எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, November 3, 2019

பாரம்பரியச் சமையலில் உருளைக்கிழங்கு செய்முறைகள்!

இதைத் தவிர்த்துச் சேனைக்கிழங்கைச் சமைக்கும் முறையில் வெந்நீரைக் கொதிக்க வைத்து அதில் உப்பு,மிளகுத்தூள் கலந்து கொண்டு சேனைக்கிழங்கு நறுக்கிய துண்டங்களைப் போடவும். ஒரு ஐந்து நிமிஷம் வெந்நீரில் வைத்து விட்டுப் பின்னர் வடிகட்டிக்கொண்டு நீரெல்லாம் போன பின்னர் அவற்றை எண்ணெயில் பொரித்து எடுக்கவும். மொறு, மொறுவென நன்றாக இருக்கும். ஸ்ராத்த காலங்களில் சேனைக்கிழங்கைச் சதுரங்களாக நறுக்கிக் கொண்டு பின்னர் எண்ணெயில் பொரித்தெடுத்துக் கொண்டு உப்பு, மிளகுத்தூள் சேர்ப்போம். ஸ்ராத்தம் இல்லை எனில் அவற்றிற்குக் காரப்பொடி போடலாம். இதே போல் வாழைக்காயிலும் முற்றிய காயில் பண்ணலாம். முன்னர் சொன்ன மி.வத்தல், ஜீரகம், தேங்காய் ஒன்றிரண்டாக அரைத்தவற்றை வாழைக்காயைப் புளி ஜலத்தில் வேகவிட்டுக் கொண்டு அதே போல் பண்ணலாம்.

Image result for உருளைக்கிழங்குImage result for உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்குப் படங்கள் கூகிள் வாயிலாக இணையத்தில் இருந்து. சிவப்பு உருளைக்கிழங்கு இங்கே அம்பேரிக்காவில் கிடைத்தாலும் ருசி நன்றாக இல்லை. அல்லது எனக்குப் பிடிக்கலை. :(


உருளைக்கிழங்கில் கறி வகைகள். முதலில் உருளைக்கிழங்கில் காரக்கறி பார்க்கலாம். பொதுவாக நான் உருளைக்கிழங்கை நன்கு கழுவிட்டுத் தோலை அகற்றாமல் தான் பண்ணுவேன். சில சமயங்களில் கரடு முரடாக இருந்தால் தோலைச் சீவிக்கொள்வேன். ஆனால் உருளைக்கிழங்கு தோலுடன் சமைத்தால் நல்லது என்பார்கள். நான்கு பேருக்கு நான்கு பெரிய உருளைக்கிழங்குகளைத் துண்டங்களாக நறுக்கி எடுத்துத் தண்ணீரில் போடவும்.உருளைக்கிழங்கை மட்டும் எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீரில் ஊற வைக்கிறோமோ அவ்வளவுக்கு நல்லது. அதில் உள்ள ஸ்டார்ச் எல்லாம் நீங்கும்.

அதன் பின்னர் அடுப்பில் கடாயை ஏற்றி சமையல் எண்ணெய் ஏதேனும் ஊற்றிக் கொண்டு கடுகு, பெருங்காயம் சேர்க்கவும். கடுகு பொரிந்ததும் ஜலத்தில் ஊறிக்கொண்டிருக்கும் உருளைக்கிழங்குத் துண்டங்களை வடிகட்டி அடுப்பில் உள்ள கடாயில் போடவும். தேவையான உப்பு, காரப்பொடி சேர்க்கவும். நான்கு உருளைக்கிழங்குக்குத் தனி மிளகாய்ப் பொடி எனில் ஒரு டீஸ்பூன் சேர்க்கலாம். அல்லது சாம்பார்ப் பொடி ஒன்றரை டீஸ்பூன் போடலாம். நன்கு வதக்கவும். உருளைக்கிழங்குத் துண்டங்கள் நன்கு வதங்கித் தனித்தனியாக வந்து மேலே எண்ணெய் கசிய ஆரம்பிக்கையில் கீழே இறக்கவும்.

