தயிர் சாதத்துக்குச் சாதம் குழைவாக இருக்க வேண்டும். சாதாரண முறையில் சாதம் சூடாக இருக்கையிலேயே பிசைந்து விட வேண்டும். ஆழாக்கு அரிசியைக் குழைவாகச் சாதம் தயார் செய்து கொண்டு அதில் சுமார் சம அளவு காய்ச்சிய பாலைச் சேர்க்கவும். ஒரு கரண்டியால் அல்லது மத்தால் நன்கு மசிக்கவும். ஆடை இல்லை எனில் அரைக்கிண்ணம் தயிரை விட்டுப் பிசையலாம். நன்கு பிசைந்த பின்னர் ஒரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டுச் சூடானதும் கடுகு போட்டுப் பொரிந்ததும் பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கிப் போடவும். பெருங்காயத் தூள் சேர்க்கவும். சாதக் கலவையிலும் பெருங்காயத் தூளைச் சேர்க்கலாம். தாளிதத்தைச் சாதத்தில் கொட்டித் தேவையான உப்பைச் சேர்த்து ஆற வைத்துப் பரிமாறவும்.
இன்னொரு முறையில் சாதத்தைக் குழைவாக வடித்துக் கொண்டு தயிரும், பாலும் சமமாகச் சேர்த்துக் கொண்டு நன்கு பிசையவும். சுக்கு ஒரு அங்குலத்துண்டை எடுத்து நன்கு பொடியாக்கிச் சாதத்தில் கலக்கவும். உப்போடு கருகப்பிலையைச் சேர்த்துக் கசக்கிச் சாதத்தில் போடவும். இதற்குத் தாளிதம் வேண்டாம். தாளித்தாலும் கடுகு மட்டும் போதும். இதைக் கொஞ்சம் கெட்டியாகவே பிசைந்து வைத்துக் கொண்டு வேண்டும்போது தளர்த்திக் கொண்டு சாப்பிடலாம். பிரயாணங்களுக்குத் தயிர் சாதம் எடுத்துச் செல்கையில் இம்மாதிரி தயார்செய்து எடுத்துச் சென்றால் நெடு நேரம் புளிக்காமல் இருக்கும்.
இன்னொரு முறையில் சாதத்தைப் பால் விட்டுக் குழைய வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். சாதம் தயார் ஆனதும் அடுப்பில் இருந்து எடுத்து நன்கு மசித்துக் கொள்ளவும். தேவையான தயிர் அல்லது தயிரிலிருந்து எடுத்த பால் ஏடு ஆகியவற்றைப் போட்டு உப்புச் சேர்த்துக் கிளறவும். வாணலியில் நல்லெண்ணெய் வைத்துக் கடுகு, பச்சை மிளகாய், இஞ்சி, கருகப்பிலை சேர்த்துப் பெருங்காயம் சேர்த்துச் சாத்தில் கலக்கவும். பச்சைக் கொத்துமல்லி இருந்தாலும் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். பால் ஏடு இல்லை எனில் வெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் போட்டுக் கலக்கலாம். வெள்ளரிக்காய்த் துண்டங்களைப் பொடியாக நறுக்கி இதனுடன் சேர்க்கலாம். மாங்காய்க் காலத்தில் மாங்காயையும் பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். இவை எல்லாமே சாதத்தின் அளவுக்குத் தகுந்தாற்போல் சேர்க்க வேண்டும். நிறையச் சேர்க்கக் கூடாது. மாதுளை முத்துக்களையும் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சேர்க்கலாம். பிடித்தவர்கள் கறுப்பு திராக்ஷை அல்லது பன்னீர் திராக்ஷையைச் சேர்த்துக் கொள்ளலாம். இதற்குத் தொட்டுக்கொள்ளத் தனியாக ஊறுகாய் தேவைப்படாது.
அமுதமாக இருக்கிறது. ந்ருசிம்ஹ ஜயந்திக்கு
ReplyDeleteபாலில் வேக வைத்த சாதமும்,துளி உப்பும்,
கடுகு கருவேப்பிலை தான்.
வெண்ணெயும் தயிரும் சேர்த்து விடுவேன்.
பாட்டி சொல்படி சுடச்சுட தயிர் சாதம்:)
வாங்க வல்லி. என் அம்மா கூடப்பாலில் வேக வைத்துத் தான் தயிர்சாதம் கலப்பாங்க. வெண்ணெய் கட்டாயம் உண்டு. நானும் அதுபடியே செய்கிறேன்.
Deleteநல்ல பயனுள்ள குறிப்புகள்...
