எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Saturday, December 27, 2008

சமைக்கலாம் வாங்க

ரொம்ப நாளாச் சமையல் பத்தி எழுதணும்னு ஆசை இருக்கு. ஆனால் அதைத் தனியா வச்சுக்கணும்னு இருந்தேன். இன்னிக்கு அமாவாசை , அனுமத் ஜெயந்தி. சனிக்கிழமை ஸ்திர வாரம். ஆகவே சமையலை ஆரம்பிச்சு எல்லாரையும் நல்லா பயமுறுத்தலாம்னு எண்ணம். முதல்லே பிள்ளையாருக்குத் தான். பிள்ளையாருக்குப் பிடிச்சது என்ன?? கொழுக்கட்டை தானே? ஆகவே முதலிலே பிள்ளையாருக்குப் பிடிச்ச கொழுக்கட்டையில் இருந்தே ஆரம்பிக்கலாமா? உங்கள் ஆலோசனைகளும், புதிய கண்டுபிடிப்புகளும் வரவேற்கப் படுகின்றன. இனி பயப் படாமல் படிக்கிறவங்களுக்காகப் பிள்ளையாருக்குக்கொழுக்கட்டை செய்யும் விதம் பற்றிய ஒரு விளக்கம்.
*************************************************************************************

கொழுக்கட்டைகளில் பூரணத்தை மாவின் உள்ளே வைத்துச் செய்யப் படும் விதமும், மாவை வெல்லம், தேங்காய் சேர்த்துக் கிளறி உருண்டையாகப் பிடித்து வேக வைக்கும் விதமும், மைதாவிலோ, ரவையிலோ மாவு பிசைந்துகொண்டு பூரணத்தை உள்ளே வைத்து நெய் அல்லது எண்ணெயில் செய்யும் விதமும் ஆக மூன்று விதம் உண்டு. இப்போ முதலில் நாம் பார்க்கப் போவது நெய்க் கொழுக்கட்டை என்று சொல்லப் படும் மைதா அல்லது ரவையில் செய்வது தான்.
*************************************************************************************
தேவையான பொருட்கள்: ரவை, (ரவைதான் நல்லது, நல்ல சன்னமான ரவையாக இருக்கவேண்டும்) 1/4 கிலோ, 50மில்லி லிட்டர் பால், ஒரு சிட்டிகை உப்பு. ரவையை லேசாக வறுத்துக் கொண்டு, சிட்டிகை உப்பைச் சேர்த்துக் கொண்டு, பாலைக் கொஞ்சம் கொஞ்சமாக அதில் கலந்து சப்பாத்தி மாவு பதத்துக்குப் பிசையவேண்டும். மாவைத் தனியே சிறிது நேரம் வைக்கவும்.

பூரணம் செய்யத் தேவையான பொருட்கள்: சிறிய தேங்காய் ஒன்று, வெல்லம் ருசிக்கு ஏற்ப, இது கொஞ்சம் பழக்கத்திலே தானே புரியும், என்றாலும் ஒரு சிறிய சாத்துக்குடி அளவுக்கு இருக்கலாம், நல்ல பாகு வெல்லமாக இருக்க வேண்டும், 4,5 ஏலக்காய்கள் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். தேங்காயை உடைத்துத் துருவிக் கொள்ளவும். செதில்கள் விழாமல் பூப்போன்ற துருவலாய் இருந்தால் நல்லது. பின்னர் ஒரு கடாய் அல்லது வெங்கலப்பாத்திரத்தில் துருவலையும், வெல்லத்தைப் பொடிசெய்து போட்டும் கிளறவும். வெல்லமும், தேங்காயும் ஒன்றாய்ச் சேர்ந்து நல்ல உருட்டும் பதமாய் வரும்வரையில் கிளறவும். பின் பொடித்த ஏலக்காயைப் போட்டுவிட்டுச் சற்று ஆற வைக்கவும்.

சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து வைத்த ரவையை நன்றாக அழுத்திப் பிசைந்தால் இப்போது நன்கு சேர்ந்து மாவு ரவை தெரியாமல் கலந்து ரப்பர் போல் வந்திருக்கும். இதை மெல்லிய அப்பளங்களாய் இட்டுக் கொள்ளவும். ஒரு சிறிய தட்டு அல்லது மூடியால் வட்டமாய்க் கத்திரித்துக் கொண்டு, ஒரு சிறிய கரண்டியால் பூரணத்தை அந்த வட்டத்தில் இட்டு நிரப்பி, உங்களுக்குப் பிடித்த வகையில் மூடவும். இப்படி எல்லாப் பூரணத்தையும் மாவில் போட்டு மூடிக் கொழுக்கட்டைகளாய்ச் செய்த பின்னர், கடாயில் எண்ணெய் அல்லது நெய் வைத்து அவற்றைப் பொரித்து எடுக்கவேண்டும்.இவை கணபதி ஹோமத்துக்கெனத் தனியாகச் செய்யப் படும். சங்கடஹர சதுர்த்தி விரதத்துக்கும் இம்மாதிரிக் கொழுக்கட்டைகள் செய்து கோயிலில் நைவேத்தியத்துக்கோ, அல்லது ஹோமத்தில் சேர்க்கவோ கொடுக்கலாம்.

1 comment: