எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, March 11, 2020

பாரம்பரியச் சமையலில் சில பச்சடி வகைகள்!

வாழைப்பழத்திலும் பச்சடி பண்ணலாம். கனிந்த வாழைப்பழத்தை வில்லைகளாக நறுக்கிக்கொண்டு அதோடு தேங்காய் சேர்த்துக்கொண்டு கொஞ்சம் சர்க்கரையும் உப்பும் கலந்து பிசறிக்கொண்டு தயிரில் போட்டுச் சாப்பிடலாம். எல்லோருக்கும் இது பிடிக்கும் என்று சொல்ல முடியாது. அதே போல் ஜவ்வரிசியை நன்கு எண்ணெய் விட்டுப் பொரித்துக் கொண்டு உப்புச் சேர்த்துத் தயிரில் போட்டு ஊறியதும் கடுகு, பச்சை மிளகாய், கருகப்பிலை தாளித்துச் சாப்பிடலாம். கெட்டி அவலிலும் இதே மாதிரி பண்ணலாம் என்றாலும் அது சாப்பிடுவதற்குச் செய்யும் தயிர் அவல் மாதிரி இருக்கும். அவ்வளவாக ருசிக்காது.

மாங்காய் வற்றலை வெந்நீரில் ஊற வைத்துக் கொண்டு அதோடு ஒன்றோ இரண்டோ பச்சை மிளகாயைத் தேவையான காரத்துக்கு ஏற்ப எடுத்துக் கொண்டு நன்கு அரைத்துத் தயிரில் கலக்கலாம். பின்னர் தேவையான உப்பைப் போட்டு எண்ணெயில் கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், கருகப்பிலை தாளித்துக் கொத்துமல்லி தூவலாம். வடு மாங்காய் ஊறுகாயிலும் கொஞ்சம் வெம்பினாற்போல் இருக்கும் மாங்காய்களை எடுத்துக்கொண்டு மேற்சொன்ன மாதிரி காரம் சேர்த்து அரைத்துத் தயிரில் கலந்து தாளிதங்கள் செய்து சாப்பிடலாம்.

வெண்டைக்காய், தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொண்டு தாளிதம் செய்து உப்புச் சேர்த்து நன்கு வதக்கிக் கொண்டு தயிரிலும் போட்டுச் சாப்பிடலாம். முன்னர் வெண்டைக்காய்ப் புளிப்பச்சடி பார்த்தோம். மாற்றாக தயிரில் போட்டும் பண்ணிக்கொள்ளலாம். வெறும் தேங்காய் மட்டும் போட்டுப் பண்ணும் தயிர்ப் பச்சடியிலும் மேற்சொன்ன மாதிரி காய்களைச் சேர்த்தும் பண்ணலாம். தேங்காய் மட்டும் போட்டும் பண்ணலாம். வாழைத்தண்டையும் பொடியாக நறுக்கிக் கொண்டு உப்புப் போட்டுச் சிறிது நேரம் வைத்துவிட்டுப் பின்னர் நீரை வடித்துக் கொண்டு தயிரில் போட்டுக் கலக்கிக் கொண்டு கடுகு, பெருங்காயம், பச்சை மிளகாய், கருகப்பிலை போட்டுத் தாளித்துக் கொண்டு சாப்பிடலாம். வெள்ளரிக்காய்ப் பச்சடி போல் இதுவும் நன்றாக இருக்கும். உடலுக்கும் நல்லது.

பச்சடி வகைகள் முடிந்தன.

21 comments:

  1. ஜவ்வரிசியாவது பரவாயில்லை, காராபூந்தி பச்சடி மாதிரி இருக்கும்.  வாழைபபழ பச்சடி....?!!!

    ReplyDelete
    Replies
    1. இங்கே மாமனார் வீட்டில் வாழைப்பழத்தை மோர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்வார்கள் ஸ்ரீராம். தயிரில் பூவன் பழத்தைப் போட்டுச் சாப்பிடுவதையும் பார்த்திருக்கேன்.

