எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, May 27, 2018

உணவே மருந்து! சிறுகீரை!

சிறுகீரையைப்பத்தியம் இருப்பவர்கள் சாப்பிடக் கூடாது. அகத்திக்கீரை போல் இதுவும் பத்தியத்தை முறிக்கும் இயல்பு உடையது! இந்தக்கீரை எங்கு வேண்டுமானாலும் வளரும். இதுவும் குப்பைக்கீரையும் ஒன்று எனப் பலர் சொன்னாலும் இதைத் தனியே வளர்ப்பவர்களும் உண்டு. இலைகள் மாற்று அடுக்கில் அமைந்தவை. சட்டெனப் பார்ப்பவர்களுக்கு அரைக்கீரைக்கும் இதுக்கும் வேறுபாடு தெரியாது. இதிலும் பொதுவாகத் தண்டைச் சமைப்பதில்லை. கீரையில் பச்சையம் அதிகம். இந்தக் கீரையைச் சமைத்தாலும் அதன் பச்சை நிறம் மாறாது.

மிகவும் மருத்துவ குணம் நிரம்பிய இதன் இலை, வேர் ஆகியவற்றில் கஷாயம் மாதிரி வைத்துக் குடிக்கலாம். உடலில் உள்ள நச்சுத் தன்மை விலகி விடும் என்றும் அனைத்தும் கழிவுகளாக வெளியேறிவிடும் என்றும் சொல்வார்கள். நீர்க்கட்டிக் கொண்டிருந்தால் இந்தக் கீரையைப் பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் சிறுநீர் தானாகப் பிரியும். இது மட்டுமல்ல. ஆங்கில மருத்துவர்களால் கூட குணப்படுத்த முடியாத சிறுநீரகக் கல் இந்தக் கீரையைத் தொடர்ந்து உண்பதால் குணமாகும். இந்தச் சிறுகீரையின் வேரோடு நெருஞ்சில் வேர், சிறுபூளை வேர்(பூளைப்பூ எனத் தென்மாவட்டங்களில் விற்பார்கள். வீட்டுக்கூரையில் இதை வைத்தால் நன்மை பயக்கும் என்றும் சொல்வதுண்டு. சங்கராந்தி(பொங்கல்) சமயம் இவற்றை வீதியில் வந்து கூவி விற்பார்கள். இந்தச் சிறுபூளை வேர், நெருஞ்சில் வேர், சிறுகீரை வேர் ஆகியவற்றோடு ஜீரகம் ஆகியவற்றை வகைக்கு 40 கிராம் அளவுக்கு எடுத்துக் கொண்டு கல்லுரல் அல்லது அம்மியில் ஒன்றிரண்டாகச் சிதைத்துக் கொண்டு ஒரு லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராகச் சுண்ட வைத்து இரு பாகமாகப் பிரித்துக் காலை ஒரு பாகமும் மாலை ஒரு பாகமும் குடித்து வரக் கல்லடைப்பு முற்றிலும் நீங்கும்.

கண் சம்பந்தப்பட்ட எந்த நோய்க்கும் இந்தச் சிறுகீரை நன்மை தரக் கூடியது.  கண் பார்வைத் திறன் அதிகரிப்பதோடு, கண் காசம், கண்ணில் ஏற்படும் படலம், கண் புகைச்சல் ஆகியவை முற்றிலும் நீங்கும்.  ரத்தக் கோளாறால் ஏற்படும் பித்தம் நீங்கப் பச்சரிசிக் கழுநீருடன் சிறுகீரை வேரை அரைத்துக் கொண்டு பத்து கிராம் அளவுக்கு எடுத்துத் தேன் கலந்து கொடுத்தால் நிவாரணம் கிட்டும்.  இந்தச் சிறுகீரைச் சாறு ஒரு லிட்டர் எடுத்துக் கொண்டு அதனுடன் நல்லெண்ணெய் ஒரு லிட்டர், எலுமிச்சைச் சாறு அரை லிட்டர், பால் ஒரு லிட்டர், கரிசலாங்கண்ணிச் சாறு ஒரு லிட்டர் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து கொண்டு அதில் அதிமதுரம்(பொடியாக்கி) ஏலம் (பொடி), நெல்லி முள்ளி எனப்படும் நெல்லி வற்றல்,லவங்கம் எனப்படும் கிராம்பு, கோஷ்டம், வெட்டி வேர், விளாமிச்சை வேர் ஆகியவற்றை வகைக்கு இரண்டு கிராம் அளவு எடுத்துக் கொண்டு ஊற வைத்து அரைத்து மேற் சொன்ன சாறுகளோடு கலந்து பதமாகக் காய்ச்சிப் பின்னர் வடித்து அதில் எண்ணெய் தேய்த்துக் குளித்தால் கண் பிரச்னைகள் நிரந்தரமாகத் தீர்வாகும் என்கின்றனர்.

