எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, July 29, 2016

உணவே மருந்து! நெல்லிக்காய்!

நெல்லிக்காயை ஒரு கடி கடிச்சுட்டு அதன் பின்னர் ஒரு தம்பளர் நீர் அருந்தினால் நீர் சுவை இனிமையாக இருக்கும்.  நெல்லிக்காய் பெரும்பாலும் தென்னிந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் பரவலாகக் காணப்படும் ஒன்று. முன்னெல்லாம் பள்ளி வாசல்களிலேயே நெல்லிக்காயைக் கூறு கட்டி விப்பாங்க. காலணாவுக்கு மூணு நெல்லிக்காய் கிடைச்ச காலம் அது! அப்போக் காலணாவும் கிடைக்காது. நெல்லிக்காயும் சாப்பிட முடியாது! இதன் அருமை, பெருமை தெரியாத என்னோட அப்பா நெல்லிக்காய் சாப்பிட்டால் தொண்டை கட்டிக்கும்னு சொல்லிடுவார். திருட்டுத் தனமாகத் தான் நெல்லிக்காய் சாப்பிட்டிருக்கேன்.

நெல்லிக்காயைக் குறித்துத் தமிழ் இலக்கியத்தில் கூடச்  சொல்லப் பட்டிருக்கிறது.. ஔவையாருக்குக் கிடைத்த அபூர்வ நெல்லிக்காயைத் தன்னைக் காப்பாற்றும் மன்னன் அதியமானுக்கு ஔவை அளிக்க அதைச் சாப்பிட வேண்டியவர் ஔவைதான் சாப்பிட வேண்டும் என்று அதியமான் அவருக்கே திரும்பக் கொடுத்துவிட்டதாக வரலாறு கூறுகிறது.  இத்தனை பெருமையும், பழமையும் வாய்ந்த நெல்லிக்காயின் அருமை, பெருமைகளைப் பார்ப்போமா?

இது உயரமான மரமாக வளரும். இதன் காய்கள் வெளிர் பச்சை நிறத்திலோ அல்லது இளமஞ்சள் நிறத்திலோ காணப்படும். இதில் அரைநெல்லி, கரு நெல்லி என்று இருவகை உண்டு. அரை நெல்லி என்பது சிறியதாக வளரும்.

Image result for நெல்லிக்காய்

அரை நெல்லிக்காய்
பெருநெல்லி அல்லது மலை நெல்லிக்காய் அல்லது பெரு நெல்லி எனப்படும் நெல்லிக்காயே மிகவும் சத்துக்கள் நிறைந்தது ஆகும். நெல்லிக்காய் நம் நாடு முழுவதும் எல்லாக் காலங்களிலும் அநேகமாய்க் கிடைத்து வருகிறது. ஆயுர்வேதத்தில் இதை ஒரு ரசாயனம் என்ற பெயரிலேயே பல ஆயிரம் ஆண்டுகளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.  நம் உடல் ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிக்கும் பொருள் எதுவானாலும் அதை அப்புறப்படுத்தும் சக்தி ஆப்பிள், நெல்லிக்காய் மற்றும் ஆலிவ் ஆகியவற்றுக்கு உண்டு என்பது மருத்துவர்களின் முடிவு.
Image result for நெல்லிக்காய்

பெரு நெல்லி

படங்கள் கூகிளாருக்கு நன்றி.

நெல்லிக்காயில் இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கைப்பு, துவர்ப்பு ஆகிய ஐந்து சுவைகள் உள்ளன. பித்தத்தை நீக்க நெல்லிக்காயின் இனிப்பும் உவர்ப்பும் பயன்படுகிறது. நெல்லிக்காயின் புளிப்பு வாயுவையும், துவர்ப்பும், கைப்பும் கபத்தையும் போக்கும். இப்படி வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்று தோஷங்களையும் நீக்கும் வல்லமை ஒரு நெல்லிக்காயில் உண்டு. இதில் ஏபிசி ஆகிய மூன்று வைடமின்களைத் தவிர ஒரு கிண்ணம் சாத்துக்குடிச் சாறில் உள்ளதைப் போல் 20 மடங்கு அதிகமான இ வைடமினும் இருக்கிறது. மற்ற எந்தக் காயானாலும் கனியானாலும் வாடிப் போனால் சத்துக் குறைந்து விடும். ஆனால் நெல்லிக்காயை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதன் சத்துக்கள் வீணாவதே இல்லை.

