எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, January 8, 2013

பொரிச்சுப் பொரிச்சு ஒரு கூட்டு! 2-ஆம் முறை

அடுத்துப் பருப்புப் போட்டுச் செய்யும் கூட்டுகள்:  இதையும் செளசெள, முட்டைக்கோஸ், கத்திரிக்காய், புடலை, பூஷணி போன்றவற்றில் செய்யலாம். பொதுவாகப் பாசிப் பருப்பு தான் போடுவார்கள்.  எப்போதாவது துவரம்பருப்புப் போடலாம்.  ஆனால் அது அவ்வளவு நன்றாக இருக்காது.  வெறும் கடலைப்பருப்பு மட்டும் ஊறவைத்துப் போட்டு வேக வைத்துக் கொண்டும் பண்ணலாம்.  ஆனால் அதற்குப் பூஷணிக்காய், கொத்தவரை, பீன்ஸ் போன்றவையே நன்றாக இருக்கும். பறங்கிக் காயில் பருப்புப் போட்டும் அல்லது போடாமலும் செய்யலாம்.  அதைப் பின்னால் பார்க்கலாம்.

இப்போ மேலே சொன்ன காய்களில் ஏதேனும் ஒன்று கால்கிலோ, பாசிப்பருப்பு அரைக்கிண்ணம், மி.வத்தல், சீரகம், தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன், 2 டீஸ்பூன் அரிசிமாவு கரைத்து ஊற்ற(தேவையானால், நான் சேர்ப்பதில்லை)  கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை, தாளிக்க மட்டும் எண்ணெய்.
சீரகம், மி.வத்தலோடு தேங்காய் துருவல், அரிசி மாவு சேர்த்து நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.  மி.வத்தல் ஒன்று போதும்.  காரம் வேண்டுமெனில் கூடப்போட்டுக்கலாம்.  அவரவர் ருசிக்கு ஏற்றவாறு சேர்க்கலாம்.

காயைப் பொடிப் பொடியாகத் துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.  முதலில் பாசிப் பருப்பைக் களைந்து நன்கு குழைய வேக வைக்கவும்.  குக்கரில் வேக வைப்பவர்கள், காயைக்கொஞ்சம் வேக வைத்துக் கொண்டு, பின்னர் குழைந்த பருப்பைச் சேர்க்கவும்.  பருப்பு வெந்ததும் காயைச் சேர்க்கவும்.  மஞ்சள் தூள் மட்டும் போட்டுக் கொஞ்ச நேரம் வேக வைக்கவும்.  நசுங்கும் பதம் வந்ததும் உப்புச் சேர்க்கவும். உப்புச் சேர்ந்து கொஞ்சம் வெந்ததும்.  அரைத்த விழுதைச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.  ஒரு கொதி நன்கு வந்ததும் கீழே இறக்கவும்.  தேங்காய் எண்ணெயில் கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை தாளிக்கவும். ஜீரகம் பிடிக்காதவர்கள் அது இல்லாமல் வெறும் தேங்காய் மி.வத்தல் சேர்த்து அரைத்துச் செய்து கொள்ளலாம்.

4 comments:


  1. முன்பெல்லாம் - அம்மா காலத்தில் - அரிசி மாவு சேர்ப்பது வழக்கத்தில் இருந்தாலும் அது ஒரிஜினல் டேஸ்ட்டைக் கெடுக்கிறது என்று தோன்றியபின் சேர்ப்பதில்லை. அவியலில் காய்கள் கொஞ்சம் பெரிதாக நறுக்கென்று இருக்கவேண்டும் என்று தோன்றும். கூட்டில் காய்கள் நன்கு மசிந்திருப்பதை விடவும் காயாகக் கிடைத்தால்தான் நன்றாக இருக்கும் என்பதால் குக்கரில் வைக்காமல் கூட்டோடு சேர்ந்து வேக வைத்து விடலாமோ?

    ReplyDelete
  2. தடுக்கி விழுந்த எங்க வீட்ல இந்த கூட்டுதான். இதே ரெசிபிதான்.

    ஸ்ரீராம் சொல்வது ரொம்ப சரி. எனக்கு அரிசிமாவு கரைச்சு விடறது அவ்வளவா பிடிக்காது. எங்க வீட்ல குக்கரில் வைக்காமல், முதலில் பாசி பருப்பை தனியாக வேகவிட்டு பாதி வெந்தபின் காய் சேர்த்து வேக வைப்பார்கள். இப்படி செய்தால் பருப்பு, காய் இரண்டும் குழையாமல் நன்றாக இருக்கும். வெந்த பாசி பருப்பும்
    பார்க்க முத்து போல் அழகாய் இருக்கும்.

    ReplyDelete
  3. வாங்க ஶ்ரீராம், அரிசி மாவு கோலம் போடத்தான் எனக்குத் தேவை. சாம்பார், வத்தக்குழம்பு போன்ற எதுக்குமே அரிசி மாவு கிடையாது. அவியலில் காய்கள் தெரியணும்னு சொல்வது சரியே. அதே சமயம் காய்கள் வெந்தும் இருக்கணும். குழையக் கூடாது. :)))) குக்கரில் நான் காய்களை வைப்பதே இல்லை. பருப்பைத் தனியாக உருளியில் போட்டுப் பருப்பு வெந்ததும் காய்களைச் சேர்ப்பேன். அப்படி ஒண்ணும் நேரம் ஆகிறதில்லை. ரொம்ப அதிகமாப் போனால் முக்கால் மணி நேரத்தில் மொத்த சமையலும் முடிஞ்சுடும்.

    ReplyDelete
  4. வாங்க மீனாக்ஷி, உங்க ரெசிபியே எங்கள் ரெசிபி! :))))

    ReplyDelete