எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, August 10, 2018

உணவே மருந்து! கேழ்வரகு 1

அடுத்து என்ன எழுதுவது என யோசிக்கையில் எங்கள் ப்ளாகில் நெல்லைத் தமிழர் சிறுதானியம் சாப்பிடுவதற்குப் போட்டிருந்த கருத்து என்னை யோசிக்க வைத்தது. பலரும் சிறு தானியங்களை அன்னியமாகவே நினைக்கின்றனர்.அவை நம் நாட்டு தானியங்களே! ஆதி காலத்தில் மனிதன் அதிகம் சாப்பிட்டு வந்தது சிறுதானியங்களே ஆகும். அதுவும் மழை அதிகம் பெய்யாத வறட்சி மாவட்டங்களான ராமநாதபுரம் போன்ற ஊர்களில் உள்ள மக்கள் அதிகம் சிறுதானியங்களே சாப்பிட்டிருக்கின்றனர். இன்னமும் சாப்பிடுகின்றனர். முன்னெல்லாம் விவசாய வேலை செய்யும் கூலிகள், பெரும்பாலான விவசாயிகள் அரிசி விளைவித்தாலும் அவர்கள் வீடுகளில் சிறுதானியங்களே சமைத்துச் சாப்பிட்டு வந்திருக்கிறார்கள். அரிசிச் சோறு என்பது என்றோ ஓர் நாள் விசேஷ தினங்களில் சாப்பிடும் ஒன்றாக அவர்களுக்கு இருந்து வந்தது. அரிசிச் சோறு சிலரின் கனவாகக் கூட இருந்திருக்கிறது. இதை ஓர் திரைப்படப் பாடல் மூலமும் அறிகிறோம்.

"நித்தம் நித்தம் நெல்லுச் சோறு!
நெய் மணக்கும் கத்திரிக்காய்!" எனக் கதாநாயகி கனவு காண்கின்றாள். இதிலிருந்து நெல்லுச் சோறு என்பது எல்லோரும் எப்போதும் சாப்பிட்டு வந்ததில்லை எனத் தெளிவாகிறது.

வட மாநிலங்களிலும் சோளம் முக்கிய உணவாக இருந்து வருகிறது. சோளம், கம்பு ஆகியவற்றில் அவர்கள் ரொட்டி செய்து உண்பார்கள்.  என் சிறு வயதில் அரிசிச் சோறு ஒரு வேளை தான் சாப்பிட்டு வந்திருக்கோம்.  அம்மா அதிகம் கேழ்வரகு சமைப்பார். அதிலேயே சப்பாத்தி, பூரி, களி, உப்புமா, தோசை, அடை, கூழ் போன்றவை செய்திருக்கார். கேழ்வரகை ஊற வைத்து முளைக்கட்டிப் பின்னர் அதை வெயிலில் உலர்த்தி அல்லது இரும்புச் சட்டியில் வறுத்துப் பொடியாக்கி அதை வஸ்த்ராயனம் செய்து ராகி மால்ட் என்னும் பாலில் போட்டுச் சாப்பிடும் பொடி தயாரிப்பார்.  கடைகளில் ரகோடின் என்னும் பெயரில் விற்கும் பவுடரை விட இது நன்றாகவே இருக்கும்.  சிறு குழந்தைகளுக்கும் முதல் திட உணவாகக் கேழ்வரகுக் கூழ் கொடுப்பது உண்டு. ஒவ்வொன்றாகப் பார்க்கும் முன்னர் கேழ்வரகின் வரலாறை அறிவோம்.

விக்கிபீடியாவின் துணையுடன்!

