எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, December 19, 2019

பாரம்பரியச் சமையலில் துவையல் வகைகள்! தொடர்ச்சி!(புதுசு)

கத்தரிக்காயையே சுட்டுத் துவையல் அரைக்காமல் பொடியாக நறுக்கிக் கொண்டு எண்ணெயில் நன்கு வதக்கிக் கொண்டும் துவையல் அரைக்கலாம். நன்கு குழையும்படி வதக்க வேண்டும். மிளகாய் வற்றல், பெருங்காயம், கடுகு, உளுத்தம்பருப்பு ஆகியவற்றை வறுத்து எடுத்துக்கொண்டு கத்திரிக்காய் வதங்கத் தேவையான அளவுக்கு ஒரு கரண்டியாவது எண்ணெய் விட்டு நன்கு வதக்கவேண்டும். வதக்கும்போது கத்திரிக்காய் தீயக் கூடாது. பின்னர் ஆற வைத்துத் துவையல் முன் சொன்னது போல் அரைக்கலாம்.

இதே போல், பறங்கிக்காய்(இளசு, மஞ்சள் பழம் இல்லை), பீர்க்கங்காய் போன்றவற்றையும் பொடியாக நறுக்கி வதக்கிக் கொண்டு துவையல் அரைக்கலாம். பீர்க்கங்காயின் மேல் தோலைக்கூடத் தூக்கி எறியாமல் வதக்கிக் கொண்டு அதனுடன் தேங்காய்த்துருவலும் வறுத்து வைத்துக் கொண்டு துவையல் அரைக்கலாம். இதைத் தவிரவும் முட்டைக்கோஸ், சௌசௌ போன்றவற்றை வதக்கியும் துவையல் அரைக்கலாம். இவற்றை எல்லாம் எண்ணெய் தேவையான அளவுக்கு ஊற்றிக்கொண்டு நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும். பிசைந்து சாப்பிட வேண்டும் எனில் இம்மாதிரிக் காய்களை மட்டும் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். சப்பாத்தி, இட்லி, தோசைக்குப் பண்ணுவது எனில் அதன் செய்முறை பின்னால் தரப்படும்.

இஞ்சியிலும் துவையல்  செய்து கொஞ்ச நாட்கள் வைத்துச் சாப்பிடும்படி தயாரிக்கலாம். இதற்குத் தேவையான பொருட்கள்.

இஞ்சி 100 கிராம், புளி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவுக்கு நீரில் ஊற வைக்கவும். மிளகாய் வற்றல் 10 அல்லது 12, பெருங்காயம் தேவையானால், வெல்லம் கட்டாயம் தேவை, பிடிக்காது எனில் போடாமல் அரைக்கலாம். உப்பு தேவைக்கு. வறுக்க, தாளிக்க நல்லெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், தாளிக்கக் கடுகு, உளுத்தம்பருப்பு.

இஞ்சியைத் தோல் சீவித் தான் பயன்படுத்த வேண்டும். இளசான இஞ்சியைத் தோலைச் சீவிக்கொண்டு நன்கு பொடியாக நறுக்கிக்கொள்ளவும். அல்லது துருவிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றிக்கொண்டு கடுகு, உளுத்தம்பருப்புத் தாளித்துத் தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்னர் அதே எண்ணெயில் மிளகாய் வற்றலை வறுத்துக்கொண்டு, பெருங்காயத்தையும் பொரித்து எடுத்துக்கொள்ளவும். (நான் பெருங்காயம் சேர்ப்பேன்.)பின்னர் அதே எண்ணெயில் இஞ்சியைப் போட்டு நன்கு வதக்கவும். சுருள வதக்கிய பின்னர் எடுத்து ஆற வைத்து மிக்சி ஜாரில் மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம், வதக்கிய இஞ்சித்துருவலைப் போட்டு நன்கு அரைக்கவும். பின்னர் எடுக்கும் முன்னர் தாளிதத்தைப் போட்டு ஒரே சுற்றுச் சுற்றிப் பின் வேறு பாத்திரத்தில் மாற்றவும்.

4 comments:

  1. சுட்டு அரைக்கும் துவையலாவது சாப்பிட்டிருக்கிறேன்.   வதக்கி அரைக்கும் துவையல் சாப்பிட்டதில்லை.   ஒருமுறை செய்து பார்க்கவேண்டும்.  ருசியில் மாறுபாடுஇருக்கும் இல்லையா?  கத்தரிக்காய் சுட்டுஎன்றால் உடனே கொத்ஸுவும் ஞாபகத்துக்கு வருகிறது!

    ReplyDelete
    Replies
    1. கத்திரிக்காயைச் சுட்டு கொத்சு பண்ணுவது போல் வதக்கியும் பண்ணலாம் ஸ்ரீராம். அதே போல் துவையலும். ஒரு முறை சாப்பிட்டுப் பாருங்கள்.

      Delete
  2. இஞ்சி துவையல் சமீபத்தில் எங்கோ சாப்பிட்டு ரசித்தேன்.   எங்கே என்று நினைவில்லை.  வீட்டில் செய்ததில்லை. அதுபோலவே சௌசௌ பிரண்டை கோஸ் போன்றவைகளும் வீட்டில் செய்ததில்லை.

    ReplyDelete
  3. நல்லா வதக்கி வைச்சால் இஞ்சித்துவையல் 2 வருடங்கள் ஆனாலும் வீணாகாது. 2017 ஆம் ஆண்டில் நான் செய்து வைத்த இஞ்சித்துவையலைப் பெண் வீட்டில் இப்போத்தான் சில மாதங்கள் முன்னர் தீர்த்திருக்கின்றனர்.

    ReplyDelete