எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, February 1, 2020

பாரம்பரியச் சமையலில் பூந்திப்பச்சடி!

பச்சடி வகைகளில் வெங்காயப் பச்சடியைப் போலவே வெள்ளரிக்காய், சுரைக்காய், காரட், முட்டைக்கோஸ், சௌசௌ ஆகியவற்றைத் துருவித் தயிரில் கலந்து பச்சடி பண்ணலாம். இதில் முட்டைக்கோஸையும், சௌசௌவையும் லேசாக வதக்கிக் கொள்ளலாம். அடுத்து கடுகுப் பச்சடி!

கடுகு-தேங்காய் பச்சடி

தேவையானவை:

கடுகு - ஒரு டேபிள்ஸ்பூன் (10 கிராம்), தேங்காய் துருவல் - அரை மூடி (100 கிராம்), தயிர் - ஒரு கப் (100 மில்லி), சுக்குப்பொடி - ஒரு சிட்டிகை, சின்ன வெங்காயம் - 2, உப்பு - ஒரு சிட்டிகை.

செய்முறை:

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி லேசாக வதக்கவும். இதனுடன் தேங்காய் துருவல், கடுகு, சுக்குப் பொடி சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இந்த விழுதில், நன்றாக அடித்த தயிரைச் சேர்த்து, தேவையான உப்பு போட்டு கலக்கவும். இதை வெறுமனே சாப்பிடலாம். இட்லி, சப்பாத்தி போன்ற டிபன் அயிட்டங்களுடன் சேர்த்தும் சாப்பிடலாம்.


கத்தரிக்காய்ப் பச்சடி:

தேவையான பொருட்கள்: நல்ல பெரிய கத்தரிக்காய் ஒன்று.  புளிக்காத கெட்டித் தயிர் இரண்டு கிண்ணம். உப்பு, பெருங்காயத் தூள், தாளிக்க கடுகு ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் இரண்டு, கருகப்பிலை, கொத்துமல்லி.

கத்தரிக்காயைக் கழுவி எண்ணெய் தடவி விட்டு நடுவில் ஒரு கத்தியால் குத்தி விட்டு நெருப்பில் சுட வேண்டும்.  அல்லது மைக்ரோவேவ் அவன் அல்லது க்ரில்லரில் சுடவும்.  நடுவில் குத்தினால் தான் உள்ளேயும் வேகும்.  பின்னர் தோலை உரித்துவிட்டுப் பிசைந்து தயிரில் உப்போடு சேர்த்துக் கலக்கவும். பின்னர் எண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய், கருகப்பிலை, பெருங்காயம் தாளிக்கவும்.  பச்சைக் கொத்துமல்லித் தழையைப் பொடிப் பொடியாக நறுக்கித் தூவவும்.

தயிர்ப் பச்சடி வகைகளில் வடை மாவை போண்டோ மாதிரிப் போட்டுத் தயிரில் கடுகு, பச்சை மிளகாய், கருகப்பிலை, பெருங்காயம் தாளித்துக்கொட்டி உப்புச் சேர்த்துக் கொண்டு போண்டாக்களைப் போடலாம். பருப்பு உசிலி செய்யும்போது அரைக்கும் மாவை அரிசி மாவு கலந்து உருட்டிக் கொண்டு நீரில் வேகப் போட்டுத் தயிர்ப் பச்சடியாகச் செய்யலாம். நொறுங்கிப் போன அப்பளம், வடாம் ஆகியவற்றைப் பொரித்துத் தயிரை உப்புச் சேர்த்துக் கலந்து தாளித்துக் கொண்டு பரிமாறும்போது அப்பளங்களையோ வடாம்களையோ போட்டுப் பச்சடி செய்யலாம்.

பூந்திப் பச்சடி.

