எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Thursday, May 1, 2014

ஃபலூடா சாப்பிட வாங்க!

மாங்கொட்டைக் குழம்பு யாருக்கும் பிடிக்கலை போல. பத்தியக் குழம்பு இல்ல, அதான்! போகட்டும். முந்தா நாள் உறவினர் வருகைக்கு மசால் தோசையும், ஃபலூடாவும் செய்தேன்.  மசால் தோசை பத்திச் சொல்ல வேண்டாம். :)  ஃபலூடா தமிழ்நாட்டில் தெரியுமானு புரியலை.  வட மாநிலங்களில் குறிப்பாய் மஹாராஷ்ட்ரா, குஜராத், ராஜஸ்தானில் பிரபலமானது. இதைக் கடைகளில் கொடுக்கையில் அது கொஞ்சம் மாறுபடும். வீடுகளில் செய்வது வேறே மாதிரி.  அஜ்மேரில் சில கடைகளில் கூட வீட்டில் செய்யும் ஃபலூடா மாதிரியே தருவாங்க.  இப்போ வீட்டில் செய்யும் முறை பார்ப்போம். கொஞ்சம் நேரம் எடுக்கும்.  அலுத்துக்காமல் செய்யணும். :)

முதலில் கேக் தயாரிப்பு. இதற்கு ப்ளம் கேக் , பாதாம், பிஸ்தா, முந்திரி போட்டது நல்லா இருக்கும்.  முன்னெல்லாம் வீட்டிலேயே கேக் செய்திருக்கேன்.  இப்போ அவன் இல்லை.  தானம் கொடுத்தாச்சு.  ஆகவே வாங்கறது தான்.  ப்ளம் கேக்  ஒரு முழு கேக் வாங்கிக்கலாம்.  விலை ஜாஸ்தினு நினைப்பவர்கள் ஒரு துண்டு இருபது ரூபாய்னு விற்கும் கேக் துண்டுகள் நான்கு வாங்கிக்குங்க.  அதிலே மேலே க்ரீம், சாக்லேட் சாஸ் ஊற்றித் தயாரித்திருப்பார்கள். அதுவும் நல்லாவே இருக்கும்.  நேத்திக்கு நாங்க இந்தத் துண்டு கேக்  4 துண்டுகள் வாங்கினோம்.


அடுத்து சேமியா தயாரிப்பு.  கடைகளில் ஃபலூடாவுக்கெனத் தனியா விற்கும். அதை வாங்கிச் சேர்ப்பாங்க.  நாமதான் அப்படி எல்லாம் இல்லையே.  நல்ல எம்டிஆர் சேமியா அல்லது பொம்பினோ சேமியா (இது இரண்டு தான் குழையாது.  தனித்தனியாக வரும்) நெய்யில் வறுத்துக் கொண்டு, பாலில் வேக வைக்கவும்.   நான்கு நபர்களுக்குத் தேவையான சேமியா இரண்டு குழிக்கரண்டி அல்லது ஒரு கிண்ணம். சேமியா நன்கு வெந்து கெட்டிப்பட்டதும், நெய்யில் பாதாம் பருப்பு, பிஸ்தாப்பருப்பு, முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் ஆகியவற்றை வறுத்துச் சேர்த்து ஏலக்காய், குங்குமப் பூ, பச்சைக்கற்பூரம்(பிடித்தால்) சேர்க்கவும்.  தனியாக ஆற வைக்கவும்.

அடுத்துக்  கஸ்டர்ட் தயாரிப்பு.   இதற்கு அரை லிட்டர் பால் தேவை.  காய்ச்சி ஆற வைக்கவும். வனிலா கஸ்டர்ட் பவுடர் வாங்கவும்.  ஒரு டேபிள் ஸ்பூன் கஸ்டர்ட் பவுடரைக் காய்ச்சி ஆற வைத்த பாலில் ஒரு கிண்ணம் எடுத்துக் கொண்டு நன்றாகக் கலக்கவும்.  கலந்ததை மீதம் உள்ள பாலில் விட்டு அடுப்பில் மீண்டும் வைத்து, குறைவான தீயில் கொதிக்க விடவும்.  கை விடாமல் கிளற வேண்டும்.  ஒரு டேபிள் ஸ்பூன் சர்க்கரை, இரண்டு டீ ஸ்பூன் வெண்ணை சேர்த்துக் கிளறவும்.  கெட்டியாக வரும்போது இறக்கவும்.  ஆற வைக்கவும்.

