
முடக்கத்தான், அல்லது முடக்கித்தான் கீரை அநேகமாய் எல்லார் வீட்டுக்கொல்லைப்புறங்களில் தாராளமாகக் கிடைக்கும் ஒரு வகைக் கீரை. நிறைய மருத்துவ குணங்கள் கொண்டது இந்தக் கீரையும். முடக்கு வாதம், நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கு இந்தக் கீரை நல்ல மருந்து. தொடர்ந்து வாரம் ஒரு முறையாவது இதைச் சமைத்து உண்டு வந்தால் மூட்டு வலி, நரம்பு வலி ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இந்தக் கீரையை நீர் விட்டு மைய அரைத்துப் பிரசவம் ஆகக் கஷ்டப்படும் பெண்களின் அடி வயிற்றில் தடவினால் உடனே சுகப் பிரசவம் ஆகி விடும் என்கின்றனர்.
கைகால்கள் அறவே முடங்குவதைத் தடுப்பதால் இதற்கு முடக்கு+அற்றான் என்னும் பெயர் வந்தது. இதை ரசம் வைத்துச் சாப்பிடலாம். மலச்சிக்கல், வாய்வு, வாதம் போன்றவை வெளியேறும்.
ரசம் வைக்கும் முறை
சாதாரணமாகப் புளி கரைத்து ரசப்பொடி போட்டு உப்புச் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். இந்தக் கீரையைத் தண்டு, காம்பு இலை ஆகியவற்றுடன் நன்றாகக் கழுவி ஒரு பாத்திரத்தில் நீர் விட்டுக் கொதிக்க வைக்கவும். அதைச் சாறு எடுத்து ரசத்தில் பருப்பு ஜலத்துக்கு பதிலாக விளாவவும். நெய்யில் கடுகு, மிளகு ஜீரகம் தாளித்துச் சூடான சாதத்துடன் சாப்பிடவும். இதைத் தவிரவும் மலம் சரியாகப் போகவில்லை என்றாலும் முடக்கத்தான் கீரையைச் சாப்பிடலாம். கைப்பிடி அளவுக் கீரையுடன் பூண்டு சேர்த்து ஒன்றிரண்டாக நசுக்கவும். இதை ஒரு பாத்திரத்தில் இரண்டு தம்பளர் நீரில் இடவும். மிளகை ஒன்றிரண்டாக உடைத்துச் சேர்க்கவும். கால் தம்பளராக வற்றும் வரை கொதிக்க விடவும். விடியற்காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் வயிற்றில் உள்ள கெட்ட வாயுக்கள் எல்லாம் பிரிந்து மலம் நன்கு வெளியேறும். பேதி அதிகம் ஆனால் எலுமிச்சைச் சாறில் உப்புச் சேர்த்து அருந்தவும். ரசம் சாதம் மட்டுமே சாப்பிட வேண்டும். இதைத் தோசை மாவோடு சேர்த்து அரைத்து தோசையாக வார்த்தும் சாப்பிடலாம். இந்தக்கீரையைப் பொடியாக நறுக்கி தோசை மாவில் சேர்த்து ஊத்தப்பம் போல் வார்த்தும் சாப்பிடலாம்.
இந்தக்கீரையை அரைத்துத் தலையில் தேய்த்து நன்கு ஊறியபின்னர் குளித்து வந்தால் தலை மயிர் கொட்டுவது நிற்கும். நரை வருவதைத் தடுக்கும். இந்தக்கீரையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கீல் வாயு இருப்பவர்கள் வீக்கத்தில் கட்டிக் கொண்டால் குணம் ஆகும்.
