எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, September 12, 2010

கொழுக்கட்டை வேணுமோ, கொழுக்கட்டை?

விநாயகர் சதுர்த்திக் கொழுக்கட்டை செய்யும் விதம்.

முதல் முறை உருண்டை கொழுக்கட்டை.

இரண்டு கிண்ணம் அரிசி மாவு, ஒரு கிண்ணம் தூளாக்கிய வெல்லம், தேங்காய்க் கீறல்கள், ஏலக்காய், நீர்.

இதற்கு அரிசி மாவும் சரியாய் இருக்கும். இல்லாவிட்டால் பச்சரிசி ஒரு கிண்ணம் எடுத்துக் களைந்து கொண்டு நீரில் ஊற வைக்கவும். அரிசி ஒரு மணி நேரமாவது ஊறிய பிறகு நீரை வடித்துவிட்டுப் பின் மிக்சியில் மாவாக்கவும். மாவைச் சூடு வர வெறும் வாணலியில்/கடாயில் வறுத்துக்கொள்ளவும்.

பின் ஒரு வெண்கல உருளி அல்லது நான் ஸ்டிக் கடாயில் ஒரு கிண்ணம் நீரைச் சுட வைக்கவும். நீர் கொதித்து வரும்போது தூளாக்கிய வெல்லத்தைச் சேர்க்கவும். வெல்லம் நீரில் கரையும்போது தேங்காய்க்கீறல்களைச் சேர்த்துவிட்டு, அரிசி மாவைக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்க்கவும். நன்கு கிளறவும். மாவு நன்கு வேக வேண்டும். நன்கு வெந்ததும் கீழே இறக்கி ஆற வைக்கவும். சிறு சிறு உருண்டைகளாய்ப் பிடிக்கவும்.

ஒரு இட்லிப் பானையில் நீர் ஊற்றி, இட்லித் தட்டில் அல்லது ஒற்றைத் தட்டில் எண்ணெய் தடவி, அல்லது இலை/துணி போட்டுப் பிடித்த உருண்டைகளை வைத்துப் பத்து நிமிடம் வேக வைக்கவும். பின் வெளியே எடுக்கலாம்.

பொதுவாய் இந்தக் கொழுக்கட்டையைப் பிடி கொழுக்கட்டை என்று சொல்வதுண்டு. பெரும்பாலும் விநாயகருக்கு வேண்டிக்கொண்டு நினைத்த காரியம் பூர்த்தியானால் இந்தப் பிடி கொழுக்கட்டை செய்து விநியோகம் பண்ணிப் பிரார்த்தனையைப் பூர்த்தி செய்வார்கள்.

அடுத்துப் பூரணக் கொழுக்கட்டை. பொதுவாய் இதுதான் விநாயக சதுர்த்திக்குச் செய்வார்கள். இது வெறும் தேங்காய்ப் பூரணம், கடலைப்பருப்புப் பூரணம், எள் பூரணம், உளுந்துப் பூரணம் என நான்கு வகைகளில் செய்வது உண்டு.
முதலில் பூரணங்கள் செய்யும் முறை:

தேங்காய்ப் பூரணம்: தேங்காய் சிறிது ஒன்று. ஏலக்காய் நாலைந்து பொடித்துக்கொள்ளவும். பாகு வெல்லம் இரண்டு டேபிள் ஸ்பூன் தூளாக்கியது. வெல்லம் ரொம்பச் சேர்த்தால் பூரணம் கொழுக்கட்டையில் இருந்து வெளியே வந்துவிடும்.

தேங்காயை உடைத்துத் துருவிக் கொள்ளவும். ஒரு வெண்கல உருளி அல்லது நான் ஸ்டிக் கடாயில் தேங்காய் துருவலோடு வெல்லத்தையும் சேர்க்கவும். நீர் சேர்க்கவேண்டாம். வெல்லத்தில் உள்ள நீரும் தேங்காய் துருவலில் உள்ள நீருமே போதுமானது. வெல்லமும் தேங்காய்த் துருவலும் நன்கு கலக்கவேண்டும். நன்கு கலந்து பூரணம் உருட்டும் பதம் வரும்போது இறக்கி ஏலக்காய்த் தூள் சேர்த்து ஆற வைக்கவும்.

கடலைப்பருப்புப் பூரணம்: கடலைப்பருப்பு ஒரு சின்னக் கிண்ணம், வெல்லம் இரண்டு டேபிள் ஸ்பூன், ஏலக்காய்த் தூள்.

