எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, February 6, 2014

தாளகமாம், தாளகம்!

இன்னிக்கு கொஞ்சம் மாறுதலா ஒரு குழம்பு செய்தேன்.  இதுக்குப்பருப்பு வேணும்னு அவசியம் இல்லை.  இதைத் தாளகக் குழம்புனு சொல்வாங்க.  எங்க வீட்டிலே இதை ராயர் குழம்புனு அப்பா சொல்லுவார். இதுக்கு நாட்டுக் காய்களே நன்றாக இருக்கும்.  நான் இன்னிக்கு அவரைக்காய், கத்தரிக்காய் மட்டும் போட்டுச் செய்தேன். பொதுவாக இதுக்கு அவரை, கத்திரி, வாழைக்காய், சேனைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பறங்கிக்காய் போன்றவையே  நன்றாக இருக்கும்.  மறந்தும் கூட இங்கிலீஷ் காய்கள் எனப்படும் பீன்ஸ், உருளைக்கிழங்கு, காரட் போன்றவையோ பச்சைப்பட்டாணியோ வேண்டாம்.  பச்சை மொச்சை கிடைக்கும் காலத்தில் பச்சை மொச்சையும், அதுகிடைக்கவில்லை எனில் காய்ந்த மொச்சையையும், கொண்டைக்கடலையையும் போட்டுக்கலாம்.  படம் இன்னொரு நாள் பண்ணும்போது தான் எடுக்கணும்.  நேத்திக்கு ராத்திரி தேப்லா பண்ணினேன்.  படம் எடுக்க மறந்து போச்ச்! :))))

செய்முறை


நான்கு பேருக்குக்காய்கள் அனைத்தும் கலந்து கால் கிலோவுக்குள்போதும். அல்லது

வாழைக்காய் சின்னது ஒன்று

கத்தரிக்காய் இரண்டு

அவரைக்காய் ஒரு கைப்பிடி

சேனைக்கிழங்கு நூறு கிராம் அளவு

பறங்கிக்காய் நூறு கிராம் அளவு

சர்க்கரை வள்ளிக் கிழங்கு கிடைச்சால் ஒன்று

பச்சை மொச்சை அல்லது மொச்சைப்பருப்பு ஒரு கைப்பிடி

கொண்டைக்கடலை  ஒருகைப்பிடி

புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவுக்கு. ஊறவைத்துக் கரைத்து வடிகட்டுச் சாறு எடுத்துக் கொள்ளவும்.  சாறின் அளவு இரண்டு கிண்ணம் இருக்கலாம்.

உப்பு தேவைக்கு

வறுத்து அரைக்க

மஞ்சள் பொடி அல்லது விரலி மஞ்சள் ஒரு துண்டு

மிளகாய் வற்றல்  நான்கு

கடலைப்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்

உளுத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் ஒரு துண்டு

மிளகு ஒரு டீஸ்பூன்

தேங்காய் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்

தாளிக்க

கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை, கொத்துமல்லி, மி.வத்தல்

தாளிக்க வறுக்க

சமையல் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்

காய்களைத் துண்டம் துண்டமாக அல்லது நீள வாட்டில் உங்களுக்குப் பிடிச்ச மாதிரி எடுத்து நறுக்கிக் கொண்டு ஒரு பாத்திரத்தில் நீரை வைத்து உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து வேக வைக்கவும்.  காய்கள் பாதி வெந்ததும் புளித் தண்ணீரைச் சேர்க்கவும்.

வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை எண்ணெய் விட்டு வறுக்கவும்.  தேங்காயையும் வறுக்கலாம்.  மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும். புளி வாசனை போகக் கொதித்ததும் அரைத்த விழுதைச் சேர்த்துத் தேவையான உப்பை மட்டும் சேர்க்கவும். ஒரு கொதி விட்டதும் இன்னொரு இரும்புக் கரண்டியில் மிச்சம் எண்ணெயை ஊற்றிக் கடுகு, மி.வத்தல், உ.பருப்பு, கருகப்பிலை போட்டுத் தாளிக்கவும்.  கொத்துமல்லி நறுக்கிச் சேர்க்கவும். வெறும்  சாதம், மற்றும் கலந்த சாதங்களோடு சாப்பிட ஏதுவானது.  சாதம் மட்டும் வைத்துக்கொண்டு இப்படிக் காய்களைப் போட்டுக் குழம்பு செய்து அப்பளம் பொரித்துக் கொண்டோ அல்லது வடாம், வத்தல் வறுத்துக் கொண்டோ சாப்பிட்டுக்கலாம்.


இதுவே இன்னொரு முறையிலும் செய்வார்கள்.  அதில் காய்கள் சேர்க்கும் விதம், புளித்தண்ணீர் சேர்ப்பது எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தாலும் வறுத்து அரைப்பதில் மாறுதல் இருக்கும்.

வறுத்து அரைக்க

மி.வத்தல்.      5

கொத்துமல்லி விதை ஒரு டேபிள் ஸ்பூன்

கடலைப்பருப்பு  ஒரு டீஸ்பூன்

உ.பருப்பு                  ஒரு டீஸ்பூன்

வெள்ளை எள்       அரை டீஸ்பூன்

வெந்தயம்               அரை டீஸ்பூன்

பெருங்காயம்

தேங்காய்த் துருவல்

கருகப்பிலை

இவை எல்லாவற்றையும் வறுத்து கருகப்பிலையையும் வறுத்து அரைத்துச் சேர்ப்பார்கள்.  இதுவும் ஒரு மாறுபட்ட சுவையுடன் இருக்கும்.

தென் மாவட்டங்களில் வெண் பொங்கலும், தாளகக் குழம்பும் ரொம்பவே பிரபலம் ஆன ஒரு விஷயம்.  அதுவும் மாசி மாதம் செவ்வாய்க்கிழமைகளில் வீட்டில் கன்னிப் பெண்கள் இருந்தாலோ (பத்து வயதுக்குட்பட்ட பெண்கள் மட்டும்) அல்லது அக்கம்பக்கம் இருந்தாலோ அவங்களுக்கு வெண் பொங்கல் செய்து இந்தக் குழம்பையும் பண்ணி எண்ணெய் தேய்த்துக் குளிக்க வைத்துச் சாப்பிட வைப்பாங்க.  புதுத் துணிகள் எடுத்துக் கொடுக்கிறதும் உண்டு.  வெறும் வெற்றிலை, பாக்கு, காசு கொடுப்பவர்களும் உண்டு.  இப்போதெல்லாம் இந்தப் பழக்கம் இருக்கானு தெரியலை.


12 comments:

  1. செய்முறை குறிப்புகளுக்கு நன்றி அம்மா...

    தென் மாவட்டங்களில் இன்னும் பழக்கம் உண்டு... ஆனால் தாளகக் குழம்பு செய்வார்களா என்று தெரியாது... பகிர்வின் மூலம் தான் கண்டு கொண்டேன்... கண்டு கொண்டேன்... நன்றி...

    ஒரு சந்தேகம் : தலைப்பை பார்த்தால் கோபமாக செய்த மாதிரி தெரிகிறதே... அதனால் படம் எடுக்க முடியாமல் போய் விட்டதோ...?

    ReplyDelete
    Replies
    1. நன்றி டிடி. கோபம் எல்லாம் இல்லை. என்ன எழுதறது புதுசானு யோசிச்சேன், அவ்வளவு தான். :)))))

      Delete
  2. படம் இன்னொருநாள், படம் இன்னொருநாள் போடறேன் என்றே சொல்லி வருகிறீர்கள். பதிவோடு படம் போட்டால்தானே நல்லாயிருக்கும்? :))

    நாங்கள் இதை திருநெல்வேலி டைப் அரைத்துவிட்ட குழம்பு என்று சொல்லுவோம். பெரும்பாலும் கத்தரிக்காய், முருங்கை காம்பினேஷனில் செய்வோம்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், சமைக்கிறச்சே இதைப் படம் பிடிச்சு வைச்சுக்கணும்னு எண்ணம் வரதில்லை. சமையலில் மட்டுமே கவனம் இருக்கும்.:))) பதிவு எழுதறச்சே தான் நினைவே வரும். நினைவு வந்ததும்பதிவைப் போட்டுடுவேன். படம் போட முடியறதில்லை. காமிரா வேறே உள்ளே வைச்சிருக்கேன். எடுக்கறாப்போல் வைச்சுக்கணும். :))))

      Delete
  3. நல்லாத்தான் இருக்கு தாளகம்.

    செஞ்ச தேப்லாவை தனியாவே சாப்பிட்டுட்டீங்களா, எங்க கண்ணில் காமிக்காமல் :-)))

    //படம் இன்னொருநாள், படம் இன்னொருநாள் போடறேன் என்றே சொல்லி வருகிறீர்கள். பதிவோடு படம் போட்டால்தானே நல்லாயிருக்கும்? :))//

    ஸ்ரீராமை வழிமொழியறேன் :-)

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, அமைதி, அதே அதே, சபாபதே!:))) தேப்லா இன்னொரு நாள் பண்ணறச்சே ஞாபகமாப் படம் எடுக்கணும். :))))) தாளகமும்! பொங்கல் காலை வேளையில் பண்ணினால் தாளகம் பண்ணுவேன். அடுத்த செவ்வாயன்று பார்க்கலாம். :))))

      Delete
  4. ///இப்போதெல்லாம் இந்தப் பழக்கம் இருக்கானு தெரியலை.///

    இப்பவும் வழக்கம் இருக்கும்மா!..எங்க ஊர்ல மாசி செவ்வாய்க்கிழமை வெயிலுகந்த அம்மனுக்கு சாட்டுதல் (கொடியேற்றம்)நடக்கும்.. தொடர்ந்து வரும் திருவிழா நாட்களில் இம்மாதிரி செய்வாங்க..தைப்பொங்கல் அன்னிக்கும் இந்தக் குழம்பு செய்வது பழக்கமா இருக்கு.. ஆனா நீங்க சொன்ன இன்னொரு விதம் செய்து பாக்கறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பார்வதி, டிடியும் சொல்லி இருக்கார். பழக்கம் இருக்குனு. நல்லது தான். செய்து பாருங்க. எங்க மாமியார் வீட்டிலே பொங்கலுக்குத் தனிக்கூட்டு. தனியாப் பதிவு போட்டிருக்கேன். அம்மா வீட்டிலே என்ன குழம்பு வேணாலும் வைக்கலாம். அநேகமா மோர்க்குழம்பு தான் இருக்கும். :)))

      Delete
  5. தாளகம் என்ற பெயர் நன்றாக இருக்கிறது. .அம்மா இருந்தவரைக்கும் இந்த வழக்கம் இருந்தது. இங்கே புக்ககத்தில் ஐப்பசி மாசம் பெண் குழந்தைக்குச் சாப்பாடும் புதுத்துணியும் உண்டு.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, தாளகம் குறித்து இன்னும் சொல்லுவீங்கனு எதிர்பார்த்தேன். :))) ஐப்பசி மாதம் என்ன விசேஷம்??? எங்க அம்மா வீடுகளிலே ஆடி செவ்வாய், மாசிச் செவ்வாய்லே பெண் குழந்தைகளுக்குக் கொடுப்பாங்க.

      Delete
  6. மகளிர் தின சிறப்பிதழுக்காக சில கேள்விகள் அதில் ஒன்று உங்களுக்கு.....
    குடும்ப நிர்வாகத்தில் சிறப்பாக இருப்பது கணவரா? மனைவியா?
    சுவராஸ்யமான பதிலும், உங்க புகைப்படமும் உடனே uavaikarai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைங்க......

    ReplyDelete
  7. Hi Usha, I am in Delhi now. just saw your questions. may be it is too late to participate. :)))) will try afterwards. I am really very sorry. :(

    ReplyDelete