ReplyDeleteவாங்க துரை, முதல் வருகையா? சுருக்கமான கருத்து! :)
Deleteதயிர் சாதம் - கோவில்லதான் அனேகமா எப்போதும் இது நல்லா இருக்கும். அப்படி இல்லைனா, ஊறுகாய் விளம்பரத்துல போடற படத்துல நல்லா இருக்கும்.
ReplyDeleteமூன்று மெதட்களில் நல்லாவே எழுதியிருக்கீங்க.
வாங்க நெ.த. எங்க வீட்டிலே நான் பண்ணும் தயிர்சாதமும் பிரசித்தி பெற்றது. வெளியிலே தயிர்சாதம் பிடிக்கவே பிடிக்காது. ஒரு முறை மாமா எழும்பூர் சங்கீதாவிலே வாங்கிட்டு டப்பாவிலே ஒரு பிடி தான் சாதம், மாதுளை முத்துக்கள், திராக்ஷை என ஒரு பிடி. 75 ரூ ஒரு டப்பா! இங்கே ஸ்ரீரங்கம் மடப்பள்ளி ஓட்டலில் புளியோதரையும், தயிர்சாதமும் நன்றாக இருக்கும். ஆர்டரின் பேரில் வீட்டுக்குக் கொண்டு வந்து தருவாங்க. வீடு க்ளீனிங் செய்யும்போதெல்லாம் மடப்பள்ளியில் தான் ஆர்டர்! இப்போ அம்பேரிக்காவிலிருந்து வந்தப்புறமாக் கொரோனா ஊரடங்கும் கூடவே வந்துட்டதாலே வெளியே வாங்கறதே இல்லை. சுயம்பாகம் தான்.
Deleteநீங்க சொல்வது சரிதான். கருடர் சன்னிதிக்கு எதிரே உள்ள கடையில்தானே சொல்றீங்க. அங்க சர்க்கரைப் பொங்கல், புளியோதரை மற்றும் தத்யோன்னம் நாங்கள் வாங்கிச் சாப்பிட்டிருக்கோம். அதில் எனக்குப் பிடிக்காதது என்னன்னா, தத்யோன்னத்துக்கு நாரத்தை கார ஊறுகாய் தருவாங்க (அவங்க பாவம் 10 ரூபாய்க்கு என்னதான் தர முடியும்) ஹோட்டல்ல தயிர் சாதம் சாப்பிடுவது க்ரைம்தான். அதுக்குக் குடுக்கற காசுல, வீட்டுல எல்லோருக்கும் திருப்தியாவும் சிறப்பாகவும் செய்துடலாம்
Deleteநெல்லை, ஸ்ரீரங்கத்திலே மடப்பள்ளி ஓட்டல் தெற்குச் சித்திரை வீதியிலே இருக்கு. முன்பும் ஒரு முறை சொன்னேன். நீங்க ஆர்யபடாள் வாசலுக்கு எதிரே இருக்கும் ப்ரசாத ஸ்டாலையே மடப்பள்ளினு நினைக்கறீங்க. கோயில் மடப்பள்ளி தனியா இருக்கு. ரங்கநாதரைப் பார்த்துட்டுப் பிரகாரம் சுத்திக் கொடிமரம் கிட்டே வரதுக்கு முன்னாடியே பார்க்கலாம். வாசனையே காட்டிக் கொடுக்கும். ஒரு காலத்தில் அங்கே தான் நாங்க புளியோதரை, தோசை, தயிர்சாதம், செல்வரப்பம் எல்லாம் வாங்குவோம். நேரடியா உள்ளே இருந்தே எடுத்துட்டு வந்து கொடுப்பாங்க! 97,98, அதுக்கப்புறமா ஒரு தரம், வருஷம் நினைவில் இல்லை.2005, 2007, 2009 இல் என்று நினைக்கிறேன். அங்கே தான் வாங்கினோம். ஆனால் பின்னால் எல்லாம் மாறி விட்டது. நாங்க வந்த புதுசிலே சாயங்காலம் ஆனால் கிளி மண்டபத்தில் வைத்துக் கூட பட்டாசாரியார்கள் கொடுப்பாங்க. இஷ்டப்பட்ட பணம் கொடுக்கலாம். ஒவ்வொரு சமயம் தோசை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் இருக்கும் தக்காளித்தொக்கோடு சாப்பிட்டுவிட்டு இருக்கும் சாதத்தில் மோரை விட்டுச் சாப்பிடுவோம். இப்போல்லாம் அதெல்லாம் நிறுத்திட்டாங்களாம். நான் சொல்லுவது மடப்பள்ளி என்னும் பெயரிலே இருக்கும் ஓட்டல். கோயிலுக்குள்ளே இருக்கும் ப்ரசாத ஸ்டால் இல்லை.
Deleteதயிர் சாதத்துக்கு கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை திருவமாறுவதுதான் அதுக்கு சுவையைக் கொடுக்குதுன்னு நினைக்கிறேன்.