ஒரு சின்னக் கிண்ணம் கடலைப்பருப்பை எடுத்து வறுத்து ஊற வைக்கவும். ஊற வைத்த பருப்பை வேக வைத்து அதோடு வெல்லம் சேர்த்து மிக்சியில் அரைக்கவும். அரைத்த விழுது தளர இருந்தால் நான் ஸ்டிக் கடாயில் போட்டுச் சிறிது நேரம் கிளறினால் கெட்டியாகிவிடும். ஏலக்காய்த் தூள் சேர்த்து ஆற வைக்கவும்.

எள் பூரணம்: ஒரு சிலர் கடலைப்பருப்புப் பூரணத்திலேயே எள்ளையும் வறுத்துப் பொடித்துச் சேர்ப்பார்கள். சிலருக்குத் தனியாக எள் பூரணம் செய்வார்கள்.
கறுப்பு எள் ஐம்பது கிராம். ஒரு டேபிள் ஸ்பூன் வெல்லத் தூள். ஏலக்காய்,
எள்ளைக் களைந்து கல்லரித்துக்கொண்டு வெறும் வாணலியில் போட்டு வறுக்கவும். வெடிக்கும் வரை வறுக்கவேண்டும். பின் பொடித்த வெல்லம், ஏலக்காயோடு சேர்த்து அம்மியிலோ அல்லது மிக்சியிலோ பொடி பண்ணிக்கொள்ளவும்.

உளுந்தம் பூரணம்:
உளுத்தம்பருப்பு ஒரு கிண்ணம், மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு, தேங்காய்த் துருவல், தாளிக்க கடுகு, உ.புருப்பு, கருகப்பிலை, விரும்பினால் எலுமிச்சம்பழம் ஒரு மூடி.

உளுந்தைக் களைந்து கல்லரித்துக்கொண்டு ஊற வைக்கவும். ஒரு மணி நேரம் ஊறியதும் வடிகட்டிவிட்டுப் பின்மிக்சியில் மிளகாய் வற்றல், உப்பு, பெருங்காயம் சேர்த்து உளுத்தம்பருப்பை அரைக்கவும். ரொம்ப நைசாக அரைக்கவேண்டாம். என்றாலும் பருப்பும் தெரியக் கூடாது. அரைத்த விழுதை ஒரு ஒற்றைத் தட்டில் எண்ணெய் தடவிப் பரப்பி இட்லிப் பானையில் வேக வைக்கவும். குச்சியால் அல்லது ஒரு கரண்டி நுனியால் குத்திப் பார்த்தால் ஒட்டாமல் வரும். அப்போது வெளியில் எடுத்து ஆறவிடவும்.

கடாயில் தாளிக்க எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுத்தம்பருப்பு, கருகப்பிலை சேர்க்கவும். வெந்த உளுத்தம்பருப்பு விழுதைச் சேர்த்துக் கிளறவும். தேங்காய் துருவலும் சேர்க்கவும். பூரணம் உதிர் உதிராக வந்ததும் கீழே இறக்கவும். விரும்பினால் எலுமிச்சம்பழம் ஒரு மூடி பிழிந்து கொள்ளலாம்.

நான்கு பூரணங்களும் ரெடியாயிடுச்சு. இப்போ மேல் மாவு தயாரிக்கும் முறை.

அரிசி நல்ல பச்சரிசியாக இருத்தல் நலம். தமிழ்நாடு என்றால் ஐஆர் இருபது அரிசி கிடைக்கும், மற்ற இடங்களில் உள்ளவர்கள் நல்ல பச்சரிசியாகப் பார்த்து எடுத்துக்கொள்ளவும். யு.எஸ். , கனடா என்றால் அமெரிக்கன் லாங் கிரெயின் ரைஸ் சரியாய் இருக்கும்.

அரிசி 250 கிராம். வேக வைக்க நீர் ஒரு சின்னக் கிண்ணம், ஒரு சிட்டிகை உப்பு. ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய்.

