எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, August 26, 2018

உணவே மருந்து! கேழ்வரகு 6

கேழ்வரகை முளைக்கட்டிப் பின் வறுத்து மாவாக்கி வைத்துக் கொண்டால் தேவையான சமயத்துக்கு மாவில் பல்வேறு உணவுகள் செய்யலாம். கோதுமை மாவும் கேழ்வரகு மாவும் சம அளவில் கலந்து சப்பாத்தி செய்யலாம். கேழ்வரகு மாவை நன்கு வறுத்துக் கொண்டு அதோடு சம அளவு அல்லது கொஞ்சம் கூடுதலாக வெல்லத்தைத் தூள் செய்து சேர்த்துக் கொண்டு ஏலக்காய், முந்திரிப் பருப்புப் போட்டு நெய்யைக் காய்ச்சி ஊற்றி (இதுக்குக் கொஞ்சம் நெய் போதும்.) உருண்டை பிடிக்கலாம். சர்க்கரையும் சேர்த்து உருண்டை பிடிக்கலாம். ஆனாலும் வெல்லம் உடலுக்கு நல்லது!

 ஒரு கிண்ணம் கேழ்வரகு மாவை வறுத்துக் கொள்ள வேண்டும். ஒன்றரைக்கிண்ணம் தூளாக்கிய பாகு வெல்லத்தை அடுப்பில் வைத்து நீர் சேர்த்துப் பாகு காய்ச்ச வேண்டும். மாவில் ஏலக்காய்த் தூள் சேர்த்துக்கலந்து வைக்கவும். பின்னர் பாகை உருட்டும் பதமாக வரும் வரை கொதிக்க விட வேண்டும். ஒரு கிண்ணத்தில் ஜலம் வைத்துக் கொண்டு பாகை அதில் ஊற்றிப் பார்த்தால் உருண்டையாக வர வேண்டும்.   பின்னர் பாகை மாவில் ஊற்றிக் கிளறித் தேவையானால் தேங்காய்த் துருவல் சேர்க்கலாம். இல்லை எனில் அப்படியே அதிரசமாகத் தட்டியோ, எண்ணெய் வைத்து அப்பமாகப் பொரித்தோ எடுக்கலாம். குழி ஆப்பச் சட்டியில் கூட எண்ணெய் அல்லது நெய் ஊற்றிக் கொண்டு இந்த மாவை ஊற்றி அப்பமாக எடுக்கலாம்.

இந்த வறுத்த ராகி மாவையே உப்புமாவுக்குத் தாளிக்கிறாப்போல் தாளித்து நீர் ஊற்றி, உப்பு, தே,துருவல் சேர்த்துக் கிளறி உருண்டையாகப் பிடித்து ஆவியில் வேக வைத்து உப்புமாக் கொழுக்கட்டையாகச் செய்யலாம். வெல்லம்போட்டு வெல்லக் கொழுக்கட்டையாகவும் செய்யலாம்.  இந்த மாவோடு வெள்ளை ரவை, கோதுமை மாவு, அரிசி மாவு சம அளவில் சேர்த்து, மிக்சி ஜாரில் மி.வத்தல், பச்சைமிளகாய், இஞ்சி உப்பு சேர்த்து அடித்து மாவில் போட்டுப் பிசைய வேண்டும். பெருங்காயமும் சேர்க்கலாம். பின்னர் கருகப்பிலை, கொத்துமல்லி பொடியாக நறுக்கிச் சேர்த்து வெங்காயம் ,அல்லது முட்டைக்கோஸ் பொடிப் பொடியாக நறுக்கிச் சேர்க்க வேண்டும். மாவில் வெங்காயம், முட்டைக்கோஸ் நன்கு கலக்கும் வரை பிசைந்து கொண்டு ஒரு வாழை இலையில் எண்ணெய் தடவி சின்னச் சின்ன அடைகளாகத் தட்ட வேண்டும். அதை தோசைக்கல்லைக் காய வைத்து எண்ணெய் தடவி அந்த தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு வேக வைக்க வேண்டும். பின்னர் திருப்பிப் போட்டு மறு பக்கமும் வேக விட வேண்டும். இரு பக்கமும் வெந்ததும் வத்தல் குழம்போடு சாப்பிட அருமையாக இருக்கும்.  இதே மாவில் முருங்கைக்கீரை அல்லது வெந்தயக் கீரை அல்லது வேறு கீரை ஏதேனும் போட்டும் அடைகளாகத் தட்டலாம்.

