எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, January 13, 2013

பொங்கலுக்கு அவியலா? :D

பொங்கலுக்குத் தொட்டுக்க அவங்க வீட்டிலே அவியல் செய்வாங்கனு ரேவதி சற்றுமுன் கூறினார். இன்னும் சிலரும் சொல்லி இருக்காங்க. எங்க அப்பா வீட்டிலே கனுப்பண்டிகை அன்று பிசைந்த சாத வகைகளோடு தொட்டுக்க அவியல் இருக்கும்.  ஆனால் மாமியார் வீட்டில் அவியலே அபூர்வம்; அதிலும் பொங்கலுக்கு அவியல் செய்யவே மாட்டாங்க.  என்னிக்கானும் அவியல் செய்தாலும் அதிலே கடலைப்பருப்பு, ஜீரகம், அரிசி எல்லாம் அரைத்துவிட்டுக் கொட்டிப் பொரிச்ச கூட்டு மாதிரி இருக்கும்.  தயிர் சேர்த்தால் புளிக்கும்னு சில சமயம் பாலும் விடுவாங்க. மொத்தத்தில் அவியல்னா அது இல்லை.

திருநெல்வேலி மாவட்டத்திலே செய்யறது தான் உண்மையான அவியல்.  அதிலும் சில வீடுகளில் புளி நீர்க்கக் கரைத்து விட்டுக் காய்களை வேக வைத்து எடுப்பாங்க.  வெகு சில வீடுகளில் புளி விடாமல் செய்வாங்க. அவியலுக்குத் தேவையான காய்கள் எல்லாமும் நாட்டுக்காய்களாகவே இருத்தல் நலம்.  இப்போல்லாம் உ.கி. பீன்ஸ், காரட் இல்லாத அவியலைப் பார்க்க முடியலை.  உ.கி. மட்டும் நான் போடவே மாட்டேன். அது ருசியை மாற்றிவிடும். போனால் போறதுனு பீன்ஸ், காரட் எப்போவானும் சேர்ப்பேன்.

எல்லாக் காய்களையும் தனித்தனியாகவும் வேக வைக்கலாம்.  சேர்த்தும் வேக வைக்கலாம்.  வேக வைத்த காய்களை நீரை வடிகட்டி வைத்துக் கொண்டு வாயகன்ற உருளி, நான் ஸ்டிக் பாத்திரம் ஏதேனும் ஒன்றில் போடவும்.  காய்கள் எல்லாம் மொத்தம் அரைகிலோவுக்கு இருக்கும் எனில் சின்னத் தேங்காய் ஒன்று, நான்கு பச்சை மிளகாய் சேர்த்து நல்ல நைசாக அரைத்துக் கொள்ளவும்.  வடிகட்டிப் பாத்திரத்தில் உள்ள காய்களில் இந்த விழுதைச் சேர்த்துக் கலக்கவும். சிறிது நேரம் கொதிக்க விடவும். நன்கு சேர்ந்து வந்ததும், தேங்காய் எண்ணெய் ஊற்றி அதிலேயே காம்போடு கருகப்பிலையைப் போடவும். சாப்பிடுகையில் பரிமாறத் தேவையான அவியலுக்கு மட்டும் தேவையான புளிப்பில்லாத தயிரைச் சேர்த்துக் கொண்டு பரிமாறவும்.  மொத்த அவியலிலும் முதலிலேயே தயிரைக் கலந்து விட்டால் அவியலே புளிக்கும்.

புளி சேர்த்துச் செய்கையில் அரைகிலோ காய்கறிகளுக்கு ஒரு நெல்லிக்காய் அளவுக்குப் புளியைக் கரைத்துக் கொண்டு அந்தப் புளி ஜலத்தில் வேக வைத்தால் போதும்.  எலுமிச்சை அளவு புளியெல்லாம் அதிகம்.  காய்கள் வெந்ததும் மேலே சொன்னாப்போல் தேங்காய், பச்சைமிளகாய் அரைத்த விழுதைப் போட்டுக் கலந்து கொதிக்கவிட்டுத் தேங்காய் எண்ணெய், கருகப்பிலை போட்டால் போதும்.  இதுக்குத் தயிர் வேண்டாம்.