Image result for சிறுகீரை

படம் உதவி கூகிள் வாயிலாக! நன்றி.

இந்தச் சிறுகீரையை எனக்குக் கல்யாணம் ஆகிச்சென்னை வந்தப்புறம் தான் தெரியும். மதுரையில் இருந்தவரை முளைக்கீரை, அரைக்கீரை ஆகிய இரண்டு தான்! கீரைக்காரியிடம் காசு கொடுத்துக் கீரை வாங்கியதே இல்லை. அரிசி போட்டுத் தான் வாங்குவோம். கூடவே தக்காளி, பச்சை மிளகாய், கருகப்பிலை, கொத்துமல்லி எல்லாமும் அரிசி போட்டுத் தான் வாங்கி இருக்கோம். சென்னை வந்ததும் அரிசி போட்டால் கீரை கிடையாது என்பதே ரொம்ப அதிசயமாயும், வருத்தமாயும் இருந்தது. பின்னர்  எழுபதுகளின் கடைசியில் மதுரையிலும் காசு கொடுத்துக் கீரை முதலியன வாங்க ஆரம்பித்து விட்டனர்.  என் புக்ககத்தினருக்கு முளைக்கீரை தவிர்த்து மற்றவை தெரியாது! என்னமோ கீரையெல்லாம் சமைக்கிறே என்று என் மாமியார் சொல்லுவார். ஆனாலும் விட்டதில்லை. பொன்னாங்கண்ணிக்கீரை, கரிசலாங்கண்ணிக்கீரை கூடச் சமைச்சுடுவேன். அவங்க சாப்பிடலைனா என்ன? நாங்க சாப்பிடுவோம்! :)))) இப்போ அதெல்லாம் கிடைக்கவே இல்லை என்பதோடு ஒரு கட்டுக்கீரையைச் சாப்பிடவே இரண்டு நாள் ஆயிடுது! :)))))

5 comments:

  1. சிறுகீரை சாப்பிட்டதே இல்லை. தெரியாத பல தகவல்களைத் தெரிந்துகொண்டேன்.

    நீங்க சொல்லற லிட்டர் கணக்கு மூலிகைச் சாறு தயாரிக்கும் வித்த்தை எங்கேருந்து பிடிச்சீங்க?

    ReplyDelete
    Replies
    1. ஒரு சித்த மருத்துவப் பதிப்பில் இருந்து. இணையத்திலும் தகவல்கள் கிடைக்கின்றனவே!

      Delete
    2. பொதுவாகவே ஆயுர்வேத மருத்துவர்கள், சித்த மருத்துவர்களிடம் நோய்ச் சிகிச்சைக்குச் சொன்னால் பல விஷயங்களைப் பகிர்ந்துப்பாங்க. அதிலும் தெரிசனங்கோப்பு எல்.மஹாதேவன் ஆயுர்வேத மருத்துவர் பல தகவல்களை எழுதியும், பேட்டிகளில் சொல்லியும் இருக்கார். பொதிகையில் இவர் பேட்டி வந்தப்போப் பார்த்திருக்கேன். அதேபோல் சித்தமருத்துவர் ஒருத்தர் நியூஸ் 7 சானலில் முன்னெல்லாம் மாலை நாலரை மணியிலிருந்து ஐந்து மணி வரை பல அரிய தகவல்களைக் கொடுப்பார். அவர் மூலமே நாட்டுத் தக்காளியின் பெருமையும் சிறுகீரை கல்லடைப்புக்கு நன்மை தரும் என்பதும் அறிந்தேன்.

      Delete
  2. சிறுகீரைக்கு இவ்வளவு மருத்துவ குணங்களா? நாங்கள் வாங்கிச் சமைத்ததே இல்லை.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நல்லது. பச்சை நிறம் மாறவும் மாறாது!

      Delete