எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Friday, June 15, 2012

கஷாயம் சாப்பிட வாங்க!

நம்ம நாட்டில் பருவ மழை ஆரம்பிச்சிருக்கு. சில நாடுகளில் கடும் குளிர்.  சில நாடுகளில் குளிர் முடியும் நேரம்.  ஆக இந்தச் சீதோஷ்ணம் ஒத்துக்காமல் பலருக்கும் ஜுரம், தலைவலினு வருது.  உடம்பு வலியும் இருக்கும் பலருக்கும். அவங்க எல்லாம் மிளகு கஷாயம் வைச்சுச் சாப்பிட்டால் உடல்வலி சரியாகும், மிளகு விஷத்தை முறிக்கக் கூடியது.  ஏதேனும் பூச்சி கடித்ததாகச் சந்தேகப் பட்டால் ஏழு அல்லது ஒன்பது மிளகை அப்படியே வாயில் போட்டுக் கடித்து மென்றால் மிளகுக் காரம் நம் நாக்கில் உணர்ந்தால் விஷக்கடி இல்லை எனவும், மிளகுக் காரம் நாக்கில் உணரப்படவில்லை எனில் விஷக்கடி எனவும் தெரிந்து கொள்ளலாம். விஷக்கடிக்கு உடனடி முறிவாகவும் செயல்படும்.

கஷாயம் வைக்க ஒரு டீஸ்பூன் மிளகு, சுக்கு ஒரு சின்னத் துண்டு தனியா கொஞ்சம் போல. மூன்றையும் வெறும் சட்டியில் வறுக்கவும் நன்கு பொடியாக்கவும்.  மூன்று கப் தண்ணீரில்  இந்தப்பொடியைப்போட்டுக் கொதிக்க வைக்கவும்.  ஒரு கப்பாக வற்ற வேண்டும். பனங்கல்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம். அல்லது அது கிடைக்காதவர்கள் தேன் விட்டுச் சாப்பிடலாம்.

தூதுவளைக் கஷாயம்:  இது ஏற்கெனவே சொல்லி இருக்கேன் என்றாலும் மீண்டும் ஒரு முறை சொல்கிறேன்.

தூதுவளை ஒரு கைப்பிடி, துளசி ஒரு கைப்பிடி, புதினா ஒரு கைப்பிடி, இஞ்சி ஒரு துண்டு.

நான்கு கப் தண்ணீரில் இவற்றை நன்கு அலசிக் கழுவிப் பொடியாக நறுக்கிப் போட்டுக் கொதிக்க வைக்கவும்.  ஒரு கப்பாக வற்றியதும் தேன் கலந்து சாப்பிடவும்.

அடுத்து இஞ்சிச் சுரசம்: தனியா ஒரு டேபிள் ஸ்பூன், இஞ்சி தோல் சீவிப் பொடிப் பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன், சோம்பு ஒரு டீஸ்பூன், புதினா(தேவை எனில்) பொடியாக நறுக்கி 2 டேபிள் ஸ்பூன்.  எலுமிச்சைச் சாறு அரை மூடி.

எல்லாவற்றையுக் கழுவி மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைக்கவும்.  அரைத்த சாறை வடிகட்டவும்.  மீண்டும் ஒரு முறை மிக்சி ஜாரில் போட்டு அரைத்து வடிகட்டிச் சாறு எடுக்கவும்.  அரைக்கும் கலவையில் இனி சாறு வராது எனத் தெரிந்ததும் நிறுத்திக் கொண்டு எலுமிச்சைச் சாறு கலந்து தேன் விட்டுச் சாப்பிடவும்.  குளிர்சாதனப் பெட்டியில் வைத்தும் அருந்தலாம். வயிறு உப்புசம், வாயில் ருசியின்மை, பசி இன்மை, ஜீரண சக்தி குறைந்தால் எல்லாவற்றுக்கும் நன்மை பயக்கும்.

2 comments:

  1. உபயோகமான குறிப்பு. ஆனால் யாராவது செய்து தந்தால் நன்றாக இருக்கும்!!

    ReplyDelete
  2. ஹிஹிஹி, "பாஸ்" ஊரில் இல்லையா?

    ReplyDelete