8 comments:

  1. பொங்கலுக்கு அவியல் செய்வது வழக்கம்தான் எனினும், நாங்கள் அதை சற்றே மாற்றி காரக் கூட்டாகச் செய்கிறோம். ஸ்வீட் பொங்கலுக்குக் காரக் கூட்டு நல்ல கான்ட்ராஸ்ட் காம்பினேஷன். இன்னும் ரெண்டு வாய்ப் பொங்கல் திகட்டாம, அதிகமா உள்ளே போகும்! மறுநாள் கணு அன்று 7 தான் கூட்டு! கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருந்தாலும் நாங்கள் சில வருடங்களாக இப்படித்தான் செய்கிறோம்!

    அவியல் என் பாஸ் பிரமாதமா செய்வாங்க.

    ReplyDelete
  2. மீனாக்ஷி எங்கே ஆளையே காணோம்?!

    ReplyDelete
  3. ஒரு சிறு திருத்தம். பொங்கல் அன்று 7 தான் கூட்டையும் கணு அன்று அவியலும் செய்து வருகிறோம்!

    ReplyDelete
  4. அவியல் ரெசிபிக்கு நன்றி.

    எங்க வீட்ல பொங்கல் அன்னிக்குதான் ஏழு காய்கள் போட்ட குழம்பு செய்வாங்க. மறுநாள் கனு அன்னிக்கு கலந்த சாதமும் அவியலும்தான். எங்க பாட்டி கும்பகோணம்தான். அவியல் பண்ணும்போது கொஞ்சம் புளியை உருட்டி வேகற காய்கறிகள் மேல வெச்சு அதை எடுத்து எடுத்து கிளறி விடுவாங்க. காய் வெந்ததும் அந்த புளியை தூக்கி போட்டுடுவாங்க. அவியல் பிரமாதமா இருக்கும். ஆனா நான் என்னதான் சிரத்தையா பண்ணினாலும் சிலதெல்லாம் அவ்வளவு நல்லா வராது. அவியல் அதுல ஒண்ணு. கைமணத்துக்கும் எனக்கும் கொஞ்சம் தூரம்தான். :))

    வீட்ல விருந்தாளிங்க. அதனால சரியா இருந்துது ஸ்ரீராம். நீங்க எழுதி இருக்கற ஜோரை பாத்தா உங்க வீட்டுக்கு வரும்போது உங்க பாஸ் கையால அவியல் சாப்பிடனும்னு ரொம்ப ஆசையா இருக்கே. :))

    ReplyDelete
  5. வாங்க ஸ்ரீராம், வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. நானும் மீனாக்ஷியைக் காணோமேனு நினைச்சேன். அவங்களே வந்து காரணத்தைச் சொல்லிட்டாங்க. அடுத்தவாரம் எனக்கும் விருந்தாளிங்க வர இருக்காங்க. :))))

    ReplyDelete
  6. வாங்க மீனாக்ஷி, ஏழுதான் குழம்பு எங்க அம்மாவீட்டிலேயும் சரி, மாமியார் வீட்டிலேயும் சரி திருவாதிரைக்கு மட்டும் தான். பொங்கலுக்குப் பிறந்த வீட்டில் வாழைக்காய்ப் பொடிமாஸ், ஏதேனும் ஒரு கூட்டு, சாம்பார் அல்லது மோர்க்குழம்பு. கனு அன்று கலந்த சாத வகைகளோடு அவியல், உ.வடை. :)))) அன்னிக்கு நோ ரசம். மாமியார் வீட்டிலே நேர் மாறாகப் பொங்கலன்று ஐந்து அல்லது ஆறு காய்களில்கூட்டு, மோர்க்குழம்பு, நோ வடை. கனு அன்று பொடி, துவையல், சாம்பார் வகையறாக்கள்.

    ReplyDelete
  7. எப்பொழுதாவது சாதாரணநாளில் அவியல் செய்வேன்.

    வெல்லப் பொங்கலுக்கு காரக் குழம்புதான்.

    ReplyDelete
  8. I need your mail address, please.

    ReplyDelete