கேழ்வரகைப் பால் எடுத்துக் கொண்டு கோதுமை அல்வா போலும் கிளறலாம். அந்த மாவைக் கிளறி உப்பு, எலுமிச்சம்பழம் பிழிந்து, பச்சைமிளகாய்+உப்பு+பெருங்காயம் சேர்த்து அரைத்துக் கலந்து வடாம்களாகப் பிழியலாம். ஓமப்பொடி அச்சிலோ அல்லது கட்டைக் கருவடாம்களாகவோ பிழியலாம். சிலர் இந்த மாவில் பிஸ்கட்டுகளும் செய்கின்றனர். நான் அதிகம் கேழ்வரகு பிஸ்கட் செய்தது இல்லை. ஆனால் வாங்கிச் சாப்பிட்டிருக்கிறேன்.  ராகி மாவில் உளுந்து அரைத்துப் போட்டுக் கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து உப்புப் போட்டுக் கரைத்து தோசைகளாகவும் வார்க்கலாம். ராகி மாவு+அரிசி மாவு மட்டும் போட்டும் தோசை வார்க்கலாம். வெல்லம் போட்டு வெல்ல தோசையும் பண்ணலாம். மொத்தத்தில் ராகி உடல் நலனுக்கு மிகவும் உகந்தது. வாரம் ஒரு முறையாவது சேர்த்தால் நல்லது.

9 comments:

  1. கீதா சாம்பசிவம் மேடம்... ராகியில் நீங்கள் சொல்லியுள்ள பல்வேறு செய்முறைகள் அருமையாத்தான் இருக்கு. ஆனால், ராகி என்பது உழைப்பவர்களுக்கல்லவா? (ரொம்ப சூடு இல்லையா?) அதுவும்தவிர நமக்கு கோதுமையும் நல்லதா? எதுக்கு வாரம் ஒரு முறையாவது கேப்பை சேர்க்கணும்னு சொல்றீங்க?

    ReplyDelete
    Replies
    1. ராகி சாப்பிட்டால் இரும்புச் சத்து நிறையக் கிடைக்கும். உடல் சூடு எல்லாம் ஆனதாய்த் தெரியலை. சின்ன வயசில் நிறையவே சாப்பிட்டிருக்கோம். கோதுமை, அரிசி இரண்டிலுமே ஒரே மாதிரியான சத்துகள் தான் இருக்கின்றன. ஆகவே சாப்பிட்டால் தப்பில்லை என்றே சொல்வேன். வாரம் இரண்டு, மூன்று நாட்களுக்கு எங்க வீட்டில் இரவு உணவாக ஃபுல்கா ரொட்டி தான்!

      Delete
  2. கேழ்வரகில், பச்சை மிளகாய், வெங்காயம் திருத்திப்போட்டு தோசை வார்த்தால் நல்லா இருக்கும்னு தோணுது. அடையும் நல்லாத்தான் இருக்கும். இதெல்லாம் உங்க ரங்க்ஸ் படித்தார்னா, மூணு வேளைக்கும் விதவிதமாக உங்களைச் செய்யச் சொல்லலாம் (சொன்னாரா 50 வயதுக்கு முன்?)

