
தூதுவளை கற்ப மூலிகைகளில் ஒன்றாகும். உடலை வலுவாக்கிக்கல் போல் ஆக்கும் மூலிகைகள் சிலவற்றில் தூதுவளையும் ஒன்று. கற்பம் என்றால் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்து நோய் அணுகாதவண்ணம் செய்து நோய்களில் இருந்து விடுபட வைக்கும் என்ற பொருள் ஆகும். காயகற்பம் என்பார்கள். காயம் என்றால் உடம்பு. இத்தகைய காயகற்ப மருந்தைச் சாப்பிடும்போது உடல் தூய்மை மட்டுமில்லாமல் உள்ளத் தூய்மையும் சாப்பிடும் மருந்தில் நம்பிக்கையும் இருத்தல் வேண்டும். பொதுவாகவே மருத்துவரிடம் செல்லவும், மருந்துகளை எடுத்துக் கொள்ளவும் நல்ல நாள் பார்ப்பார்கள். இந்தக் காயகற்ப மருந்துகளுக்கும் அவ்வாறே நல்ல நாள் பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் சிறிதாக எடுத்துக் கொண்டு நாள் ஆக, ஆக அதிகரிக்க வேண்டும். தொடர்ந்து ஒரு மண்டலம் 48 நாட்கள் சாப்பிட வேண்டும். இத்தகைய மருந்துகள் சாப்பிடும்போது அகத்திக்கீரை உண்ணக் கூடாது.
தூதுவளையும் இந்தியா முழுவதும் கிடைக்கும் கீரைகளில் ஒன்று. சிங்கவல்லி, அளர்க்கம் என்னும் பெயர்களிலும் அழைக்கப்படும். அநேகமாக வேலியோரச் செடியாகவே வளரும். இதில் முட்கள் காணப்படும். இதன் இலை, பூ, காய், வேர் எல்லாமும் மருத்துவ குணம் உள்ளது. முக்கியமாகச் சளி, ஜலதோஷத்துக்கு நல்ல மருந்து. தூதுவளை இலையுடன், துளசியும் சேர்த்துக் கஷாயம் வைத்துச் சாப்பிட்டால் தொண்டைக்கரகரப்பு, தொண்டை வலி, தொண்டைப்புண் ஆகியவற்றுக்கு நிவாரணம் கிடைக்கும். தூதுவளை இலையுடன் , மிளகு, சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி உப்பு சேர்த்துத் துவையல் அரைத்துச் சாதத்துடன் கலந்து சாப்பிடலாம். இடைவிடாத இருமல், இரைப்பு போன்றவற்றுக்கு இது நல்லது. ஆண்களுக்கு இது மிகுந்த சக்தியைக் கொடுக்கும். எலும்புக்கும் பற்களுக்கும் இது நன்மை பயக்கும் என்பதால் பருப்புடன் சேர்த்துச் சமைத்து நெய்யில் தாளிதம் செய்து சாப்பிடலாம். 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
இதன் பொடியையும் தொடர்ந்து தேனில் கலந்து சாப்பிட வேண்டும். இலையை அரைத்து அடை போல் செய்தும் சாப்பிடலாம். இதனால் இரைப்பு நோய்க்கு நிவாரணம் கிடைக்கும். மூக்கில் நீர் வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகள், சூலை நீர் ஆகியவற்றுக்கு இது சிறந்த மருந்தாகும். தூதுவளைக் காயைச் சமைக்கலாம். அல்லது வற்றலோ, ஊறுகாயோ போடலாம். கண்களுக்கு நல்லது. தூதுவளைப் பூவை உலர்த்திப்பொடியாக்கிப் பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும். பழத்தை வெயிலில் காய வைத்துப் பொடியாக்கித் தேன் கலந்து சாப்பிட்டால் மார்புச் சளி, இருமல் குணமாகும். விஷத்தை முறிக்கும். மலச்சிக்கல் நீங்கும். கீரை, வேர்,காய் இவற்றை வற்றலாகவோ ஊறுகாயாகவோ செய்து சாப்பிட்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும். இலையைக் குடிநீர் செய்து அருந்தி வரலாம்.
தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கும் என்கின்றனர். சித்த வைத்திய முறையில் தூதுவளையைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் நெய் மிகவும் சிறப்பானதாகக் கூறப்படுகிறது. தூதுவளை நெய்யை ஒரு தேக்கரண்டி அளவு தினமும் சாப்பிட்டு வந்தால் எலும்புருக்கி நோய், ஈளை நோய், கப நோய், மேக நோய், வெப்ப நோய், இரைப்பு, இருமல், வாய்வு, குண்டல வாய்வு போன்றவைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். தூதுவிளங்காயிலும் சத்துக்கள் இருப்பதால் அதையும் சமைத்துச் சாப்பிடலாம். பித்தத்திற்கு நல்லது.
தூதுவளை ரசம் செய்முறை: இதற்குச் சிலர் பூண்டு சேர்க்கின்றனர். பொதுவாக நான் பூண்டைக் குறைவாகவே பயன்படுத்துவதால் பூண்டு இல்லாமலேயே இங்கே கொடுக்கிறேன். நான்கு பேருக்கு!
தூதுவளை இலைகள் ஒரு கைப்பிடி அல்லது 50, 60 இலைகள்
மி.வத்தல் இரண்டு, மிளகு ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு ஒரு டீஸ்பூன், ஜீரகம்
பெருங்காயம் ஒரு துண்டு, மஞ்சள் பொடி அரை டீஸ்பூன்
புளி ஒரு சின்ன எலுமிச்சை அளவு (இதில் தக்காளி சேர்க்க வேண்டாம்)
உப்பு தேவையான அளவு
தாளிக்க நெய் ஒரு தேக்கரண்டி. கடுகு அரை டீஸ்பூன், மிவத்தல் பாதி, கருகப்பிலை, ஜீரகம்.
ஒரு வாணலியில் சமையல் எண்ணெய் ஊற்றிக் கொண்டு மி.வத்தல், துவரம்பருப்பு, மிளகு போட்டு, பெருங்காயமும் சேர்த்து வறுத்து எடுத்துத் தனியாக வைக்கவும்.அந்தச் சட்டியிலேயே தூது வளை இலைகளைப் போட்டு வதக்கவும். ஜீரகத்தை வறுக்க வேண்டாம். பச்சையாகச் சேர்த்து அரைக்கவும். ஆறியதும் மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும். அம்மி இருந்தால் நல்லது தான். ஆனால் இந்தக் காலத்தில் எங்கே போறது!
புளியைக் கரைத்து ஈயச் செம்பு அல்லது ஏதேனும் ஒரு பாத்திரத்தில் விட்டுத் தேவையான உப்புச் சேர்த்து மஞ்சள் பொடி போட்டுக் கொதிக்க வைக்கவும். புளி வாசனை போகக் கொதித்ததும் அரைத்த விழுதைப்போட்டுக்கொதி விடவும். மேலே நுரைத்து வரும்போது அடுப்பை அணைத்து விட்டுக் கீழே இறக்கி நெய்யில் கடுகு, ஜீரகம், மி.வத்தல், கருகப்பிலை போட்டுத் தாளிக்கவும்.