ReplyDeleteகோவில்ல சில சமயம் ரொம்ப சூடா இருக்கும்.
சரவணபவன் தயிர்சாதம்தான் நீங்க சொல்ற மாதிரி திராட்சை, மாதுளைலாம் சேர்ந்து இருக்கும்.
நல்ல தயிர்சாதத்துக்கு புத்தம் புதிய மாங்காய் ஊறுகாய் யம்மியா இருக்கும். வேற எதுவும் சேராது (போனாப் போகுதுன்னா புளிக்காய்ச்சல், இஞ்சிப் புளி போன்றவைகளும் ஓகே).
கோயில் தயிர்சாதத்திலே எனக்குப் பிடிச்சது மதுரை வடக்கு மாசி வீதி வடக்குக் கிருஷ்ணன் கோயில் கோஷ்டியில் வாங்கினது தான். சரவணபவனில் எல்லாம் சாப்பாடே சாப்பிட்டதில்லை. மாமா அலுவலகத்தில் பார்ட்டி கொடுக்கையில் போய்ச் சாப்பிட்டிருக்கார். உன்னால் எல்லாம் சாப்பிட முடியாதுனு சொல்லுவார். என்றாலும் சரவணபவன் போனதே 2, 3 தரம் தவிர்க்க முடியாமல் போனோம். அண்ணாநகரில் 2 முறையும் அசோக் பில்லர் கிட்டே இருப்பதில் ஒரு முறையும். நாங்க மாங்காய்த் துண்டம் ஊறுகாய் தான் அதிகம் தொட்டுப்போம். புளி இஞ்சி, புளி மிளகாயும் நல்லா இருக்கும். கொத்துமல்லித் தொக்கும் நல்லா இருக்கும்.
Delete89-92ல் சரவண பவன் சாப்பாடு அனேகமா வாரத்துக்கு நாலு நாட்கள் சாப்பிட்டிருக்கேன். தி நகர் (உஸ்மான்) ப்ராஞ்ச் மாதிரி எனக்கு அசோக்நகர் பிராஞ்ச் பிடிக்காது. அங்க டிஃபன் சாப்பிட்டிருக்கேன். அந்தக் காலத்துல சரவண பவன் சாப்பாடு அவ்வளவு நல்லா இருக்கும்.
Deleteஉங்களுக்கு கொடுத்துவைக்கலை.
சரவணபவன் போகணும்னு அப்படி ஒண்ணும் பெரிய ஆவல் எல்லாம் இல்லை. 100க்கு மேல் உணவு ஐடங்கள் கொடுப்பதாகச் சொல்லுவார்கள். அதைப் பார்க்கத்தான். சாதாரணச் சாப்பாட்டிலேயே சப்பாத்தி, தால், மோர்க்குழம்பு, வத்தல்குழம்பு, சாம்பார், ரசம், பாயசம், 2 கறி. 2 கூட்டுனு கொடுக்கிறாங்களே! அதுவே சாப்பிட முடியாது என்னால்.
Delete//கறுப்பு திராட்சை அல்லது பன்னீர் திராட்சை// - விதை இல்லா திராட்சைதான் சரிப்படும்.
ReplyDeleteபச்சை திராக்ஷை போலவே பன்னீர் திராக்ஷையும் சின்னச் சின்னதாக விதைகள் இல்லாமல் கிடைக்கின்றன.
Deleteசமயங்களில் தட்டில் சாதம் விட்டு அளவாய் மோர் விட்டு பிசைவதே அருமையாய் அமைந்து விடும். தொட்டுக்க வடுமாங்காய் அல்லது நார்த்தங்காய். பண்டிகை இல்லை என்றால் சின்ன வெங்காயம்!
ReplyDeleteவாங்க ஸ்ரீராம், நான் பழைய சாதத்துக்குத் தான் சின்ன வெங்காயம் தொட்டுப்பேன். எப்போவானும் இரவு நேரத்தில் தயிர்சாதம் சாப்பிட்டால் அன்னிக்கு விரதம் இல்லைனா இருக்கும். வடுமாங்காய் எனக்கு மோர்சாதத்துக்குத் தொட்டுக்கப் பிடிக்கிறதே இல்லை. :)))) குழம்பு சாதத்துக்குத் தான். அதுவும் வெறும் குழம்பு, வற்றல் குழம்பு போன்றவற்றிற்குத் தான்.
Deleteஉண்மையில் நான்கூட வடுமாங்காய் மோர் சாதத்தைவிட குழம்பு சாதத்துக்குதான் வடுமாங்காய்...