      Delete
    2. முதன்முதலில் என் பெரியப்பா, மோர் சாதத்திற்கு மாம்பழத்தைத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டதைப் பார்த்து எனக்கு மயக்கம் வராத குறைதான். என்ன என்ன காம்பினேஷன்கள்.

      இதை முன்னமேயே குறிப்பிட்டிருக்கேனா என்று தெரியலை. நான் எப்போதும் லஞ்ச் ரெடியாகும் நேரத்துக்கே ரெஸ்டாரண்டுக்குப் போய் லஞ்ச் சாப்பிடுவேன் (பொதுவா 10 3/4க்கு ரெடியாகிடும்.. ஆனா மக்கள் 12 மணிக்குத்தான் வர ஆரம்பிப்பார்கள்). அப்போ ஒரு தடவை ஒரு மலையாளி, சாதம், அதன் மேல் குழம்பு, அதனுடன் கூட்டு கரேமது என்று எல்லாவற்றையும் கலந்து சாப்பிட ஆரம்பித்தார். பார்க்கவே ஒரு மாதிரி ஆகிவிட்டது எனக்கு.

      Delete
    3. என் மாமனார் வீட்டில் ஒவ்வொரு சாதத்துக்கும் ஒரு மாம்பழம். கூடையோடு தான் வாங்குவார். அதைத் தவிரவும் வீட்டு மாமரங்களிலும் காய்த்துப் பழுத்து வரும். பலாப்பழம் என்றால் ஒரு பருவத்துக்குக் குறைந்தது முழுதாக 3 பலாப்பழம் முதல் 5 வரை வாங்குவார். எல்லோருமே சாப்பிடுவார்கள், என்னையும் நம்ம ரங்க்ஸையும், எங்க குழந்தைகளையும் தவிர்த்து! :)))))) பக்ஷண வகையறாக்களும் அவங்க சாப்பிடறதைப் பார்த்திருந்தீங்கன்னா மயக்கமே வரும்!

      Delete
    4. இப்போதைய கல்யாணங்களுக்குச் சாப்பிடப் போனால் அந்த மலையாளி சாப்பிடற மாதிரித் தான் சாப்பிட வேண்டி இருக்கு. அடுத்தடுத்து வந்து கொண்டே இருக்கும். இதுக்கு பஃபே தேவலை எனத் தோன்றுகிறது. எது வேண்டுமோ அதை மட்டும் சாப்பிட்டுக்கலாம்.

      Delete
    5. ஆமாம் கீசா மேடம்... நேரமே கொடுப்பதில்லை. அவசர அவசரமாச் சாப்பிடணும். எனக்கு என்ன அட்வாண்டேஜ்னா நான் ஒரு சாதம்தான் சாப்பிடுவேன் (சாம்பார் சாதம்னா, கொஞ்சம் ஜாஸ்தி. அவ்ளோதான். ரசம், மோர்லாம் பக்கத்துலயே போக மாட்டேன். பாயசத்தோடு எனக்கு சாப்பாடு ஓவர். இடைல கரேமது கூட்டு வந்தால் வாங்கிக்கொள்வேன். மற்றபடி கலந்த சாதம், மிக்சர்லாம் போட்டுக்கவே மாட்டேன்)

      Delete
  2. ஆனால் ஒன்று...   இந்த அபிச்சாடி வகையறா எல்லாம் யாரும் இரண்டு ஸ்பூனுக்கு மேல் சாப்பிடுவதில்லை.  பாதிபேர் இலையில் போட்ட பச்சடி வகையறாக்களை சீண்டுவதே இல்லை!

    ReplyDelete
    Replies
    1. //இந்த அபிச்சாடி//
      இந்த பச்சடி வகையறா எல்லாம்!

      Delete
    2. எனக்கெல்லாம் பச்சடி ரொம்பப் பிடிக்கும். அதிலும் டாங்கர் பச்சடி, வெங்காயப் பச்சடி, வெள்ளரிக்காய்ப் பச்சடி, வாழைத்தண்டுப் பச்சடி ஆகியவை மிஞ்சி இருந்தால் மோர் சாதத்தில் ஊற்றிக்கொள்வேன்.

