எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Monday, April 1, 2019

பொடிப்பொடியாய்ச் சில செய்முறைகள்! பொடி விஷயம்னு விடாதீங்க!

இப்போ அடுத்துச் சில பொடிவகைகளைப் பார்ப்போம். இவற்றில் அன்றாட சமையலுக்குத் தேவையான சிலவும் உண்டு. முதலில் பொரிச்ச குழம்புக்குச் செய்யும் பொடி! பொரிச்ச குழம்பு சிலர் மிஷினில் அரைக்கும் சாம்பார் பொடி/ரசப்பொடியையே போட்டு விட்டு மிளகு, உபருப்பு வறுத்துத் தேங்காயோடு அரைத்து விடுகின்றனர். இதைப் பொரிச்ச குழம்பு எனச் சொல்லுவது புளி விடுவதில்லை என்பதால் தான். ஆனால் பொரிச்ச குழம்பில் கடும் பொரிச்ச குழம்புனு ஒண்ணு உண்டு. அது பத்தியத்தில் செய்யப்படுவது. பிரசவம் ஆன பெண்களுக்கும், மற்ற உடம்பு சரியில்லாமல் பத்தியச் சாப்பாடு சாப்பிடுபவர்களுக்கும் உள்ளது அது. முதலில் அந்தப் பொடியின் செய்முறை பற்றிப் பார்க்கலாம். ரொம்பவே எளிமை

மிளகு சுமார் அரைக்கிண்ணம், உளுத்தம்பருப்பு அரைக்கிண்ணம். இரண்டையும் வெறும் வாணலியில் வறுத்து நைசாகப் பொடிக்க வேண்டும். இதை வெந்து கொண்டிருக்கும் காயில் குழைய வேக வைத்த பாசிப்பருப்போடு சேர்த்துப் போட்டு ஒரு கொதியில் கீழே இறக்கித் தாளிக்க வேண்டும். இதற்குத் தேங்காய் சேர்க்க வேண்டாம். தேங்காய் சேர்த்தால் தனியாகத் தேங்காயோடு கொஞ்சம் ஊற வைச்ச அரிசியோ அல்லது ஒரு டீஸ்பூன் அரிசிமாவோ சேர்த்து அரைத்துக் கலக்கலாம்.

பொரிச்ச குழம்பு இன்னொரு முறையில் மி.வத்தல், மிளகு, உபருப்பு, பெருங்காயம் பொரித்துச் சேர்ப்பது. இவற்றை வறுத்துக் கொண்டு தேங்காயோடு அல்லது தேங்காய் இல்லாமல் பொடி மட்டும் போட்டுப் பண்ணலாம்.

தென்மாவட்டங்களில் பொரிச்ச குழம்புக்கு மிவத்தல் 50 கிராம் எனில் 50 கிராம் மிளகை நன்கு வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்வார்கள். பொரிச்ச குழம்புக்கான காய் வேகும்போது மஞ்சள் பொடியோடு இந்தப்பொடியையும் தேவையான அளவுக்குப் போட்டுப் பொடி வாசனை போகக் கொதிக்க விட்டுப் பின்னர் பருப்பைச் சேர்த்து சீரகத்தைப் பச்சையாகத் தேங்காயோடு சேர்த்து அரைத்து இதில் கலந்து ஒரு கொதி விட்டுத் தேங்காய் எண்ணெயில் தாளிப்பார்கள். தேவை எனில் ஊற வைத்த அரிசியோ, அரிசி மாவோ அரைக்கும்போது சேர்க்கலாம்.

அடுத்து வெந்தயக் குழம்புக்கென இருக்கும் பொடி! இதைச் சிலர் வத்தக்குழம்புப் பொடி என்றும் சொல்கிறார்கள். ஆனால் வற்றல் குழம்புப் பொடி இப்படி இல்லை.

வெந்தயக் குழம்புப் பொடிக்குத் தேவையான பொருட்கள்

மி.வத்தல்  சுமார் 20 அல்லது 25 வெறும் வாணலியில் கருகாமல் வறுத்துக் கொள்ளவும்.

ஒரு கிண்ணம் துவரம்பருப்பு கருகாமல் வறுக்கவும்

வெந்தயம் அரைக்கிண்ணம் கருகாமல் வறுக்கவும். மூன்றையும் சேர்த்து நன்கு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

குழம்பு வைக்கும்போது அடியில் தாளிதம் செய்து அப்பளம் அல்லது குழம்பு வடாம் போட்டுத் தாளித்துப் புளி ஜலம் விட்டு மஞ்சள் பொடி, உப்பு, பெருங்காயம் சேர்த்துக் கொதிக்க விட்டுக் கீழே இறக்கும்போது இந்தப் பொடியைப் போட்டு இறக்க வேண்டும். வேறே காரம் வேண்டாம். தாளிக்கையில் தேவையானல் மி.வத்தல் ஒன்றே ஒன்று தாளிக்கலாம்.

வற்றல் குழம்புப் பொடி எனில் பலரும் ஜீரகம் சேர்க்கின்றனர்.இப்போதெல்லாம் புளியோதரைக்குக் காய்ச்சும் புளிக்காய்ச்சலிலும் ஜீரகம் சேர்க்கின்றனர். சாம்பாரிலும் ஜீரகம்! ஜீரகம் உடலுக்கு நல்லது தான்! ஆனால் எல்லாவற்றிலும் சேர்த்தால் பாரம்பரிய சமையலின் ருசி மாறிவிடும். வற்றல் குழம்பு, சாம்பார், புளிக்காய்ச்சல் இவற்றில் ஜீரகம் கண்டிப்பாய்ச் சேர்க்கக் கூடாது.

வற்றல் குழம்புப் பொடி தேவையான சாமான்கள்

மி.வற்றல் நீளம் சுமார் 50 கிராம்

துபருப்பு+கபருப்பு+உபருப்பு சேர்ந்து ஒரு கிண்ணம்

வெந்தயம் இரண்டு டேபிள் ஸ்பூன்

மஞ்சள் கிழங்கு ஒன்று அல்லது மஞ்சள் பொடி ஒரு டேபிள் ஸ்பூன், பெருங்காயம் தேவையானால், கருகப்பிலை தேவையானால் ஒரு கைப்பிடி

இவற்றை வெறும் வாணலியில் வறுத்துக் கொண்டு தேவையானால் கருகப்பிலையையும் வாணலியில் போட்டுப் பிரட்டிக் கொண்டு பொடி செய்து வைத்துக் கொள்ளவும்! குழம்பு செய்கையில் முதலில் வற்றல்களை நல்லெண்ணெயில் வறுத்துத் தனியாக எடுத்து வைத்துக் கொண்டு பின்னர் மற்றத் தாளிதங்களைச் சேர்த்துக் கொண்டு கருகப்பிலை போட்டுப் புளி ஜலம் விட்டுத் தேவையானால் மஞ்சள்பொடி சேர்க்கவும். புளி வாசனை போகக் கொதித்ததும் பொடியைச் சேர்த்து வற்றலையும் போட்டு ஒரு கொதி விட்டுக் கீழே இறக்கலாம்.

11 comments:

  1. பொரிச்ச குழம்புக்கு உங்கள் தளத்தில் முன்னரே ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். மிளகு போடமாட்டோம்.​இன்னும் சில மாறுதல்களும் உண்டு. சீரகம் எதிலும் சேர்ப்பதில்லை. எப்போதாவது வித்தியாசமாகச் செய்ய நினைக்கும்போது சேர்த்ததுண்டு. வெந்தயக் குழம்புப்பொடி புதிது. தாளிதத்தில் நாங்கள் அதில் கப சேர்ப்போம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், என் அம்மா சமையலில் ஜீரகமே சேர்க்க மாட்டாங்க. அப்பாவுக்கு ஜீரகம் பிடிக்காது என்பதால். பின்னால் நான் சிலவற்றிற்கு ஜீரகம் சேர்த்து சமைக்க ஆரம்பித்தேன். பொரிச்ச குழம்புக்குப் பொதுவாக எங்க வீடுகளில் ஜீரகம் வைப்பதில்லை. மாமியார் வீட்டில் ஜீரகம் உண்டு.