வேக வைத்த உருளைக்கிழங்கில் காரக்கறி:- நான்கு பேருக்கு அரைக்கிலோ உருளைக்கிழங்கு தேவை. உருளைக்கிழங்கை நன்கு அலம்பிக் கொண்டு முழுதாகவோ அல்லது இரண்டாக நறுக்கியோ எடுத்துக்கொள்ளவும். ஓர் கடாயில் நீரைக் கொதிக்க வைத்து அதில் நறுக்கிய உருளைக்கிழங்குத் துண்டங்களைப் போட்டு வேக வைக்கவும். அல்லது குக்கரில் வைப்பதாக இருந்தால் முழுதாகவோ அல்லது இரண்டாக நறுக்கியோ உருளைக்கிழங்கை வேக வைக்கலாம். ஒரே சப்தம் விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். பின்னர் வெளியே எடுத்துத் தோலை உரித்துக் கொண்டு அதைத் தேவையான அளவுக்குச் சின்னத் துண்டங்களாக நறுக்கிக் கொள்ளவும்.

இந்தக் கறிக்குத் தனி மிளகாய்த் தூள் தான் நன்றாக இருக்கும். ஓர் வாயகன்ற பேசினை எடுத்துக் கொண்டு அதில் ஒரு டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய் எடுத்துக்கொண்டு தனி மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், பெருங்காயம் அரை டீஸ்பூன், மஞ்சள் பொடி அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு போட்டுக் கையால் குழைக்கவும். காரம் அதிகம் தேவை எனில் ஒன்றரை டீஸ்பூன் மிளகாய்ப் பொடி சேர்க்கலாம். இதில் வேக வைத்த உருளைக்கிழங்குகளை ஒரே மாதிரியான அளவில் நறுக்கித் துண்டங்களாக்கிச் சேர்க்கவும். கைகளால் உருளைக்கிழங்கு முழுவதும் காரம் சேரும்படி நன்கு கலக்கவும். பத்து நிமிஷம் போல் அதை ஊறவிடவும். பின்னர் அடுப்பில் கடாயை ஏற்றிக் கொண்டு தாளிப்புக்குத் தேவையான அளவுக்கு மட்டும் எண்ணெய் ஊற்றிக் கடுகு போடவும். பொரிந்ததும் மிளகாய்ப் பொடிக்கலவையில் ஊற வைத்த உருளைக்கிழங்குத் துண்டங்களைப் போட்டு அடுப்பைத் தணித்து வைத்துக் கொண்டு நன்கு வதக்கி எடுக்கவும். மேலே சிவந்து மொறுமொறு எனவும் உள்ளே நன்கு பஞ்சாகவும் வரும்போது கீழே இறக்கி வைக்கவும். சாப்பிடும்போது சூடாகப் பரிமாறவும்.

சின்ன உருளைக்கிழங்குக் கறி



சின்ன உருளைக்கிழங்குக் கறிக்குத் தேவையான சாமான்கள். சின்னதாக உருண்டையான உருளைக்கிழங்கு சுமார் அரைக்கிலோ! நான்கு பேருக்கு இதெல்லாம் போதாது. ஏனெனில் உருளைக்கிழங்கு அனைவருக்கும் பெரும்பாலும் பிடிக்கும். ஓர் அளவுக்குத் தான் சொல்லி இருக்கேன். அரைக்கிலோ உருளைக்கிழங்கை மண் போகக் கழுவித் தோல் உரியும்படி வேக வைத்துக்கொள்ளவும்.