அரிசியை நன்கு களைந்து நீரில் ஊற வைக்கவேண்டும். குறைந்தது இரண்டு மணிநேரமாவது ஊறினால் நல்லது. ஊறிய அரிசியை நீரை வடித்துவிட்டு மிக்சியில் போட்டுத் தேவையான நீரை மட்டும் கொஞ்சமாய் ஊற்றி நல்ல நைசாக அரைக்கவும். கையால் தொட்டால் மாவில் கரகரப்புத் தெரியக் கூடாது. நல்ல சில்க் மாதிரி வழவழப்பாக இருக்க வேண்டும். மாவை எடுத்து வைத்துக்கொள்ளவும்.

இப்போது ஒரு வெண்கல உருளி அல்லது நான் ஸ்டிக் கடாயில் நீர் ஒரு சின்னக் கிண்ணம் ஊற்றி ஒரு டீ ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் போடவும். நீர் நன்கு கொதிக்கவேண்டும். இப்போது அரைத்த மாவைக் கொஞ்சம் கொஞ்சமாய்க் கொட்டிக் கிளறவேண்டும். மாவு நிறம் மாறும் வரை நன்கு கிளறிக் கொள்ளவும். மாவு நன்கு வெந்ததும் பந்துபோல் திரண்டு வரும். எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்து எண்ணெயும், சூடான நீரும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும், உள்ளே கட்டிகள் இல்லாமல் நன்கு பிசைய வேண்டும்.

இந்த மாவில் ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு எடுத்துக் கிண்ணம் போல் செய்யவும். தேவையான பூரணத்தை உள்ளே வைத்து நிரப்பவும். இப்படிக் கொழுக்கட்டைகள் செய்து விட்டு இப்போது அவற்றை வேகவிடவேண்டும். இட்லிப் பானையில் நீர் ஊற்றி இட்லித் தட்டு அல்லது ஒற்றைத் தட்டைப் போட்டு அதில் செய்து வைத்த கொழுக்கட்டைகளை வைத்து வேகவிடவேண்டும். ஏற்கெனவே வெந்த மாவு என்பதால் அதிக நேரம் விடவேண்டாம். கொழுக்கட்டைகள் மேலே எண்ணெய் கசிந்தாற்போல் நீர் வந்து வேர்த்துவிட்டிருக்கும். அப்போது எடுத்துவிடலாம்.

ஒரு சிலர் மாவை நீர் விட்டு அரைக்காமல் நீரை வடித்துவிட்டு மாவைப் பொடியாக்கியும் வைத்துக்கொள்வார்கள். இது அவரவர் செளகரியம் போல் செய்து கொள்ளலாம்.

அடுத்துப் பால் கொழுக்கட்டை

இதற்கும் அரிசி தேவை. வெல்லம், தேங்காய் பெரிதாக ஒன்று. ஏலக்காய்.

அரிசி 250 கிராம். பாகு வெல்லம் 300/400 கிராம், தேங்காய் பெரிதாக ஒன்று, ஏலக்காய். தேங்காய் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன். உப்பு ஒரு சிட்டிகை.

அரிசியை நன்கு ஊற வைக்கவேண்டும். ஊறிய அரிசியை தேங்காய் துருவல் சேர்த்து நன்கு நைசாக அரைக்கவும். தனியாக வைத்துக்கொள்ளவும். பெரிய தேங்காயை எடுத்து உடைத்துத் துருவிப் பாலை எடுக்கவும். முதல் பாலைத் தனியாக வைக்கவும். அடுத்த இரண்டு முறை எடுக்கப் படும் தேங்காய்ப் பாலை ஒன்றாக வைத்துக்கொள்ளவும்.

வெண்கல உருளி/கடாயில் ஒரு கிண்ணம் நீர் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து ஒரு முட்டை நல்லெண்ணெய் அல்லது நெய் விடவும். நீர் கொதித்து வரும்போது அரைத்த மாவைப்போட்டுக் கிளறவும். நன்கு பந்து போல் மாவு வரும்வரை கிளறவும். ஆற வைத்துச் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். ஒரு சின்ன நெல்லிக்காய் அளவுக்கு இருக்கலாம்.

இப்போது இன்னொரு உருளி/கடாயில் கொஞ்சம் போல் நீர் விட்டு வெல்லத்தைப் போடவும். வெல்லம் கரைந்து வரும்போது இரண்டாம் முறை, மூன்றாம் முறை எடுத்த தேங்காய்ப்பாலை விட்டுக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்து வரும்போது உருட்டி வைத்துள்ள உருண்டைகளைக் கொஞ்சம் கொஞ்சமாய்ப் போடவும். முதலில் போட்டவை வெந்து மேலே மிதந்து வரும்போது அடுத்த முறை போடலாம். இப்படி எல்லாவற்றையும் போட்டதும், சிறிது நேரம் சேர்ந்து கொதிக்கவிடவும். பின் கீழே இறக்கி ஆற வைத்து முதல் தேங்காய்ப் பாலையும் ஏலக்காய்ப் பொடியையும் சேர்க்கவும்..

