எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, February 21, 2013

சேனையில் பிட்லை தெரியுமா?

சேனைக்கிழங்கில் பிட்லை சாப்பிட்டிருக்கீங்களா? நல்லாவே இருக்கும். :)

சேனைக்கிழங்கு நீள வாக்கில் நறுக்கிய துண்டங்கள் ஒரு கிண்ணம்.  பச்சைக் காராமணி (பயத்தங்காய்)  நூறு கிராம் வாங்கிக் கொஞ்சம் நீள வாக்கிலேயே நறுக்கிக் கொள்ளவும்.  இதைத் தவிரவும் மொச்சை, காராமணி(விதை) ஊற வைத்தது இரண்டு டேபிள் ஸ்பூன்.  புளி ஒரு எலுமிச்சை அளவு ஊற வைத்துக் கரைத்துக்கொள்ளவும்.

வறுத்து அரைக்க:  மிளகாய் வற்றல் மேற்சொன்ன அளவுக்கு ஆறு, ஒரு டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி விதை(தேவையானால்) நான் போடுவதில்லை. ஆறு மி.வத்தல், ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு, பெருங்காயம், தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன் வறுத்துக் கொஞ்சம் கொர கொரவென அரைத்துக் கொள்ளவும்.  விருப்பப் பட்டால் வெல்லம் ஒரு டீஸ்பூன் தூளாக.

துவரம்பருப்பு இரண்டு டேபிள் ஸ்பூன் குழைய வேக வைத்துக் கொள்ளவும்.  தாளிக்கத் தேங்காய் எண்ணெய், கடுகு, உபருப்பு, ஒரே ஒரு மி.வத்தல், கருகப்பிலை, கொத்துமல்லி.


சேனைக்கிழங்கை முதலில் இரண்டாம் கழுநீரில் வேகவைத்துக் கொட்டிக் கொள்ளவும்.  பயத்தங்காய் அல்லது பச்சைக்காராமணியைக் கொஞ்சம் எண்ணெய் விட்டு வதக்கிக் கொண்டு வேக விடவும்.  ஊற வைத்த மொச்சை, காராமணியையும் சேர்க்கவும்.  அது வேகும்போதே சேனைக்கிழங்கையும் சேர்க்கவும்.   காய்களுக்குத் தேவையான உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும்.  காய்கள் நன்கு வெந்ததும், புளிக்கரைசலை ஊற்றிக் கொண்டு, அதற்குத் தேவையான உப்பை மட்டும் போடவும்.  மறதிப் பேர்வழி எனில் முதலில் காய் வேகும்போது உப்புச் சேர்க்காமல் புளிக்கரைசலை ஊற்றிவிட்டுப் பின்னர் சேர்த்துப் போடவும்.  புளி வாசனை போகக் கொதித்ததும், வெந்த துவரம்பருப்பு சேர்த்துக் கொண்டு, அரைத்த விழுதையும் போட்டுக் கலந்து கொதிக்க விடவும்.  சேர்ந்தாற்போல் கொதித்ததும் கீழே இறக்கிக் கொண்டு தேங்காய் எண்ணெயில் கடுகு, உ.பருப்பு, மி.வற்றல் தாளித்துக் கருகப்பிலையையும் போட்டுப் புரட்டிக் கொட்டவும்.  பச்சைக் கொத்துமல்லி தூவவும்.  சாதத்தோடு சாப்பிடச் சுவையாக இருக்கும்.


அடுத்து சேனைக்கிழங்கில் பருப்புப் போடாத வெறும் குழம்பு.  இதற்குச் சேனைக்கிழங்கு நறுக்கிய துண்டங்கள் ஒரு சின்னக் கிண்ணம், மொச்சை, கொண்டைக்கடலை, காராமணி(ஊற வைக்க வேண்டாம்) தாளிக்க எண்ணெய் நல்லெண்ணெயாக இருத்தல் நலம், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு, து.பருப்பு, வெந்தயம், மி.வத்தல், பெருங்காயம், கருகப்பிலை உப்பு தேவையான அளவு.  குழம்புப் பொடி, ஒரு டேபிள் ஸ்பூன் பொடியாய் நறுக்கிய தேங்காய்க் கீற்றுகள்

புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்து நன்கு நீர் விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.