அடுத்து ஜெல்லி தயாரிப்பு.  ஒரு பாக்கெட் ஸ்ட்ராபெரி ஜெல்லி அல்லது க்ரேப் ஜெல்லி பவுடர் வாங்கிக் கொள்ளவும்.  அரை லிட்டர் நீரைக் கொதிக்க வைத்து ஆற விடவும்.   ஆறிய நீரில் ஜெல்லிப் பவுடரைக் கொட்டிக் கிளறவும்.  ஒரு கண்ணாடிக் கிண்ணம் அல்லது டிசைன் போட்ட ஸ்டீல் கிண்ணம் இருந்தால் அதில் ஜெல்லியைக் கொட்டிக் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். ஜெல்லி கெட்டிப்படக் கொஞ்சம் நேரம் எடுக்கும்.  மேற்சொன்ன முறையிலோ அல்லது ஜெல்லிப் பவுடர் பாக்கெட்டில் போட்டிருக்கும் செய்முறைப்படி செய்யவும்.

அடுத்துப் பழங்கள்.  உங்க இஷ்டப்படி பழங்களை வாங்கி நறுக்கி வைங்க.  மாம்பழம் இதுக்கு வேண்டாம்.  மற்றபடி வாழைப்பழம், அன்னாசி, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, பேரிச்சை, திராக்ஷை, பப்பாளி  போன்ற பழங்கள் எல்லாமும் அல்லது இவற்றில் ஏதேனும் மூன்று, நான்கு பழங்கள் நறுக்கிக் கொண்டு மொத்தத்துக்கும்  அரை டீஸ்பூன் உப்பு, கால் டீஸ்பூன் மிளகுத் தூள், அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

அடுத்து உங்களுக்குப் பிடித்த ஃப்ளேவரில் ஐஸ்க்ரீம். அல்லது ஃபாமிலி பாக் வாங்கிக் கொள்ளவும்.  நேத்து அடிச்ச வெயிலில் ஐஸ்க்ரீம் வாங்கி வீட்டுக்குக் கொண்டு வரதுக்குள்ளே உருகிடும்னு ஐஸ்க்ரீம் வாங்கலை.  அதே போல் ஜெல்லி பவுடரும் இல்லை. அதனால் ஜெல்லியும் சேர்க்கலை.   இப்போக் கலக்கும் முறை.

மேற்சொன்னவற்றைச் செய்து ஆற வைத்துக் குளிர்சாதனப் பெட்டியிலேயே வைச்சிருங்க.  பழ சாலடையும் குளிர்சாதனப் பெட்டியிலேயே இருக்கட்டும்.
சாப்பிடும் நேரம் வெளியே எடுக்கணும்.

ஒரு நீண்ட கண்ணாடி தம்ளர் அல்லது வட்டமான வாயகன்ற கண்ணாடி பெளல் ஒவ்வொருத்தருக்கும் எடுத்துக்கொள்ளவும்.  சாப்பிடும் ஸ்பூனும் கொஞ்சம் நீளமாக இருத்தல் நலம்.  மர ஸ்பூன் விற்பாங்க, அதையும் பயன்படுத்திட்டுத் தூக்கி எறியலாம்.






ஃபலூடா சேர்க்கும் முறை:

முதலில் கேக் ஒரு துண்டு அடியில் வைக்கவும்.

அதன் மேல் சேமியா வெள்ளை வெளேர்னு இருக்கும். ப்ரவுன் நிறக் கேக்கின் மேல் வெள்ளை சேமியா தேவையான அளவு போடவும்.

