள் கடலைப்பருப்பு மட்டுமே தாளிப்போம். மற்ற பருப்புகள் போடுவதில்லை.

    ஏற்கெனவே முடிவு செய்திருக்கும்படி, நாளை எங்கள் வீட்டில் முருங்கைக்கீரை தேங்காயத் துவட்டல்!​ ரொம்ப நாளாச்சே என்று நேற்றுதான் பாஸ் கிட்ட சொன்னேன். சனிக்கிழமைக்கு திட்டம் செய்திருக்கிறார்!

    ReplyDelete
    Replies
    1. நான் கடலைப்பருப்புக் கூடத் தாளித்தது இல்ல. என் பிறந்த வீட்டில் தாளிதம் எல்லாம் ரொபக் கம்மியாத் தான் போடணும். இங்கே வந்து போடச் சொல்லிப் போட்டு அதே பழக்கம் ஆகிவிட்டது. ஆனாலும் நான் கொஞ்சமாய்ப் போடுவேன். கொஞ்சம் என்றால் கால் டீஸ்பூன் கூட இருக்காது! :)

      Delete
  3. செய்து பார்க்கிறோம் அம்மா... நன்றி,,,

    ReplyDelete