சிலருக்கு இந்த உருண்டைகளை நேரே தேங்காய்ப்பாலில் போடும்போது அவை கரைந்துவிடுமோ என யோசிப்பார்கள். அவர்கள் உருட்டி வைத்ததும் உருண்டைகளை இட்லிப் பானையில் வேகவிட்டு வைத்துக்கொள்ளவும். தேங்காய்ப் பால், வெல்லத்தோடு சேர்ந்து நன்கு கொதிக்கும்போது கொழுக்கட்டை உருண்டைகளைச் சேர்க்கலாம். இம்முறையில் உருண்டைகள் உடையாது.



ரவையில் செய்யும் நெய்க்கொழுக்கட்டை:

பொதுவாக இதை கணபதி ஹோமத்துக்கோ, அல்லது நவகிரஹ ஹோமம் போன்றவை செய்யும் முன்னர் செய்யப் படும் கணபதி ஹோமத்துக்கோ தான் முதல்நாளே செய்து வைத்துக்கொள்வது வழக்கம். இன்றைய நாட்களில் பெரும்பாலான பெண்கள் வெளிநாடுகளில் வசிப்பதால் அவங்க ஓரளவு நம் வழக்கப்படி பண்டிகைகள் கொண்டாடும்போது பாரம்பரிய உணவு வகைகளைச் செய்யமுடியாமல் திண்டாடுகிறார்கள். அவங்க விநாயக சதுர்த்திக்கு இந்த ரவைக் கொழுக்கட்டையைச் செய்து கொள்ளலாம். வேலைக்குப் போகும் பெண்கள் விநாயக சதுர்த்திக்கு முன்னர் வரும் ஏதாவது விடுமுறை நாளில் இதைச் செய்து (ருசி பார்க்காமல்) ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டு விநாயக சதுர்த்தி அன்று நிவேதனத்துக்குப் பயன் படுத்தலாம். இதுவும் பதினைந்து நாட்களுக்குக் குறையாமல் இருக்கும். இதற்குத் தேவையான பொருட்கள் பார்ப்போமா?

பூரணம் செய்ய: ஒரு சின்னக் கிண்ணம் தேங்காய் துருவல், 1/2 கிண்ணம் வெல்லம் தூளாக்கியது, ஏலக்காய்ப் பொடி.

மேல் மாவிற்கு: சன்னமான நைஸ் ரவை ஒரு கிண்ணம். ஒரு சிட்டிகை உப்பு, பிசைய அரைக்கிண்ணம் பால். (காய்ச்சாத பாலும் பயன்படுத்தலாம்.) பிசையும்போது தொட்டுக்கொள்ளக் கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய். பொரிக்கவும் நெய் அல்லது எண்ணெய் தேவையான அளவு.

முதலில் முன் கூறியபடி தேங்காய்ப் பூரணம் வெல்லத்தூள் சேர்த்துச் செய்து ஏலப் பொடி சேர்த்து ஆற வைக்கவும்.

ரவையில் கொஞ்சம் கொஞ்சமாய்ப் பாலைச் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து நன்கு கலந்து ஒரு மணி நேரம் வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தால் பாலும் ரவையும் ஊறிக்கொண்டு கெட்டியாக ஆகி இருக்கும். இப்போது அதைக் கைகளில் கொஞ்சம் எண்ணெய் அல்லது நெய் தடவிக் கொண்டு நன்கு பிசையவும். சப்பாத்தி மாவு பதத்துக்கு வரும்வரை நன்கு பிசையவும். அரை மணி நேரம் வைக்கவும். பின்னர் சப்பாத்திக்கல்லில் இந்த மாவில் இருந்து ஒரு சிறு உருண்டை எடுத்துக்கொண்டு மெலிதான சப்பாத்தியாக இடவும். ஒரு வட்டமான மூடியால் இட்ட சப்பாத்தியில் கத்திரித்து எடுக்கவும். சிறு சிறு வட்டமானக் குட்டிக் குட்டிச் சப்பாத்திகள் நாலைந்து கிடைக்கும். இவற்றில் செய்து வைத்த பூரணத்தை நிரப்பிக் கொழுக்கட்டைக்கு மூடுவது போல் மூடவும். இம்மாதிரி எல்லா மாவையும் பூரணம் நிரப்பிச் செய்து கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெயை வைக்கவும். எண்ணெய் காய்ந்ததும் (சூடானதும்) அடுப்பைச் சிறிதாக எரிய விட்டுச் செய்து வைத்த கொழுக்கட்டைகளைப் போட்டுப் பொரித்து எடுக்கவும். பொன் நிறமாகப் பொரியும் போது எடுத்துவிடலாம். மேலே கரகரப்போடும் உள்ளே பூரணத்தின் மிருதுவோடும் சாப்பிடச் சுவையாக இருக்கும்.