அதன் மேல் சிவந்த நிற ஜெல்லி அல்லது க்ரேப் நிற ஜெல்லி

அதன் மேல் மஞ்சள் கஸ்டர்ட்

அதன் மேல் பழங்கள் தூவவும்.  தேவையான அளவுக்குப் பழங்கள் போடலாம்.

அதன் மேல் ஐஸ்க்ரீம் ஒரு ஸ்கூப்.

சாப்பிடும்போது ஸ்பூனால் அப்படியே அடி வரை குத்தி எடுத்துச் சாப்பிடணும். கலந்து சாப்பிட்டால் பிடிக்கும்னால் கலந்தும் சாப்பிடலாம்.   மேலே சொன்ன அளவில் ஒருத்தர் இருமுறைகள் ஃபலூடா சேர்த்துச் சாப்பிடலாம்.  கூடியவரை மர ஸ்பூனே நல்லது.


ஃபலூடா தேவையான பொருட்கள்

கேக் ப்ளம் கேக் அல்லது சாக்லேட் கேக் போன்ற ஏதானும் ஒன்று அல்லது துண்டாக்கப்பட்ட கேக் துண்டங்கள் நாலு அல்லது ஐந்து

சேமியா கேசரி போல் தயாரித்தது  200 கிராம் அளவு

கஸ்டர்ட் கலவை    அதே 200 கிராம் அளவுக்குத் தயாரித்தது

ஜெல்லி கலவை  ஒரு பாக்கெட் ஜெல்லிப் பவுடரின் அளவுக்குத் தயார் செய்தது


பழங்கள் ஆப்பிள் ஒன்று, ஆரஞ்சு ஒன்று, மாதுளை ஒன்று, வாழைப்பழம் மூன்று, பப்பாளி பாதி இவை இருந்தால் போதும்.  தேவை எனில் மற்றப் பழங்களையும் கொஞ்சம் கொஞ்சம் சேர்க்கலாம்.

உங்களுக்குப் பிடித்த ஃப்ளேவரில் ஐஸ்க்ரீம். நான் ஐஸ்க்ரீம் சேர்க்கவில்லை. 

நேத்திக்குப் பேச்சு மும்முரத்திலும், தொடர்ந்த தொலைபேசி அழைப்புகளினாலும் ஃபலூடா கலக்கும்போது படம் எடுக்க முடியலை.  :(

4 comments:

  1. படித்திருக்கிறேன். பார்த்திருக்கிறேன். சாப்பிட்டதில்லை! :))))

    ReplyDelete
  2. ம்ம்ம்ம் நீங்க வரச்சே ஒரு தரம் முயல்கிறேன். :)))

    ReplyDelete
  3. தில்லியில் நிறைய சாப்பிட்டிருக்கிறேன். வீட்டில் செய்ய கொஞ்சம் சோம்பல்! :) அதனால் கரோல் பாக் செல்லும்போது பல வருடங்களாக அங்கே இருக்கும் ஒரு கடையில் சாப்பிடுவது வழக்கம்!

    ReplyDelete
  4. ஜெல்லி ஜெலாட்டின் ங்கறதுனால நான் சேக்கறது இல்லை. Agar agar சுமாராத்தான் இருக்கு. இந்த ஊர்ல தயிர்ரையே பாத்துத்தான் வாங்கணும். அதுல சில சமயம் ஜெலாட்டின் கலந்திருக்கும் பாளையம்கோட்டை பஸ்ஸ்டாண்ட் ல முன்ன ஒரு கூல் ட்ரிங்க்ஸ் பார்னு ஒன்னு இருக்கும் .அதுல காசாட்டா, falooda சாப்பிட்டது எத்தனையோ வருஷம் முன்னால.அவர் ஜவ்வரிசி போடுவார். நன்னா இருக்கும் .இப்ப ஜவ்வரிசியைப் பத்தியும் புதுசா புரளியை கிளப்பறா. சரி! ஒண்ணுமே சாப்பிட வேண்டாம் தேமேன்னு .நல்லதுதான்

    ReplyDelete