எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, September 27, 2019

பாரம்பரியச் சமையலில் வேப்பம்பூ, தூதுவளை ரசம்!

வேப்பம்பூ ரசம்:- வேப்பம்பூ உடம்புக்கு ரொம்ப நல்லது. இதை நெய்யில் வறுத்துப் பொடித்துப் போட்டுக்கொண்டு சாதத்தோடு கலந்து சாப்பிடலாம். சுண்டைக்காய் வற்றல், மணத்தக்காளி வற்றல், வேப்பம்பூ, ஓமம், சுக்கு, பெருங்காயம் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு இந்துப்புச் சேர்த்துப் பொடித்தும் சாதத்தில் போட்டுச் சாப்பிடலாம். வேப்பம்பூப் பூக்கும் காலத்தில் வேப்பம்பூவைப் பொறுக்கிச் சுத்தம் செய்து நன்கு அலசி மோரில் உப்புப் போட்டு ஊற வைத்துக் கொண்டு அதை வெயிலில் காய வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.

Image result for வேப்பம்பூ

இந்த வேப்பம்பூ ரசம் செய்வது எப்படினு பார்ப்போம். நான்கு பேருக்கான அளவு. புளி ஜலம் இரண்டு கிண்ணம். தக்காளி தேவையானால் போடலாம். உப்பு தேவைக்கு. பெருங்காயம் கொஞ்சம் போல் மஞ்சள் பொடி அரை டீஸ்பூன். வறுக்க நெய் ஒரு டேபிள் ஸ்பூன்,கடுகு, வேப்பம்பூ ஒரு டேபிள் ஸ்பூன், மி.வத்தல் ஒன்று.

புளி ஜலத்தில் உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் போட்டுக் கொதிக்க வைத்துக் கொண்டு தேவையான நீரை விட்டு விளாவவும். பின்னர் நெய்யில் கடுகு போட்டு,மி.வத்தலையும் போட்டு வறுத்துக் கொண்டு வேப்பம்பூவைப் போட்டு நன்கு வறுக்கவும். அதை அப்படியே சூடாக ரசத்தில் கொட்டவும். சூடாக ரசம் இருக்கும்போதே சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

இன்னொரு முறையில்  மி.வத்தல், கொத்துமல்லி விதை, து.பருப்பு, மிளகு நெய்யில் வறுத்துக்கொண்டு அதோடு வேப்பம்பூவையும் வறுத்துக்கொண்டு மிக்சி ஜாரில் பொடி செய்து ரசம் விளாவியதும் போட்டுக் கலந்து கொண்டு நெய்யில் கடுகு தாளிக்கலாம். இம்முறையில் வேப்பம்பூ நன்றாக ரசத்துடன் கலக்கும்.

ஓம ரசம். இதற்கு ஓமம் வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். புளி கரைத்த நீரில் உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொதிக்க விட்டுப் பின்னர் மிளகு, ஜீரகம், துவரம்பருப்பு வெறும் வாணலியில் வறுத்த பொடியைப் போட்டு விளாவிக் கூடவே ஓமப் பொடியையும் கொஞ்சமாகச் சேர்க்கவும். அதிகம் சேர்த்தால் கசந்து விடும்.

Image result for தூதுவளை ரசம்

தூதுவளை ரசம்: தூதுவளை இலைகள் ஒரு கைப்பிடி பறித்து நன்கு அலசி வைத்துக்கொள்ளவும். மி.வத்தல், மிளகு, ஜீரகம், துவரம்பருப்போடு தூதுவளை இலையைச் சேர்த்துக் கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.

ஒன்றரைக்கிண்ணம் புளி ஜலத்தை உப்பு, மஞ்சள் பொடி போட்டுக் கொதிக்கவிடவும். புளி வாசனை போகக் கொதித்ததும் அரைத்து வைத்துள்ள விழுதைச் சேர்த்து ஒரு கொதி விடவும். கீழே இறக்கி நெய்யில் தாளிக்கவும்.

இப்போதெல்லாம் பெரும்பாலும் ரசத்தை வைக்கையில் வற்றல் குழம்புக்குத் தாளிக்கிறாப்போல் அடியில் தாளித்துக் கொண்டு மிளகு, ஜீரகக்கலவை, மற்றும் அரைத்த விழுதைப் போட்டு வதக்கிப் பின்னர் புளி ஜலத்தை விட்டுக் கொதிக்க விடுகின்றனர். இது பாரம்பரிய முறை அல்ல. புளி ஜலம் கொதித்ததும் ரசத்துக்கு விளாவுதலே சரியான முறை. குழம்பு கொதிக்கணும். ரசம் காயணும் என்பார்கள். ஆகவே ரசம் காய்ந்ததும் விளாவ வேண்டும். பின்னர் ஒரே கொதியில் மேலே நுரைத்து வந்ததும் இறக்கிவிடலாம். இதைப் பருப்புப் போட்டுப் பருப்பு ரசமாகவும், பூண்டு சேர்த்துப் பூண்டு/தூதுவளை  ரசமாகவும் பண்ணலாம்.

17 comments:

  1. வேப்பம்பூ ரசத்தில் தக்காளி போட்டால் பொருத்தமாக இருக்காது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்!   ஆனால் இதெல்லாம் எப்பவாவதுதான் செய்திருக்கிறோம்.   எங்கள் வீட்டு மொட்டை மாடியில் அவ்வளவு வேப்பம்பூ விழும்.  எடுத்து பத்திரப்படுத்தியதே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. வேப்பம்பூ உடம்புக்கு ரொம்ப நல்லது ஸ்ரீராம். கொஞ்சமானும் எடுத்து வைச்சுப் பயன்படுத்துங்க. வயிறுசரியில்லைனா வேப்பம்பூவை நெய்யில் வறுத்து சாதத்தில் போட்டுச் சாப்பிடலாம்.

