எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, September 28, 2013

இன்னிக்கு வாழைக்காய்ப் பொடி! :))))

திடீர்னு குழம்பை விட்டுட்டுப் பொடியைப் பத்தி எழுதறேன்னு நினைச்சீங்களா? ஹாஹா, இன்னிக்கு வாழைக்காய்ப் பொடி செய்தேன். அப்புறமாத் தான் படம் எடுக்கலையேனு நினைச்சேன்.  அதனால் என்ன? இன்னொரு தரம் செய்யும்போது படம் எடுத்துடலாம்.  இப்போச் செய்முறை பார்ப்போமா?

நல்ல முத்தின வாழைக்காய் பெரிதாக இருந்தால் ஒன்று ,
நடுத்தர அளவு எனில் இரண்டு.

மி.வத்தல் 5 அல்லது ஆறு அவரவர் காரம் சாப்பிடும் வழக்கத்துக்கு ஏற்றாற்போல் குறைந்த பக்ஷம் 8 வரை.

உப்பு,

க.பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன்

உ.பருப்பு  இரண்டு டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் ஒரு துண்டு.


வறுக்க நல்லெண்ணெய் அல்லது சமையல் எண்ணெய் ஏதானும். ஒரு கரண்டி

வாழைக்காயை முன்பெல்லாம் குமுட்டி அடுப்பில் போட்டுச் சுடுவோம்.  சுட்டால் பொடி டேஸ்ட் தனி தான்.  இப்போக் குமுட்டி இருக்கு.  கரி இல்லை. :( ஆகவே வெந்நீரில் தான் போட்டேன்.  ஒரு அகன்ற பாத்திரத்தில் நீரை விட்டுக் கொதிக்க வைத்து.  வாழைக்காயை இரண்டாக வெட்டிப் போடவும்.  கொஞ்சம் சிரமம் பார்க்காமல் அங்கே இங்கே போகாமால் நீரில் போட்ட வாழைக்காயின் ஒரு பக்கம் கறுப்பாக ஆனதும் கறுப்பாக ஆகாத மறுபக்கம் திருப்பி விடவும்.  சீக்கிரமே கறுப்பாகிவிடும்.  உடனே எடுத்துவிடவேண்டும்.  வாழைக்காய் முழுதும் வேகக் கூடாது.  தோல் உரியும் வண்ணம் நிறம் மாறினால் போதுமானது.  இப்போது வாழைக்காயைத் தோலை உரிக்கவரும்.  தோல் உரித்துக் காரட் துருவலில் நன்கு துருவித் தனியாக வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு மி.வத்தல், பெருங்காயம், கடலைப்பருப்பு, உ.பருப்பு ஒவ்வொன்றாகப் போட்டு நன்கு சிவக்க வறுக்கவும்.  எடுத்து ஆற வைக்கவும்.  மிக்சி ஜாரில் மி.வத்தல், பெருங்காயம், உப்புச் சேர்த்து ஒரு தரம் சுற்றிவிட்டுப் பின்னர் கடலைப்பருப்பு, உ.பருப்புப் போட்டுச் சுற்றவும்.  இதுவும் ஒரே முறை சுற்றினால் போதும்.  இப்போது வாழைக்காய்த் துருவலைப் போட்டுச் சுற்றவும்.  ஒரே சுற்றுத் தான்.  வெளியே எடுத்து நன்கு கலக்கி வைக்கவும்.   சூடான சாதத்தோடு நல்லெண்ணெய் ஊற்றிப் பிசைந்து சாப்பிடவும், அல்லது சைட் டிஷாகத் தொட்டுக் கொள்ளவும் நன்றாக இருக்கும்.

டிடி கவனிக்க:  இதுவும் மோர் சாதத்துக்கு ஜூப்பரோ ஜூப்பரு! :)))

16 comments:

  1. இதெல்லாம் செய்ததே இல்லை... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, செய்து பாருங்க வித்தியாசமான சுவை. சைட் டிஷாகவும் பயன்படுத்திக்கலாம்.