      Delete
    3. கீசா மேடம்.. உங்க பதில்லேர்ந்தே தெரியலையா? இனிப்புப் ப்ச்சடி போணியாகாது (மாங்காய் பச்சடி தவிர). ஹா ஹா

      Delete
    4. பழப் பச்சடி என்னைப் போன்றவர்களுக்கு ரொம்பப் பிடிக்கும். எங்க வீட்டில் நான் செய்வதை விருந்துக்கு வரும் உறவினர் கேட்டு வாங்கிச் செல்வார்கள். உங்களுக்கு பழப்பச்சடினு ஒண்ணு உண்டு என்பதே தெரிந்திருக்கவில்லை. அதில் போட்டிருக்கும் அன்னாசிப் பழத்துண்டுகள், பப்பாளிப் பழத்துண்டுகள் அந்தச் சாறில் ஊறி எடுத்துச் சாப்பிடும்போது அருமையா இருக்கும்.

      Delete
    5. கீசா மேடம்... நீங்க சொல்ற பழப்பச்சடி நான் ஆதி காலத்துலேர்ந்து சரவண பவன்ல மட்டும்தான் சாப்பிட்டுருக்கேன் (வாரத்தில் ஒரு முறை வரும்). நல்லாவே இருக்கும், கொஞ்சம் இனிப்பு ஜாஸ்தியாக இருக்கும். வேற எங்கயும் சாப்பிட்டதில்லை

      Delete
    6. நாங்க கயா ச்ராத்தம் பண்ணினபோது, அன்று 5 பச்சிடிகள் (இஞ்சி, வெள்ளரி... என்பன போன்று) பண்ணியிருந்தார்கள். எல்லாமே ரொம்ப நல்லா இருந்தன.

      Delete
  3. இந்த வகைப் பச்சடிகள் கேள்விப்பட்டதே இல்லை. நல்லா இருக்குமா என்றும் யோசனையாக இருக்கு

    ReplyDelete
    Replies
    1. வாழைத்தண்டு, ஜவ்வரிசிப்பச்சடி ஆகியவை நன்றாக இருக்கும்

      Delete
  4. இந்த பச்சடிகளில் எனக்கு பிடிச்சது மாங்காய் அண்ட் வாழைத்தண்டு சேர்த்தவை மாங்காய் வற்றல் பச்சடியை லக்ஷ்மியம்மா வடுமாங்காய் சேர்த்து செய்ய சொன்னங்க ஒரு பதிவில் அதுவும் சுவையா இருந்தது 

    ReplyDelete
    Replies
    1. இங்கேயும் வடுமாங்காய்ப் பச்சடி சொல்லி இருக்கேனே ஏஞ்சல்! :)))) ஆனால் எனக்கு அது அவ்வளவாப் பிடிக்காது.

      Delete
  5. கீசா மேடம்.. இந்த வடுமாங்காய் (9 மாதங்களுக்கு மேல் ஊறினது) உபயோகித்து மோர்க்குழம்பு செய்வார்கள். எனக்கு அது ரொம்பவே பிடிக்கும். ஆனால் அதைச் சாப்பிட்டு 30 வருடங்களுக்கு மேல் ஆகிற்று.

    ReplyDelete
    Replies
    1. என் அம்மா வடுமாங்காய் போட்டு மோர்க்குழம்பு பண்ணுவார். அவ்வளவாப் பிடிக்காது என்றாலும் சாப்பிடுவோம்.

      Delete
  6. பச்சடி வகைகள் நன்று.

    வாழைப்பழ பச்சடி - பிடிக்குமெனத் தோன்றவில்லை! :)

    ReplyDelete
    Replies
    1. மோர் சாதத்துக்கு வாழைப்பழம் தொட்டுக்கிறவங்களுக்குப் பிடிக்கலாம். ஆனால் ஒரு சில கோயில் பிரசாதங்களில் பஞ்சாமிர்தத்தில் தயிர் கலந்திருக்கும். அதிலும் வடக்கே அதிகம் பார்த்திருக்கேன்.

      Delete