எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, August 25, 2013

பறங்கிக் காய் சமையல்கள்!

பொதுவாகப் பறங்கிக் காயை சாம்பாரில் போட்டுத் தான் பார்ப்போம்!  இல்லையா?  ஆனால் அதைப் பொடிப் பொடியாக நறுக்கி அடையிலும் போடலாம்.  தேங்காய்க் கீற்றுப் போல் இருக்கும்.  என்ன ஒரு முக்கியமான குறிப்புன்னா, பச்சைப் பறங்கியாக இருக்கணும்.  சின்ன இளங்கொட்டையாக இருந்தால் இன்னும் நல்லது.  இங்கே இளங்கொட்டை கிடைக்குது.  வாங்கி அடைக்கும் போடுவோம்.  கூட்டுச் செய்வேன். சப்பாத்திக்கும், சாப்பாடுக்குத் தொட்டுக்கொள்ளவும் கூட்டுச் செய்வதுண்டு. சாப்பாட்டுக்குச் செய்வது கொஞ்சம் கேரள பாணி! ஹிஹிஹி, முன்னோர் ஜீன்ஸில் கொஞ்சம் இருக்கு போல!  அதான் சில சமயம் இப்படி திடீர் திடீர்னு கேரள பாணியெல்லாம் வரும். :))))))  இப்போ சாப்பாட்டுக்குச் செய்வது எப்படினு பார்ப்போம்.


மெட்ராஸ்காரங்களுக்குப் பச்சைப் பறங்கி கிடைப்பது கஷ்டம். கிடைச்சால் சரி.  இல்லைனா, சிவப்புப் பூஷணி எனப்படும் பறங்கியிலேயே செய்யலாம். வேறே வழி? :)))

நான்கு பேருக்குத் தேவையானவை:

பறங்கிக்காய் சின்னதான இளம்கொட்டை 1 அல்லது அரை கிலோ பறங்கிக் கீற்று.

மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்

உப்பு தேவைக்கு

பச்சை மிளகாய் 3

தேங்காய்  ஒரு மூடி

அரிசி மாவு ஒரு டேபிள் ஸ்பூன்

தே. எண்ணெய், கடுகு, கருகப்பிலை.


பறங்கிக்காய் கீற்றாக வாங்கினால் தோலை நீக்கி விட்டு(பச்சை என்றால் தோலோடு) நறுக்கிக் கொள்ளவும்.  கூட்டுக்கு நறுக்குவது போல் துண்டம் துண்டமாக நறுக்கணும்.  தேங்காயைத் துருவி அரைத்துப் பால் எடுத்து வைத்துக் கொள்ளவும்.  இரண்டு முறை எடுத்தாலே போதும். இப்போது அடுப்பில் கடாயை அல்லது உருளியை வைத்துப் பறங்கித் துண்டங்களை வேகப் போடவும்.  மஞ்சள் பொடி, உப்புச் சேர்க்கவும்.  பாதி வேகும்போது பச்சைமிளகாயை இரண்டாகக் கிள்ளி அதில் போடவும்.  நன்குசேர்ந்து தளதளவென்று வேகும்போது ஒரு கரண்டியால் மசிக்கவும். இரண்டாவது தேங்காய்ப் பாலைச் சேர்க்கவும்.  கொஞ்சம் கொதித்ததும், முதல் பாலில் அரிசிமாவைச் சேர்த்துக் கூட்டில் விட்டு ஒரே கொதி விட்டுக் கீழே இறக்கவும்.  தேங்காய் எண்ணெயில் கடுகு தாளித்து, கருகப்பிலை சேர்த்து, பிடித்தால் தேங்காய்ச் சக்கையையும் போட்டு வறுத்துக் கூட்டில் சேர்க்கவும்.  சாம்பார், வற்றல் குழம்பு சாதத்தோடு சாப்பிட அருமையான துணை இது.

