எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, November 18, 2009

இன்னிக்கு முருங்கைக்கீரைப் பருப்பு உசிலி, சாப்பிட வாங்க!


சாப்பிட வாங்கனு போட்டதுக்கு அப்புறமா ஆறு பேர் இந்தப் பதிவைத் தொடர ஆரம்பிச்சுட்டாங்களே! ஹையா ஜாலி! அந்த ஆறு பேரையும் இப்போ சாப்பிடச் சொல்லப் போறது என்னன்னா, முருங்கைக் கீரைப் பருப்பு உசிலியாக்கும். பாலக்காட்டுக் காரங்க பேச்சிலே வந்தேனாக்கும், போனேனாக்கும், இருக்குமாக்கும் அப்படின்னெல்லாம் வருமா, அந்த மாதிரிப் பேச ஆசை, அந்தே! இப்போ முருங்கைக் கீரைப் பருப்பு உசிலியை எப்படிப் பண்ணலாம்னு யோசிப்போமா? இன்னிக்கு எங்க வீட்டிலே முருங்கைக்கீரைப் பருப்பு உசிலிதான். சாப்பிடும்போது தான் யோசனை தோணிச்சு, எழுதலாமேனு. இன்னிக்கு வேறே ஒண்ணும் எழுதி வேறே வச்சுக்கலை.

முருங்கைக் கீரை ஒரு கட்டு: வீட்டிலே முருங்கை மரம் இருந்தா கீரையை நல்ல இளங்கீரையாகப் பார்த்து பறிச்சுக் கொள்ளவும். என்னது? பூக்கள் இருக்கா? இருக்கட்டும், இருக்கட்டும் எல்லாப் பூக்களுமே காயாக மாறப் போறதில்லை, அதனாலே பூக்கள் உதிர்கிறது. மற்றபடி மரத்திலே வேணுங்கற அளவுக்குப் பூக்களையும் பறிச்சு வச்சுக்கோங்க. ஹிஹிஹி, யாருங்க அது, தொடுத்து வச்சுக்கணுமானு கேட்கிறது? இல்லை இல்லை, இதைத் தொடுத்தெல்லாம் வச்சுக்கவேண்டாம். நறுக்கி பொரிச்ச குழம்பு செஞ்சு சாப்பிடலாம். அது அப்புறமா. இப்போ கீரையை மட்டும் கவனிங்க. கீரையைப் பறிச்சோ அல்லது வாங்கியோ வச்சாச்சா? இப்போ கீரையை நல்லா ஆயணும். குச்சிகளை எல்லாம் ஆய்ந்து கீரையை மட்டும் தனியா எடுத்து நறுக்கி வச்சுக்கணும். நறுக்கினப்புறமா நல்லாத் தண்ணீர் விட்டு அலசி வடிகட்டி வைங்க கீரையை.

பருப்பு உசிலிக்குத் தேவையான பொருட்கள்: து.பருப்பு ஒரு கப், கடலைப்பருப்பு ஒரு கப் இரண்டையும் சேர்த்துக் கழுவி நனைச்சு வைக்கணும். குறைந்தது ஒரு மணி நேரமாவது ஊறட்டும். அப்புறமாய் மி.வத்தல் ஆறு, உப்பு தேவையான அளவு, பெருங்காயப் பொடி, அல்லது கட்டியானால் பருப்போடயே சேர்த்து ஊற வைச்சுடலாம். எல்லாத்தையும் நன்கு நைசாக அரைச்சுக் கொள்ளவேண்டும். அரைத்த கலவையை ஒரு வாயகன்ற(உங்க வாய் அகலாம பார்த்துக்கவும்) பாத்திரத்தில் போட்டுக்கவும். அரைச்சதை எடுத்ததும் மிக்ஸி ஜாரில் கொஞ்சம் ஜலம் விட்டு மிச்சம், மீதி இருக்கும் பருப்புக் கலவையை எடுத்துக் கொண்டால் ரசத்துக்கு விளாவிடலாம். அது தனியா வச்சுப்போம். இப்போ பாத்திரத்தில் போட்ட பருப்புக் கலவையில் முருங்கைக் கீரையைச் சேர்த்து நன்றாய்க் கலக்கவும்.பருப்பும் கீரையும் ஒன்றோடொன்று நன்கு கலந்ததும் அதை இட்லித் தட்டில் ஆவியில் வேக வைக்கவும். வெந்த கலவையை ஒரு ஸ்பூனால் குத்தினால் ஒட்டாமல் வந்தால் வெந்துவிட்டது என்று அர்த்தம்.

வெந்த கலவை வெளியே எடுத்து ஆறினதும் உதிர்த்துக் கொள்ளவும். அடுப்பில் ஒரு இரும்பு வாணலியை வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றவும், இந்த அளவுக்குக் குறைந்த பட்சமாய் ஒரு கப் எண்ணெயாவது தேவை. எண்ணெய் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம்பருப்புப் போட்டு வெடித்ததும் கருகப்பிலை சேர்த்துப் பருப்புக் கலவையைக் கொட்டிக் கிளறவும். நன்கு உதிர்ந்து வரும் வரை கிளறவும். பின்பு சூடாக இருக்கும்போதே, மோர்க்குழம்பு அல்லது வத்தக்குழம்போடு பரிமாறவும்.

3 comments:

  1. சும்மா மனுஷாளோ ஆசையை கெளறாம இருக்கணுமாக்கும்...., இஞ்சை இல்லையாக்கும். நாட்டுல காஞ்சுகெடக்கோமாக்கும்.:))))))))))

    ReplyDelete
  2. காயுங்க, காயுங்க, அடுத்தது என்ன தெரியுமா??? சிதம்பரம் கொத்சு, சம்பா சாதம், டண்டடண்டடய்ய்ய்ங்ங்ங்ங்ங்ங்ங்

    ReplyDelete
  3. சே, காயணுமாக்கும், அடுத்தது என்ன தெரியுமாக்கும்னு எழுதி இருக்கணும் இல்லை??? மறந்துட்டேனே

    ReplyDelete