முதல் முறையில் சொன்ன மாதிரி ஓர் வாயகன்ற பேசினில் காரப்பொடி, பெருங்காயப்பொடி, மஞ்சள் பொடி, உப்புப் போட்டுக் கலந்து கொண்டு இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெயை விட்டுக் கலக்கவும். இதில் உருளைக்கிழங்குகளைத் தோல் உரித்துவிட்டுச் சேர்க்கவும். நன்கு கலந்து விடவும். எல்லா உருளைக்கிழங்குகளிலும் சமமாக உப்புக் காரம் பரவும்படிச் செய்யவும். பின்னர் அடுப்பில் கடாயை வைத்து இரண்டு டீஸ்பூன் எண்ணெய் (தாளிக்க மட்டும்) விட்டுக் கடுகு தாளித்துக் கொண்டு ஊற வைத்த உருளைக்கிழங்குகளைப் போட்டு மூடி வைக்காமல் வதக்கவும். இம்முறையில் எண்ணெய் கொஞ்சமாகச் செலவு ஆகும். உருளைக்கிழங்கிலும் காரம் நன்றாக ஒரே மாதிரி கலந்திருக்கும்

23 comments:

  1. //வாயகன்ற பேசினை எடுத்துக் கொண்டு அதில் ஒரு டேபிள் ஸ்பூன் சமையல் எண்ணெய் எடுத்துக்கொண்டு தனி மிள// - இது நல்ல மெதட்டாக இருக்கிறதே.. நான் வேகவைத்த துண்டங்களை ஒரு பேசினில் போட்டுக்கொண்டு அதன் மேல் மி.தூள், பெ.தூள், உப்பு போன்றவற்றைப் போட்டுக் குலுக்குவேன் (இதே முறைதான் சேப்பங்கிழங்கு ரோஸ்டுக்கும்).

    உங்கள் முறையில் செய்துபார்க்கிறேன். இது இன்னும் சரியாக இருக்கும்னு தோணுது.

    ReplyDelete
    Replies
    1. செய்து பாருங்கள். நெல்லைத் தமிழரே, இம்முறையில் உப்பு, காரம் சீராகப் பரவும். எண்ணெய் அதிகம் ஆகாது.

      Delete
  2. நாலைந்து நாட்களுக்கு முன்னர், மழை பெய்துகொண்டிருந்தபோது, செம்மண்ணுடன் கூடிய சிறு உருளை, கிலோ 40 ரூபாய் வீதம் மந்தவெளியில் ரோடில் வாங்கினேன் (டிரை சைக்கிளில் வந்தது). மண் வாசனையோடு கட்டியாக நன்றாக இருந்தது. அன்றே 10-15 உபயோகித்தேன். மீதி 30ம் ஓரிரு நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக அழுகிவிட்டது. என்ன காரணமாயிருக்கும்?

    ReplyDelete
    Replies
    1. கிழங்கு நீர்ச் சத்து நிரம்பி இருந்திருக்கும். ஆனால் எப்போவுமே இம்மாதிரித் தள்ளு வண்டிகளில் வாங்கினால் உடனே பயன்படுத்தி விடணும். கடைகளில் வைத்திருப்பது கொஞ்சம் காய்ந்திருக்கும். முளை வந்தாலும் உடனே பயன்படுத்தணும். ரொம்ப முளை வந்திருந்தால் தோட்டம் இருந்தால் அதிலே குழி தோண்டி நட்டு வைப்பது நல்லது. அல்லது சின்னத் தொட்டிகளில் நட்டு வைக்கலாம். சாப்பிடுவது உசிதம் அல்ல.

      Delete
  3. முதல் செய்முறையில் நேரடியாக வதக்குவது என்று சொல்றீங்க. உருளை எப்படி தளிகையாகும்? ரொம்ப நேரம் காத்திருக்கணுமோ? கருகிடாது?

