கொழுக்கட்டையிலே ஆரம்பிச்சதா என்னனு தெரியலை, யாருமே இதுக்கு பதிலே போடலை, எல்லார் வாயிலேயும் இன்னும் கொழுக்கட்டை இருக்கு போலிருக்கு. இப்போ ஒரு முக்கியமான விஷயம் சொல்லணுமே! அது தான் இந்த ராத்திரி வேளையிலேயும் கடமை தவறாம எழுதிட்டு இருக்கேன்.
அரிசி எந்த அரிசியா இருந்தாலும் கொஞ்சம் வறுக்கணுங்க. என்ன?? என்ன?? ம.பா.வைத் தான் வறுக்கத் தெரியுமா? அது பாட்டுக்கு அது. நல்லா வறுத்தெடுங்க. கூடவே அரிசியையும், ஆனால் இதை நல்லா வறுக்கக் கூடாது. கொஞ்சம் சூடு வரப் புரட்டி எடுக்கணும். ம.பா. உங்களுக்குத் தெரியாமல் சினிமா,கினிமா போயிட்டு வந்தார்னு வச்சுக்குங்க. அந்த சினிமாவும் உங்களுக்குப் பிடிக்காத நடிகர்தான்னும் தெரிஞ்சு வச்சுக்கிட்டீங்க. இருந்தாலும் சும்மாவானும் கொஞ்சமே கொஞ்சமாவது பிகு காட்ட மாட்டீங்களா?அந்த மாதிரி லேசா வறுக்கணும். முடிஞ்சால் ம.பா.வையே வறுக்கச் சொல்லிடுங்க. சினிமா போயிட்டு வந்ததுக்குத் தண்டனையாவும் இருக்கும். கொழுக்கட்டை சரியா வரலைனா, அவராலேதான்னு சொல்லிடலாம். எப்படி ஐடியா?
உளுத்தம்பூரணம்: இது உழுந்தா, இல்லை உளுந்தானே ஆராய்ச்சி இன்னும் முடியலை. அதைத் தனியா வச்சுப்போம். ஒரு கப் உளுந்தை ஊற வைச்சு, மிளகாய் வத்தல், பெருங்காயம், (பூரிக்கட்டையால் ம.பா.வைஅடிக்கும்போது வருமே அந்தக் காயம் இல்லை) வாசனைக்குச் சேர்த்து உப்பும் தேவைக்கு ஏற்ப, (நீங்களும் சாப்பிடும் ஐடியா இருந்தால் உப்பைக் கொஞ்சம் கவனமாய்ச் சேர்க்கவும். அப்புறம் முனியம்மாவுக்குக் கொடுக்கிறதால் இருந்தால் எல்லாம் பெர்ஃபெக்டா இருக்கணும்.) அப்புறமா வாங்க மாட்டாங்கறதோட இல்லாமல், வேலை செய்யற மத்த வீடுங்களிலேயும் உங்க மானம் போயிடும். கவனம் தேவை.
எல்லாத்தையும் அரைச்சீங்களா? அட, சொல்லலையா? எல்லாத்தையும் மிக்ஸியிலே போட்டு அரைக்கணும்ங்க. இப்போ எல்லாம் யாரு அம்மி, கல்லுரல்னு கட்டி அரைக்கிறாங்க?? அரைச்சதை ஒரு வாழை இலையில் எண்ணெய் தடவி, இட்லிப் பானையில் வச்சு வேக வைக்கணும். வேகாத வெயிலில் போய் ம.பா.வைத் தேங்காய் வாங்கி வரச் சொன்னீங்களா இல்லையா? அந்த மாதிரி வேகாம இருந்துடப் போகுது. நல்லா வேகணும். ஒரு குச்சியால் குத்திப் பார்த்தீங்கன்னா, இங்கேயும் ம.பா.வே உதவிக்கு வருவார். கை சுடாமல் இருக்க அவரையே குத்திப் பார்க்கச் சொல்லலாம். என்ன?? வேலைக்குப் போயிடறாரா? இதெல்லாம் அவர் வீட்டிலே இருக்கும்போது வச்சுக்கணும், இல்லைனா லீவு போடச் சொல்லணும். உங்களை மீறி அவர் வேலைக்குப் போயிட முடியுமா? ஒட்டாமல், குச்சியில் தான், ஒட்டாமல் வந்ததும் எடுத்து, உதிர்த்து, (எவ்வளவு வேலை பாருங்க, இதுக்குத் தான் ம.பா. கூடவே இருக்கணும்) தாளிதம் செய்த வாணலியில் போட்டுப் புரட்டி வச்சுக்குங்க. ம.பா. மாட்டேன்னு சொன்னார்னா அவரைத் தனியாப் புரட்டி எடுத்துடலாம்.
உளுத்தம் பூரணம் இப்போ ரெடி. மாவிலே கிண்ணங்கள் போல் சொப்புப் பண்ணி அதில் வைத்து மூடி, மறுபடி இட்லிப் பானையில் வேகவிட்டு வைக்கச் சொல்லுங்க. உங்க ம.பா.வை. அப்புறமா எல்லாக் கொழுக்கட்டையும் ரெடி ஆனதும் உங்க தோழிகளை அழைத்து, பெருமையாக் காட்டலாம். ஆனால் ஒண்ணு, மூச்சு விடக் கூடாது. ம.பா. தான் செய்தார்னோ, அவர் ஒத்தாசை இல்லைனா உங்களால் முடியாதுனோ. அலட்டிக்கணும் நல்லா, அப்புறம் கொழுக்கட்டை செய்யறதைப் பத்தி முடிஞ்சால் வகுப்பு எடுங்க.
சமைக்கலாம் வாங்கனு எந்த நேரத்தில் கூப்பிட்டேனோ தெரியலை, யாருமே வரலை, இன்னி வரைக்கும், சாப்பிட வாங்கனு கூப்பிட்டிருக்கணுமோ? :P:P:P ஆனால் ஒண்ணு, விடறதாயில்லை, யாரையும்!
ReplyDeleteஇந்தமாதிரிப் பதிவுகள் எப்போதும் உபயோகமாக இருக்கும். அரசியல் அல்லது கதைப் பதிவுகள்தான் காலாவதியாகும்.
ReplyDelete