எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, August 30, 2025

பாரம்பரியச் சமையல்கள் பாகம் மூன்று. தேங்காய்ச் சாதம்

 21ஆம் வருஷத்துக்குப் பின்னர் இங்கே வரவே இல்லை. அதுக்கப்புறமா எத்தனையோ நடந்து விட்டது. தம்பியின் சின்னப்பிள்ளை கல்யாணத்துக்குப் போன பின்னர் 22 ஆம் வருஷத்தில் எங்கேயும் போகலை. 23 ஆம் வருஷம் தான் சொந்தக்காரங்க கல்யாணம் ஸ்ரீரங்கத்திலேயே நடந்தது. பின்னர் உடனே சென்னை போனோம். ஒரு -ஹோமத்தில் கலந்து கொள்ள. முதல்நாள் கிளம்பிப் போயிட்டு லாட்ஜில் தங்கிட்டுப் பின்னர் ஹோமத்தை முடித்துக் கொண்டு உடனே திரும்பினோம். அதன் பின்னர் எங்கேயுமே போகலை. நவராத்திரி, தீபாவளினு ஆச்சு. கார்த்திகையின் போது தான் திடீரென ரங்க்ஸ் உடம்பு ரொம்ப முடியாமல் படுத்துண்டார். பெயருக்குப் பொரி பண்ணி விளக்கேற்றினேன். இரண்டு நாளைக்கெல்லாம் அவரை மருத்துவமனையில் சேர்த்தாச்சு. அதன் பின்னர் எல்லாம் தலைகீழ் மாற்றங்கள். க்ணினியையே தொடலை. யாருடைய பதிவுக்கும் போகலை. யாருடைய பதிவையும் படிக்காததோடு நானும் எதுவும் எழுதலை. மனசு பதியலை. இப்போத் தான் சில நாட்களாக எழுதலாமா என ஆரம்பிச்சிருக்கேன். இந்தப் பக்கத்தில் பாரம்பரியச் சமையல் எழுதி இரண்டு பாகம் கின்டிலில் வெளியிட்டாச்சு. மூன்றாம் பாகமாகப் பிசைந்த சாதம், சில குறிப்பிட்ட சமையல் வகைகள்னு எழுத எண்ணம். அதான் இங்கே வந்து இன்னிக்கு ஆரம்பிச்சிருக்கேன்.


இன்னிக்குப் பிசைந்த சாதங்கள் வகைகளிலே தேங்காய்ச் சாதம் பற்றிய எளிய குறிப்புக் கொடுக்கிறேன். சிலர் பல்வகை உணவு வகைகள் (வெரைட்டி ரைஸ்) எனச் சொல்கின்றனர். சிலர் கலந்த சாதம் என்கின்றனர். எங்க வீட்டில் பிசைந்த சாதம்னே சொல்லிப் பழக்கம். இப்போ முதலில் தேங்காய்ச் சாதம்.

தேவையான பொருட்கள்:

நல்ல தேங்காயாக ஒன்று. நடுத்தரமான அளவில் போதும். அதோடு தேங்காய் ரொம்ப முற்றாமல் இருத்தலும் நல்லது. எத்தனை பேர் சாப்பிடுகிறார்கள் என்பதற்கேற்பத் தேங்காயைத் துருவிக் கொள்ளலாம். நான்கு பேருக்கு மேல் எனில் ஒரு முழுத் தேங்காயையும் பூப் போலத் துருவி எடுத்துக் கொள்ளவும். சாதம் நன்கு பொல பொலவென வரும்படி வடித்து ஆற வைத்துக் கொள்ளவும். தேவையான உப்புச் சேர்த்துக் கொண்டு இரண்டு டீஸ்பூன் சர்க்கரையும் சேர்க்கவும். சர்க்கரை சேர்ப்பதால் தேங்காய்ச் சாதத்தின் மணமும் ருசியும் அதிகம் ஆகும்.