    ReplyDelete
    Replies
    1. உருளைக்கிழங்கு தான் வதக்கினால் உடனே வதங்கும். அதை அப்படியே நேரடியாகப் பச்சையாக வெட்டியோ அல்லது வேக வைத்து வெட்டியோ! இம்முறையில் உருளைக்கிழங்குக் கறி செய்து நீங்க சாப்பிட்டதில்லைனு நினைக்கிறேன். எங்க வீட்டில் இந்தக் கறி, ஏதேனும் வற்றல் குழம்பு அல்லது சின்ன வெங்காயக் குழம்பு(சாம்பார் இல்லை) ஜீரக ரசம் என்றால் அன்னிக்குக் கூடுதலாகச் சாப்பிடுவாங்க. எங்க பெண்ணுக்குப் பிடித்த மெனு. என்னிக்கானும் இங்கே பண்ண நேர்ந்தால் படம் எடுத்துப் போடறேன். இம்மாதிரித் துண்டங்களாக நறுக்கிக் கொண்டு கத்திரிக்காயோடு சேர்த்தும் வதக்குவேன். வெங்காயம் போட்டும் போடாமலும்.

      Delete
  4. உருளை விதம் விதமாகக் கறி - இங்கே வட இந்திய முறையிலும் செய்வது உண்டு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், அங்கே உருளைக்கிழங்கு இல்லைனால் சாப்பாடில் எதுவுமே இல்லை என்பார்களே! :) அதே போல் இங்கே எங்க பெண்,பிள்ளை இருவர் வீட்டிலும் அவரைக்காய், கொத்தவரைக்காய், வெண்டைக்காய் எல்லாவற்றோடும் உருளைக்கிழங்கைச் சேர்ப்பார்கள்.

      Delete
    2. கீசா மேடம்... அவரை, கத்தரி... போன்ற கரேமது பண்ணும்போது வதக்குவோம். அதோட வெந்த (ஓரளவு) உருளையையும் சேர்த்து வதக்கலாம்னு புரிஞ்சுக்கறேன். நல்லா இருக்குமா சம்மந்தமில்லாத வெண்டை/உருளை, கத்தரி/உருளை அவரை/உருளை போன்ற கறிகள்?

      Delete
    3. நாங்க/நான் பொதுவாக அவரை,கொத்தவரை, பீன்ஸ், சௌசௌ,போன்றவற்றை வதக்கிக் கறி பண்ணியதில்லை. வேகவிட்டுக் கொட்டிக்கொண்டு தேங்காய் சேர்த்துப் பண்ணுவோம். அல்லது கொத்தவரை, பீன்ஸ் போன்றவற்றை உசிலி பண்ணுவோம். இப்போல்லாம் அவரையிலும் உசிலி பண்ணுகிறார்கள். அல்லது கூட்டுப் பண்ணுவோம். இம்மாதிரி உருளைக்கிழங்கைச் சேர்த்து எங்க பையரும், பெண்ணும் பண்ணுகிறார்கள். எனக்கு அரை மனசாகத்தான் இருக்கும். வடக்கே மஹாராஷ்ட்ராவில் பெரும்பாலும் வெண்டைக்காயில் உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி சேர்த்துப் பண்ணுவது உண்டு. தக்காளி, வெங்காயம் கிரேவியிலும் வெண்டைக்காயை வதக்கிச் சேர்த்தும் பார்த்திருக்கேன். கத்திரிக்காயில் அம்மா சின்ன வயசிலேயே உருளைக்கிழங்கு, வெங்காயம் சேர்த்து வதக்கிக்கறி பண்ணி இருக்கா!

      Delete
    4. உருளைக்கிழங்கை வேக வைத்தெல்லாம் சேர்ப்பதில்லை. காய்களைப் போடும்போது முதலில் உருளைக்கிழங்கைப் போட்டுக் கொஞ்சம் வதக்கிக் கொண்டு பின்னர் வெண்டைக்காயைச் சேர்க்கிறார்கள். மற்றவற்றைச் சேர்த்தே போட்டு வதக்கிவிடுகிறார்கள். நன்றாகவே வதங்குகிறது.