      Delete
  2. நாங்கள் சிறிதளவு தேங்காயும் சேர்ப்போம்.
    உங்கள் முறையில் செய்துபார்கிறேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாதேவி, தேங்காய் சேர்த்து நாங்களும் வாழைக்காய்ப் பொடி செய்வோம். ஆனால் அதுக்குக் கடுகு, உ.பருப்பு. பச்சை மிளகாய், இஞ்சி, கருகப்பிலை தாளித்து உப்புச் சேர்த்து எலுமிச்சம்பழம் பிழிந்து தேங்காய்த் துருவல் சேர்ப்போம். :))))

      Delete
  3. குக்கரில் வேகவைத்து [ஒன்றிரண்டு விசில் வைத்து] செய்து பார்த்ததுண்டு. இப்படியும் செய்திட வேண்டியது தான்....

    இன்னிக்கு உங்களை/உங்களோட ஒரு பதிவு பத்தி என்னுடைய பக்கத்தில்! :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட்,

      நாங்க குக்கரிலே வேக வைக்க மாட்டோம். :)) ரொம்பக் குழைஞ்சுடும். அதுவும் இங்கே ஶ்ரீரங்கம் வாழைக்காய் கேட்கவே வேண்டாம். அடுப்பில் போட்டாலே வெந்துடும். :)))

      வந்து பார்க்கிறேன். மூணு நாளா வேலை, வெளியே போக வேண்டி இருந்தது. எந்தப் பதிவுமே சரியாப் பார்க்கலை. :))) இன்னிக்கு வருவேன். :)))

      Delete
  4. கொஞ்சம் கரியும் ஒரு குமுட்டி அடுப்பும் வீட்டில் வைத்துக் கொள்வது நலம். அப்பளம், கத்தரிக்காய் போன்றவை சுடவும் வசதியாக இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஶ்ரீராம், குமுட்டி இருக்கு. அதுவும் சுலபமா எடுக்கறாப்போல் தான் வைச்சிருக்கேன். கரி தான் வாங்கி வைச்சுக்கலை. :))) கத்தரிக்காயும் சுட்டுக் கொத்சு செய்தால் அதன் சுவை தனிதான். :))))

      Delete
  5. ம்.. ம்.. எனக்கு இது புதுசா இருக்கு.. செஞ்சி பார்க்கிறேன். நல்லா இருந்தா நானே சாப்பிட்டுடறேன். நல்லா இல்லைன்னா உங்க வீட்டுக்கு நான் செய்தது பார்சல் வரும்... ஜாக்கிரதை!

    ReplyDelete
    Replies
    1. வாங்க உஷா அன்பரசு, ஒழுங்காச் செய்யுங்க. :)) நல்லாவே வரும். முக்கியக் குறிப்பு வாழைக்காய் குழையக் கூடாது. :)))

      Delete
  6. இது பொடி போல வருமா தொகையல் போலவா?

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் பொடி, கொஞ்சம் துவையல் போல வரும் அப்பாதுரை. உதிர்த்தால் உதிரும்.

      Delete
  7. நான் வாழைக்காயை வேக வச்சு செய்வேன். இது வறுத்து செய்யுற மாதிரி இருக்கு. செஞ்சு பார்த்துட வேண்டியதுதான்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராஜி, இதுவும் வாழைக்காயை வேக வைச்சுச் செய்யும் முறை தான். :)))) கார சாமான்களை எண்ணெய் ஊற்றி வறுத்துக்கணும். அதைப் பொடி செய்துட்டு வெந்த வாழைக்காயைத் துருவிச் சேர்க்கணும்.

      Delete
  8. மிக்சியில் சுத்தற வாழைக்காய்ப் பொடி இப்பதான் தெரியும். அம்மியில்,சுட்ட வாழைக்காயை வைத்து குட்டி இரும்பு குழவியால் நசுக்கி ஆஜிப் பாட்டி செய்வார்.
    உங்க ரெசிப்பி மஹா சூப்பர். அதுவும் காவிரி வாழிக்கய்னால் கேக்கணுமா. நன்றி கீதாமா.

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் சேர்ந்துக்கும் வல்லி, இருந்தாலும் சுவை நல்லாத் தான் இருக்கும். செய்து பாருங்க. :))))

      Delete