எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, December 14, 2012

உங்கள் மிக்சர் தயார்!

மீனாக்ஷி கேட்ட ரசப்பொடியை எழுதறதுக்கு முன்னாடி தீபாவளி பக்ஷணங்களை முடிச்சுப்போமா!   இப்போ மிக்சர் பண்ணலாம்.  பலருக்குப் பிடிக்கும்;  சிலருக்குப் பிடிக்காது.  எனக்கு சாதத்தோடு தொட்டுக்கப்பிடிக்கும்.  தனியாச் சாப்பிட்ட வயித்துக்கு ஒத்துக்காது எப்போவுமே.  :)))) எல்லாம் பண்ணுவேனே தவிர ஸ்வீட் மட்டும் தான் அளவோடு எடுத்துப்பேன்.  மத்தது எல்லாம் கொஞ்சம் பயம் தான்.  சின்ன வயசிலே இருந்து சாப்பிட்டுப் பழக்கமே இல்லை என்பதால் ஆசையும் வராதோ, பிழைச்சேன்.

மிக்சரில் போடும் பொருட்கள் ஓமப்பொடி, காராபூந்தி, சின்னச் சின்ன சேவ், அவல், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, உ.கி. சிப்ஸ், மைதா மாவில் செய்த சின்னச் சின்ன பிஸ்கட்டுகள்.  இப்போல்லாம் பிரிட்டானியாவின் குட்டி பிஸ்கட்டுகளைப்போட்டுடறாங்க.  இன்னும் சிலர் கார்ன் ப்ளேக்ஸ் போடறாங்க.  இதெல்லாம் அவங்க அவங்க விருப்பம்.  ஜீரக மிட்டாய்களைச் சேர்ப்பதும் உண்டு. இனி செய்முறையைப் பார்ப்போமா!

முதலில் ஓமப்பொடி:  கடலை மாவு இரண்டு கிண்ணம். அரைக்கிண்ணம் அரிசி மாவு.  உப்பு, பெருங்காயம்.  நெய் விழுது.  பிசைய நீர்.

அரிசிமாவு, கடலை மாவு, உப்பு, பெருங்காயம் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.  நெய் விழுதைச் சூடு பண்ணி மாவில் விட்டுக் கலக்கவும்.  நன்கு கலக்க வேண்டும்.  மாவு கைக்குக் கரகரப்பாக வரும்படி கலக்கவும். நீர் விட்டுப் பிசையவும். பின்னர்   மெலிதாக உள்ள ஓமப்பொடி அச்சில் போட்டுப் பிழியவும்.

அடுத்துக் காராபூந்தி.  மாவு அளவு மேற்சொன்னதே எடுத்துக்கொள்ள வேண்டும்.  மற்ற எல்லாமும் மேலே சொன்னாப்போல் தான்.  ஆனால் மாவைப் பிசைய வேண்டாம்.  நீர் விட்டுத் தோசை மாவு பதத்துக்குக் கலக்கவும்.  கரண்டியால் எடுத்து விடும் பதம் இருக்க வேண்டும்.  பின்னர் பூந்திக் கரண்டியை எடுத்துக் கொண்டு மாவை அதில் விட்டுத் தேய்க்கவும்.  உருண்டையாக விழ வேண்டும்.  சில சமயம் வேகமாய் விட்டாலோ, தேய்த்தாலோ பத்தையாகப்போயிடும்.  ஆகவே கவனமாய்த் தேய்க்க வேண்டும்.  இப்படி எல்லா மாவையும் செய்து கொள்ளவும்.

அடுத்து சேவு:  மாவு அளவு மேலே சொன்ன மாதிரி எடுத்துக் கொண்டு ஓமப் பொடிக்குப் பிசைகிறாப்போல் பிசைந்து கொண்டு சேவுத்தட்டில் எண்ணெய்க்கு நேரே பிடித்துக்கொண்டு கையால் தேய்க்க வேண்டும்.  காய்ந்த எண்ணெய் என்றால் தட்டின் அடிப்பாகம் வழியாகச் சூடு தாக்கும்.  ஆகவே கவனமாய்த் தேய்க்க வேண்டும்.


ஓமப்பொடி, காராபூந்தி, சேவ் கலவையை நன்கு கலந்து கொள்ளவும்.  ஏற்கெனவே காய்ந்திருக்கும் எண்ணெயில் இப்போது மற்றச் சாமான்களைப் போட்டுப் பொரிக்க வேண்டும்.  அதற்கு முன்னால் மைதா மாவில் பிஸ்கட் செய்து கொள்வோம்.

மைதா மாவு ஒரு கிண்ணம்.  உப்பு சிறிதளவு, இரண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரை, நெய் விழுது அல்லது வெண்ணெய்.  எல்லாவற்றையும் சேர்த்து நன்கு கலக்கவும்.  மாவு கரகரப்பாக இருக்கும் வரை கலக்கவும்.  பின்னர் நீர் விட்டுச் சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவும்.  பிசைந்த மாவு அரை மணி நேரம் ஊறட்டும்.  பின்னர் அதை மெலிதான சப்பாத்திகளாக இட்டுக் கொண்டு கத்தி அல்லது நுனியில் டிசைன் உள்ள ஸ்பூனால் டைமண்ட் வடிவத்துக்குக் கத்திரிக்கவும்.  கத்திரித்தவைகளை காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும்.  நன்கு சிவப்பாக வரும்போது எடுத்து வடிகட்டித் தட்டில் போட்டு ஓமப்பொடிக் கலவையோடு சேர்க்கவும்.


உருளைக்கிழங்கு சிப்ஸ்:   மேற்சொன்ன அளவுக்கு அரை கிலோ உ.கி. இருக்கலாம்.  கொஞ்சம் குறைந்தாலும் பரவாயில்லை.  உருளைக்கிழங்கை நன்கு கழுவி விரல் நீளத்துக்கு மெலிதாக சிப்ஸ் கட்டரால் நறுக்கவும்.  மீண்டும் நீரில் போட்டு நன்கு கழுவி விட்டுப் பின்னர் காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும்.   ஓமப்பொடிக்கலவையோடு சேர்க்கவும்.

அவல் கால் கிலோ, பொட்டுக்கடலை கால் கிலோ, வேர்க்கடலை கால் கிலோ எடுத்துக் கொண்டு காய்ந்த எண்ணெயில் போட்டு வறுக்கவும்.  வேர்க்கடலை வெடிக்க ஆரம்பிக்கும்போது எடுக்க வேண்டும்.  பொட்டுக்கடலை சிவப்பாக வரும்பொது எடுக்க வேண்டும்.  அவல் பொரிய ஆரம்பிக்கையில் எடுக்கவும்.  எல்லாவற்றையும் ஒன்றாய்க் கலக்கவும்.


காலி வாணலி அல்லது கடாயில் இரண்டு டேபிள் ஸ்பூன் நெய்யை விட்டுக் கொண்டு, கருகப்பிலை, பெருங்காயத் தூள், மிளகாய்த்தூள், மிச்சம் உப்பைப் போட்டுக் கலக்கவும். இந்தக் கலவையோடு மிக்சர் கலவையை நன்கு கலக்கவும்.  இப்போது உங்கள் மிக்சர் தயார்.



5 comments:

  1. ஏகப்பட்ட வேலைகள் என்பது சோம்பேறித்தனமாக இருக்கிறது! குறித்து வைத்திருக்கிறேன். 'பாஸ்' கிட்ட சொல்றேன். அவிங்க ஏற்கெனவே சொல்லிக்கினுதான் இருந்தாஹ....!

    ReplyDelete
  2. ஸ்ரீராம், ஹிஹிஹி, இன்னிக்கு மிக்சர் செய்யலாம்னு ஒரு ஐடியா இருக்கு. நாளைக்குச் சில நண்பர்கள் வராங்க. அப்போத் தேவைப்படும். செய்தால் படம் எடுத்துச் சேர்க்கிறேன். இதிலே அதிகம் வேலை கிடையாது என்பதே உண்மை. பார்த்தால் தெரியும் அப்படித்தான். :)))))

    ReplyDelete
  3. கட்பேஸ்ட் குறிச்சு வச்சுக்கவே சோம்பலா? சரிதான்.

    ReplyDelete
  4. மிக்ஸ்சர் பண்ண ரொம்ப சோம்பேறித்தனம். அம்மா எப்பவுமே சொல்லுவா அதுதான் கணிசம் வரும்னு. ஆனா எனக்கு பொறுமை
    கிடையாது. :)) தேன்குழல், முள்ளு முறுக்கு சாப்பிடறதுல இருக்கற இண்டரெஸ்ட் இதுல கிடையாது. அதனால இது வரைக்கும் பண்ணினது இல்லை.

    //மீனாக்ஷி கேட்ட ரசப்பொடியை எழுதறதுக்கு முன்னாடி தீபாவளி பக்ஷணங்களை முடிச்சுப்போமா! // சரிதான். :) நிதானமா வாங்க. அவசரம் ஒண்ணும் இல்லை.

    ReplyDelete
  5. மிக்சர் செய்வது தான் வெகு சுலபம். ஏனெனில் ஓமப்பொடியும் காராபூந்தியும் தயார் செய்தால் போதும், அதுக்கு அரை மணி நேரமே ஆகும். அதுக்கப்புறமா அதே காய்ந்து கொண்டிருக்கும் எண்ணெயில் மற்ற சாமான்களை வறுத்துச் சேர்க்க வேண்டும். ஆகவே இதான் சுலபம் என்னைப் பொறுத்த வரை! :))))

    ReplyDelete