கேழ்வரகு நம் நாட்டில் நாலாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் உண்ணப்படுவதாகச் சொல்கிறது விக்கி பீடியா! இந்தியாவில் இருந்தே மற்ற நாடுகளுக்குச் சென்றிருக்கலாம் எனச் சிலரும் தென்னிந்தியா தான் இதன் பிறப்பிடம் எனவும் சொல்லப்படுகிறது. இன்னும் சிலர் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வந்திருக்கலாம் எனவும் சொல்கின்றனர்.  எப்படியாயினும் இது வெப்பமண்டல, மித வெப்ப மண்டலப் பயிர் என்பதால் இந்தியாவில் பயிராக்கப்படுகிறது. தமிழ்நாடு, கர்நாடகம் அதிக அளவில் ராகி பயிரிடுவதில் முன்னணி வகிக்கின்றன. ஆந்திரா, ஒரிசா, குஜராத், மஹாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம், இமாசலப் பிரதேசம் ஆகிய  மாநிலங்களிலும் ஓரளவு பயிராகிறது. ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் பயிராகிறது. இலங்கையில் இதை குரக்கன் என அழைக்கின்றனர்.

கேழ்வரகு சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துகிறது.  கேழ்வரகை அதிகம் சாப்பிட்டால் பசி உணர்வு கட்டுப்படுவதோடு எடையும் அதிகரிக்காது. சேதமடைந்த திசுக்களைச் சரிசெய்து உடலில் நைட்ரஜன் நிலையைச் சமன்படுத்துகிறது. குழந்தைகளுக்குச் சிறு வயது முதலே கொடுத்து வந்தால் எலும்புகள் பலம் பெறும். வயதானவர்களுக்கும் இது ஓர் எளிதில் ஜீரணம் ஆகும் உணவு என்பதோடு எலும்புகள் வலுப்பெறும். கல்லீரல் கொழுப்பை அகற்றி உடலில் கொழுப்பின் அளவைச் சமன் செய்யும். ரத்த சோகைக்கு நல்ல உணவு. இதில் இரும்புச் சத்து நிறைந்திருப்பதால்  ரத்த விருத்திக்கு நல்லது. அதிகமாக உடல் உஷ்ணம் உள்ளவர்கள் கேழ்வரகைத் தொடர்ந்து உண்பதின் மூலம் உஷ்ணம் சமன்படும். ஆஸ்த்மா, கல்லீரல் நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றிற்கும் புதிதாகப் பிள்ளை பெற்ற தாய்மார்களுக்குப் பால் சுரக்கவும் இது நல்லதொரு உணவாகப் பயன்படும்.

Image result for கேழ்வரகு பயன்கள்

8 comments:

  1. சிறு தானியங்கள் அந்நியம் அல்ல. ஆனால் அவைகள் எல்லோரும் சாப்பிடவேண்டியதில்லை.

    நீங்கள் சொன்னதுபோல், அரிசிச் சோறு என்பது 30 வருடங்களுக்கு முன்பு, எல்லார் வீட்டிலும் எப்போதும் சமைக்கப்படுவது அல்ல. 40 வருடங்களுக்கு முன்பு (கேள்விப்பட்டவரையில்), டிஃபன் என்பதே அபூர்வமானது. உங்களுக்குத் தெரியும், டீ, 1940களில், இலவசமாக வழங்கப்பட்டு பழக்கப்படுத்தப்பட்டது. இதுபோன்றே கோதுமை எல்லாம் தமிழ்நாட்டுக்கு 80 வருடங்களுக்கு முன்பு வந்தவைதான்.

    ராகிக் களி (ராகி மொத்தே என்று சொல்லப்படுவது) கர்நாடகாவில் விவசாயிகளின் உணவாக அப்போதும் இப்போதும் இருப்பது.

    எங்கள் வீடுகளில் சிறுதானியம் பழக்கமே இல்லை. கேப்பையை (கேழ்வரகு ராகி) மாவாக்கி கஞ்சி போட்டுத் தருவார்கள். மற்றபடி கம்பு, வரகரிசி, தினை இதெல்லாம் நான் சாப்பிட்டதேயில்லை (கேள்விப்பட்டதே இல்லை எங்கள் வீடுகளில்)

