எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, January 10, 2013

என்னனு பொருள் விளங்குமா? விளங்கணும்! :)))


நானூறு கிராம் பயத்தம்பருப்பு, ஐம்பது கிராம் கடலைப்பருப்பு, ஐம்பது கிராம் கோதுமை. முக்கால் கிலோ பாகு வெல்லம். முற்றல் தேங்காய் ஒன்று. உடைத்துப் பல்லுப் பல்லாகக் கீறி வைத்துக் கொள்ளவும். ஏலக்காய் ஐந்து அல்லது ஆறு. சுக்கு ஒரு துண்டு. ஏலக்காயையும் சுக்கையும் நன்கு பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

பொருள்விளாங்காய் உருண்டையானாலும் சரி, பருப்புத் தேங்காயானாலும் சரி, பாகு வைப்பதில் தான் இருக்கிறது. முதலில் பயத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கோதுமை எல்லாவற்றையும் வெறும் வாணலியில் நன்கு சிவப்பாக வறுத்துக் கொள்ளவும். கோதுமை பொரியவேண்டும். எல்லாவற்றையும் ஒன்றாக மிஷினில் கொடுத்து அரைத்து மாவாக்கிக் கொள்ளவும்.

மாவை ஒரு பெரிய தாம்பாளத்தில் போட்டு ஏலக்காய், சுக்குப் பொடி கலந்து வைக்கவேண்டும். மாவைக் குவித்துக் கொண்டு நடுவில் பள்ளம் பண்ணிக் கொள்ளவும். வெல்லத்தை நன்கு தட்டிப் பொடியாக்கி ஒரு கிண்ணம் நீரில் கரைக்கவும். வெல்லத்தில் உள்ள அழுக்குகள் வெளியேறும் வரை கொதிக்க வைத்து அழுக்கை நீக்கி மீண்டும் வெல்ல நீரை அடுப்பில் ஒரு வாணலியில் அல்லது உருளியில் வைத்துப் பாகு காய்ச்சவும். பாகு பதம் பார்க்க அருகே ஒரு கிண்ணத்தில் நீர் வைத்துக் கொள்ளவும். பாகு கொதித்து வரும்போது ஒரு தேக்கரண்டி பாகை எடுத்து நீரில் விட்டுப் பார்த்தால் தக்காளிப்பழம் உருட்டுவது போன்ற பதம் வரும். தேங்காய்க் கீற்றை மாவிலோ, பாகிலோ சேர்க்கலாம். பாகை  உடனே எடுத்துவிடவேண்டும். கொஞ்சம் அதிகமானால் பாகு காய்ந்து உருண்டை ஸ்வர்ணா சொன்ன மாதிரி கெட்டியாய் இருக்கும். அப்படி வேண்டும் என்றால் அதிகமாய்ப் பாகைக் காய்ச்சிக் கொள்ளலாம்.

காய்ந்த பாகை மாவின் நடுவில் உள்ள பள்ளத்தில் விட்டுக் கொண்டே, இன்னொரு கையால் மாவைக் கிளறவேண்டும். பழக்கமுள்ளவர்கள் தனியே செய்ய முடியும். இல்லை என்றால் வேறொருவரைக் கலக்கச் சொல்லலாம். மாவும், பாகும் நன்கு கலந்ததும் உருண்டை சூடு இருக்கும்போதே பிடிக்கவேண்டும். பருப்புத் தேங்காய்க் கூட்டில் அடைக்கவேண்டும் எனில் கூட்டில் ஏற்கெனவே நெய் நன்றாகத் ததும்பத் தடவி தயாராக வைக்கவும். அடுப்பைத் தணித்துக் கொண்டு, மாவையும், பாகையும் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்து சேர்த்த கலவையைக் கூட்டில் உடனே கொட்டிவிடவேண்டும். ஆறியதும் கூட்டைத் தட்டினால் பருப்புத் தேங்காய் தனியே வரும். 

2 comments:

  1. நிறைய தடவ கடிக்க முயற்சி பண்ணி தோத்துதான் போயிருக்கேன். :)

    ReplyDelete