      Delete
  5. சமீப காலங்களில் உருளையை தோல் சீவி நறுக்குவது வாடிக்கையாகி விட்டது.  இதில் ரசிகண்டவர்கள் மறுபடி அதற்குப் போவார்களா என்பத்ஸ் சந்தேகம்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், எங்க வீட்டில் எல்லோரும் தோல் சீவிக் கொண்டிருந்தார்கள். இப்போ என்னைப் பார்த்துட்டு மாறிட்டாங்க. )))))

      Delete
  6. நான் எண்ணெயில் காரப்பொடி முதலானவற்றைக் கலந்ததில்லை.  நல்ல ஐடியாவாக இருக்கிறது. காயுடன் நன்றாய்ச் சேரும்.  

    ReplyDelete
    Replies
    1. அம்மா இப்படிப் பண்ணுவா. ஏனெனில் எங்க வீட்டில் எண்ணெய் அதிகம் சேர்க்க முடியாது. அதே சமயம் காயும் வதங்கணும். ஆகையால் இப்படிப் பண்ணினால் நல்லா வருதுனு அம்மா பண்ணுவா.

      Delete
  7. சிவப்பு உருளையா? பார்த்தால் ஆப்பிள் போல இருக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், ஆனால் ருசி எல்லாம் இல்லை. சுமாராக இருக்கிறது. எனக்குப் பிடிக்கலை.

      Delete
  8. வேக வைத்த உருளைக்கிழங்குகளை கடாயில் போட்டுத் திருப்பும்போது உடைத்து விடுவது வழக்கம்.  முதலிலேயே நறுக்கி எல்லாம் சேர்ப்பதில்லை.

    ReplyDelete
    Replies
    1. அடிக்கடி திருப்பக் கூடாது. கைப்பிடித்துணியால் கடாயைத் தூக்கிக் குலுக்கிட்டு வைக்கலாம். கரண்டியால் அடிக்கடி கிளறாமல் இருந்தால் உடையாது.

      Delete
  9. சமீப காலத்தில் சின்ன உருளை கொஞ்சம் பிடித்திருந்தது.  இன்னும் கொஞ்சம் சாப்பிடலாம் என்கிற உணர்வுஅதில் வந்தது!  மற்றபடி பெரிய உருளை எல்லாம் கொஞ்சம்தான் போட்டுக்கொள்வேன்.  சமைத்தபின் அது ஹார்டாக இருந்தால் சாப்பிடப் பிடிப்பதில்லை.   சில விருந்துகளில் அப்படிப் பரிமாறப்படும்.அதற்காக ஒரே மாவாகவும் ஆகிவிடக்கூடாது!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், கிழங்கு சமைத்த பின்னும் கெட்டியாக இருந்தால் அது கிழங்கு வாகு. சமையலில் குற்றமில்லை. இதுக்காகவே கிழங்கைப் பார்த்துப் பார்த்து வாங்க வேண்டி இருக்கு.

      Delete
    2. எனக்கு இதுல சந்தேகம். உருளை கெட்டியா இருக்கான்னு பார்த்துத்தான் வாங்குவேன். இனிப்புச் சத்து அதிகமா (சில சின்ன உருளை இனிப்பா இருந்துவிடுகிறது... கரேமதை விரும்புவதில்லை), கிழங்கு வாகு எப்படிப் பார்த்து வாங்குவது?

      Delete
    3. நெல்லைத்தமிழரே, காசிக்குப் போனப்போ விரதகாலத்தில் இருந்ததால் உருளைக்கிழங்கு சாப்பிட வாய்ப்புக்கிடைத்திருந்திருக்காது. வட மாநிலம் முழுவதுமே உருளைக்கிழங்கு தித்திப்பாகவே இருக்கும். அதைச் சாப்பிட்டவர்களுக்குத் தெற்கே நம் ஊட்டி உருளைக்கிழங்கெல்லாம் ஜுஜுபி! மண் வாசனை அடிக்கிறாப்போல் இருக்கும். உருளைக்கிழங்கு மாவுச்சத்துடன் இருக்கணும். ரொம்ப அழுத்தமாகவும் இருக்கக் கூடாது. கொஞ்சம் பழுப்பு நிறத்தோலுடன் இருந்தால் நன்றாக இருக்கும்.

      Delete