எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Tuesday, April 30, 2013

கடலைப்பருப்பில் என்ன செய்யலாம்?

திரும்பத் திரும்ப பாசிப் பருப்பிலே மட்டுமே சப்பாத்திக்கு தால் பண்ணி அலுத்துப் போக ஆரம்பிச்சாச்சு.  அவ்வப்போது பயறு, முழு உளுந்து, காராமணி, கொண்டைக்கடலை, பட்டாணி என்று பண்ணினாலும் எல்லாமே அலுக்க ஆரம்பிச்சது.  நேத்திக்கு மாறுதலா இருக்கட்டும்னு கடலைப்பருப்பிலே பண்ணினேன். நல்லாவே இருந்தது.

கடலைப்பருப்பு 200 கிராம்(இந்த அளவில் நான்கு பேருக்கு வரும்) நன்கு களைந்து கொண்டு ஊற வைக்கவும்.

வெங்காயம் பெரிதாக ஒன்று, தக்காளி இரண்டு, பச்சை மிளகாய் 2 இஞ்சி ஒரு துண்டு, மி.வத்தல் ஒன்று, கருகப்பிலை, பெருங்காயம்,சிட்டிகை மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, வகைக்கு ஒரு டீஸ்பூன், கரம் மசாலாப் பொடி அரை டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

தாளிக்க, சோம்பு, ஜீரகம், லவங்கப் பட்டை, பெரிய ஏலக்காய், கிராம்பு ஒன்று, தேஜ் பத்தா எனப்படும்மசாலா இலை(விருப்பமிருந்தால்) தாளிக்க எண்ணெய். மேலே தூவ கொத்துமல்லி, புதினா பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்.

ஊற வைத்த கடலைப்பருப்பை நன்கு குழைய வேக வைக்கவும்.  தேவையானால் குக்கரில் கூட வேக வைத்துக் கொள்ளலாம். கடாயில் அல்லது அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு ஜீரகம், சோம்பு, மி.வத்தல், பச்சை மிளகாய், இஞ்சி மற்ற மசாலா சாமான்களைப் போட்டுத் தாளிக்கவும்.  வெங்காயத்தைச் சேர்த்துப் பெருங்காயம் (விருப்பமிருந்தால்) போட்டு வதக்கவும்.  கருகப்பிலையைச் சேர்க்கவும்.  வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.  தக்காளி வதங்குகையில் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தனியாத் தூள் சேர்த்துக் கிளறவும்.  தக்காளியும் வெங்காயமும் நன்கு வதங்கியதும் வேக வைத்த கடலைப்பருப்பைச் சேர்த்து உப்புச் சேர்க்கவும். தேவையான நீர் சேர்க்கவும். நன்கு கொதித்துச் சேர்ந்து வரும்போது கரம் மசாலாப் பொடி தூவிக் கீழே இறக்கி, கொத்துமல்லித் தழை, புதினாத் தழை சேர்க்கவும்.



பூண்டு விருப்பமுள்ளவர்கள் ஒன்றிரண்டு பல் பூண்டை உரித்துப் பாதி கொதிக்கையில் சேர்க்கலாம்.  இதை சாதத்தோடும் பஞ்சாப், ஹரியானாவில் சாப்பிடுவாங்க.  நாங்க ஃபுல்கா ரொட்டிக்கு சைட் டிஷாகப்பயன்படுத்தினோம்.

தேவையானால் சாப்பிடும்போது அரை மூடி எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். இது அவரவர்  விருப்பம்.

19 comments:

  1. நல்லது... செய்து பார்ப்போம்...

    படத்தை இணைக்க கூடாதா...? (வீட்டில் கேள்வி...)

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி, டிடி, நானும் நினைச்சுப்பேன். ஆனால் பெரும்பாலும் ராத்திரியில் செய்யறதாலே நினைவிலே இருக்கிறதில்லை. ராத்திரிக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. சும்மா நொ.சா. :)))))

      Delete
  2. அடுத்த தபா சப்பாத்தி செய்யும்போது செய்து பார்த்துடலாம்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், இங்கே தினம் தினம் சப்பாத்தி தானே. மண்டையை உடைக்கும் என்ன செய்யலாம்னு! :))))

      Delete
  3. நான் இதை டாபாக்களில் சாப்பிட்ட நினைவு. ரெசிபி நன்றாக இருக்கிறது - தாளித்துக் கொட்ட இத்தனையா! தேஜ் பத்தா - இதென்ன திட்ற மாதிரி இருக்கே?

