எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Sunday, August 12, 2018

உணவே மருந்து! கேழ்வரகு 2

Image result for கேழ்வரகு தோசை

இப்போக் கேழ்வரகில் செய்யும் சில உணவு வகைகளைப் பார்ப்போம். கேழ்வரகை ஊற வைத்துக் கல் அரித்து முளைக்கட்டி மாவாக்கி வைத்துக் கொள்ள வேண்டும். இதில் தோசை வார்க்கலாம்.முதலில் கேழ்வரகு மாவு கரைத்துச் செய்யும் முறை!

கேழ்வரகு மாவு ஒன்றரை கிண்ணம்

அரிசி மாவு   ஒரு கிண்ணம்

வறுத்து அரைத்த உளுந்து மாவு கால் கிண்ணம்

மோர் ஒரு கிண்ணம், உப்பு தேவைக்கு. ஜீரகம்

தாளிக்க எண்ணெய் மற்றும் கடுகு, பச்சைமிளகாய், கருகப்பிலை,

தோசை வார்க்க எண்ணெய் கால் கிண்ணம்

மூன்றையும் புளித்த மோரில் கலக்கவேண்டும்.  உப்புச் சேர்த்துக் கொண்டு தேவையானால் மாவின்  தோசையாக ஊற்றும் பதத்துக்கு ஏற்றபடி நீர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இட்லி மாவு பதத்தை விடக் கொஞ்சம் நீர்க்க இருக்கலாம். மாவைக் கரண்டியால் எடுத்து தோசைக்கல்லில் வீசி ஊற்றும் பதத்துக்கு இருக்க வேண்டும். மாவு கரைத்த பின்னர் எண்ணெயில் கடுகு, பச்சைமிளகாய், கருகப்பிலை தாளிக்கவும். பிடித்தால் இஞ்சி, கொத்துமல்லி, சின்னவெங்காயம் அல்லது பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்க்கலாம்.

தோசைக்கல்லைச் சூடாக்கிக் கொண்டு எண்ணெய் தடவி மாவை முன்சொன்னமாதிரி கரண்டியில் எடுத்து வீசி ஊற்றி வட்டமாக்க வேண்டும். பின்னர் எண்ணெயை ஊற்றி வேக விட்டு ஒரு பக்கம் வெந்ததும் மெதுவாக எடுத்து மறுபக்கம் வேக விட வேண்டும். தேங்காய்ச் சட்னி அல்லது கொத்துமல்லிச் சட்னியுடன் சாப்பிடலாம்.
Image result for கேழ்வரகு தோசை
மேலே சொன்ன அளவில் மாவு எடுத்துக் கொண்டு அதில் தேங்காய்த் துருவல், வெல்லம் சேர்த்துக் கொண்டு ஏலப்பொடி போட்டு நன்கு கலந்து  நல்லெண்ணெயும், நெய்யும் கலந்து வெல்லத் தோசைகளாகவும் வார்க்கலாம். சிறு குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுக்கலாம்.

உளுந்து அரைத்துப் போட்டு வார்க்கும் கேழ்வரகு தோசை

கேழ்வரகு மாவு மட்டும்  2 கிண்ணம், உப்பு தேவைக்கு

அரைக்கிண்ணம் உளுந்து ஊற வைக்கவும். இரண்டு மணி நேரம் ஊறிய பின்னர் மாவைத் தளதளவென இட்லிக்கு அரைக்கும் பதத்தில் அரைக்கவும். அதில் கேழ்வரகு மாவைப் போட்டுக் கலந்து வைக்கவும். எட்டு மணி நேரம் புளிக்க விடவும். பின்னர் இட்லித் தட்டில் துணி போட்டு அல்லது ப்ரீத் தட்டு பழக்கம் எனில் அதில் எண்ணெய் தடவி இட்லிகளாக வார்க்கலாம். இல்லை எனில் தோசைக்கல்லைக் காய வைத்து தோசைகளாகவும் வார்க்கலாம். இதோடு சாம்பார், சட்னி சேர்த்துச் சாப்பிடலாம்.
Image result for கேழ்வரகு தோசை
மேலே சொன்ன மாவில் சின்னவெங்காய்ம், பச்சைமிளகாய், தேங்காய்ப் பல்லுப் பல்லாகக் கீறியது. இஞ்சி கருகப்பிலை எல்லாவற்றையும் போட்டுக் கலந்து குழி அப்பச் சட்டியில் எண்ணெய் ஊற்றி மாவை விட்டு மொறுமொறுவென வேக விட்டு எடுத்தால் கேழ்வரகுக் குழி ஆப்பம். இத்தோடு வெங்காயச் சட்னி அல்லது தக்காளிச் சட்னி நல்ல துணையாக இருக்கும்.படங்களுக்கு நன்றி கூகிளார்!

