எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, August 1, 2020

பாரம்பரியத்தில் மாங்காய் சாதமெல்லாம் உண்டா?

மாங்காய் சாதம்! முதல்லே என்னோட முறையில் செய்தது! இதற்குத் தேவையான பொருட்கள்
மாங்காய்த் துருவல் ஒரு கிண்ணம்,
பச்சை மிளகாய்3, இஞ்சி ஒரு சின்னத்துண்டு, தேங்காய்த் துருவல் அரைக்கிண்ணம், பிடித்தமானால் ஜீரகம் ஒரு தேக்கரண்டி. இதைத் தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

மஞ்சள் பொடி அரைத் தேக்கரண்டி, மிளகாய்த் தூள் அரைத்தேக்கரண்டி(அல்லது அவரவர் காரத்துக்கு ஏற்ப) பெருங்காயப்பொடி அரை தேக்கரண்டி, உப்பு தேவைக்கு, வெந்தயப்பொடி அரை தேக்கரண்டி.

தாளிக்க நல்லெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன், ஒரு டேபிள் ஸ்பூன் வதக்கத் தேவைப்படும். அதைத் தனியாக வைத்துக்கொள்ளவும்.

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கருகப்பிலை, பெருங்காயப் பொடியைத் தாளிதத்திலும் சேர்க்கலாம். தனியாகவும் சேர்க்கலாம். அவரவர் விருப்பம்.  தேவையானால் காரம் வேண்டுமெனில் ஒரு மிளகாய் வற்றலும் தாளிப்பில் சேர்க்கலாம்.

கடாயில் எண்ணெய் வைத்துக்கொண்டு அது காய்ந்ததும் துருவிய மாங்காய்த் துருவலைப் போட்டுக் கொஞ்சம் வதக்கிக் கொள்ளவும். மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, பெருங்காயப்பொடி சேர்த்துக் கிளறிக்கொண்டு அரைத்த விழுதையும் சேர்க்கவும். நன்கு கிளறவும். தேவையான உப்பைச் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை அணைக்கவும். 

ஒரு தட்டில் நன்கு உதிராக வடித்த சாதத்தைப் போட்டுக் கொண்டு கொஞ்சம் நல்லெண்ணெய் விட்டு அரை டீஸ்பூன் உப்பைப் போட்டு நன்கு கிளறவும். வேறொரு வாணலியில் தாளிக்கத் தேவையான நல்லெண்ணெயை ஊற்றிக் கொண்டு அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை, கருகப்பிலை, மிளகாய் வற்றல் போட்டுத் தாளித்துக் கொண்டு அதை ஆற வைத்திருக்கும் சாதத்தில் கொட்டவும். இம்முறையில் தாளிப்புக் கரகரவென ஊறிக்காமல் இருக்கும். கரகரப்புத் தேவை இல்லை எனில் மாங்காய் விழுதை வதக்கும்போதே தாளிதத்தையும் சேர்க்கலாம். தாளித்த சாதத்தில் தேவையான மாங்காய் வதக்கிய விழுதைப் போட்டு சாதத்தை நன்கு கலக்கவும். சாதத்தில் முழுமையாக மாங்காய் விழுது கலந்த பின்னர் தயிர்ப்பச்சடி அல்லது டாங்கர் பச்சடியுடன் சாப்பிடலாம்.

இப்போப் பாரம்பரிய முறைப்படி மாங்காய் சாதம் பண்ணுவதைப் பார்க்கலாம்.

இதற்குத் தாளிப்பில் உள்ள காரம் மட்டுமே போதும் என நினைப்பவர்கள் பச்சை மிளகாய், மிளகாய் வற்றல் ஆகியவற்றைப் போட்டுக்கொள்ளலாம். இல்லை என்பவர்கள் மிளகாய்ப் பொடியைச் சேர்த்துக்கலாம். மிளகாய்ப் பொடியைச் சேர்த்தால் கொஞ்சம் தொக்குப் போல் ஆகிவிடும் என்பதால் மிளகாய் தாளிப்பே போதும் என்பது என் கருத்து.

மாங்காய் பெரிதாக ஒன்று. ஒட்டு மாங்காய் எனப்படும் கல்லாமை மாங்காய் தான் இதற்குப் பெரும்பாலும் நன்றாக இருக்கும். மாங்காய்த் துருவலுக்கு ஏற்றாற்போல் மிளகாய் எடுத்துக்கணும். வதக்க எப்போவும் போல் நல்லெண்ணெய். 

தாளிப்பில் சேர்க்க பச்சை மிளகாய் ஆறு, வற்றல் மிளகாய் 4 மஞ்சள் பொடி ஒரு டீஸ்பூன், பெருங்காயப்பொடி ஒரு டீஸ்பூன், கருகப்பிலை. உப்பு தேவைக்கு ஏற்ப.

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை ஆகியன தேவைக்கு ஏற்ப.

நல்லெண்ணெயைக் கடாயில் விட்டுக் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வேர்க்கடலை ஆகியன தாளித்துக் கொண்டு கருகப்பிலை, பெருங்காயமும் போட்டுக் கொண்டு துருவிய மாங்காய்த்துருவலைப் போட்டுக் கொண்டு மஞ்சள் பொடி சேர்த்து நன்கு வதக்கவும். மாங்காய்த் துருவல் நன்கு வதங்கியதும் தேவையான உப்பைச் சேர்க்கவும். முதலிலேயே சேர்த்தால் துருவல் நிறைய இருந்தால் உப்பும் கூடி விட வாய்ப்பு இருக்கிறது. ஆகவே வதக்கிக் கொண்டால் உப்பைப் பார்த்து நிதானமாகச் சேர்க்கலாம். நன்கு வதக்கிக் கொண்டு எண்ணெய் பிரிந்து வந்த பின்னர் அடுப்பை அணைக்கவும். 

முன் சொன்னாற்போல் ஒரு தாம்பாளத்தில் வடித்த உதிரான சாதத்தைப் போட்டுக் கொண்டு நல்லெண்ணெய் விட்டு அரை டீஸ்பூன் உப்பைப் போட்டு ஆற வைக்கவும். வதக்கிய மாங்காய் விழுதைத் தேவையான அளவுக்குச் சேர்க்கவும். நன்கு கலந்து விடவும். சிறிது நேரம் ஊறிய பின்னர் பரிமாறவும்.

10 comments:

  1. மாங்காய் சாதம் முன்னொரு காலத்தில் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.இந்த சீசன் போதும் இரு தடவைகள் சாப்பிட்டேன்.

    மாங்காய் சாதத்திற்கு பச்சை மிளகாய் (மாங்காயோடு வதக்குவது) போதும். காரப்பொடிலாம் தேவையில்லை. ரொம்ப காரமாகி, மாங்காய் தொக்கு சாதம் போல ஆகிடும் என்பது என் எண்ணம்.

    ReplyDelete
    Replies
    1. நான் அதிகமா மாங்காய் சாதம் பண்ணினதில்லை. எப்போவானும். மன்னி அடிக்கடி பண்ணுவார். அப்போக் கொடுத்தனுப்புவதே எங்க இருவருக்கும் கண்டு மிஞ்சும். காரப்பொடி எல்லாம் நானும் போடுவதில்லை.

      Delete
  2. எப்போதும் போல பின்னூட்டம் போடறதா இருந்தால், மாங்காய் சீசன் முடிந்த பிறகு, அதிலும் மாம்பழ சீசனே முடியப்போகும் சமயத்தில் மாங்காய் சாதம் எழுதியிருக்கீங்களே... இவ்வளவு ஸ்லோவா நீங்க? என்று எழுதணும்.

    பாசிடிவ் ஆக எழுதறதா இருந்தால், ஃபெப்ருவரியில் மாங்காய் வர ஆரம்பித்துவிடும். முன்னமேயே இந்த இடுகை போட்டதற்கு நன்றி. சீசன் வந்ததும் செய்து பார்க்கிறேன். என்று எழுதணும்.

    எப்படி எழுதுவது உங்களுக்குப் பிடிக்கும்?

    ReplyDelete
    Replies
    1. உங்க இஷ்டத்துக்கு எழுதுங்க! எஞ்சாய்!

      Delete
  3. பாரம்பரிய முறையில் தேங்காய்த்துருவல் இல்லை போல...    சீரகம் சேர்ப்பதில் விருப்பமில்லை.  இதுவரை ஒருமுறை கூட செய்ததில்லை.  மாங்காய் கிடைத்தால் செய்து பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், தேங்காய்த் துருவல் சேர்த்துப் பண்ணச் சொன்னது தினமலரில். ஆகவே ஒரு முறை சேர்த்துப் பண்ணுவோமே என்று பண்ணினேன். :) மாங்காய் இங்கே நிறையக் கிடைக்கிறது. மாம்பழத்தைத் தான் பார்க்கவே இல்லை! :))))

      Delete
  4. அக்கா சேம் சேம் ...நான் காரப்பொடி சேர்க்காமல் தான் செய்வது. ப மி சி மி தாளிப்பு. சீரகமும் சேர்க்காமல், மத்தபடி இதே

    தேங்காய் சேர்ப்பது இருப்பதைப் பொருத்து. கிளுமூக்கு/ஒட்டு கிடைச்சப்ப செய்தேன்.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. கிளிமூக்கு/ஒட்டு/கல்லாமை மாங்காயில் தான் இதெல்லாம் பண்ண முடியும் தி/கீதா. மற்ற மாங்காய்களில் புளிப்பு இருப்பதால் காரம் என்ன போட்டாலும் சேருவதில்லை.

      Delete
  5. தேங்காய் சேர்க்காமல் மாங்காய் சாதம் சுவைத்ததுண்டு. செய்வதில்லை.

    ReplyDelete
    Replies
    1. நான் பண்ணுவதே அபூர்வம்! எப்போவானும் தான்!

      Delete