Deleteசின்ன வெங்காயம் மோர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்வதை என்னால் கற்பனைகூட பண்ணமுடியலை. யாரோ, மோர் சாதத்தில் சின்ன வெங். கட் பண்ணிப்போடுவோம்னு சொல்லியிருந்தாங்க.
DeleteAt the most, நான், இட்லிமிளகாய்ப்பொடி எண்ணெய் குழைத்து, அதில் சின்ன வெங். கட் பண்ணிப்போட்டு, மோர் சாதத்திற்குத் தொட்டுக்கொண்டிருக்கிறேன் (அபூர்வமா) எனக்குப் பிடித்த காம்பினேஷன்.
ராத்திரி ஜலம் விட்டு வைச்ச பழைய சாதத்தில் கடைந்த மோர்விட்டு உப்புப் போட்டுப் பிசைந்துவிட்டுச் சின்னவெங்காயம், பச்சைமிளகாய் நறுக்கி அதில் கலந்து சாப்பிட்டால் அந்த ருசியே தனி! சில சமயம் வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்காமல் சாப்பிடும்போது நறுக்கிப் போட்டுக் கொண்டு உப்போடு சேர்த்துத் தொட்டுப்போம். எங்க வீட்டில் வித விதமான ஊறுகாயெல்லாம் அப்பா போடச் சொல்ல மாட்டார். வடுமாங்காயை விட்டால் எலுமிச்சை, இஞ்சி, பச்சை மிளகாய் போட்டுக் கடுகு தாளித்த உப்பு ஊறுகாய் தான். கார ஊறுகாயெல்லாம் எண்ணெய் விட்டுப் போட வேண்டும் என்று அப்பா அதுக்கெல்லாம் ஒத்துக்கவே மாட்டார். மாங்காய்க் காலத்தில் அம்மா கொஞ்சம் மாங்காய் வாங்கி அவ்வப்போது துண்டம் மாங்காய் போட்டுத் தருவார். சில சமயம் அதிலே கூடக் காரப்பொடி போடத் தடா வந்துடும். அப்போ மாங்காய், இஞ்சி, பச்சைமிளகாய், காரட் நறுக்கி உப்புப் போட்டுக் கொடுப்பார். இங்கே இந்த உப்பு மட்டும் போட்டுப் பண்ணும் மாங்காய் பண்ணினாலே மாமாவுக்குப் பிடிக்காது. ஊறுகாய் எப்போதும் 2,3 வகை இருக்கணும். இப்போவும் எலுமிச்சை, மாங்காய்த் துண்டங்கள் போட்டதுனு இருக்கு. எலுமிச்சை எப்போவும் ஸ்டாக்கில் இருக்கும். ஊற ஊற நல்லா இருக்கும்னு மாமாவுக்குப் பிடிக்கும். ஆனால் கொஞ்சமே கொஞ்சம் தான்! தொட்டு நாக்கில் வைத்துக் கொண்டு இரண்டு, மூன்று கவளம் சாப்பிட்டு விடுவார். ஊறுகாய் இங்கே செலவே ஆகாது.
Deleteஜலம் விட்ட சாதத்துக்கு சின்ன வெங்காயம் சாப்பிடலாம். ஆனால் அதை வெயில் காலத்தில் சாப்பிடுவது நன்று. நெல்லை யாரோ என்று சொல்லி இருப்பது என்னைதான். வடித்த புது சாதத்தில் சின்ன வெங்காயம் நறுக்கிப் போட்டு பாலும் துளி மோரும் கலந்து மதியானத்துக்கு எடுத்துப் போவோம். எனக்குப் பிடிக்கும். சின்ன வெங்காயமும் ரெண்டு பச்சை மிகாய் உப்பும் நசுக்கிப்போட்டும் தொட்டுக் கொள்வதுண்டு. என் அம்மா இளம் பச்சை மிளகாயை அப்படியே கடித்து தொட்டுக் கொள்வார்!
Deleteஹாஹாஹா, ஶ்ரீராம், நானும் மோர்சாதம் பிசைந்தது ராத்திரி சாப்பிட நேர்ந்தால் சி.வெ. நறுக்கிச் சேர்த்துப்பேன் எனக்கூ மட்டும்.
Deleteகலந்த சாதத்தில் தயிர் சாதம் சூப்பர்தான். அதில் பழங்கள் போடுவது பிடிக்காது.
ReplyDeleteநானும் பழங்கள் போட்டதில்லை. மாமாவுக்கு வெள்ளரிக்காய், மாங்காய், காரட், இஞ்சி போட்டால் கூடப் பிடிக்காது. கடுகு, பச்சை மிளகாய், கொஞ்சமாய் இஞ்சி, கருகப்பிலை மட்டும் தான்.
Deleteநல்ல குறிப்புகள். செய்வதுண்டு.
ReplyDelete