    ReplyDelete
    Replies
    1. வாங்க அப்பாதுரை, ஆமாம், பஞ்சாப், ஹரியானா சிறப்பு உணவு இதுவும் ராஜ்மாவும். :))) தாளிக்க இத்தனையானு அலுத்துக்காதீங்க. எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தான் போடணும். :)))) ஒரு சின்ன நெருப்புக்குச்சி அளவு மெலிதாக லவங்கப் பட்டை, கால் டீஸ்பூன் சோம்பு, கால் டீஸ்பூன் ஜீரகம், ஒரே ஒரு ஏலக்காய், ஒரே ஒரு கிராம்புனு போடணும். தேஜ் பத்தா என்பது மசாலா இலை. புலவு, வெஜிடபுள் பிரியாணி போன்றவற்றில் பயன்படுத்துவது. அந்த இலையைக் கிள்ளி ஒரு கால் இஞ்ச் அளவு போட்டால் போதும். அதைச் சாப்பிடக் கூடாது. தொண்டையில் குத்தி சமயத்தில் ரத்தம் வந்துடும். :)))) வாசனைக்குத் தான் அதைச் சேர்ப்பது. :)))))

      Delete
    2. தொண்டையில குத்தி ரத்தம் வருமா!!

      Delete
    3. ஆமாம், அந்த மசாலா இலை கொஞ்சம் கூர்மையானது. நடுவில் வேறே நரம்பு. ஆகவே முழுசாப் போட்டால் கொஞ்சம் ஆபத்துத்தான். நான் பயன்படுத்துவதில்லை. :)))))

      Delete
  4. இங்கே ஹரியானா, உத்திரப் பிரதேசம் பக்கம் போனால் “தால்” என்றால் இதைத் தான் தருவார்கள்...

    தேஜ் பத்தா சில இடங்களில் சேர்ப்பதில்லை.... மாறுதலுக்கு சாப்பிடலாம்... தொடர்ந்து சாப்பிட பிடிப்பதில்லை! :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், உத்தரகாசியில் (பத்ரிநாத் போகையில்) ஒரு கடையில் இதுவும் தந்தூர் ரொட்டியும் கொடுத்தாங்க. என்ன சுவை, என்ன சுவை. அதுவும் ரொட்டி தந்தூர் அடுப்பிலேயே செய்தது. சாப்பிடறதுக்குள்ளே எங்க டூரிஸ்ட் வேன் கிளம்ப ஆரம்பிக்கவே பாதியை வைச்சுட்டு வந்தோம். :(

      தினம் தினம் ரொட்டி பண்ணுவதால் மாத்தி மாத்தித் தான் பண்ண வேண்டி இருக்கு. :)))))

      Delete
    2. அதான் தேஜ் பத்தா ஆப்ஷனல் எனக் குறிப்பிட்டேன். மஹாராஷ்ட்ராவில் இதுவும் மராட்டி மொக்குவும் இல்லாத உணவு இல்லை. :))))

      Delete
  5. சுவையான தால். இனிமே படம் எடுத்து போடுங்கோ மாமி...:)

    பிரியாணி இலை தானே தேஜ் பத்தா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோவை2தில்லி, ஹிஹிஹி, உங்களவர் பிடிக்காதுனு எழுதும்போதே நினைச்சேன், உங்களுக்குப் பிடிக்கும்னு. :)))) இங்கேயும் அப்படித்தான். அவருக்குப் பிடிச்சா எனக்குப் பிடிக்காது. :))))))))

      Delete
    2. ஆமாம், பிரியாணி இலை தான் தேஜ் பத்தா கோவை2 தில்லி.

      Delete
  6. இந்த தால் நானும் செய்வதுண்டு. குக்கரிலேயே எல்லாம் தாளித்து, பருப்பையும் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கிருவேன். :)

    கடலைப் பருப்பு வாயு என்று சொல்வார்கள், அதனால் எப்பவாவது ஒருமுறை செய்யலாம். பாசிப்பருப்பு உடலுக்கும் நல்லது, போரடித்தாலும் பரவாயில்லன்னு அதையே அடிக்கடி செய்யுங்க. :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க மஹி, வட இந்தியாவில் அநேகமா வாரம் இரு முறை இருக்கும். :))) பூண்டு, இஞ்சி சேர்ப்பதால் வாயுத் தொந்திரவு இருக்காதுனு சொல்வாங்க. நான் மாசம் ஒரு தரம் செய்தாலே அதிகம். :))))

      Delete
  7. நேத்திக்கு டிடிக்காகக் கடலைப்பருப்பு தால் செய்துட்டு, அதைப் படம் எடுத்தேன். படம் இணைச்சிருக்கேன். செய்யும் உணவுப் பதார்த்தங்களைக் கூடிய வரை படம் எடுத்துச் சேர்க்க முயல்கிறேன். நன்றி.:))))

    ReplyDelete
  8. நாங்களும் இது செய்வோம் சற்று காரமாக சாதம், சப்பாத்திக்கு.

    ReplyDelete
  9. வாங்க மாதேவி, காரம் அவங்க அவங்களோட சுவைக்கு ஏற்றாற்போல் போட்டுக்கலாம். :))) சாதத்தோடும் சாப்பிடலாம்.

    ReplyDelete