எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, March 22, 2009

பாகற்காயில் பிட்லை சாப்பிடணுமா!

இந்த சூடான் புலி, எங்கே இருந்து இது எல்லாத்தையும் பார்க்கிறார்னு புரியலை, உடனே வந்து பின் ஊட்டம் கொடுக்கிறார். ஏற்கெனவே நான் வீக் கொஞ்சம். ஊட்டம் தேவைனு மருத்துவர் சொல்லிட்டே இருக்கார். ஆகவே உங்க பின் ஊட்டம் இன்னும் தெம்பா இருக்கும் எனக்கு. இப்போப் பாகற்காய் பிட்லை எப்படிச் செய்யறதுனு பார்ப்போமா? புலி கேட்டிருக்காரே, அவருக்காகத் தான் இதை இப்போப் போடறேன்.

இதுக்கு முதலில் தேவையானது பாகற்காய் தாங்க. பாகல்காய் ஒரு கால் கிலோ எடுத்துக்கோங்க. நல்லா வில்லை, வில்லையா நறுக்கணும். வில்லைனதும் ராமரோட வில் நினைவில் வந்தால் நான் பொறுப்பில்லை. வட்ட, வட்டமாய் நறுக்கணும். இந்தப் பாகல்காயே இரண்டு, மூன்று விதம் இருக்கு. பொதுவா எல்லாரும் பெரிய பாகல் காய் தான் வாங்குவாங்க. ஆனால் மெது பாகல்காய்/மிதி பாகல் காய்னு ஒண்ணு இருக்கு. மிதி பாகல்காய்னதும் ம.பா.வை மிதிக்கிறதோனு நினைக்கவேண்டாம். வேலி பாகல்காய்னு ஒண்ணு இருக்கு. சின்ன பாகல்காய்னால் அதைக் காம்பு மட்டும் நறுக்கி இரண்டாய்ப் பிளந்து வச்சுக்கணும். வேலி பாகல் காயிலேயே மீடியம் சைஸா இருந்தால் வில்லை போட்டுக்கலாம். வில்லையும் போட்டுக்கலாம். உங்க இஷ்டம்.

நறுக்கின பாகல் காயில் கொஞ்சம் தயிர், உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துக் கொஞ்ச நேரம் வைக்கவும். ஒரு மணி நேரம் வைக்கலாம். அதுக்குள்ளே நீங்க இரண்டு மெகா சீரியலும் பார்த்துக்கலாம். மெகா சீரியல் முடிஞ்சதும் ம.பா. இருந்தார்னா நல்லது. இல்லாட்டி நீங்களே தான் சமைச்சாகணும். து.பருப்பு ஒரு சின்ன கிண்ணம் எடுத்துக்கணும். குக்கரிலேயோ, கல்சட்டியிலேயோ து.பருப்பை நல்லாக் குழைய வேக வச்சுக்கணும். முதல்நாளே மொச்சை, கொண்டைக்கடலை, பட்டாணி போன்றவற்றில் எது பிடிக்குதோ அதை ஊற வைச்சுக்கலாம். அதையும் பருப்போடு சேர்த்து வேக வைச்சுக்கலாம். இது எல்லாம் தனியாத் தெரியணுமானால் அப்புறமாய்ப் போடலாம். உங்களுக்குப் பிடிக்காது ம.பா.வுக்கு மட்டுமே பிடிக்கும்னா போடாமலும் இருக்கலாம்.

இப்போ பாகல் காய் தயார். து.பருப்பு தயார். கொ.கடலை., மொச்சை தயார். இது ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போ மசாலா சாமான்கள் வறுத்துக்கணும். மசாலான்னாலே எல்லாரும் கரம் மசாலா ஒண்ணுதான் நினைச்சுக்கறாங்க. நாம போடற உப்பு, காரமே மசாலாவோட சேர்த்தி தான். டூ இல்லை. நீங்க தயார் செய்யப் போற பிட்லை 4 பேர் சாப்பிடலாம்னு வச்சுக்குங்க. (பின்னே? யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்னு எல்லாருக்கும் கொடுக்கவேண்டாமா?) ஒரு சின்ன எலுமிச்சம்பழ அளவுப் புளி, 4ல் இருந்து 6 மி.வத்தல். (காரம் அவங்க, அவங்க ருசிக்குத் தகுந்தாற்போல்) ஒரு டேபிள் ஸ்பூன் கொத்துமல்லி விதை, (இது போடாமலும் செய்யலாம்) கடலைப்பருப்பு ஒரு ஸ்பூன், உ.பருப்பு ஒரு ஸ்பூன், 5 அல்லது 6 மிளகு, ஒரு சின்னக் கட்டிப் பெருங்காயம், ஒரு டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல் போன்றவற்றை ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி வறுத்துக் கொள்ளணும்.

