சாப்பிட வாங்கனு பேரை மாத்தியதும் இதைத் தொடர்பவர்கள் எண்ணிக்கை ஐந்தாயிடுச்சே, இன்னும் எதுவுமே போடமுடியலையேனு இருக்கு. சீக்கிரம் போடறேன். முதல்லே பட்டூரா பார்த்துட்டு, ரொம்ப நாளா பட்டூராவுக்கு மாவே பிசையலை. அதனால் அதை முடிச்சுப்போம். அதுக்குள்ளே நவராத்திரி வந்து, தீபாவளி வந்துனு எல்லாம் ஆயிடுச்சு. இப்போ தீபாவளி பட்சணமும் தீர்ந்திருக்குமே. அதனாலே டிபன் ஏதானும் பண்ணித் தானே ஆகணும்?? முதல்லே பட்டூராவுக்குத் தேவையானது மைதா மாவு . அரை கிலோ எடுத்துக்குங்க. வெண்ணெய் நூறு கிராமாவது வேணும். டால்டா வேண்டாம். வேறே வழியில்லைனா டால்டா. உப்புக் கொஞ்சம் போல. தயிர் அரை கப்.
முதலில் அரை ஸ்பூன் உப்பை ஒரு வாயகன்ற பேசினில் போட்டு, வெண்ணெயையும் போட்டுக் கையாலோ அல்லது ஒரு மரக் கரண்டியாலோ நல்லாக் கலக்குங்க. விடாமல் ஒரே பக்கமாகவே இருபது நிமிஷமாவது கலக்கணும். வெண்ணெய் எல்லாம் உப்போடு கலந்து மேலே குமிழ்கள் வர ஆரம்பிக்கும். இப்போக் கொஞ்சம் கொஞ்சமாக மைதாமாவைப் போட்டுக் கலக்குங்க. மைதாவும், வெண்ணெயும் ஒருசேரக் கலக்கணும். நன்கு கலக்கவும் ஒரு பத்து நிமிஷம் இப்படிக் கலந்ததும், தயிர் சேர்த்துப் பிசையணும். அரை கப் தயிர் அநேகமாய்ச் சரியாய் இருக்கும். இல்லாட்டிக் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சேர்த்துக் கொள்ளவும். நன்கு பிசையவும். பின்னர் ஒரு வெள்ளைத் துணியால் மாவை மூடி வைக்கவும். ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் கழித்துப் பார்த்தால் மாவு உப்பிக் கொண்டு வந்திருக்கும். அப்படி வரலைனால் இன்னும் சிறிது நேரம் வைங்க. அநேகமாய் உப்புக் கொண்டு வந்துடும். அதை எடுத்து மறுபடிப்பிசைந்து மூடி வைங்க. இப்படி இரண்டு முறையாவது ஆனதும், மாவு தயார் பூரி பொரிக்க.
கடாயில் எண்ணெயை வைத்து, தேவையான அளவு சைசில் மாவை உருட்டிக் கொண்டு பூரியாக வட்டமாக இடவும். எண்ணெய் காய்ந்ததும் பொரித்து எடுக்கவும். இரண்டு பக்கமும் நன்றாக உப்பிக் கொண்டு வெள்ளை வெளேரெனச் சூடான பட்டூரா தயார். ஊசியால் குத்தினாலோ,கையால் உடைத்தாலோ ஒழிய உப்பிக் கொண்டது அமுங்காது எத்தனை நேரமானாலும். இதற்குத் தொட்டுக்கத் தான் முதல்லேயே பண்ணி வச்சுட்டோமே சனா. அதை எடுத்துச் சூடு பண்ணிக்குங்க. சனா, பட்டூரா தயார். இதைத் தான் ஓட்டலில் ஒரே ஒரு பூரியும் அரைக் கரண்டி சனாவும் கொடுத்துட்டு நூறு ரூபாய் பில் போடுவாங்க. வீட்டிலேயே செய்தால் எவ்வளவு லாபம்???
குறைந்த பட்சமாத் தொடர்பவர்களாவது சாப்பிடுங்கப்பா! நன்றி. அடுத்ததுக்குக் கொஞ்சம் மெதுவா வரேன்.
வணக்கம்...
ReplyDeleteஉங்களின் இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...
http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்,அருமை. பகிர்வுக்கு நன்றி.
வலைச்சர அறிமுகத்திற்கு பாராட்டுக்கள்!
ReplyDeleteபட்டூரா செய்து பார்க்கிறேன்.