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்லும் விதத்திலும் கேழ்வரகு தோசை நானும் பண்ணி இருக்கேன். என் அம்மாவும் செய்து கொடுத்திருக்கார். அவருக்குக் கேழ்வரகே பிடிக்காது! கேழ்வரகு இடியாப்பம் விற்பதை வாங்கி ஒரு நாள் செய்தேன். அவர் தொடவே இல்லை. கஞ்சிக்கு மட்டும் விடாப்பிடியாகக் கேழ்வரகு சேர்க்கிறேன். மற்றபடிக் கேழ்வரகில் செய்வதாக நான் சொல்லி இருப்பதெல்லாம் என் அம்மா செய்தவை. வெல்ல தோசை, உப்பு தோசை நான் குழந்தைங்களுக்குச் செய்து கொடுத்திருக்கேன். இப்போக் கேழ்வரகு தோசை எல்லாம் பண்ணறது இல்லை! கோதுமையிலும் வெல்ல தோசை, உப்பு தோசை செய்வேன். அது சாப்பிடுவார். ரொம்பப் பிடிக்கும்.

      Delete
    2. முன்னெல்லாம் அதாவது அவருக்கு (ரங்க்ஸுக்கு) 50 வயது வரையிலும் சாம்பார், வத்தக்குழம்பு தவிர்த்து எது பண்ணினாலும் பிடிக்காது. எப்போவானும் பொரிச்ச குழம்பு! அதன் பின்னரே எல்லாம் சாப்பிட ஆரம்பித்தார். நாங்க பொடி போட்டுச் சாப்பிட்டாலோ, அல்லது துவையல், கூட்டுத் தொட்டுக் கொண்டு சாதம்னு சாப்பிட்டாலோ என் புக்ககத்தில் கேலியாகப் பார்ப்பார்கள். எங்க வீட்டில் கூட்டுப் பண்ணி ரசம் வைச்சு அப்பளம் பொரித்தால் எங்களுக்குப் பிடிக்கும். இங்கே தினம் சாம்பார் தான்! வேறே பண்ண முடியாது. அதிலும் கூட்டுக் குடித்தனமாக இருந்தப்போ சாம்பார் தவிர்த்து, என்னிக்காவது வத்தல் குழம்பு, மோர்க்குழம்புனு வைச்சாலோ அல்லது கறி, கூட்டு வகைகளில் தேங்காய் போட்ட கறி, வதக்கல் கறி தவிர்த்து ஏதேனும் பண்ணினால் தட்டுப் பறக்கும்! அவங்க இல்லாதப்போ இவரைச் சரிக்கட்டிட்டுப் பண்ணுவேன். குழந்தைகளுக்கு அது தான் பிடிக்கவும் பிடிக்கும். இப்போவும் என் குழந்தைகளுக்கு சாம்பாரை விட வத்தல் குழம்பு, மிளகு குழம்பு, துவையல், கூட்டு என்று தான் பிடிக்கும். பழக்கம் தான் காரணம்!

      Delete
  3. கேழ்வரகு மாவில் அதிரசம்.... கேட்கும்போது சாப்பிடத் தோன்றுகிறது. இது வரை சாப்பிட்டதில்லை.

    ReplyDelete
    Replies
    1. கேழ்வரகு அதிரசம் நிறம் கொஞ்சம் கறுப்பாக இருக்கும். மற்றபடி வித்தியாசம் தெரியலை! கேழ்வரகில் அப்பம், வெல்ல தோசை, உப்பு தோசை நிறையவே பண்ணி இருக்கேன். அதெல்லாம் குழந்தைங்க இருக்கும்போது.

      Delete
  4. கேழ்வரகு பற்றி நிறையச் சொல்லி இருக்கிறீர்கள்.. படித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. @ Sriram, இஃகி,இஃகி,நம்மவர்களுக்குக் கேழ்வரகின் நன்மைகள் அவ்வளவாத் தெரியலை. கேரளாவில் மூன்று மாசத்தில் இருந்தே குழந்தைகளுக்குக் கேழ்வரகுக் கஞ்சி கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். கர்நாடகாவிலும் கேழ்வரகுக் களியும், பாகல்காய் கொஜ்ஜுவும் வாரம் இருமுறையாவது இடம் பெறும். கேழ்வரகைக் கர்நாடக மக்களும் அதிகம் பயன்படுத்துவார்கள்.

      Delete