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத் தமிழரே, என் அம்மா ஒருவேளை வறண்ட ராமநாதபுரம் பூர்விகம் என்பதால் சிறுதானியங்கள் சமைத்தாரோனு நினைக்கிறேன். :)) ஆனால் கேழ்வரகு மட்டும் தான். வளரும் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்குக் கேழ்வரகு, உளுந்து போன்றவை நல்ல பலனைத் தரும் என்பதால் கொடுப்பார். ஆனால் நான், அம்மா, அண்ணா, தம்பி ஆகிய நால்வர் தான் சாப்பிடுவோம். அப்பா தொடக் கூட மாட்டார். சோளம் மக்காச் சோளம் சுட்டுத் தின்றிருக்கோம். அதுவும் தாத்தா வீட்டிலும் சின்னமனூர் சித்தி வீட்டிலும். அப்பா எதிரே சாப்பிட முடியாது! :) அரிசிச் செலவு குறைவதால் கேழ்வரகு, கோதுமை போன்றவற்றை அப்பா ஆதரித்தார். கோதுமையும் அப்போல்லாம் பஞ்சாப் கோதுமைனு கிடைக்காது. மொட்டை கோதுமை என்பார்கள். அந்த மாவு கோதுமை தான் கிடைக்கும். அதிலேயே அம்மா பண்ணும் ரொட்டியும், சப்பாத்தியும் , பரோட்டாவும் அருமையாக இருக்கும். தொட்டுக்கப் பண்ணும் சைட் டிஷ் செய்வதில் அப்போவே அம்மா எக்ஸ்பர்ட். யாரானும் மும்பை, புனேயிலிருந்து வந்தால் அவங்களிடம் கேட்டுக் கேட்டுச் செய்வார்.

      Delete
    2. ஒன்பதாம் வகுப்பில் இருந்து நான் கமர்சியல் ஜியாக்ரஃபி படித்ததால் இந்தப் பயிர்கள் பற்றி எல்லாம் கேள்விப் பட்டிருக்கேன். பார்த்தது என்பது கேழ்வரகு, சோளம், கம்பு ஆகியவை மட்டுமே. வெள்ளைச் சோளம் வட மாநிலம் போய்த் தான் பார்த்தேன். மற்றப் பெயர்கள் எல்லாம் அறிமுகம் ஆனவையே!

      Delete
  2. பல சமூகங்களில் நெல்லுச்சோறு, விசேடங்களின் போது, பொங்கலின்போதோதான் செய்யப்படும் (40+ வருடங்கள் முன்பு). என் நண்பர்கள், 'இட்லி'யே, தீபாவளி போன்ற பண்டிகையின்போதுதான் செய்வார்கள் (அவர்கள் சிறுவயதில்) என்று சொல்லியிருக்கின்றனர். (இதில் தாழ்வுலாம் இல்லை. தமிழ்நாட்டு உணவுப் பாரம்பர்யம் அப்போது அப்படித்தான் இருந்தது)

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நெ.த. என் சிநேகிதிகளிலும் பலரும் சொல்லி இருக்காங்க. இட்லியே அவங்களுக்கு அபூர்வம் எனக் கேள்விப் படும்போது ஆச்சரியமாகத் தான் இருந்தது.

      Delete
  3. எனக்கும் அரிசி யைத்தவிர வேற தானியம் தெரியாது.
    இப்போ பெண் சகல சிறு தானியங்களிலும் உணவு முறை பின் பற்றுகிறாள்.

    சேலத்தில் கேழ்வரகை ஆரியம் என்பார்கள். அரைத்து மாவாக்கி
    கஞ்சி செய்வார்கள். குழந்தைகளுக்கு நல்ல திட உணவு.
    மிக நல்ல பதிவு கீதா. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், வல்லி, கேழ்வரகுக்கு ஆரியம் என்றும் ஓர் பெயர் உண்டு. எங்க வீட்டுக் குழந்தைகளுக்கு ஆறு மாசம் ஆனதுமே திட உணவுக்குக் கேழ்வரகுக் கஞ்சி தான்!

      Delete
  4. கேழ்வரகு உடம்புக்கு நல்லது.

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete