எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, February 3, 2016

உணவே மருந்து-- மிளகு குழம்பும், மிளகு, ஜீரகம் ரசமும்!

அடுத்து மிளகு குழம்பு செய்முறை:--

ஒரு பெரிய எலுமிச்சை அளவுக்குப் புளியை நீரில் ஊறவைத்துக் கரைத்து எடுத்துக்கொள்ளவும்.  இதற்கு வறுத்து அரைக்க

மிளகாய் வற்றல் ஆறு அல்லது எட்டு(நான் மிளகே அதிகம் சேர்ப்பேன்;  அதோடு மிளகுக் காரத்தைத் தணிக்க என சீரகமோ, கொ.மல்லியோ சேர்ப்பதில்லை.  கொஞ்சம் மிளகு காரம் நாக்கில் தெரியணும்) பெருங்காயம், மிளகு ஒரு டேபிள் ஸ்பூன், இவ்வளவு காரம் வேண்டாம் என்பவர்கள் இரண்டு டீஸ்பூன் எடுத்துக்கொள்ளலாம்.  ஒரு டேபிள் ஸ்பூன் உ.பருப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் து.பருப்பு, கருகப்பிலை ஒரு டேபிள் ஸ்பூன்.  எல்லாப் பொருட்களையும் நல்லெண்ணெயில் நன்கு வறுத்துக்கொள்ளவும்  ஆற வைக்கவும்.  பின்னர் நன்கு நைசாக அரைத்துக்கொண்டு புளிக்கரைசலில் கலந்து கொள்ளவும்.

தாளிக்க: கடுகு, நல்லெண்ணெய், மஞ்சள் பொடி, தேவையான உப்பு குழம்பில் சேர்க்க.

கல்சட்டி அல்லது உருளியில் நல்லெண்ணெயைக் காய வைத்துக் கடுகு போடவும்.  வெடித்ததும், மஞ்சள் பொடி சேர்த்துவிட்டுக் கரைத்து வைத்துள்ள புளிக்கலவையை மெதுவாக ஊற்றவும்.  தேவையான உப்புச் சேர்க்கவும். நன்கு கொதிக்க விடவும்.  குழம்பு கெட்டியாகி, எண்ணெய் பிரிந்து வர ஆரம்பிக்கையில் கீழே இறக்கவும்.  சூடான சாதத்தில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றிக் குழம்பைக் கலந்து சாப்பிடலாம்.  நன்கு கொதித்த குழம்பு ஒரு மாதம் ஆனாலும் கெட்டுப் போகாது.

அடுத்ததாக ஒரு ரசம். மிளகு குழம்பு மற்றும் இந்த ரசம் ஏற்கெனவே இதே வலைப்பக்கத்தில் வெளி வந்தவையே! :) எனினும் மிளகு பற்றிய பதிவுக்காக மீள் பதிவாய்ப் போட்டிருக்கேன்.

ஜீரகம், மிளகு வறுத்து அரைத்த ரசம்!

பொதுவாய் இம்மாதிரியான ரசங்களே பத்திய உணவு வகையைச் சேர்ந்தவை என்றாலும் இந்த ரசம் குறிப்பாக பேதி மருந்து உட்கொள்ளும் நாட்களில் சாப்பிடவோ அல்லது குடிக்கவோ கொடுப்பார்கள்.  முன்னெல்லாம் விளக்கெண்ணெய் கொடுத்து குடலைச் சுத்தம் செய்து வந்த நாட்கள் உண்டு.  காலையிலே விளக்கெண்ணெய் கொடுத்ததும் ஒரு மணி நேரம் கழிச்சுக் காஃபி கிடைக்காது.  மாறாக இந்த ரசம் தான் சூடாகக் குடிக்கக் கொடுப்பாங்க. மதியம் பனிரண்டு மணிக்குள்ளாகக் கழிவுகள் வயிற்றை விட்டு வெளியேறியதும் மீண்டும் இந்த ரசம் விட்டுக் கொஞ்சம் போல் குழைவான சாதம் போட்டுக் கரைத்துக் கொடுத்துக் குடிக்கச் சொல்வாங்க.  அதுக்கப்புறமா மூணு மணி அளவில் வெயிலில் வைத்து எடுத்த நீரில் குளிக்கச் சொல்லிட்டு கெட்டியாக மோர் சாதம், அல்லது தயிர் சாதம் போடுவாங்க.  தொட்டுக்க மூச்ச்ச்ச்!! அப்போ அந்த சாதமே தேவாமிர்தமா இருக்கும்.  ராத்திரிக்கு 2 அல்லது மூணு இட்லிகள் அதே தயிரோடு சாப்பிடணும்.  மறுநாளைக்கும் உடனடியாக வெங்காய சாம்பாரோடு, உ.கி.கறி வெளுத்துக் கட்ட முடியாது.  எளிமையான சாப்பாடாக பருப்பே இல்லாமல் சமைச்சிருப்பாங்க.  அதைத் தான் சாப்பிடணும்.  அதுக்கப்புறமாத் தான் கொஞ்சம் கொஞ்சமாகப் பருப்பு சேர்த்துப் பின்னர் எண்ணெயில் வதக்கின காய்கள், தேங்காய் சேர்த்தவை எனச் சேர்ப்பார்கள்.  இப்போல்லாம் பேதி மருந்துன்னா என்னன்னே பலருக்கும் தெரியாது. ஆனாலும் இந்த ரசம் வைச்சுக் குடிக்கலாம்.  கொஞ்சம் வயிறு சொன்னபடி கேட்டுக்கும். :)))