9 comments:

 1. கேழ்வரகு இட்லி நல்லா இருக்குமா? படம் என்னவோ பிரமாதமாக வந்திருக்கு (கூகிளாரின்). மற்றபடி தோசை நான் செய்துபார்த்திருக்கிறேன். மற்ற மாவு தோசைகள் மாதிரித்தான் இருக்கும்.

  நான் செய்தபோது தோசை மொறு மொறுவென்று வரவில்லை.

  ReplyDelete
  Replies
  1. கேழ்வரகு இட்லி நிறம் தான் ஒரு மாதிரியா இருக்கே தவிரச் சாப்பிட நன்றாகவே இருக்கு. வெங்காயச் சட்னி, தேங்காய்ச் சட்னியுடன் சாப்பிடலாம். நான் நினைச்சால் பண்ணுவதால் பதிவு எழுதுவதற்கேற்றாற்போல் படங்கள் எடுக்க முடிவதில்லை. பதிவில் என்ன எழுதுவது என்பதை முன் கூட்டி முடிவு செய்திருந்தால் தான் அதற்கேற்றாற்போல் சமைக்கும்போது படம் எடுக்கலாம். வீட்டில் சமைக்கும் அன்று படம் எடுக்க நினைவு வருவதில்லை.

   Delete
  2. கேழ்வரகு மாவு, அரிசி மாவு இவற்றோடு ஒரு டேபிள் ஸ்பூன் ரவையும் கலந்து வார்த்துப் பாருங்க. தோசை மொறுமொறுவென வரும். கோதுமை தோசை கூட நடுவில் சாஃப்டாகவும் ஓரங்களில் மொறுமொறுவெனவும் வரும். கோதுமை அப்பம் போலக் கேழ்வரகிலும் அப்பம் செய்யலாம். பொதுவாகக் கோதுமையில் செய்யும் எல்லாமே கேழ்வரகிலும் செய்யலாம்.

   Delete
 2. ஆமாம்... நீங்கள் செய்து, அவைகளைப் படமெடுத்துப் போட்டால் என்ன? இன்னும் நல்லா இருக்குமே.

  ReplyDelete
  Replies
  1. அடுத்தமுறை செய்யும்போது நினைவாகப் படம் எடுக்கணும். :)

   Delete
 3. நான் கேரளா பிராண்ட் 'தோசா பொடி' வாங்கி அதைக் கரைத்து இரவு முழுவதும் வைத்துவிட்டு மறுநாள் தோசை வார்த்திருக்கிறேன். அது நார்மலா நாம பண்ணற தோசை மாதிரி அவ்வளவு சுவையாக இல்லை. ஏதோ அரிசி மாவில் செய்ததுபோல் இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. பொதுவாக நான் இந்த ரெடிமேட் தயாரிப்புக்களைப் பயன்படுத்தியது இல்லை. ஒரே ஒரு முறை ஊட்டியில் இருக்கையில் மல்லிகா பத்ரிநாத்தின் அடை மாவு பாக்கெட் வாங்கினோம். ஏதோ அவசரம் அப்போ! அதை விட்டால் எம்டிஆர் ரவா இட்லி மிக்ஸ் வாங்கி இருக்கேன். நீங்கள் சொல்வது தோசைப் பொடி, இட்லிப் பொடி எல்லாம் அம்பேரிக்காவில் கிடைக்கும் பார்த்திருக்கேன். ஆனால் வாங்கிப் பார்க்கலை. அங்கேயும் பெண், பையர் இருவர் வீடுகளிலும் மிக்சி இல்லைனா கிரைண்டரில் அரைப்பது தான்.

   Delete
 4. கேழ்வரகு தோசை சாப்பிட்டதுண்டு. இட்லி இதுவரை கேள்விப்பட்டதில்லை.

  ReplyDelete
  Replies
  1. நானும் கேள்விப்படலை வெங்கட், ஜெயா தொலைக்காட்சியில் ஒரு பெண்மணி சிறுதானியச் சமையல்கள் மட்டும் செய்து காட்டுவார். அதிலே பார்த்தது தான்! நானாகச் செய்வது தோசை, ரொட்டி, களி, உப்புமா, கேழ்வரகு சேவை, கூழ், ராகிமால்ட், அடை போன்றவை தான். இட்லி செய்யலாம் என்பதும் எனக்கு அந்த நிகழ்ச்சியைப் பார்த்துத் தான் தெரியும்.

   Delete