காரக் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்: இரண்டு கிண்ணம் ஊற வைத்துச் சன்னமாக ரவை போல் மிக்சியில் உடைத்துக்கொள்ளவேண்டும். ஒரு டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் துவரம் பருப்பு, மிளகாய் வத்தல், பெருங்காயம் எல்லாவற்றையும் நீரில் ஊற வைக்கவும். தேங்காய் துருவல் ஒரு சின்ன மூடித் தேங்காய் துருவல். தாளிக்க எண்ணெய், பச்சை மிளகாய் 2 இஞ்சி ஒரு சிறு துண்டு, கருகப்பிலை, கடுகு, உ.பருப்பு, க.பருப்பு. நீர் வேக வைக்கத் தேவையான அளவு. உப்பு.

முதலில் மிக்சியில் ஊற வைத்த பருப்பு வகைகளையும் மிளகாய்வற்றல், தேங்காய்துருவலஓடு சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவும். அதைத் தனியாக வைத்துக்கொள்ளவும்.
இப்போது வெண்கல உருளி அல்லது நான் ஸ்டிக் கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உ.பருப்பு, க,பருப்பு, ப.மிளகாய், இஞ்சி கருகப்பிலை தாளிக்கவும். பெருங்காயத் தூளும் சேர்க்கவும். பின்னர் மூன்று கப் நீரை ஊற்றவும். இப்போது அரைத்து வைத்துள்ள பருப்பு விழுதைப் போட்டு உப்புச் சேர்க்கவும். தண்ணீர் நன்கு கொதிக்கும்போது அரிசி ரவையைப் போட்டுக் கிளறவும். நன்கு சேர்ந்து வந்ததும் இறக்கி வைத்து ஆறவிடவும். ஆறிய பின்னர் சிறு சிறு உருண்டைகளாய்ப் பிடித்து, இட்லிப் பானையில் வேகவிடவும். இதற்குத் தொட்டுக்கொள்ளத் தேங்காய்ச் சட்னி, மோர்க்குழம்பு நன்றாக இருக்கும்.

20 comments:

  1. ரொம்ப நல்லா எழுதி இருக்கறிங்க கீதாம்மா ;
    கொழுகட்டையில் இவ்வளோ வகைகளா! .
    செய்முறை குறிப்புகளை குறித்து வைத்து கொண்டேன்.
    வழக்கம் போல நல்ல பகிர்வு

    ReplyDelete
  2. வாவ்... சூப்பர் ரெசிபி... அதுவும் வகை வகையா இனிப்பு கொழுக்கட்டை... தேங்க்ஸ் மாமி...

    ReplyDelete
  3. உங்க ப்லொக் கொழக்கட்ட மாதிரி நினைச்சு என் காமென்ட் எல்லத்தையும் முழுங்கிடறது ஏனோ?

    ReplyDelete
  4. வாங்க ப்ரியா, ரொம்ப நன்றி

    ReplyDelete
  5. வாங்க ஜெயஸ்ரீ, இந்த ஒரு பின்னூட்டம் தான் வந்திருக்கு. பொட்டியைத் திறந்து நல்லா குலுக்கிப் பார்த்துட்டேன், வேறே எதுவும் கிடைக்கலை! :(

    ReplyDelete
  6. கீதாம்மா ! ஜெயஸ்ரீ மேடம் கமெண்ட்ஸ் படித்தவுடன்
    அவங்க ப்ளாக் சென்று படிக்க ஆவலா இருக்கு
    சிபாரிசு செய்வீர்களா

    ReplyDelete
  7. @priya,
    Jeyasri is not writing blogs. she is just posting her comments through her google account.

