எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, May 12, 2018

உணவே மருந்து! புதினா! 3

புதினா சாதம்!

பெரும்பாலும் தென்னிந்தியாவில் புதினாவைத் துவையலாக அரைத்துவிட்டுச் சூடான சாதத்தில் நல்லெண்ணெய் ஊற்றித் துவையலைப் போட்டுக் கலந்து வைப்பார்கள். அதுவும் ஒரு வகைப் புதினா சாதம் தான். ஆனால் இங்கே கொஞ்சம் மாறுதலாக மசாலா சாமான்கள் போட்டுப் புலவு போல் தயாரிக்கப் போகிறோம்.

தேவையான பொருட்கள்: ஒரு கட்டுப் புதினா! இது மட்டும் போதும் எனில் புதினாவோடு நிறுத்திக்கலாம். ஒரு சிலர் பச்சைக் கொத்துமல்லியும் சேர்ப்பாங்க! அது அவரவர் விருப்பம்.
பச்சை மிளகாய் 4 இஞ்சி ஒரு துண்டு. தேங்காய் வைப்பதெனில் வெங்காயம் வேண்டாம். வெங்காயத்தை வதக்கிச் சேர்க்கலாம். பூண்டு பிடிக்குமெனில் இதோடு பூண்டும் சேர்க்கலாம். நான் பூண்டு சேர்ப்பது இல்லை.

ஆகவே பச்சை மிளகாய், தேங்காய்,இஞ்சி ஆகியவற்றோடுப் புதினாவையும் சேர்த்து அரைக்கவும். தனியாக வைக்கவும்.  வெங்காயம் சேர்ப்பது அரைத்தும் சேர்க்கலாம், வதக்கியும் சேர்க்கலாம். நான் வதக்கியே சேர்ப்பேன்.

ஒரு கிண்ணம் பாஸ்மதி அரிசி அல்லது சாதாரண அரிசி! சமைத்தும் வைத்துக்கொள்ளலாம்.

தாளிக்க

நெய், அல்லது வெண்ணெய் அல்லது ஏதேனும் சமையல் எண்ணெய்

கிராம்பு ஒன்று, பச்சை ஏலக்காய் ஒன்று கருப்பு ஏலக்காய் ஒன்று, மசாலா இலை(தேஜ் பத்தா) சோம்பு அரை டீஸ்பூன், ஜீரகம் அரை டீஸ்பூன், லவங்கப்பட்டை ஒரு துண்டு

உப்பு தேவையான அளவு. வெங்காயம் ஒன்று பொடியாக நறுக்கியது! (தேவையானால்)

இது பச்சையாகவே இருக்கணும்னா மஞ்சள் பொடி வேண்டாம். மி.பொடி, தனியாப் பொடி  எதுவும் வேண்டாம். காரத்துக்குப் பச்சை மிளகாயும், இஞ்சியும் போதும். அவரவர் காரத்துக்கு ஏற்பச் சரி செய்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றித் தாளிக்கும் பொருட்களை ஒவ்வொன்றாகப் போட்டுத் தாளித்து வெங்காயம் சேர்ப்பதெனில் அதையும் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும், அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும். எண்ணெய் பிரிந்து வரும் சமயம் களைந்து வைத்த அரிசியைப் போட்டு நன்கு கலக்கவும். உப்புச் சேர்க்கவும். பக்கத்தில் ஓர் பாத்திரத்தில் வெந்நீரைக் கொதிக்க வைத்துத் தயாராக வைத்திருக்கவும். ஒரு கிண்ணம் அரிசிக்கு ஒன்றரைக் கிண்ணம் வெந்நீர் சேர்க்கவும். உப்புச் சேர்க்கவும். ஒரு கனமான மூடியால் மூடி வைக்கவும். அடிக்கடி திறந்து பார்த்துக் கிளறிக் கொடுக்கவும்.

சமைத்த சாதம் எனில் விழுதைப் போட்டு எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு சமைத்த சாதத்தைப் போட்டு நன்கு கிளறவும். தேவையான உப்பைச் சேர்க்கவும். சாதம் உடையாமல் கலக்க வேண்டும். பின்னர் விரும்பினால் பச்சைக் கொத்துமல்லி, பொடியாக நறுக்கிய காரட் துருவல் தூவி வெங்காயப் பச்சடியோடு பரிமாறவும்.

6 comments:

  1. இதை நாங்கள் அவ்வப்போது செய்திருக்கிறோம். ஒரு திருமணத்தில் இதை சுவைத்த பிறகு சில நாட்களுக்கு இதன்மேல் ஒரு ஆர்வம் இருந்தது. சமீபத்தில் செய்யவில்லை!!

    ReplyDelete
    Replies
    1. இங்கே போணி ஆகாது. புதினா ரங்க்ஸுக்கு அலர்ஜி! :)

      Delete
  2. புதினா எனக்கு சுத்தமா பிடிக்காது என்றாலும் என்னதான் சொல்றீங்கன்னு வந்து பார்த்தேன். புதினாவுக்குப் பதில் கொத்தமல்லி போட்டு செய்தால் நல்லா இருக்குமோ?

    ReplyDelete
    Replies
    1. கிட்டத்தட்ட இதே முறையில் கொத்துமல்லி சாதமும் செய்யலாம் நெ.த.

      Delete
  3. ஆனா, நிச்சயம் என் மனைவிக்கும், என் பசங்களுக்கும் இது பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. புதினா உடம்புக்கு ரொம்ப நல்லது. முக்கியமா அஜீரணம் குணமாகும். :) பலருக்கும் அதன் வாசனை பிடிப்பதில்லை.

      Delete