      Delete
  2. குறிப்புகள் பயனுள்ளவை. நன்றி.

    ReplyDelete
  3. நெல்லைத் தமிழர் அவரோட கதை விமரிசனங்களிலே மும்முரமா இருக்கார் போல! வரலை. ஏஞ்சல் வந்தால் உண்டு. தோசைவாலி வரமாட்டாங்க! அவங்க சமையல் தான் அவங்களுக்கு! :)))))

    ReplyDelete
  4. அப்படீல்லாம் இல்லை கீசா மேடம்...காலையிலேயே படித்துவிட்டேன். சட்னு எனக்கு பின்னூட்டத்துக்கு தோணலை.

    குழம்புப் பொடி தவிர வேறு எந்தப் பொடியையும் பெரும்பாலும் வைத்துக்கொள்வதில்லை. வெந்தயக் குழம்புக்கெல்லாம் அப்போது தாளிப்பதுதான் (வெந்தயம், மிளகாய், குழம்புப்பொடி, பெருங்காயம் போன்று).

    நான் கத்தரி பொடி அடைச்ச கறி செய்வேன். அப்போது அதற்கு வறுத்து பொடி செய்யும்போது, கொஞ்சம் அதிகமாகச் செய்து, மிகுதியை உடனே ஃப்ரிட்ஜில் வைத்து அடுத்த தடவை உபயோகப்படுத்துவேன்.

    அதுனாலதான் வித வித பொடியைப் படித்தவுடன் கன்ப்யூஸ் ஆயிட்டேன். ஹாஹா

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் உங்களை நான் இந்தப் பதிவில் எதிர்பார்க்கவில்லை நெ.த. வந்ததுக்கு நன்றி. வெந்தயக்குழம்புப் பொடியெல்லாம் எண்ணெய் விட்டு வறுத்தால் தான் ரொம்ப நாட்கள் வைச்சுக்க முடியாது. வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்தால் ஒரு மாசமாவது வைச்சுக்கலாம். பொரிச்ச குழம்புக்கான பொடியை மி.வத்தல்,மிளகு நான் வெறும் வாணலியில் தான் வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்கிறேன்.வாரம் ஒரு முறை பொரிச்ச குழம்பு வந்துடும். சில சமயம் எரிசேரி பண்ணினால் கூட இந்தப் பொடியைப் பயன்படுத்திப்பேன். அதிகம் வித்தியாசம் தெரியாது.

      Delete
  5. இந்தப் பொடிகளைப் படித்து, ஒரு முறை செய்துபார்க்கிறேன் (குறிப்பா வெந்தயக் குழம்பு). பொரிச்ச குழம்புக்கு அப்போதைக்கு அரைப்போமே தவிர நோ பொடி ஸ்டாக்.

    ReplyDelete
    Replies
    1. எண்ணெயில் வறுத்து அரைப்பது தான் அன்னன்னிக்கு அரைச்சு விடுவது. பொரிச்ச குழம்புக்கு மி.வத்தல், உபருப்பு, மிளகு, பெருங்காயம் எண்ணெயில் வறுத்து அரைப்பது அன்னிக்கு அரைச்சு அன்னிக்குப் பண்ணுவது தான். அதெல்லாம் சேமிப்பில் இருக்காது.

      Delete
  6. மூன்று பொடியுமே செய்ததில்லை. செய்து சமைத்துப் பார்க்கிறேன். :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க தேனம்மை!வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. உங்களுக்கும் தெரியாது என்பது ஆச்சரியம் தான்! :)

      Delete