இனி தாளிக்கும் பொருட்கள்:

தாளிக்கத் தேங்காய் எண்ணெயே பயன்படுத்தவும். ஒரு சின்னக்கிண்ணம் அல்லது இரண்டு மேஜைக்கரண்டி தேங்காய் எண்ணெய்.

கடுகு இரண்டு டீஸ்பூன், உ.பருப்பு இரண்டு டீஸ்பூன், கடலைப்பருப்பு 2 டீஸ்பூன், வேர்க்கடலை அல்லது முந்திரிப்பருப்பு இரண்டு மேஜைக்கரண்டி., பச்சை மிளகாய் இரண்டு, , கருகப்பிலை புதியதாக ஒரு சின்னக் கொத்து, பெருங்காயப்பொடி ஒரு டீஸ்பூன்.

வாணலியில் எண்ணெயைக் காயவைத்துக் கொண்டு முதலில் வேர்க்கடலை அல்லது முந்திரிப்பருப்பைச் சிவக்க வறுத்துக் கொண்டு தனியே எடுத்து வைக்கவும்.. பின்னர் கடுகு தாளித்துப் பொரிந்ததும் உ.பருப்பு, கடலைப்பருப்பைச் சேர்க்கவும். அவை சிவந்ததும் பச்சை மிளகாய், கருகப்பிலை போட்டுப் பொரித்துக் கொண்டு துருவிய தேங்காய்த் துருவலைச் சேர்க்கவும். பெருங்காயப் பொடி சேர்க்கவும். ரொம்பச் சிவக்க வறுக்காமல் சிறிது நேரம் தேங்காய்த் துருவலைப் போட்டுப் புரட்டி எடுத்துக் கொண்டு வறுத்த வேர்க்கடலை, முபருப்பைச் சேர்க்கவும். கவனமாக அரைத் தேக்கரண்டி உப்புச் சேர்க்கவும். சாத்தத்தில் தேவையான உப்பு இருப்பதால் கவனமாகச் சேர்க்கவும். பின்னர் சாதத்தைத் தட்டில் பரப்பி அதன் மேல் கலவையைக் கொட்டி இரண்டு டீஸ்பூன் நெய்யை விட்டுச் சாதத்துடன் நன்கு கலக்கவும். நன்றாகக் கலந்து விட்டுப் பின்னர் சிறிது நேரம் கழித்து நிவேதனம் செய்வதானால் செய்த பின்னர் பரிமாறவும். இதற்கு மோர்க்குழம்பு நன்றாக இருக்கும்.

இங்கே (தோஹாவில்) நான் சமைப்பதில்லை என்பதாலும், பிசைந்த சாத வகைகள் இங்கே அவ்வளவாகப் பண்ணுவதில்லை என்பதாலும் படங்கள் போடுவது கஷ்டம். பின்னால் புத்தகம் வெளியிடும்போது எங்கே இருந்தாவது எடுத்துப் போடணும். பார்க்கலாம்.

2 comments:

  1. தேங்காய் பிசைந்த சாதம்..... சுவையான குறிப்பு.

    விரைவில் நூல் வெளியிட வாழ்த்துகள்....

    ReplyDelete
  2. ​சனிக்கிழமைகளில் இது போன்ற கலந்த சாதங்கள் தான் செய்யும் வழக்கம். நேற்று புளியோதரை, தேங்காய் சாதம், தயிர் சாதம் செய்து, தொட்டுக்கொள்ள அப்பளம், ஊறுகாய், வாழைப்பூ வடை வைத்து சாப்பிட்டோம். கலந்த சாதங்கள் பட்டியலில் சாம்பார் சாதம், தக்காளி சாதம், வெஜிடபிள் புலவு, எலுமிச்சம் சாதம், பிரைட் ரைஸ், போன்றவையும் செய்யப்படும்.

    Jayakumar

    ReplyDelete