எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, July 4, 2016

உணவே மருந்து! மணத்தக்காளி!

மணத்தக்காளி, மனைத்தக்காளி, மிளகு தக்காளி என்றெல்லாம் அழைக்கப்படும் இதை அநேகமாக வேலி ஓரங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் சாதாரணமாக யாரும் பயிரிடாமலேயே முளைத்திருப்பதைக் காணலாம். எங்கும் பயிராகும் தாவரம் இது. சுமார் ஐம்பது அல்லது அறுபது  சென்டிமீட்டர் வரை வளரும். காய்கள் கொத்துக்கொத்தாகக் காய்க்கும். காய்கள் பச்சை நிறத்தில் இருந்தாலும் பழங்கள் ஆழ்ந்த கறுப்பு வண்ணத்தில் அல்லது சிவந்த நிறத்தில் காணப்படும். இதுவும் கத்திரி வகையைச் சேர்ந்ததே!

Image result for மணத்தக்காளிக் கீரை

படத்துக்கு நன்றி செல்லியல் கூகிளார் வாயிலாக!

இதன் கீரை, காய்கள், பழங்கள் என அனைத்துமே நாம் உண்ணக் கூடியதே! கீரையின் தண்டையும் பொடிப்பொடியாக நறுக்கிப் போட்டுச் சமைத்து உண்ணலாம். இதன் மூலம் மேற்கு ஆப்பிரிக்கா என்று சொல்லப்படுகிறது. ஆனாலும் இது இந்தியாவில் குறிப்பாகத் தமிழ்நாட்டில் அதிகம் உண்ணப்படும் கீரை வகைகளில் ஒன்றாகும். வாயில் அடிக்கடி புண் வந்து அவதிப்படுபவர்கள் மணத்தக்காளிக்கீரையைப் பாசிப்பருப்புப் போட்டுச் சமைத்து உண்டால் வாய்ப் புண்ணிலிருந்து நிவாரணம் கிடைக்கும். நோய்களைக் குணப்படுத்தும் குணம் இந்தக் கீரைக்கு அதிகம் உண்டு.

இதயத்துக்கு பலம் ஊட்டுவதாக இது உள்ளது. கீரையையும், பழத்தின் உள்ளிருக்கும் விதைகளையும் காய வைத்துப் பொடித்துக் கொண்டு தினம் காலை அரை டீஸ்பூன், மாலை அரை டீஸ்பூன் சாப்பிட்டு வந்தால் காய்ச்சல், நெஞ்சு வலி, நாள்பட்ட வயிற்றுப் புண்கள் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாகும்.  நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துக்களைச் சரியாக எந்த இடத்துக்கு அனுப்பவேண்டுமோ அந்த வேலையை இந்தக் கீரை சரியாகச் செய்துவிடும்.  சாப்பிடும் உணவுப்பொருட்கள் நல்ல ஜீரணம் ஆகிக் கழிவுகள், சிறுநீர் ஆகியவை உடனே வெளிவரவும் உதவி செய்கிறது. உடல் நலத்தைப் புதுப்பித்துக் கொடுப்பதோடு அல்லாமல் காரணமில்லாம மன எரிச்சல், உடலில் குத்துவது போன்ற உணர்வுகள் இருந்தாலும் கூட இந்தக்கீரையைச் சமைத்துச் சாப்பிட்டால் மனமும் அமைதி அடையும். உடல் உறுப்புகளும் சீராகும்.

உடலில் தோன்றும் வீக்கங்கள், சூட்டினால் வரும் கட்டிகள் ஆகியவற்றை இந்தக் கீரை சாப்பிட்டால் அது அவற்றை எதிர்த்துப் போரிட்டு அவற்றை நீக்கிவிடும். சிறுநீரகக் கோளாறை இருந்தால் அதைச் சரி செய்து விடும். சிறுநீர் நன்கு பிரிய வழி அமைத்துக் கொடுக்கும். கசப்புச் சுவையுடன் இந்தக்கீரை இருந்தாலும் சமைத்துச் சாப்பிட்டால் கசப்புத் தெரியாது.  மணத்தக்காளிப் பழங்களும் விலை உயர்ந்த டானிக் சாப்பிடுவதை விடச் சிறப்பான சத்தைத் தரும். நீண்ட நாட்கள் மலச்சிக்கல் இருந்தால் தீர்த்து வைக்கும். நல்ல பசியை உண்டாக்கும். முக்கியமாக ஆஸ்த்மா நோயாளிகளுக்கு மணத்தக்காளி, சுண்டைக்காய் இரண்டுமே  சிறந்த மருந்து. வாரம் இரு நாட்கள் மட்டுமே மலம் கழிக்கும் பழக்கம் உள்ளவர்கள் தொடர்ந்து மணத்தக்காளிக்கீரையையும் சமைத்து உண்டு மணத்தக்காளிப் பழத்தையும் வற்றல் போட்டுச் சமைத்து உண்டால் இதில் உள்ள நார்ச்சத்தின் வேலையால் மலச்சிக்கல் தீரும்.

இந்தக்கீரையை நெய்யில் வதக்கிக் கொஞ்சம் பொடித்த மிளகு, சீரகம், உப்புச் சேர்த்துப் பெருங்காயம் போட்டு நிறைய நீர் விட்டுக் கொதிக்க விட்டுக் கஷாயமாகச் செய்து அருந்தலாம். இதன் மூலம் நீர்க்கோவை உள்ளவர்களுக்கு நீர்க்கோவை தீரும். மசியல், பொரியலாகவும் சாப்பிடலாம். கீரையையும் தண்டுகளையும் மிக்சியில் போட்டு அரைத்து சாறெடுத்தும் குடிக்கலாம். எல்லாமே வயிற்றுக்கு மிக நல்லது.


தொடரும்!

3 comments:

  1. இத்தனூண்டு பழத்திலிருந்து விதைகளை மட்டும் பிரித்தெடுக்கப் பொறுமை வேண்டும்! கீரை மற்றும் காய்களை சமைப்பதுண்டு. பொடிகளை செய்ததில்லை!

    ReplyDelete
  2. மணத்தக்காளி... இங்கே கிடைப்பதில்லை. எத்தனை மருத்துவ குணங்கள் இதற்கு.....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். நாம் கொண்டு போவதைப் பயிரிட்டால் வரும். நாங்க அப்படிச் செய்திருக்கோம். :)

      Delete