எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, May 1, 2018

உணவே மருந்து! பாலக் பனீர்! 2

பாலக் பனீர் இன்னொரு முறையில் செய்வது பற்றிச் சொல்லி இருந்தேன் அல்லவா? அதற்கு ஒரு கட்டுப் பாலக்கீரை அல்லது வேறு கீரையை நன்கு அலசிக் கழுவிப் பொடியாக நறுக்கிக் கொண்டு ஒரு அடி கனமான பாத்திரத்தில் நீர் விட்டு மூடி போடாமல் வேக வைக்க வேண்டும். கீரை நன்கு வெந்து வரும்போது கீரை மத்தால் மசிக்கவும். உப்பு இப்போது சேர்த்தால் அதை நினைவில் வைத்துக் கொள்ளவும். இப்போது மற்றப் பொருட்கள் தயாராகணும்.

வெங்காயம் பெரிது ஒன்று பொடிப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
தக்காளி பெரிதாக ஒன்று பொடியாக நறுக்கவும்.
பச்சை மிளகாய், இஞ்சி நறுக்கவும். அல்லது மிக்சியில் போட்டு ஒன்றிரண்டாகச் சிதைக்கவும்.
மிளகாய்ப் பொடி அரை டீஸ்பூன், தனியா பொடி ஒரு டீஸ்பூன், கரம் மசாலா கால் டீ ஸ்பூன்,உப்பு தேவையான அளவுக்கு. கசூரி மேதி அரை டீஸ்பூன். ஆம்சூர் பொடி அரை டீஸ்பூன்
தாளிக்க
ஜீரகம், சோம்பு, லவங்கப்பட்டை, ஒரு கிராம்பு (அதிகமானால் காரம் தெரியும்) ஏலக்காய் ஒன்று, ஒரு டீஸ்பூன் சர்க்கரை

தாளிக்க எண்ணெய் அல்லது வெண்ணெய் (க்ரீம் இருந்தால் கடைசியில் நன்கு கலக்கி மேலே ஊற்றலாம்)
பனீர்த் துண்டுகள் தேவையான அளவுக்கு உப்பு ஜலத்தில் கழுவி நெய் அல்லது வெண்ணெயில் பொன் நிறத்தில் வறுத்துத் தனியாக வைக்கவும்.

இப்போது கடாயில் எண்ணெய் அல்லது வெண்ணெய் போட்டுத் தாளிக்கும் பொருட்களைத் தாளிக்கவும். பின்னர் பச்சை மிளகாய், இஞ்சி கலவையைப் போட்டுக் கலந்து கொண்டேவெங்காயத்தைச் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் சீக்கிரம் வதங்குவதற்கு சர்க்கரையைச் சேர்க்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து வதக்கித் தக்காளி நன்கு வெந்தவுடன், மி.பொடி, தனியாப் பொடி, உப்பு தேவைக்குச் சேர்க்கவும். இப்போது நன்கு கலந்து விட்டு மசித்த கீரையைச் சேர்க்கவும். கீரையில் உப்புப் போட்டிருந்தால் இப்போது போடாதீர்கள். கீரையோடு மற்றப் பொருட்கள் ஒன்றாய்க் கலந்ததும் தண்ணீர் தேவையானால் சேர்க்கவும். நன்கு கொதிக்கட்டும். கீழே இறக்கும் முன்னர் கசூரி மேதி, அம்சூர் பவுடர் சேர்த்து கரம் மசாலாவும் சேர்க்கவும். நன்கு கிளறவும். கீழே இறக்கியதும் வறுத்த பனீர்த் துண்டங்களைச் சேர்த்துக் கிளறி விட்டு மேலே புதுசாக எடுத்த க்ரீமால் அலங்கரிக்கவும்.

6 comments:

  1. இந்த முறையும் நல்லாத்தான் இருக்கு. வாய்ப்பு கிடைக்கும்போது செய்துபார்க்கிறேன். இப்போ இங்கு ஃபிரிட்ஜ் இல்லை. அதனால் இங்கு செய்யச் சொல்ல முடியாது. ஆனாலும் செய்முறை யம்மி

    ReplyDelete
    Replies
    1. நான் பெரும்பாலும் முதல்முறையில் செய்வதில்லை. நிறைய ஆகி விடும். :)

      Delete
  2. படித்தேன். பாலக் வாங்குவதே இல்லை என்பதால் நான் எங்கே செய்யப் போகிறேன்? பசளைக் கீரை கேட்டுக் கொண்டிருக்கிறேன்.. எங்கள் கடைக்காரர் இதோ... அதோ... என்று போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறார். இன்று கூட முளைக்கீரைதான் கொடுத்தார்.
    ம்ம்ம்ம்ம்ம்...

    ReplyDelete
    Replies
    1. எந்தக்கீரையானாலும் செய்யலாம்! பெரும்பாலும் முளைக்கீரை அல்லது அரைக்கீரை காலை மசித்தது மிஞ்சினால் சாயந்திரம் சப்பாத்திக்கு இதான் தொட்டுக்க! :)

      Delete
  3. நல்ல குறிப்பு. இந்த க்ரீம் அலங்காரம் எல்லாம் செய்வதில்லை வீட்டில் செய்யும்போது.

    ReplyDelete
  4. வாங்க வெங்கட், என்னிடம் நல்ல பால் இருக்கும் ஆதலால் அநேகமாய் அதைச் சேர்ப்பேன். அல்லது க்ரீம்!

    ReplyDelete