நல்லா சிவப்பா, உங்களுக்குக் கோபம் வந்தால் மூஞ்சி எப்படிச் சிவக்குமோ அவ்வளவு சிவப்பா வறுத்துக்கலாம். வறுத்ததை ஆற விடவும். அதே வாணலியில் தயிர், உப்பு, ம.தூள் சேர்த்து ஊற வைத்த பாகல்காயைப் போட்டுச் சற்றே வறுக்கவும். தயிரை எல்லாம் பிழிஞ்சு எடுத்துட்டுத் தான். ம.பா.வை வேலை வாங்கப் பிழிஞ்சு எடுக்க மாட்டோமா? அல்லது மாமியாரோ, நாத்தனாரோ அகப்பட்டால் பிழிஞ்சு எடுக்க மாட்டோமா அதே மாதிரித் தான். மிச்சம் இருக்கும் தயிரை ஜூஸுனு சொல்லி ம.பா.கிட்டேயே கொடுக்கலாம் வீணடிக்காமல். நம்ம ம.பா. கிட்டே இதெல்லாம் பலிக்கலை, தோட்டத்துக் கறிவேப்பிலை தான் சாப்பிட்டுட்டு இருக்கு அந்த மாதிரி பிழிஞ்சதும் மிச்சம் இருக்கும் தயிரை எல்லாம்.இப்போ வதக்கிய பாகல்காயை வேக வைத்த துவரம்பருப்போடு சேர்க்கவும். புளியைக் கரைத்து அதில் ஊற்றவும். நாலு பேருக்கு வருமானு பார்த்துக்கோங்க. உப்பு, ம.பொடி சேர்க்கவும். இது கொஞ்சம் கொதிக்கட்டும். அதுக்குள்ளே வறுத்து வைச்சதையெல்லாம் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். நல்லா ஒரு கொதி வந்ததும், அரைச்சு வச்சதைக் கலக்கவும். நல்லாக் கொஞ்ச நேரம் கொதிக்கட்டும். ஒரு சிறு துண்டு வெல்லம் சேர்க்கலாம். சேர்க்காமலும் இருக்கலாம். அது உங்களுக்கு டயபடீஸ் இருக்கா இல்லையாங்கறதைப் பொறுத்து. கீழே இறக்கி வைத்துத் தேங்காய் எண்ணெயில் கடுகு, உ.பருப்பு, ஒரே ஒரு மி.வத்தல், கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும். பச்சைக் கொத்துமல்லியும் போடலாம். சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.

டிஸ்கி: படங்கள் உதவி: கூகிளார். திடீர்னு பாகற்காய் பிட்லை படம் போடணும்னா என்ன செய்யறது? அதான் கூகிளாரைக் கேட்டதும் கொடுத்துட்டார். நன்றிங்கோ!

5 comments:

  1. வழக்கம்போல் முதல் பின்னூட்டத்தையும் நானே போட்டுக்கிறேன். இந்தப் பிட்லை செய்யும் விதம் இன்னும் 2 முறை இருக்கு. அது அப்புறமாத் தரேன். படிக்கிறீங்கனு நான் நினைக்கிறவங்களுக்கு நன்னிங்கோ!

    ReplyDelete
  2. //டிஸ்கி: படங்கள் உதவி: கூகிளார் //

    கூகிள் சாமி கேட்டதை குடுக்கிற சாமிதான்.:)

    ஆனாலும் எல்லாருக்கும் கேக்க வராது, நீங்க என்ன சொல்லி கேட்டீங்க ? இங்கிலீஷ்-லயா, தமிழ்லயா ?

    எனக்கு சாப்பிடத்தான் தெரியும். செய்ய வராது :))

    ReplyDelete
  3. @kabeeranban, ada?? eppo vanthinga? moderation pannalaiya, athan theriyalai, sappidunga! seyya than unga thangamani irupangale? :)))))

    ReplyDelete
  4. இன்னிக்கு பிட்லை செஞ்சப்போ இந்தப் பதிவு தான் ஞாபகம் வந்துதுங்கோ.

    ReplyDelete
  5. அப்பாதுரை, நன்றி. இன்னிக்குத் தான் பார்க்கிறேன். :))))

    ReplyDelete