எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, September 2, 2012

காலிஃப்ளவர் மஞ்சூரியன்

பெயரைப் பார்த்துப் பயப்பட வேண்டாம். :D இது வெஜிடேரியன் உணவு தான். சமீபத்தில் குழுமத்தில் ஒரு சிநேகிதி அறுசுவைத் தளத்து செய்முறையைப் பகிர்ந்து கொண்டார்.  அதிலே அஜினோமோட்டோ, முட்டை எல்லாம் போடச் சொல்லி இருந்தாங்க.  இது பாரம்பரிய முறை.  இதுக்கு அதெல்லாம் வேண்டாம்.  எல்லாம் நம்மிடம் இருக்கும் பொருட்களே போதும்.  பொதுவாகவே அஜினோமோட்டோ போட்ட உணவைச் சாப்பிடுவது அவ்வளவு நல்லதில்லை.  அஜினோமோட்டோ நம் நாட்டு உணவுப் பழக்கத்துக்கு ஏற்றதும் இல்லை.  ஆனாலும் ஒரு சிலர் தொலைக்காட்சி விளம்பரங்களைப் பார்த்துவிட்டு வாங்கி விடுகின்றனர்.  அதில் உள்ள தீமைகளை அறிந்துகொண்டிருக்கும் சீனா, தன் தயாரிப்பான இந்த அஜினோமோட்டோவைப் பயன்படுத்துவதே இல்லை.  நம் நாட்டைச் சனியன் மாதிரிப் பிடித்துக் கொண்டு சாம்பார், ரசத்துக்குக் கூடப் போடச் சொல்லிப் பிடுங்கல்.  இதனால் உங்கள் சிறுநீரகம் பாதிக்கப்படக் கூடும்.  குழந்தைகளுக்கு நரம்பு பாதிப்பு உண்டாகும். ஆகவே கவனம் தேவை.

இப்போது பாரம்பரிய முறையில் காலிஃப்ளவர் மஞ்சூரியனைப் பார்ப்போமா?
தேவையான பொருட்கள்:  நல்ல காலிஃப்ளவராக ஒன்று.  ஒரு கிண்ணம் மைதா மாவு, வெண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்,ஒரு சிட்டிகை உப்பு, சமையல் சோடா தேவை எனில் ஒரு சிட்டிகை.  பால் 200 கிராம்.  நீர் தேவைப்பட்டால் .  பொரிக்க  சமையல் எண்ணெய்.

அடுத்து கிரேவிக்கு.  அரைகிலோ தக்காளி. இது தனியாகக் குக்கரில் தக்காளியை வேக வைத்தோ அல்லது கொதிக்கும் வெந்நீரில் போட்டோ தோல் நீக்கி, விதை நீக்கித் தக்காளிச் சாறாக எடுத்துக்கொள்ளவும்.

மேற்சொன்ன அளவுக்கு 5 பச்சை மிளகாய்,  4 பல் பூண்டு,  ஒரு அங்குலம் இஞ்சி நன்கு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

வெங்காயம் இரண்டு எடுத்துப் பொடிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கால் கிலோ தக்காளியுடன் வெங்காயத்தைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.  முன்னால் சொன்னதுக்கும் இதுக்கும் தனித்தனி செய்முறை.  ஆகையால் குழம்ப வேண்டாம். 

மிளகாய்த் தூள் ஒரு டேபிள் ஸ்பூன், தனியாத்தூள் ஒரு டேபிள் ஸ்பூன், மஞ்சள் தூள் ஒரு சின்ன ஸ்பூன், கரம் மசாலாத் தூள் ஒரு டீஸ்பூன், சர்க்கரை ஒரு டீஸ்பூன்.  உப்பு தேவையான அளவு. ஜீரகம் வறுத்துப் பொடி செய்த தூள் ஒரு டீஸ்பூன். சமையல் எண்ணெய் கிரேவி செய்யத் தேவையான அளவு.

இப்போது காலிஃப்ளவரை நன்கு ஆய்ந்து குளிர்ந்த நீரில் கழுவிக் கொண்டு, பூச்சி, புழு நீக்கிக் கொள்ளவும்.  பூவாக நீளமாக வரும்படி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும்.  இதில் உப்பு,, மஞ்சள் தூள் சேர்த்துக் கொண்டு, கொதிக்கும் வெந்நீரில் சிறிது நேரம், சுமார் அரைமணி போட்டு வைக்கவும்.  பின்னர் நீரை வடிகட்டிப் பூக்களைத் தனியாக வைக்கவும்.

வெண்ணெய், உப்பு, சோடா உப்பு சேர்த்துக் குழைத்து, கொஞ்சம் கொஞ்சமாக மைதாமாவை அதில் சேர்க்கவும்.  மாவும், வெண்ணெய்க் கலவையும் நன்கு கலந்த பின்னர் பாலை மெதுவாக அதில் விட்டுக் கலக்கவும்.  மாவு தோசை மாவு பதத்துக்கு வர வேண்டும்.  ரொம்பக் கெட்டியாக இருந்தால் கொஞ்சம் நீர் சேர்க்கலாம். கடாயில் எண்ணெயைக் காய வைத்துக் கொள்ளவும்.  வடிகட்டி வைத்த பூக்களை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு கரைத்த மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டுப் பொரித்து எண்ணையை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.  இவை தனியாக இருக்கட்டும்.

