எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, February 20, 2013

மேலும் சில சேனைக்கிழங்கு தயாரிப்புகள்!

பொதுவாச் சேனைக்கிழங்கு சாப்பிடறவங்களே கம்மி.  அவங்களை ஊக்குவிக்க இம்மாதிரியெல்லாம் பண்ணலாம். :)


சேனைக்கிழங்கு கால் கிலோ,  தேவையான அளவுக்கு உப்பு, கால் டீஸ்பூன் மஞ்சள் பொடி, மிளகாய் வற்றல் 2, தேங்காய்த் துருவல் ஒரு சின்ன மூடி அல்லது இரண்டு டேபிள் ஸ்பூன், ஜீரகம், தாளிக்கத் தேங்காய் எண்ணெய், கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை.

சேனைக்கிழங்கைத் துண்டம் துண்டமாக நறுக்கிக் கொள்ளவும்.  முன் சொன்னாற்போல் அரிசி களைந்த இரண்டாம் கழுநீரில் ஒரு கொதி விட்டு எடுத்து வடிகட்டவும்.  பின்னர் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். வடிகட்டித் தனியாக வைக்கவும்.  மிளகாய் வற்றல், தேங்காய்த் துருவல், ஜீரகம் சேர்த்து ஒன்றிரண்டாக அம்மியில்/மிக்சி ஜாரில்/சின்னக் கல் உரலில் இடித்து வைத்துக்கொள்ளவும்.  வாணலியில் தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றவும்.  கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை தாளித்துக் கொண்டு வெந்த சேனைக்கிழங்கைப் போட்டுக் கொண்டு, இடித்து வைத்த மசாலாவைப் போட்டு நன்கு கிளறவும். நன்கு சேர்ந்து வந்ததும் எடுத்து சாம்பார் சாதம், வற்றல் குழம்பு சாதம் போன்றவற்றோடு தொட்டுக்கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


சேனைக்கிழங்கு மசியல்:  சேனைக்கிழங்கை மேலே சொன்ன மாதிரிக் குழைய வேக வைக்கவும்.

ஒரு சின்னக் கிண்ணம் துவரம் பருப்பைக்குழைய வேக வைக்கவும். மசியலுக்குப் புளி சேர்க்கப் போவதெனில் சின்ன எலுமிச்சை அளவுப் புளியை ஊற வைத்துக் கரைத்து வைத்துக்கொள்ளவும்.

மி.வத்தல், கொத்துமல்லி விதை, கடலைப்பருப்பு, வெந்தயம், மிளகு, பெருங்காயம் எண்ணெயில் வறுத்துப் பொடி செய்து கொள்ளவும். தாளிக்கக்கடுகு, உ.பருப்பு, கருகப்பிலை, ஒரு பச்சை மிளகாய் போட்டுத் தாளித்து குழைய வேக வைத்த சேனைக்கிழங்கைக் கொஞ்சம் நீர் ஊற்றி அதில் கொட்டி, வெந்த பருப்பையும் சேர்க்கவும்.  கரைத்த புளி நீரை ஊற்றித் தேவையான உப்புச் சேர்க்கவும். மஞ்சள் தூளும் சேர்க்கலாம்.  இறக்கும்போது வறுத்துப் பொடி செய்த மசாலாப் பொடியைச் சேர்த்துக் கிளறி ஒரே கொதியில் கீழே இறக்கவும்.  பச்சைக் கொத்துமல்லி தூவவும்.

இதுவே எலுமிச்சை எனில், தாளிதம் செய்கையில், பச்சைமிளகாய் இரண்டு அல்லது மூன்று போட்டுவிட்டு, இஞ்சியும் கொஞ்சம் சேர்க்கவும்.  பின் வெந்த சேனைக்கிழங்கு, து.பருப்பு சேர்த்துக் கொஞ்சம் நீர் ஊற்றி அரை டீஸ்பூன் சாம்பார் தூள் சேர்த்துக் கொதிக்க வைக்கவும்.  தேவையான உப்புச் சேர்க்கவும்.  கொதித்து நன்கு சேர்ந்த வந்த பின்னர் கீழே இறக்கி எலுமிச்சைச் சாறு, பச்சைக் கொத்துமல்லி சேர்க்கவும்.

12 comments:

  1. நல்லாத்தான் இருக்கு... ஆனால் இனிப்பானவர்கள் சாப்பிடலாமோ...?