      Delete
  2. ஓம ரசத்தில் ரசம் கொதித்த பிறகு துவரம்பருப்பா?   வேகவைத்ததா?    இதிலும் தக்காளி சேர்ப்பார்களா?

    ReplyDelete
    Replies
    1. மிளகு, ஜீரகம், துவரம்பருப்பு வெறும் வாணலியில் வறுத்த பொடியைப் போட்டு விளாவிக் கூடவே ஓமப் பொடியையும்

      Delete
  3. ரசத்துக்கு எப்போதுமே நாங்கள் இறக்கும் முன்னர்தான் தாளிக்கிறோம்.  ஓம ரசம்,  தூதுவளை ரசம் எல்லாம் செய்ததே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. தொலைக்காட்சி சமையல் காட்சிகளில் எல்லாம் கவனிச்சுப் பாருங்க! அடியில் தாளித்துக்கொண்டே ரசத்தை வைப்பார்கள். அரைத்த விழுதை நன்கு வதக்கிக் கொண்டு தக்காளியை அல்லது தக்காளிச் சாறைப் போட்டுக் கொதிக்க வைத்துப் பின்னர் புளி ஜலம் விடுவார்கள். ரசமும் கெட்டியாக இருக்கும்.

      Delete
    2. ஸ்ரீராம்... இப்போல்லாம் நீங்க நிறைய தட்டச்சுப் பிழை போடறீங்க.

      நாங்களும் 'இறக்கும்' முன்னர்தான் எல்லாச் சமையல் வேலைகளும் செய்வோம்.

      Delete
    3. Sorry Sriram.. முதல்ல 'இறக்கும் முன்னர்' என்று படித்ததும் எனக்கு 'Before dying' என்றுதான் மனதில் ரெஜிஸ்டர் ஆச்சு. 'இறக்கும்' சரிதான். ஹா ஹா

      Delete
    4. ரசத்தைக் கீழே இறக்கும் முன்னர்னு போட்டிருந்தால் தவறான நினைப்பு வந்திருக்காது. எழுதும்போதும், பேசும்போதும் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.

      Delete
  4. இங்கே கற்பூரவல்லி நிறைய விளைகிறது. நீங்கள் சொல்வது போல அதைச் செய்து பேரனுக்குக் கொடுக்க வேண்டும்.
    எப்போது பார்த்தாலும் சளித்தொல்லை.
    வேப்பமரம் பார்த்தே நாளாச்சு. பூ படிக்கணக்கில் எடுத்து வைத்து பயன்படுத்துவோம்.
    அம்பிகாவில் கிடைக்கும் வேப்பம்பூ மீது நம்பிக்கையில்லை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, சின்னக்குழந்தைகளுக்கு இந்த ஓமவல்லி இலையை வைத்து பஜ்ஜி செய்து கொடுக்கலாம். வயிற்றை ஒண்ணும் பண்ணாது!

      Delete
  5. இக்காலத் தேவைக்கான முக்கியமான பதிவு

    ReplyDelete
    Replies
    1. தேடிப் பிடித்து வந்து கருத்திட்டமைக்கு நன்றி முனைவர் ஐயா!

      Delete
  6. இரண்டு நாளா மனைவிகிட்ட சொல்லிட்டிருந்தேன், வேப்பம்பூ சாத்துமது பண்ணச் சொல்லி. நாங்க முதல் முறைலதான் வேப்பம்பூ சாத்துமது செய்வோம்.

    ஓம ரசம் சாப்பிட்டதே இல்லை. (மருந்து வாசனை வந்துடாதோ?)

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீரங்கத்தில் எங்க சமையல் காடரர் ஓமக்குழம்பு வாரம் ஒரு நாள் கொடுப்பார். ஓமத்தை வறுத்துப் பொடி செய்தோ அல்லது அரைத்து விட்டோ பண்ணுகிறார்கள். சாதாரண வத்தக்குழம்புப் பொடிதான். அதோடு ஓமமும் வறுத்துச் சேர்க்கிறார்கள். எப்போவானும் சாப்பிடலாம். ஓமத்தைக் கொதிக்க வைத்து ஓம வாட்டர் கொடுத்தால் எத்தனை பேர் சாப்பிடுவார்கள்? குழம்பு, ரசம் எனில் கொஞ்சமானும் இறங்குமே!

      Delete
    2. நான் ஓமவாட்டர் ரசிகன். எப்போ யார் கொடுத்தாலும் சாப்பிட்டுடுவேன். முன் காலத்துல 40 வருடங்களுக்கு முன், கிராமத்துல மண்ணெண்ணெய் பாட்டில்ல ஓமத்திராவகம் என்று சொல்லி வித்துக்கிட்டு வருவாங்க. அதுக்கு காசு கொடுப்பாங்களா இல்லை அரிசியான்னு நினைவில்லை.

      Delete
  7. வேப்பம்பூ ரசம், தூதுவளை ரசம், ஓம ரசம் என விதம் விதமாக ரசம். வேப்பம்பூ ரசம் மட்டும் சுவைத்தது உண்டு. மற்ற இரண்டும் சுவைத்ததாக நினைவில்லை. சமீபத்தில் தூதுவளை ரசம் பற்றி என் சகோதரி கேட்டுக் கொண்டிருந்தார்.

    சுவையான குறிப்புகள். பகிர்ந்து கொண்டு வரும் உங்களுக்கு நன்றி.

    ReplyDelete