அடுத்து கிரேவி செய்முறை:  கடாயில் எண்ணெய் வைத்துக் கொள்ளவும்.  எண்ணெய் காய்ந்ததும் முதலில் ஒரு டீஸ்பூன் சர்க்கரையைச் சேர்க்கவும்.  மசாலா கலந்து செய்யும் உணவுகளுக்குக் கொஞ்சம் சர்க்கரையை முதலிலேயே சேர்த்தால் மசாலா மணம் தூக்கலாக இருப்பதோடு மசாலாவின் காரத்தையும், கடுமையையும் குறைக்கும்.  அல்லது இறக்கும் முன்னர் கொஞ்சம் வெல்லம் சேர்க்கலாம்.  சர்க்கரை கரைந்ததும்,முதலில் தக்காளி, வெங்காயக் கலவையைப் போட்டு நன்கு வதக்கவும். எண்ணெய் பிரிந்து வரும் சமயம் பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு விழுதையும் போட்டு வதக்கிக் கொள்ளவும்.  சிறிது நேரம் வதக்கியதும், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், தனியாத் தூள் சேர்த்து இன்னும் கொஞ்ச நேரம் எல்லாம் கலக்கும் வரை வதக்கிக் கொள்ளவும்.  எண்ணெய் நன்கு பிரிந்துவந்ததும் நாம் ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ள தக்காளி ப்யூரி எனப்படும் தக்காளிச் சாற்றை விடவும்.  உப்புப் போடவும்.  தேவை எனில் நீர் சேர்க்கலாம்.  கிரேவி நன்கு கொதித்து வரும் போது கரம் மசாலாப் பவுடரையும், வறுத்த ஜீரகத் தூளையும் சேர்த்துவிட்டு ஒரு கொதி விட்டு அடுப்பை அணைக்கவும்.

இப்போது பரிமாறும் முறை:  ஒரு சின்னக் கிண்ணம் அல்லது சைட் டிஷ்ஷுக்கான தட்டில் கொஞ்சம் பொரித்த காலிஃப்ளவர் துண்டங்களைப் போட்டுக் கொண்டு அதன் மேல்கிரேவியை ஊற்றவும்.  விருப்பமானால் பொடிப்பொடியாக நறுக்கிய பச்சைக் கொத்துமல்லி, பச்சை வெங்காயம் தூவிக் கொள்ளலாம்.  இதை அப்படியே விருந்தாளிகளுக்குக் கொடுத்து அசத்துங்கள்.  கொஞ்சம் நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமான செய்முறைதான்.  ஆனால் செய்யச் செய்யப் பழகிவிடும்.

4 comments:

  1. அஜினமோட்டோ பற்றிய எச்சரிக்கைகள் உண்மையானது, அவசியமானது.
    அரைகிலோ தக்காளி அரைத்து வைப்பது தனி, அப்புறம் வெங்காயத்துடன் சேர்ந்து கால் கிலோவா?
    வெங்காயத்தையும் தக்காளியுடன் சேர்த்து அரைத்து விடுவோம் என்னும்போது பொடிப்பொடியாக ஏன் அரிந்து அப்புறம் அரைக்க வேண்டும்?
    இந்த வாரக் கடைசியில் செய்து பார்த்து விடலாம்!

    ReplyDelete
  2. வாங்க ஸ்ரீராம், தக்காளி ப்யூரினு கடைகளில் டப்பாக்களில் அடைச்சு விற்கிறாங்க. பெரும்பாலான நக்ஷத்திர ஹோட்டல்களிலே இதான் பயன்பாட்டுக்கு இருக்கு. அப்படி இல்லாமல் தக்காளியை உடனடியாகச் சாறு எடுத்துப் பயன்படுத்திக்கலாம்னு முதல்லே சொன்னது. இது காலிஃப்ளவர் அளவுக்கு ஏற்றாற்போல் கூட்டிக் குறைத்துக் கொள்ளலாம். வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொண்டால் தான் நன்றாக அரைபடுகிறது என்பது என் அனுபவம். அப்படியே போட்டால் கொஞ்சம் அரைபடாமல் இருக்கும். வெங்காயச் சாறின் மணமும், தக்காளியின் மணமும் தான் இதில் முக்கியம். அதோடு சூடாக மைதாவில் பொரித்த காலிஃப்ளவர் மேல் சூடாக இந்த கிரேவியை ஊற்றிச் சாப்பிட்டால் டேஸ்டும் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  3. ரொம்ப வேலை. யாராவது செஞ்சு கொடுத்தா சாப்பிடலாம்.
    வெங்காயச் சாறின் மணமும், தக்காளியின் மணமும்... படிக்கறப்பவே..

    ReplyDelete
  4. வாங்க அப்பாதுரை, இதிலே வேலை அதிகம் தான். சுவையும்...... :))))))

    ReplyDelete