இதற்கு நல்ல மொறுமொறுவெனச் செய்யப்பட்ட பூந்திகள் தேவை. கடலைமாவையும் அரிசிமாவையும் கலந்து கொண்டு உப்புச் சேர்த்துக் கொஞ்சம் பெருங்காயப் பொடி சேர்த்துக் கொண்டு எண்ணெயில் பூந்திகளாய்த் தேய்த்து எடுக்கவும். பூந்தி மொறுமொறுவென இருக்க வேண்டும். தயிரில் உப்பு, பெருங்காயம், கருப்பு உப்புச் சேர்த்துக் கலந்து கொண்டு பூந்திகளைப் போட்டு நன்கு கலந்து விடவும். சாப்பிடுவதற்கு அரை மணி முன்னர் தயாரித்தல் நலம். இதற்குக் கடுகு, கொத்துமல்லி போன்றவை சேர்க்க வேண்டும் என்பது இல்லை. இம்மாதிரி வடாம், வத்தல், பூந்தி ஆகியவற்றைக் கலக்கும்போது தயிரில் உப்பைப் பார்த்துச் சேர்க்க வேண்டும். இவற்றில் ஏற்கெனவே உப்பு இருக்குமாதலால் தயிரில் போட்டதும் அந்த உப்பையும் இழுத்துக்கொள்ளும். ஆகவே பார்த்துச் சேர்க்க வேண்டும்.


12 comments:

  1. கத்தரிக்காய்ப் பச்சடி கேள்விப்பட்டதுமில்லை, சாப்பிட்டதுமில்லை!  நிறைய செய்ய மாட்டார்கள் போல...  பூந்திப்பச்சடி அபூர்வமாக எப்போதோ சாப்பிட்டது..

    ReplyDelete
    Replies
    1. ச்சீராம்.. பூந்தி பச்சிடிக்கு கடைல நல்ல காரா பூந்தி வாங்கி டக்குனு செய்துடலாமே. கலந்த சாத்த்துக்கு, காரக்குழம்பிற்கு நல்லா இருக்குமே

      Delete
    2. வாங்க ஸ்ரீராம், கத்தரிக்காய்ப் பச்சடிச் சின்ன வயசில் இருந்தே சாப்பிட்டிருக்கேன். அம்மா அடிக்கடி பண்ணுவா. எனக்கு ரொம்பப் பிடிச்சதும் கூட.

      Delete
    3. காராபூந்தியெல்லாம் தயிரில் போட்டால் கரையும். பச்சடிக்கான பூந்தி தனியாகத் தான் பண்ணணும்.

      Delete
  2. சாதாரணமாக கல்யாணம் போன்ற விசேஷங்களில் பச்சடி போடுவார்கள்தான்.  ஸம்ப்ரதாயமாகஎ ல்லோரும் அதையும் லிஸ்ட்டில் சேர்த்து செய்து பரிமாறி விடுகிறோம்.  எத்தனைபேர் அதை வேஸ்ட் செய்யாமல் சாப்பிடுகிறார்கள்?

    ஆனால் நான் அதை முதலில் டேஸ்ட் செய்துவிடுவேன்!

    ReplyDelete
    Replies
    1. நான் வடையை அல்லது வாழைக்காய்ப் பொடிமாஸ் இருந்தால் அதைத் தயிர்ப்பச்சடியோடு கலந்து சாப்பிட்டுவிடுவேன்.

      Delete
  3. கத்தரி பச்சடியா? கடுகு பச்சடியா? நல்லா இருக்குமா?

    ReplyDelete
    Replies
    1. சாப்பிட்டுப்பார்த்துட்டுச் சொல்லுங்க நெல்லைத்தமிழரே!

      Delete
  4. கத்தரிக்காய் பச்சடி - கேள்விப்பட்டதில்லை. இங்கே நண்பர் சிம்லா மிர்ச் எனப்படும் குடைமிளகாயில் பச்சடி செய்வார் - நன்றாக இருக்கும். பூந்தி பச்சடி - ராய்தா! :)

    தொடரட்டும் பாரம்பரியச் சமையல்!

    ReplyDelete
    Replies
    1. குடமிளகாயில் நானும் செய்திருக்கேன் வெங்கட்!

      Delete
  5. படிக்கும்போதே செமையா இருக்கு. தயிர்வடை சாப்பிடணும்போல இருக்கு பூந்தி தூவி :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க தேனம்மை, செய்து சாப்பிடுங்க! நல்லா இருக்கும்.

      Delete