    ReplyDelete
  8. OK Geetha madam;Jayashree madam has a lot of humour sense .Comparing with others comments her comments is something
    diff and also nice.That's why i was
    asked to she her blog.,
    அவங்க கமெண்ட்ஸ் இவ்வளோ நல்லா இருந்தா பதிவு எவ்வளோ நல்லா
    இருக்கும் ! உங்க பதிவுக்கு நான் ரசிகையான மாதிரி
    அவங்க கம்மேன்ட்சுக்கு நான் ரசிகையாகிட்டு வரேன் !
    வாழ்த்த வயதில்லை ;ஆகவே உங்கள் இருவரையும் வணங்குகிறேன்!!

    ReplyDelete
  9. இதுவும் நீங்க கமெண்டினதும் உடனே பப்ளிஷ் பண்ணுமே, சமத்து ப்ளாகாக்கும்!

    ReplyDelete
  10. ஆமாம் மிஸ் ! தட்டு வடையில போட்ட கமெண்ட்ஸ் க்கு
    கொலுகட்டையில பதில் சொல்லற நீங்களும் சமத்து தான் !

    ReplyDelete
  11. மிஸ்! தெரியாம கொழுக்கட்டைக்கு பதிலா கொலு கட்டைன்னு எழுதிட்டேன் .
    நீங்க தான் பெரிய மனசு பண்ணி மன்னிக்கனும் !

    ReplyDelete
  12. ஹிஹி, ப்ரியா, நீங்க போட்ட கமெண்ட் உப்புச் சீடையிலே, அதுக்குத் தான் இங்கே பதில் சொன்னேன். அதுக்கு அப்புறமா இந்தப் பக்கத்தை full page option le மாத்தினேன். அதான் கண்டு பிடிச்சிருக்கீங்களானு பார்க்கக் கிண்டல் செய்தேன். ஹிஹிஹி, கண்டு பிடிக்கலையே, ஜாலி!

    ReplyDelete
  13. ஹி ஹீ உப்பு சீடைக்கு பதில் தட்டு வடைன்னு எழுதிட்டேன்
    எப்படியோ நீங்க அந்த பதிவுக்கு பதில் இந்த பதிவில் போட்டதை கண்டு பிடித்து விட்டேன் இல்லையா
    பாதி மார்க்காவது தாங்க டீச்சர் !

    ReplyDelete
  14. ஸ்வீட் அப்படின்னவுடனே நியாபகம் வருது

    ஏதோ தீபாவளி மருந்தாமே ;ஸ்வீட்ஸ் சாப்பிடுட்டு அதை சாப்பிட்டா

    அஜீர்ணம் உட்பட எந்த பிரச்னையும் வராதாமே

    எப்படி செய்யறதுன்னு கொஞ்சம் சொல்றீங்களா மேடம்

    ReplyDelete
  15. இதுதான் ரெசிப்பி எழுதுவதில் உள்ள சௌகரியம். அடுத்த வாரத்தில் பிள்ளையார் குழக்கட்டை செய்யப்போகிறேன். அதுவும் உப்புக் குழக்கட்டையும் (உளுந்து பூரணம் வைத்து) செய்வேன். உங்கள் செய்முறையை ஒருதரம் படித்துக்கொண்டேன். எள் குழக்கட்டை கேள்விப்பட்டதில்லை. இரண்டும் செய்துவிட்டு எப்படி இருந்தது என்று சொல்கிறேன். நன்றி ரெசிப்பிக்கு.

    ReplyDelete
    Replies
    1. அட? நீங்க எப்போ வந்தீங்க?

      Delete
  16. என் கமெண்ட் காணோம்! அதை மட்டும் டெலிட் செய்து விட்டீர்கள்!!!!!!

    ReplyDelete
    Replies
    1. இது எழுதின வருஷம் நீங்க அதிகமா என்னோட வலைப்பக்கம் "எண்ணங்கள்" க்கே வந்ததில்லை. இங்கே எப்படி? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அதெல்லாம் டெலீட் செய்யலை! :)))) இவங்க எல்லாம் அப்போ அடிக்கடி வரவங்க. இப்போ என்ன ஆச்சுன்னே தெரியாது. ஏடிஎம் மட்டும் அவ்வப்போது தொடர்பில்.

      Delete