அடுத்துப் பறங்கிக் காய்த் துவையல்:

பறங்கிக் காய் கால் கிலோ

மி.வத்தல் 6 அல்லது எட்டு(அவரவருக்குத் தேவையான காரத்துக்கு ஏற்றாற்போல்)

உப்பு, 

பெருங்காயம்

கடுகு, உளுத்தம்பருப்பு

வதக்க சமையல் எண்ணெய்.

புளி ஒரு சின்ன சுண்டைக்காய் அளவுக்கு நீரில் ஊற வைக்கவும்.


பறங்கிக்காயை நன்கு துருவிக் கொண்டு தனியாக வைக்கவும்.  அடுப்பில் வாணலியைப் போட்டு சமையல் எண்ணெய் ஊற்றவும்.  எண்ணெய் காய்ந்ததும், பெருங்காயத்தைப் பொரித்து எடுத்துக் கொண்டு தனியாக வைக்கவும்.  கடுகு, உளுத்தம்பருப்பைப் போட்டு வறுத்து எடுத்து தனியாக வைக்கவும். மிளகாய் வற்றல் நன்கு பொரியும்படி வறுக்கவும்.  தும்மல் வந்தால் தனி இடத்துக்கு வந்து தும்மிக் கொள்ளவும்.  இப்போது கடாயில் எண்ணெய் மிகுந்திருந்தால் அதிலே பறங்கிக்காய்த் துருவலையும் போட்டு வதக்கவும்.  எண்ணெய் போதவில்லை எனில் விட்டுக் கொள்ளவும்.  நன்கு சுருள வதக்கி ஆற வைக்கவும்.

மிக்சி ஜாரில் மி.வத்தல், பெருங்காயம், ஊற வைத்த புளி, உப்புச் சேர்த்து ஒரு சுற்றுச் சுற்றவும்.  பின்னர் வதக்கிய பறங்கித் துருவலைப் போட்டு அரைக்கவும்.  நன்கு அரைபட்டதும் எடுக்கும் முன்னர் கடுகு, உளுத்தம்பருப்பைப் போட்டு ஒரே சுற்று சுற்றவும்.  கடுகு, உ.பருப்பு நன்கு அரைபடக் கூடாது. ஒன்றிரண்டாக அரைக்கவும்.  சாதத்தில் பிசைந்து சாப்பிடத் தயார்.  தோசை, சப்பாத்திக்கும் தொட்டுக்கலாம்.  இனிப்பாக இருக்கும் என்பவர்களுக்கு!  தேங்காயில் இல்லாத இனிப்பா? தேங்காய்த் துவையல் போலத் தான் இதுவும்.  சாப்பிட்டுப் பாருங்கள்.  துவையல் சாதத்துக்குத் தொட்டுக்க மோர்ச்சாறு, எங்க வீட்டு முறையில்.


ரொம்பப் புளிப்பில்லாமல் அதே சமயம் கொஞ்சமானும் புளிச்சிருக்கும் கெட்டி மோர் ஒரு கிண்ணம். (தலையைப் பிச்சுக்கறீங்களா?  ஹிஹிஹி!) 

அரிசி மாவு இரண்டு டீஸ்பூன்

மஞ்சள் பொடி, 1/4 டீஸ்பூன்

உப்பு தேவைக்கு.

பெருங்காயப் பொடி

தாளிக்க

கடுகு, து.பருப்பு, வெந்தயம், மிவத்தல், கருகப்பிலை

எண்ணெய்.

மோரில் அரிசிமாவு, மஞ்சள் பொடி, உப்பு, பெருங்காயப் பொடி சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.  வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிக் கடுகு, துபருப்பு, வெந்தயம், மிவத்தல், கருகப்பிலை தாளிக்கவும்.  இப்போது கலந்த மோரை அதில் ஊற்றிவிட்டு உடனே அடுப்பை அணைக்கவும். உங்கள் மோர்ச்சாறு தயார்.  துவையல் எந்தத் துவையலாக இருந்தாலும் அதோடு துணைக்கு வரும். 

11 comments:

  1. ...ம்... நல்லது... செய்து பார்ப்போம்...