கடாய்/வாணலி/உருளியில் நல்லெண்ணெய் ஊற்றிக்கொண்டு கடுகு, உ.பருப்பு, து.பருப்பு, க.பருப்பு, பெருங்காயம், மி.வத்தல் கருகப்பிலை தாளிக்கவும்.  அந்தக் காய்ந்த எண்ணெயிலேயே கொண்டைக்கடலை, மொச்சை, காராமணி போன்றவற்றைப் போட்டு வெடிக்க விடவும்.  வெடித்ததும், சேனைக்கிழங்குத் துண்டங்களைப் போட்டுக்கொண்டு, பொடியாய் நறுக்கிய தேங்காய்க் கீற்றுகளையும் போட்டு அந்த எண்ணெயிலேயே வதக்கவும்.  பின்னர் உங்கள் குழம்புப் பொடி வறுத்துச் செய்யவில்லை எனில் அந்த எண்ணெயிலேயே போட்டு வறுக்கவும்.  அதன் பின்னர் புளிக்கரைசலை ஊற்றி உப்புப் போட்டுக் கொதிக்க விடவும்.  சேர்ந்து வருகையில் தேவையானால் வெல்லம் சேர்க்கவும்.  கீழே இறக்கி வைத்து வறுத்த வெந்தயத் தூள் அரை டீஸ்பூன் சேர்க்கவும்.  சாதம், அடை, அரிசி உப்புமா போன்றவற்றிற்கு ஏற்ற துணை.

9 comments:

  1. பகிர்வில் படத்தையும் சேர்த்திருக்கலாமே...

    ReplyDelete
  2. கொஞ்சம் விவரமான ரெசிபி. சேனைக்கிழங்கை மட்டும் போட்டு செஞ்சு பாக்குறேன்.

    (இரண்டாம் கழுநீரா? )

    ReplyDelete
  3. வாங்க டிடி, செய்யும்போது தான் படம் எடுக்கணும். நினைவில் இருப்பதை அவ்வப்போது பகிர்ந்துக்கறேன். :))))

    ReplyDelete
  4. வாங்க அப்பாதுரை, இரண்டாம் கழுநீர் என்றால் அரிசி களைகையில் முதலில் விடும் ஜலத்தில் வரும் கழுநீரைக் கொட்டிவிட்டுப் பின்னர் இரண்டாம்முறை எடுக்கும் கழுநீரில் சிறிது நேரம் சேனைக்கிழங்கைப் போட்டுக் கொதிக்க விட்டால் காறல் போகும். பின்னர் மீண்டும் கழுவி விட்டு வேக வைக்கணும். :))))

    ReplyDelete
  5. சாப்பிட்டதுண்டுதான். ஆனால் என்னதான் சொல்லுங்கள் பிட்லை என்றால் பாகற்காய்தான். கத்தரிக்காய்க் கூட ரெண்டாம் பட்சம்தான். சமீபத்தில் கொ.க போட்டுச் சாப்பிடவில்லை.

    ReplyDelete
  6. வாங்க ஸ்ரீராம், நீங்க சொல்வது சரியே. பாகற்காய்ப் பிட்லைக்குப் பின் தான் மத்தது. என்றாலும் ஒரு மாறுதலுக்கு இதையும் செய்து பார்க்கலாம். அவ்வளவே. :))) எங்க வீட்டிலே கொ.க. இதுக்கெல்லாம் கட்டாயமாய்ப் போடணும். என்னோட பிறந்த வீட்டிலோ மொச்சைப்பருப்பு மட்டும். அதுவும் பிதுக்கி எடுத்துக் காய வைத்த மொச்சைப்பருப்பு மட்டும் பிட்லைக்கு. கூட்டுகளுக்குப் புளிவிட்டுச் செய்தால் சிவப்புக் காராமணி.தட்டாம்பயறுனு சொல்வோம் மதுரைப்பக்கம்.

    ReplyDelete
  7. சேனையில் பிட்லை செய்ததில்லை....இதை படித்ததும் செய்து பார்க்கத் தோன்றுகிறது.

    வெறும் குழம்பில் போடும் பயறுகள் புளித்தண்ணீரிலேயே வெந்து விடுமா?

    ReplyDelete
    Replies
    1. இங்கெல்லாம் வேகின்றன கோவை2தில்லி. சென்னையில் எண்ணெயில் வெடிக்க விட்டுப் பின்னர் வெந்நீரில் ஊற வைத்துவிட்டுப் போடுவோம். அல்லது முதல்நாளே ஊற வைப்போம். இப்போ வெயில் காலம் என்பதால் முதல்நாள் ஊற வைத்தால் சரியா வராது. :))))

      Delete