நான்கு பேர்களுக்கான பொருட்கள்:

சின்ன எலுமிச்சை அளவு புளி(பழைய புளி நல்லது. அதையும் தணலில்(ஹிஹிஹி, கரி அடுப்பில் கரியைப் போட்டுப் பிடிக்க வைச்சால் வருமே அதுக்குப் பேர் தணல்) சுட்டுக்கலாம்.  இல்லையா இரும்புச் சட்டியில் போட்டுப் பிரட்டிக்குங்க.  நீரில் ஊற வைச்சுக் கரைச்சு எடுத்துக்குங்க.  இரண்டு கிண்ணம் தேவை.  ரசம் குடிக்கக் கொடுக்கணுமே, நிறைய வேண்டும்.

மிளகாய் வற்றல் 2

மிளகு இரண்டு டீஸ்பூன்

ஜீரகம் இரண்டு டீஸ்பூன்

கருகப்பிலை ஒருகைப்பிடி

பெருங்காயம்(தேவையானால், ஒரு சிலர் ஜீரகம் போட்டால் பெருங்காயம் போட மாட்டாங்க)

தக்காளி (தேவையானால்) சின்னது ஒண்ணு

மஞ்சள் பொடி

உப்பு தேவைக்கு

தாளிக்கக் கடுகு, கருகப்பிலை

வறுக்க தாளிக்க எண்ணெய் இரண்டு டீஸ்பூன்

முதலில் மிளகாய் வற்றல், பெருங்காயம், மிளகு, ஜீரகம் போன்றவற்றை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.  அதை எடுத்து ஆற வைத்துவிட்டு அந்தச் சட்டியிலேயே கருகப்பிலையைப் போட்டுப் பிரட்டிக் கொள்ளவும். அதையும் ஆற வைக்கவும்.

கரைச்சு வைச்ச புளி ஜலத்தைப் பாத்திரத்தில் விட்டுக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி சேர்த்துத் தேவையானால் தக்காளியையும் போட்டுக் கொதிக்க விடவும்.  ஆற வைத்த வறுத்த சாமான்களை நன்கு அரைக்கவும்.  ரொம்பக் கொரகொரப்பும் வேண்டாம்.  அதே சமயம் நைசாகவும் இருக்க வேண்டாம்.  அரைத்த விழுதில் இரண்டு கிண்ணம் நீரை விட்டுக் கரைத்துக் கொள்ளவும்.  புளி வாசனை போகக் கொதித்த ரசத்தில் இந்த விழுது கரைத்த நீரை விட்டு விளாவவும்.  மேலே நுரைத்து வருகையில் அடுப்பை அணைத்துவிட்டு நெய்யில் அல்லது எண்ணெயில் கடுகு தாளித்துக் கருகப்பிலை போடவும். ரசம் ருசி பார்த்துக் கொண்டு தேவையானால் ரொம்பக் கெட்டியாக இருந்தால் நீர் இன்னும் கொஞ்சம் சேர்த்து விளாவலாம்.  ஆனால் பெரும்பாலும் இந்த அளவில் ரசம் கெட்டியாக வராது.  நீர்க்கவே வரும்.

 

7 comments:

  1. மிளகு குழம்பில் பூண்டு சேர்த்தும் செய்வார்கள். எங்கள் வீட்டில் சேர்த்தும், சேர்க்காமலும் இரண்டு முறையாகவும் செய்வோம். என் அம்மா பூண்டு சேர்ப்பதை கடைசி நேரத்தில் வைத்துக் கொண்டு, பூண்டு சாப்பிடாதவர்களுக்கு எடுத்து வைத்து விட்டுஅப்புறம் சேர்ப்பார்கள்.

    ரசத்துக்கு புளியை எதற்கு சுட்டுக் கொள்ளவேண்டும்? என்ன பலன் அதனால்?

    ReplyDelete
    Replies
    1. புளியில் உள்ள அமிலத் தன்மையைக் குறைக்கத் தணலில் சுடுவார்கள். அதிலும் பிரசவம் ஆன பெண்களின் பத்தியச் சமையலுக்கு நிச்சயமாகச் சுட்ட புளிதான்!

      Delete
    2. பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து மிளகு குழம்பு செய்து பிரசவம் ஆன பெண்களுக்குப் பத்தியம் போடுவது உண்டு. ஆனால் இந்தக் குழம்பை மறு நாள் வரை வைத்திருக்க முடியாது. அன்றே செலவு செய்யணும்.

      Delete
  2. மிளகுக் குழம்பு எனக்கு மிகவும் பிடித்தது....

    ReplyDelete
    Replies
    1. எங்க வீட்டிலும் அடிக்கடி உண்டு.

      Delete
  3. கண் நிறையப் படைத்து உள்ளம் நிறையக் குடித்துவிட்டேன்,. நன்றி கீதாமா.

    ReplyDelete