எச்சரிக்கை
படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
Friday, May 29, 2009
இன்னிக்கு வீக் எண்ட் டிபன் என்ன?
ரொம்ப நாட்கள் ஆச்சு, சமையலறைப்பக்கம் வந்து. இப்போ என்ன சமைக்கலாம்? சொல்லுங்க. காலம்பர நேரம் இந்தியாவிலே. அதனாலே காலை ஆகாரத்துக்குச் சமைப்போமா?? யு.எஸ். மற்ற வெளிநாட்டுக் காரங்களும் தெரிஞ்சு வச்சுக்கோங்க. உங்க நேரத்துக்குச் செய்துக்கலாம். ஓகேயா??
பூரி செய்யலாமா? சிலர் காலம்பர நேரம் எண்ணையானு சொல்றாங்க. காதிலே விழுது. ராத்திரி செய்தாலும் அப்போவும் ஒத்துக்குமா?? யோசிங்க. காலம்பர தான் நல்லது. சாப்பிட்டுட்டு நாள் பூரா ஏதானும் வேலை செய்வோம். அப்போ ஜீரணம் ஆகாதா? ரெடியாகிக்கோங்க. வயிறு காலியா இருக்கட்டும். பூரி செய்ய ரங்கமணிகளைத் தயார் செய்யுங்க. சாப்பிட தங்கமணிகள் தயார் ஆகுங்க. முதலிலேயே மாவு பிசைய வேண்டாம். முதலில் தொட்டுக்க என்ன செய்யறதுனு ஒரு சின்ன கலந்துரையாடல் செய்து முடிவு பண்ணுங்க.
அதாவது எல்லார் கருத்தையும் கேட்டுக்கணும். கடைசியிலே உங்க முடிவை வெளியே சொல்லாமல், அதுப்படி பண்ணிடணும். ஓகேயா?? இன்னிக்கு என்னோட முடிவு பூரியும், தொட்டுக்க உருளைக்கிழங்கு மசாலாவும். மசாலானதும் ஐயே எனக்கு வேண்டாம்னு ஓட வேண்டாம். சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா பேரு தான் மசாலா. வெங்காயம் கூட வேணும்னா சேர்த்துக்கலாம். வெங்காயம் சாப்பிட மாட்டீங்கனா அதுவும் வேண்டாம். ஓகேயா?? மனசு சமாதானம் ஆயிடுச்சா?
உ.கி. கால் கிலோவாவது வேண்டும். வெங்காயம் சேர்த்தால் 4 பேருக்கு இது போதும். வெங்காயம் கால் கிலோ. இரண்டு பச்சை மிளகாய். கருகப்பிலை. இஞ்சி ஒரு சின்னத் துண்டு.உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயப் பொடி, தாளிக்க ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய். கடுகு, உ.பருப்பு, க.பருப்பு தாளிக்க ஒரு ஸ்பூன் எல்லாவற்றிலும், முதல்லே வெங்காயம் போடாமல் பண்ணும் விதம் பார்ப்போமா? ஏன்னா இன்னிக்கு சனிக்கிழமை, வெங்காயமா? அப்படினு அங்கே யாரோ பல்லைக் கடிக்கிறாங்க.
உ.கி. 4 பேருக்கு பெரிய கிழங்காக 3 அல்லது 4 நன்கு குழைய வேக வைக்கவும். குக்கரோ, அப்படியே வேக வைப்பீங்களோ அது உங்க இஷ்டம், இதெல்லாம் சொல்லணுமா என்ன? குழைய வேக வைச்ச உ.கி.யை எடுத்து உதிர்த்து, அதில் தேவையான உப்பு, ம.பொடி, பெருங்காயப் பொடி போட்டுக் கலந்து வச்சுக்கோங்க. அடுப்பில் (ஆமாம், ஆமாம், அடுப்பை மூட்டிட்டுத் தான் இதெல்லாமா சொல்லிட்டு இருப்பாங்க?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்) கடாயை வச்சு, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உ.பருப்பு, க.பருப்பு போடவும் பின்னர் பச்சை மிளகாய், இஞ்சி பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கவும், கருகப்பிலையும் போடவும். எல்லாம் சிவந்து வந்ததும், கலந்து வைத்த உ.கியைப் போட்டு, விருப்பம் இருந்தால் தக்காளி ஒன்றையும் சேர்க்கவும். தக்காளி ஆப்ஷனல். பின்னர் ஒரு சின்னக் கிண்ணம் நீர் சேர்க்கவும். சேர்ந்து கொதித்து வந்ததும், கீழே இறக்கிப் பொடிப் பொடியாக நறுக்கிய கொத்துமல்லியைச் சேர்க்கவும். இப்போ வெங்காயம் போடாத உ.கி. மசாலா பூரிக்குத் தயார்.
