எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, September 4, 2025

வெல்லச் சாதம், எள் சேர்த்த வெல்லச் சாதம் வகைகள்!

 எலுமிச்சைச் சாதம் அவ்வளவா போணி ஆகலை. அதனால் பரவாயில்லை. இப்போ வேறே சாதங்களைப் பார்ப்போம். அடுத்து வருவது வெல்லச் சாதம். சர்க்கரைப் பொங்கலுக்கும் இதுக்கும் வித்தியாசம் உண்டு. பொங்கல் அரிசி, பருப்புச் சேர்த்துப் பால் விட்டுக் குழையப் பண்ணுவோம். பின்னர் வெல்லம் சேர்த்துக் கிளறுவோம். தேங்காய்த் துருவல் சேர்ப்பதில்லை. தேவையானால் தேங்காயப் பல்லுப் பல்லாகக்கீறிச் சேர்க்கலாம். ஆனால் பதினெட்டாம் பெருக்குப் போன்ற விசேஷ நாட்களில் வெல்லச் சாதமே பண்ணுவார்கள்.

இதுக்கும் சாதத்தைப் பொல பொலவென வடிச்சுக்கணும். ஒரு தட்டில் நெய்சேர்த்துக் கிளறி ஆற விட வேண்டும். தேங்காயைச் சீராகத் துருவி எடுத்துக் கொள்ள வேண்டும். பூத்துருவலாக இருக்க வேண்டும். இப்போது அடுப்பில் வாணலி(அலுமினியம்)யை வைத்து அல்லது வெண்கல உருளியில் ஒரு கிண்ணம் தேங்காய்த் துருவலைப் போட்டு அதிலேயே வெல்லத் தூள் அரைக்கிண்ணம் சேர்க்கவும். நல்ல பாகு வெல்லமாக இருந்தால் நல்லது.

வெல்லமும் தேங்காயும் சேர்ந்து வரும். பாகு பதம் வரும்போது ஒரு மேஜைக்கரண்டி நெய் சேர்த்துக் கிளறவும். அடியில் ஒட்டாமல் வரும். அடுப்பை நிறுத்திக் கீழே இறக்கி வைத்துவிட்டு ஆறிய நெய் சேர்த்த சாதத்தைப் போட்டுக் கிளறவும். சாதமும் பூரணமும் நன்றாய்க் கலக்க வேண்டும். நன்கு கலந்த பின்னர் ஏலக்காய் ஐந்தாறை எடுத்துப் பொடி சேய்து சேர்த்துக் கலக்கவும். இதற்கு முந்திரிப்பருப்பெல்லாம் தேவை இல்லை. விரும்பினால் போட்டுக் கொள்ளலாம்.

அடுத்து எள்ளுச் சாதம்

இதுக்கும் வடித்த சாதத்தை ஆற வைச்சு உப்புச் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு நன்கு கலந்து விடவும். நல்ல கறுப்பு எள்ளைக் களைந்து கொண்டு வடிகட்டிப் பின்னர் வெறும் இரும்பு வாணலியில் போட்டு நன்கு வாசனை வரும்படி வறுக்கவும். 50 கிராம் எள்ளுக்கு இரண்டு பட்டை மிளகாய் (மிளகாய் வற்றல்) சேர்க்கவும். எள்ளை வறுத்த சூட்டிலேயே வத்தலையும் போட்டு அதற்கேற்ற அளவில் உப்புச் சேர்க்கவும். சாதத்தில் ஏற்கெனவே உப்புப் போட்டிருப்பதால் கவனமாக உப்புச் சேர்க்க வேண்டும். பின்னர் கொஞ்சம் ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டுப் பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். ஒரு சிலர் இதற்குத் தாளிக்கும் வெள்ளை உளுத்தம்பருப்பும் சேர்ப்பார்கள். தோசை மிளகாய்ப் பொடி மாதிரி இருக்கும் என்பதால் நான் சேர்ப்பதில்லை. இந்த எள்ளுப் பொடியைத் தேவையான அளவுக்குச் சாதத்தில் போட்டு நன்கு கலக்கவும். இதுக்கும் மோர்க்குழம்பு நன்றாக இருக்கும். எள்ளுப்பொடி/மோர்க்குழம்பு என் புக்ககத்தில் பிரபலமான ஒன்று. சாதாரண நாட்களிலேயே சனிக்கிழமை அன்று ஒரு மாறுதலுக்காக இதைச் செய்வார்கள்.

இந்த எள்ளுப்பொடி தென் மாவட்டங்களில் காரமாக இல்லாமல் வெல்லம், தேங்காய்த் துருவல் சேர்த்துப் பண்ணூவார்கள். அங்கே  எல்லாம் காரமான எள்ளுப் பொடியைப் பார்க்க முடியாது. எள்ளை நன்கு வறுத்த பின்னர் மிக்சி ஜாரில் அதோடு வெல்லப் பொடியைச் சேர்த்துக் கொண்டு ஒரே சுத்துச் சுத்திவிட்டுத் தேங்காய்த் துருவலையும் சேர்ப்பார்கள். உப்புச் சேர்க்காமல்.  இதில் தான் சாதம் கலப்பார்கள். புரட்டாசி சனியன்று வெங்கடாசலபதி சமாராதனையில் இந்த எள்ளுச் சாதம் அங்கெல்லாம் பிரபலமான ஒன்று.

No comments:

Post a Comment