எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, July 17, 2016

உணவே மருந்து! வெந்தயம்!

அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் ஒரு பொருள் வெந்தயம். சாம்பார், வத்தல் குழம்பு போன்றவற்றிற்குத் தாளிப்பதோடு அல்லாமல் இட்லி, தோசைக்கு அரைக்கையிலும் வெந்தயம் சேர்ப்போம். வெந்தயம் இல்லாமல் அன்றாட சமையலே இல்லை. இந்த வெந்தயம் குளிர்ச்சியைத் தரும் ஒரு பொருள்.  வெந்தயத்தில் புரதம், சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், இரும்புச் சத்து,விடமின் ஏ, தியாமின், ரிபோஃப்ளேவின், நிக்கோடினிக் அமிலம் ஆகிய சத்துக்கள் இருக்கின்றன. இது வயிற்றுக்கு மட்டுமில்லாமல் அழகு சாதனப் பொருட்களிலும் பயன்படுத்தப் படுகிறது. வெந்தயத்தை முதல் நாள் இரவே ஊற வைத்து மறுநாள் அதோடு செம்பருத்தி இலையையும் போட்டு நன்கு நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து ஊற வைத்துக் குளித்தால் ஷாம்பூவெல்லாம் தோற்றுவிடும் அளவுக்குத் தலை மயிர் மென்மையாகவும், பட்டுப் போலவும் இருக்கும். கூந்தல் வளரவும் செய்யும்.
Image result for வெந்தயம்

படத்துக்கு நன்றி சூரியன் டிவி கூகிளார் வாயிலாக!

வெந்தயத்தை ஊற வைத்து முளை கட்டிப் புழுங்கல் அரிசியைக் களைந்து வறுத்துக் கொண்டு மிக்சியில் பொடி செய்து முளைக் கட்டிய வெந்தயத்தோடு கலந்து கஞ்சி காய்ச்சித் தேங்காய்ப் பால் ஊற்றிச் சாப்பிட்டால் வயிற்றிற்கு இதமாக இருக்கும். துவரம்பருப்பையும், வெந்தயத்தையும் சேர்த்து வேகவைத்து சாம்பாரில் சேர்த்தால் சாம்பார் கெட்டே போகாது என்பதோடு நீரிழிவு நோய்க்கு இது அருமருந்தாகும். இட்லிப் புழுங்கல் அரிசியோடு வெறும் வெந்தயம் மட்டும் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்த்துத் தனியாக ஊற வைத்துக் கொண்டு முதலில் வெந்தயத்தை அரைத்து விட்டுப் பின்னர் அரிசியையும் போட்டு அரைத்து தோசை வார்த்துச் சாப்பிட்டாலும் நீரிழிவுக்கு நல்லது.

வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு தினம் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் குளிர்ச்சியைத் தருவதோடு சர்க்கரையும் குறைந்து வரும். இந்த வெந்தயப் பொடியை வற்றல் குழம்பு, புளிக்குழம்பு போன்றவை செய்கையில் கீழே இறக்கும்போது ஒரு டீஸ்பூன் சேர்த்தால் குழம்பு ஆஹா! மணம் தூக்கும். புளிக்காய்ச்சல், ஊறுகாய் போன்றவற்றிற்கும் வெந்தயப் பொடி சேர்ப்போம். வெந்தயத்தில் இருக்கும் வேதிப் பொருள் இதய நோய் வருவதைத் தடுத்துக் கொலஸ்ட்ரால் எனப்படும் கெட்ட கொழுப்பையும் கட்டுப்படுத்தும். இதயத் துடிப்பும் கட்டுக்குள் இருக்கும்.  ரத்த சோகை உள்ளவர்களுக்கும் வெந்தயம் நல்ல மருந்தாகச் செயல்படும்.  முளைக்கட்டிய வெந்தயம் ரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.

முளைக்கட்டிய வெந்தயத்தோடு பாலில் ஊற வைத்த கசகசாவையும் சேர்த்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் பருக்களால், கட்டிகளால் ஏற்பட்ட வடுக்கள், கரும்புள்ளிகள் காணாமல் போகும். முகத்தைச் சுருக்கம் இல்லாமல் வைக்கும். வெந்தயக் கீரையைக் கூட அரைத்துத் தடவலாம்.  வெந்தயத்தில் உள்ள வேதிப் பொருட்கள் ஈஸ்ட்ரோஜென் போலச் செயல்பட்டுப் பெண்களின் மாதாந்திரத் தொல்லைகளைக் குறைக்கும். பாலூட்டும் தாய்மார்களுக்குப் பாலை அதிகரிக்கச் செய்யும் சக்தியும் வெந்தயத்தில் உண்டு.  பாலூட்டும் தாய்மார்கள் வெந்தயத்தை வறுத்துக் கொண்டு கருப்பட்டி சேர்த்துக் களி செய்து உண்டு வந்தால் பால் பெருகும். குழந்தையும் ஆரோக்கியமாக வளரும்.

உடல் எடை குறையவும் வெந்தயம் சரியான முறையில் பயனாகிறது. வெந்தயத்தை ஊற வைத்து மென்று தின்றுவிட்டு இரண்டு சின்ன வெங்காயத்தை நறுக்கி மோரில் சேர்த்துக் குடித்து வர உடல் எடை குறைய ஆரம்பிக்கும். வயிற்றில் வலி இருந்தாலோ வயிற்றுக் கடுப்பாக இருந்தாலோ வெற்றிலையோடு வெந்தயத்தை மென்று தின்று வரச் சரியாகி விடும்.  வெந்தயத்தை ஊற வைத்து எலுமிச்சைச் சாறோடு சேர்த்து அரைத்துக் கொண்டு காலை, மாலை என இருவேளைகள் சாப்பிட்டு வரக் கல்லீரல் கோளாறுகள் சரியாகும். கோடை காலத்தில் தினம் காலை ஊற வைத்த வெந்தயத்தை மென்று தின்றுவிட்டு நீராகாரமும் குடித்து வர உடல் வெம்மை தணியும்.

4 comments:

  1. வெந்தயத்தில் எத்தனை பலன்கள்.....

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  2. வெந்தயத்தின் பழங்கால்படித்தேன். எ.ப சாதத்துக்கு கூட வெந்தய வாசனை மெயின்! இது அதிகமாக சாப்பிடக் கூடாது என்றும் சொல்வார்களே...

    ReplyDelete
  3. வெந்தயத்தின் பயன்கள் என்று படிக்கவும். மன்னிக்கவும்.

    :)))

    ReplyDelete
  4. இருவருக்கும் நன்றி.

    ReplyDelete