எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, June 6, 2018

உணவே மருந்து! புளிச்ச கீரை!

Image result for புளிச்ச கீரை


படத்துக்கு நன்றி கூகிளார்

இந்தக் கீரை புளிப்புச் சுவை கொண்டது. ஆகவே இதைப் புளி சேர்க்காமலேயே சமைக்கலாம். காசினிக் கீரை என்றும் வழங்கும் இதை ஆந்திர மக்கள் கோங்குரா என அழைப்பார்கள். உடல் வலிமைக்கு இந்தக்கீரை உதவும். இளம் வயதிலேயே உடல் வலிமை இல்லாமல் நோஞ்சானாக இருக்கும் குழந்தைகளுக்கு இந்தக்கீரையைச் சமைத்துக் கொடுக்கலாம். உடல் வலிமை பெறுவார்கள். இதில் வைடமின்கள், தாதுப் பொருட்களோடு இரும்புச் சத்தும் அதிக அளவில் உள்ளது. உடல் வெப்பத்தைத் தணிக்கவும் இந்தக் கீரையைச் சமைத்து உண்ணலாம். சரும நோய்களுக்கும் இந்தக் கீரையின் சாற்றை உட்கொள்வது பலன் தரும். சட்டினியாகவும் செய்து சாப்பிடலாம். வாதம், வாயு போன்றவற்றையும் இந்தக் கீரை குணப்படுத்தும். வாயில் ஏற்படும் அருசி இந்தக் கீரையை உண்பதால் குறையும். காய்ச்சலால் உணவின் மீது ஏற்படும் ருசியின்மை குறையும். மஞ்சள் காமாலை, காச நோய் ஆகியவற்றுக்கும் இந்தக்கீரையை அரைத்துச் சாறு எடுத்துக் குடிக்கலாம். மலச்சிக்கலும் தீரும். எனினும் உடலில் பித்த தோஷம் அதிகம் உள்ளவர்கள் கூடியவரை இந்தக் கீரையைத் தவிர்ப்பது நல்லது.

இப்போது இந்தக் கீரையை வைத்து கோங்குரா சட்னி தயாரிக்கும் விதம் பார்ப்போம்.

புளிச்ச கீரை ஒரு கட்டு

மி.வத்தல் அவரவர் காரத்துக்கு ஏற்ப 10 அல்லது 15

கொத்துமல்லி விதை இரண்டு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் ஒரு துண்டு

வெந்தயம் ஒரு டீஸ்பூன்

உப்பு தேவையான அளவுக்கு

வதக்க நல்லெண்ணெய் ஒரு கிண்ணம்

கடுகு, வெந்தயம், தேவையானால் ஒன்று அல்லது இரண்டு மி.வத்தல், மஞ்சள் பொடி, பெருங்காயம்

கீரையை நன்கு ஆய்ந்து கழுவி பொடிப் பொடியாக இலைகளை மட்டும் நறுக்கி வைக்கவும்.

கடாயில் முதலில் வெந்தயத்தை வெறும் சட்டியில் போட்டு வறுத்து எடுத்துத் தனியே வைக்கவும். பின்னர் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் கொண்டு பெருங்காயத்தைப் பொரித்து எடுத்துக் கொண்டு மி.வத்தல், தனியா ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் நறுக்கி வைத்திருக்கும் கீரையையும் போட்டு வதக்கவும். நன்கு சுருள வதக்க வேண்டும். பின்னர் எல்லாவற்றையும் ஆறிய பின்னர் மிக்சி ஜாரில் முதலில் மி.வத்தல், கொத்துமல்லி விதை, வெந்தயம் போட்டு நன்கு அரைத்த பின்னர் வதக்கிய கீரையையும் போட்டு நன்கு அரைக்கவும்.

மீண்டும் அதே கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு கடுகு, வெந்தயம் தாளித்து மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்துக் கொண்டு அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும். தேவையான உப்பைச் சேர்க்கவும். எண்ணெய் பிரிந்து வரும் வரையில் நன்கு வதக்கவும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு நன்கு ஆறியதும் ஒரு கண்ணாடி பாட்டில் அல்லது ஜாடியில் போட்டு வைக்கவும். வெளியே இருந்தால் கூடக் கெட்டுப் போகாது. 

6 comments:

 1. இங்கே கொங்க்ரா கிடைக்கும் சம்மரில் தான் .
  நான் பருப்போட போட்டு செஞ்சேன் .இது மாதிரி செய்ய ஆசை .வீட்ல தண்டு நட்டு வளர்த்தேன் குளிருக்கு போய்டுச்சு ..

  இதோட பழத்தில் ஏதாச்சும் செய்வாங்களாக்கா ? கடையில் பார்த்தேன் இங்கே ..ரெசிப்பி இல்லையே அதான் வாங்கலை

  ReplyDelete
  Replies
  1. பழத்தின் பயன்பாடு தெரியலை! பார்க்கிறேன்,ஏஞ்சல்!

   Delete
 2. கேள்விப்பட்டிருக்கிறேன். இதோ, இங்கும் படித்துக் கொள்கிறேன். ஆனால் சுவைத்ததில்லை!

  ReplyDelete
  Replies
  1. சமைத்துப் பாருங்க ஶ்ரீராம், சென்னையில் கிடைக்குமே!

   Delete
 3. கோங்குராச் சட்டினி சாப்பிட்டே பார்த்ததில்லை. இதுவும் ஒரு கீரை வகையா?

  ReplyDelete
  Replies
  1. அண்ணா கோசூரில் இருந்தப்போ அங்கே தெலுங்கு சிநேகிதிகளிடம் கற்றுக் கொண்டு அம்மா பண்ணினார். பல நாட்கள் வைத்திருந்தோம். அன்றே அரைத்து அன்றே வார்க்கும் புளியா தோசைக்கு அருமையான துணை!

   Delete