    ReplyDelete
    Replies
    1. செஞ்சு சாப்பிட்டுட்டுச் சொல்லுங்க டிடி. :)))

      Delete
  2. அருமையான செய்முறை. கட்டாயம் செய்து பாத்துடுறேன். ஒரு சின்ன விண்ணப்பம். பரங்கிக்காய் துருவலில் செய்யும் காசிஅல்வா செய்முறையும் கொடுத்துடுங்க ப்ளீஸ்.. ரொம்ப நாள் ஆசை இது.(முன்பே பதிவிட்டிருக்கிறீர்களா அம்மா?).

    ReplyDelete
    Replies
    1. வாங்க பார்வதி, காசி அல்வா, பறங்கியை விடப் பூஷணி(வெள்ளைப் பூஷணியில்) தான் செய்வாங்க. அதன் செய்முறையும் போடறேன்.

      Delete
  3. பரங்கிக்காய் பிஞ்சாக வாங்கி தித்திப்பு கூட்டு மட்டுமே பிடிக்கும். அதுவும் எப்போதாவது சாப்பிட்டால்! மற்றபடி பரங்கிக்காய் பிடிப்பதில்லை. நீங்கள் சொல்லியுள்ள ரெசிப்பி புதிதாக இருக்கிறது. பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பால் கூட்டு தான் அடுத்துப் போடப் போறேன் ஶ்ரீராம், வெல்லம் போட்டோ அல்லது சர்க்கரை போட்டோப் பண்ணலாம். :))) ஆனால் இவையும் செய்து பாருங்க. துவையல் மோர் சாதத்துக்கு சூப்பராக இருக்கும். :))))

      Delete
  4. பரங்கிக்காய் போட்டோ ஒண்ணு போடக்கூடாதோ? எப்படியிருக்கும்னு தெரிங்கிருக்குமே?! இதுவும் நாட்டுத்தக்காளி மாதிரி ஏதாவதா?

    ReplyDelete
    Replies
    1. அப்பாதுரை, நிஜம்மாத் தான் சொல்றீங்களா? உங்க அமெரிக்காவிலே தான் தாங்க்ஸ் கிவிங் டேக்கு(?) இது சிரிப்பாய்ச் சிரிக்குமே! இருந்தாலும் படமும் போட்டுட்டேன். :)))) நாட்டுத்தக்காளிக்கும், பெண்களூர் தக்காளிக்கும் தான் மரபணு மாற்றம் வித்தியாசம்னு சொன்னேனே. பெண்களூர் தக்காளியில் உருளைக்கிழங்கின் மரபணுக்கள் இணைக்கப்பட்டுள்ளன என்று படித்திருக்கிறேன். :))))

      Delete
  5. வர, வரச் சாப்பிட வரவங்க கூட்டம் அதிகமாயிட்டுப் போகுது. ஹிட் லிஸ்ட் எகிறுது! :)))) ஆச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சரியம் தான்!

    ReplyDelete
  6. பரங்கிக்காய் கூட்டு சாப்பிட்டதில்லை. எங்க வீட்டுல பரங்கிக்காயை என்னைத் தவிர சாப்பிடுவோர் யாரும் இல்லை... சாம்பாரில் போட்டால் வடிகட்டி சாப்பிடுவார்....:))

    தொகையல் அரைத்திருக்கிறேன். என் பக்கத்தில் பரங்கிக்காயில் பாயசமும், தொக்கும்....முடிந்தபோது பாருங்கோ மாமி.

    http://www.kovai2delhi.blogspot.in/2011/08/blog-post_13.html

    http://www.kovai2delhi.blogspot.in/2011/05/blog-post_25.html


    ReplyDelete
    Replies
    1. பறங்கிப் பாயசம் தெரியும் கோவை2 தில்லி. தொக்கு?? வந்து பார்க்கிறேன். சுட்டிக்கு நன்றி.:)) நான் எதுவும் போடாமலேயே ஹிட் லிஸ்ட் எகிறுது! :)))))திடீர்னு பிரபலமாயிட்டேன் போல! :)))))

      Delete