எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, May 29, 2018

உணவே மருந்து! அகத்திக்கீரை!

நம் அகத்தை அதாவது வயிற்றைச் சுத்தம் செய்வதால் இந்தக் கீரைக்கு அகத்திக்கீரை என்று பெயர். பொதுவாக எல்லா நாட்களிலும் அகத்திக்கீரையைச் சாப்பிடுவதில்லை. ஏகாதசி விரதம் இருந்த மறுநாள் கட்டாயம் சாப்பிட வேண்டும் என்பார்கள். முதல் நாள் பட்டினி இருந்து வருத்தியதால்கொஞ்சம் வயிறு சூடு அதிகம் இருக்கும். அகத்திக்கீரையைச் சமைத்துச் சாப்பிடுவதால் அந்தச் சூடு தணியும்.  வாயுப் பிரச்னை ஏற்படாது.  கசப்புத் தன்மை கொண்ட கீரை என்பதால் பலரும் சாப்பிடுவதில்லை. ஆனால் சமைக்கும்போது கொஞ்சம் வெல்லம் சேர்த்தால் கீரை கசக்காது. இதுவும் மருத்துவ பயன்கள் அதிகம் கொண்ட கீரை. இதையும் கட்டாயமாய்ப் பத்தியம் இருப்பவர்கள், சித்த, ஆயுர்வேத, ஆங்கில மருந்து சாப்பிடுபவர்கள் உண்ணக் கூடாது. மருந்தை நிறுத்திவிட்டு எடுத்துக் கொள்ளலாம்.

இந்தக் கீரையில் புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், மாவுச்சத்து, இரும்புச் சத்து போன்றவை உள்ளன. உடல் உஷ்ணம் குறைய இந்தக் கீரையைச் சமைத்து உண்பார்கள். பித்தம் நீங்கி அஜீரணம் போய் ஜீரணம் உண்டாகும்.  கால்களில் விரல்களின் ஓரத்தில் வரும் சேற்றுப் புண்களுக்கு இந்தக் கீரையின் சாறைத் தடவலாம்.  சரும நோய்க்கும், தேமலுக்கும் இது நல்ல மருந்து. இந்தக்கீரையின் இலைகளைத் தேங்காய் எண்ணெயில் வதக்கி அரைத்து உடலில் பூசிக் கொண்டு குளிக்கலாம். கீரைச் சாற்றில் தேன் கலந்து குழந்தைகளின் உச்சந்தலையில் தடவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்க்கோவை மறையும்.  பற்கள் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கும் இந்தக்கீரை நல்ல பலன் அளிக்கும். தொண்டைப் பிரச்னை உள்ளவர்கள் இந்தக் கீரையைப் பச்சையாக வாயில் போட்டு மெல்லலாம். தொண்டை வலி,  தொண்டைப்புண் சரியாவதோடு வயிற்றில் உள்ள புழுக்கள், மலச்சிக்கல் ஆகியவை தீரும்.

Image result for அகத்திக் கீரை மருத்துவ குணங்கள்

படத்துக்கு நன்றி கூகிளார்.

இந்தக் கீரையைக் காலையில் நறுக்கக் கூடாது என்பார்கள். காரணம் ஏதோ உண்டு. மறந்துட்டேன். கேட்டுச் சொல்கிறேன். ஆகவே முதல்நாளே வாங்கி வந்ததும் கீரையை ஆய்ந்து நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பாசிப்பருப்புச் சேர்த்துக் கீரையை உப்புச் சேர்த்து வேக வைத்துக் கொண்டு கடுகு, உளுத்தம்பருப்பு, மி.வற்றல் தாளித்துத் தேங்காய்த் துருவலோடு வெல்லம் சேர்த்துக் கிளறிப் பொரியல் (கறி அல்லது சுண்டல்) செய்து சாப்பிடலாம். மற்றக் கீரைகள் மாதிரி இதையும் சமைக்கலாம் என்று சொன்னாலும் நான் செய்து பார்த்தது இல்லை. 

5 comments:

 1. அகத்திக்கீரை கொஞ்சம் கசந்தாலும் எனக்குப் பிடிக்கும். சரியா, இது சாப்பிடும்போது மருந்துகளை எடுத்துக்கொண்டால், மருந்துகளினால் பயன் இருக்காது என்று சொல்லியிருக்கீங்க.

  எங்க ஊர்ல (பஹ்ரைன்ல) அக்த்திப்பூவும் விற்பாங்க. அதை என்ன பண்ணிச் சாப்பிடுவார்கள் என்று தெரியாது.

  ReplyDelete
 2. துவாதசிக் கீரை என்ற அளவில் தெரியும். நாள் பார்க்காமல் எப்போதோ ஓரிருமுறை சமைத்துச் சாப்பிட்டதுண்டு - அம்மா காலத்தில். என் அம்மா காலத்தில்!!

  அப்புறம் இப்போ எல்லாம் மாட்டுக்கு கொடுக்கத்தான் வாங்குவது - அதுவும் எப்போவாவதுதான்!

  :)))

  ReplyDelete
 3. இருவருக்கும் நன்னி! :)))))

  ReplyDelete
 4. அக்த்திப்பூவும் விற்பாங்க. அதை என்ன பண்ணிச் சாப்பிடுவார்கள் என்று தெரியாது. - பதில் கிதர்?

  ReplyDelete
  Replies
  1. அகத்திக்கீரையைச் சமைப்பது போலப் பூவையும் சமைக்கலாம். பொரிச்ச குழம்பு, பாசிப்பருப்பு சேர்த்துக் கறி போன்றவை செய்யலாம். கண்கள் பிரகாசமாகத் தெரியும் என்பார்கள்

   Delete