அடுத்து நாம் பார்க்கப் போவது எலுமிச்சை சாதம்.எல்லோருக்கும் தெரிந்தது தான். இது மிகவும் எளிது. சிலர் இதிலேயே மசாலாப் பொடி சேர்த்து மசாலா கலந்த எலுமிச்சைச் சாதமாகவும் செய்கின்றனர். நம் விருப்பத்திற்கேற்பச் செய்யலாம். முதலில் ஒரு கிண்ணம் அரிசியைப் பொல பொலவென வடித்து ஒரு தாம்பாளத்தில் பரப்பி ஆற விடுங்கள். அதில் நல்லெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன், உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி சேர்த்துக் கிளறி வைக்கவும். நல்ல எலுமிச்சம்பழமாக நடுத்தர அளவில் சாறு உள்ளதாக ஒரு பழம் தேவை. சாறை ஒட்டப் பிழிந்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.
தாளிக்கத் தேவையான பொருட்கள்:
எண்ணெய் நல்லெண்ணெய் தான் நன்றாக இருக்கும். சாதத்தில் ஏற்கெனவே எண்ணெய் சேர்த்திருப்பதால் கொஞ்சம் போல் தாளிக்க மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
கடுகு ஒரு தேக்கரண்டி,
உளுத்தம்பருப்பு ஒரு தேக்கரண்டி,
கடலைப்பருப்பு ஒரு தேக்கரண்டி,
வேர்க்கடலை ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொண்டு ஒவ்வொன்றாகப் போட்டு சிவக்கும் வரை வறுக்கவும்.
பின்னர் அதில் பச்சை மிளகாய் பெரிதானால் இரண்டு சிறிதானால் நான்கு போட்டுக் கருகப்பிலையும் சேர்த்துக் கிளறவும். அடுப்பை அணைத்து விடவும். இந்தத் தாளிப்பை ஆற வைத்திருக்கும் சாதத்தில் போட்டு நன்கு கலக்கவும். எலுமிச்சைச் சாறைச் சேர்க்கவும். நன்றாகக்கலந்து விடவும். மசாலா சேர்ப்பதானால் தாளிப்பில் சோம்பு கலந்து கொண்டு இஞ்சி நறுக்கிச் சேர்க்கவும். தாளிப்பைப் போட்டுக் கலந்த பின்னர் அரை டீஸ்பூன் கரம் மசாலாப் பொடியைச் சேர்த்துக் கிளறவும். சற்று நேரம் ஊற வைத்துப் பின்னர் பரிமாறவும்.
இதற்கும் மோர்க்குழம்பே தொட்டுக்க நன்றாக இருக்கும். மோர்க்குழம்பு செய்முறை பாரம்பரியச் சமையல்கள் புத்தகத்தில் கிடைக்கும். என்றாலும் எளிதாகச் செய்வதெனில் நல்ல கெட்டி மோரில் உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி சேர்த்துக் கொண்டு பச்சைமிளகாய் இரண்டு, தேங்காய்,த் துருவல், ஒரு மேஜைக்கரண்டி, இரண்டு தேக்கரண்டி ஊற வைத்த அரிசி அல்லது இரண்டு தேக்கரண்டி அரிசி மாவு சேர்த்து அரைத்துக் கொண்டு மோரில் கலக்கவும். அடுப்பில் சிறிது நேரம் வைத்துவிட்டுப் பின்னர் பொங்கி வரும் சமயம் கீழே இறக்கித் தேங்காய் எண்ணெயில் கடுகு, வெந்தயம், சின்னதாய் ஒரு மி.வத்தல், கருகப்பிலை தாளித்துச் சேர்க்கவும். விசேஷ தினனங்கள் என்றில்லாமல் தினசரி சாப்பிட்டிலேயே மாறுதலுக்காக இந்த மாதிரிப் பிசைந்த சாத வகைகளைப் பண்ணலாம். தினமும் சாம்பார், ரசம் எனச் சாப்பிட்டு அலுப்பாய் இருக்கையில் மாறுதல் ஓர் புதிய சுவையைக் கொடுக்கும்.
No comments:
Post a Comment