நெல்லிக்காயைக் காய வைத்தால் அதை நெல்லிமுள்ளி என்பார்கள். இதையும் பயன்படுத்தலாம் என்றாலும் பச்சை நெல்லிக்காய் இன்னமும் சிறப்பானது. நெல்லிக்காயை அரைத்து உருண்டையாக உருட்டிக் காய வைத்து சாப்பிட்டு வந்தால் ஆறாத காயங்களும் ஆறும். நெல்லிக்காயை உண்டு வந்தால் பற்களில் ஏற்படும் பயோரியோ நோய்க்கு நல்ல மருந்தாகும். கோணல் மாணலாக முளைக்கும் பற்களையும், சின்னக் குழந்தைகளுக்குக் காலத்தில் பல் முளைக்கவில்லை என்றாலும் நெல்லிக்காயைப் பயன்படுத்தலாம். கர்ப்பிணிகள் கர்ப்பம் ஏற்பட்டதிலிருந்து தினமும் ஒரு நெல்லிக்காயோ அல்லது நெல்லி முள்ளியோ உட்கொண்டு வந்தால் வாந்தி முதலியன கட்டுப்படும். இரும்புச் சத்து, ரத்த விருத்தி ஆகியன ஏற்படும். பசி ஏற்பட்டு நன்றாகச் சாப்பிடுவார்கள். குழந்தையின் ஆரோக்கியம் மேம்படும்.

ஞாபக சக்தி அதிகரித்துக் கண் பார்வை தெளிவாகவும் நெல்லிக்காயைப் பயன்படுத்தலாம். நெல்லி மரத்தின் ஒவ்வொரு பாகமும் உபயோகமானது. நெல்லிப்பட்டை வீடு கட்டவும், கலப்பை போன்ற உழவு யந்திரங்கள் தயாரிக்கவும் பயன்படும். இதில் கிடைக்கும் டானின் என்னும் ஆசிட் தோல் பதனிடப் பயன்படும். இதன் இலைகளின் நீலச் சாயம் பட்டுத் துணிகளில் சாயம்தோய்க்கப்பயன்படும்.

8 comments:

  1. உபயோகமான தகவல். எனக்கு நெல்லிக்காய் ஊறுகாய் ரொம்பவே பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லிக்காய் ஊறுகாய் எனக்கும் பிடிக்கும். அதுவும் ராத்திரி தான் சாப்பிடணும்னு தோணும்! :)

      Delete
  2. எங்கள் வீட்டில் நெல்லி மரம் இருந்தது. என் அப்பாதான் மரம் ஏறி காய்களை உலுக்கி விடுவார். அது நினைவுக்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. நெல்லிக்காய் வீட்டில் காய்ப்பதை விடக் கடைகளில் வாங்குவது இன்னும் சுவைனு தோணும்.

      Delete
  3. நல்ல தகவல். எனக்கும் பிடித்தது.... அரை நெல்லி மரம் நெய்வேலி வீட்டில் இருந்தது. நிறையவே சாப்பிட்டு இருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. முன்னால் எல்லாம் அரை நெல்லி பிடிச்சது. இப்போல்லாம் பிடிக்கலை!

      Delete
  4. 'நெல்லியைப் பற்றி நல்ல பதிவு. இன்னும் அதை வைத்துப் பண்ணும் உணவுகளையும் கொடுக்கவும். அரை நெல்லியில் விடமின் சி தவிர வேறு மருத்துவ குணங்கள் இல்லை. பொதுவாகக் கிடைக்கும் நெல்லியில் நிறைய மருத்துவகுணங்கள் உண்டு. இப்போ மிகவும் பருமனாக விளைவிக்கப்படும் நெல்லியில் அத்தனை மருத்துவ குணங்கள் இல்லை.

    மாங்காய் சாப்பிட்டுவிட்டு நீர் அருந்தமுடியாது. நெல்லி சாப்பிட்டுவிட்டு அருந்தலாம். கிணறுகளில் நீர் கடுமையாக இருந்தால் (உப்பு கொஞ்சம் இருந்தால்), நெல்லி மரக் கட்டைகளைக் கிணற்றில் இடுவார்கள். நீர் சுவை அதிகரிக்கும் என்று. நெல்லி குளிர்ச்சி என்பதால், ஞாயிறு அன்று (முன் காலத்தில்) நெல்லி ஊறுகாய் சாதத்துக்குப் போடமாட்டார்கள். அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால். சனி நீராடுலாம் அரசு வேலையில் இருப்பவர்கள் பின்பற்றுவதில்லை. ஞாயிறுதான்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழன், எந்தப் பொருளைக் குறித்துச் சொன்னாலும் அதன் சமையல் குறிப்புக்களையும் சொல்லி வருகிறேன். ஞாயிறு அன்று நெல்லிக்காய் சாப்பிடுவதில்லை என்பது புதிய செய்தி. எங்கள் வீடுகளில் இரவு நேரத்தில் கீரை, நெல்லிக்காய் போன்றவை சாப்பிட மாட்டோம்.

      Delete