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, இனிப்பானவங்களும் சாப்பிடலாம். சேனைக்கிழங்கு கொஞ்சம் குறைவாகச் சாப்பிட வேண்டும். :))))

      Delete
  2. சரிதான். இதன் ருசி தெரிஞ்சவங்க இதை விடவே மாட்டாங்க. :)
    எங்க வீட்ல சேனை மசியல் எல்லாருமே ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவோம். இன்னிக்கும் அம்மா வீட்டுக்கு போனா வாழை பூ பருப்பு உசிலி, சேனை மசியல் கண்டிப்பா உண்டு. :)

    மேலே நீங்க சொன்ன ரெசிபி பண்ணி பாக்கறேன். நானே எரிசேரி பத்தி உங்க கிட்ட கேக்கனும்னு இருந்தேன். நீங்களே எழுதிடீங்க. இங்க சேனை அவ்வளவு நல்லா இல்லை. வாழைக்காய் நல்லா கிடைச்சா நிச்சயமா பண்ணி பாக்கறேன்.

    நன்றி!

    ReplyDelete
    Replies
    1. எல்லாருக்கும் பிடிக்கிறதில்லை மீனாக்ஷி. சேனைக்கிழங்கு ஹூஸ்டனில் நல்லாக் கிடைக்கும். ஆனால் உடனே செய்யணும். இல்லைனா அழுகிடும். :(

      Delete
  3. இப்போது இங்கு நேரம் : 6.33 PM

    மேலே கருத்துரையில் நேரம் : 5.02 AM

    ???

    ReplyDelete
  4. சேனை ஒரு சுவாரஸ்யமான காய். பிடிக்காதவர்கள் இருந்தால் அது அந்தக் காறலினால் இருக்கலாம்! நீங்கள் சொல்லியுள்ளவற்றைக் குறித்துக் கொண்டேன். நான் மன்னிக்கவும் நாங்கள் இதை பெரிய பெரிய பீசாக நறுக்கி, காரப்பொடி, உப்பு பெருங்காயம், நீரில் கரைத்து அதில் இதை ஊறவைத்து, குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்கி, அல்லது ஓவனில் சற்றே வைத்து எடுத்து, வெங்காயம், தக்காளி நறுக்கி கொத்சு ஆக்கி அதில் இதைப் போட்டோ, அல்லது தனியாக அப்படியே தோசைக் கல்லிலோ, வாணலியிலோ புரட்டி எடுத்து (ஆக்சுவலா அப்புறம்தான் தக்காளி வெங்காயக் கொத்சுவில் போட்டோ) சாப்பிடுவோம்! அதாவது சேனையில் நாங்கள் செய்வது இதுவும் ஒரு வகை!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம், நீங்க சொல்லறாப்போல் வட மாநிலங்களில் செய்வாங்க. கரம் மசாலாப் பொடி போட்டு. சப்பாத்திக்குத் தொட்டுக்க. :))))

      Delete
  5. ஐ... DD சொன்ன பிறகு நானும் டைம் கவனித்தேன். நான் பின்னூட்டமிட்ட நேரம் 7.34 PM. இதில் வந்துள்ள நேரம் 6.04 AM !

    ReplyDelete
  6. ஹிஹிஹி, ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை. இதிலே வரது யு.எஸ். நேரம். :)))) அதை மாத்தறேன். மற்ற பதில்கள் பின்னர். :))))

    ReplyDelete
  7. பிடி கருணையில் தான் அம்மா இந்த மாதிரி இரண்டு விதமான மசியல் செய்வார். சேனைக்கிழங்கில் நான் பொடிப்பொடியாக நறுக்கி உப்பு காரம் போட்ட கறி தான் செய்வதுண்டு. மசியலும், எரிசேரியும் செய்து பார்க்க வேண்டும்.

    ReplyDelete
  8. வாங்க கோவை2தில்லி,

    பிடி கருணையிலும் மசியல் செய்யலாம்.சேனையிலும் செய்யலாம். செய்து பாருங்க. இங்கே சேனைக்கிழங்கு காறலும் இல்லை. வெண்மையாவும் இருக்கு. வாங்கினால் உடனே பயன்படுத்துங்க. அதான் முக்கியம். :)))

    ReplyDelete
  9. @டிடி,

    @ஸ்ரீராம்,

    Standard Pacific Time settings change செய்ய முயன்றேன். முடியலை. ஆகவே அப்படியே தான் விட வேண்டி இருக்கு. :(

    ReplyDelete