வெங்காயம் போடும் முறையில் மற்றது எல்லாம் மேற்கண்டவாறே. தாளிக்கும்போது கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, ப.மி, இஞ்சி சேர்த்துக் கருகப்பிலையோடு வெங்காயத்தையும் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக வரும்வரை வதக்கி விட்டுப் பின்னர் உருளைக்கிழங்குக் கலவை சேர்க்கணும். இதற்குத் தக்காளியே வேண்டாம். இப்போ மசாலா ரெடி. அடுத்து பூரி.
அடுப்பிலே பூரி பொரிக்கத் தேவையான எண்ணெயை வைத்துவிடவும். என்ன ஆச்சரியமா இருக்கா?? ஆமாம், பூரிக்கு அப்படித் தான் செய்யணும். ஆச்சா??? இப்போ எண்ணெய் காய வைக்கணும், அதே சமயம் எண்ணெய் அதிகமும் காயக் கூடாது/ புரிஞ்சதா? ஆகவே அடுப்பு நெருப்பை மிதமான எரிச்சலில் வைக்கணும். எண்ணெய் காயட்டும். அதுக்குள்ளே வேறே யாரையானும் நீங்க காயாதீங்க.
தேவையான அளவு கோதுமை மாவு. அரை கிலோ கோதுமை மாவுனா அதுக்குத் தேவையான உப்பு, ஒரு டேபிள் ஸ்பூன் அஸ்கா சர்க்கரை, இரண்டு டேபிள் ஸ்பூன் பாம்பே ரவை(சன்னரவை) எல்லாம் கலந்து கொஞ்சம், கொஞ்சமாய் நீர் தெளித்துப் பிசையவும். மாவு நல்லா ஒரு பந்து போல் வரும்வரைக்கும் பிசையணும். நல்லாப் பிசைந்ததும், சின்னச் சின்ன உருண்டைகளாய் உருட்டிக் கொண்டு சப்பாத்திக் கல்லில் போட்டுப் பூரி எந்த அளவிற்கு வரணும்னு நினைக்கறீங்களோ அந்த அளவிற்கு இட்டுக் கொண்டு காய்ந்த எண்ணெயில் போட்டுப் பொரிக்கவும். பூரி இரண்டு பக்கமும் உப்பிக் கொண்டு, (யாரானும் அடிச்ச உங்க கன்னம் வீங்குமே அதைவிடப் பெரிசா உப்பும்) நல்லா வரும். இந்த மாதிரி உப்பிக் கொண்டும் எண்ணெய் குடிக்காமலும் வரதுக்காகத் தான் எண்ணெயை வச்சுட்டு மாவு பிசையணும், சர்க்கரை, ரவை சேர்க்கணும். பூரியை எஞ்சாய் பண்ணிட்டுச் சொல்லுங்க, எப்படி இருந்ததுனு வர்ட்டாஆஆஆஆஆஆஆஆ???
அடுத்து இப்போ எல்லாம் நாகரீகமான உணவாய்ச் சொல்லப் படும் பூரியோடு சேர்த்து உண்ணப் படும் சனா மசாலா/ எப்படினு பார்ப்போமா??? சனாவை ஊற வைங்க. நல்லா ஒரு நாள் ஊறட்டும். அப்போத் தான் மிருதுவா இருக்கும். அப்புறமாச் செய்யலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
சமையல்லே யாருக்குமே ஆர்வமே இல்லையே??? இதுவரைக்கும் 41 பேர்தான் கத்துட்டு இருக்காங்க. மத்தவங்க என்ன செய்யப் போறீங்க????
ReplyDelete