எச்சரிக்கை

படிக்கும் அன்பர்கள் பதிவுகளை வேறெங்கும் காப்பி,பேஸ்ட் செய்து போடவேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Wednesday, August 15, 2018

உணவே மருந்து! கேழ்வரகு! 3

கேழ்வரகு உருண்டை: தேவையான சாமான்கள்

இந்த உருண்டைகளைச் சர்க்கரை போட்டும் பிடிக்கலாம். வெல்லம் அல்லது கருப்பட்டி போட்டும் பிடிக்கலாம்.

கேழ்வரகு மாவு ஒரு கிண்ணம்

சர்க்கரை ஒரு கிண்ணம், மிக்சியில் ஏலக்காய் சேர்த்துப் பொடியாக்கவும்.

நெய் அரைக்கிண்ணம்,முந்திரிப்பருப்புநெய்யில் வறுத்தது ஒரு டேபிள் ஸ்பூன்

அரைக்கிண்ணம் நெய்யை ஓர் உருளி அல்லது கடாயில் சூடு செய்யவும். நெய்யிலிருந்து புகை வரலாம். அப்போது கேழ்வரகு மாவைப் போட்டு நன்கு கலந்து கொள்ளவும். அடுப்பை அணைத்துவிட்டு அந்தச் சூட்டிலேயே மாவை வறுக்கவும். பொடிக்கப்பட்ட சர்க்கரைப் பொடியைச் சேர்க்கவும். நன்கு கலக்கவும். கைகளால் சிறு உருண்டைகளாகப் பிடிக்கவும். உடனே சாப்பிடலாம்.

வெல்லம்போட்டதும் இதே போல் தான். சர்க்கரைப் பொடிக்குப் பதிலாக வெல்லத்தைத் தூள் செய்து போட வேண்டும். வெல்லம் விரைவில் இளகிவிடும் என்பதால் பார்த்துச் சேர்க்க வேண்டும். மேற்சொன்ன ஒரு கிண்ணம் கேழ்வரகு மாவுக்கு முக்கால் கிண்ணம் வெல்லத்தூள் சரியாக இருக்கும். வெல்லம் தேவை இல்லை எனில் கருப்பட்டியிலும் செய்யலாம்.

கேழ்வரகு அப்பம்.

கேழ்வரகு மாவு  முக்கால் கிண்ணம், அரிசி மாவு கால் கிண்ணம், தேங்காய்த் துருவல் ஒரு டேபிள் ஸ்பூன்.
அரைக்கிண்ணம் வெல்லம் தூள் செய்தது நீரில் கரைக்க வேண்டும்

ஒரு சிட்டிகை உப்பு, ஏலக்காய்த் தூள் ஒரு டீஸ்பூன்

பொரிக்க நல்லெண்ணெயும் நெய்யுமாகக் கலந்து ஒரு சின்னக் கிண்ணம். அல்லது குழி ஆப்பச் சட்டியில் ஊற்றியும் எடுக்கலாம்.

கேழ்வரகு மாவு+அரிசி மாவு+ ஒருசிட்டிகை உப்பு நன்கு கலக்கவும். தேங்காய்த் துருவலையும் போட்டுக் கலக்கவும். பின்னர் நீரில் கரைத்த வெல்ல நீரை விட்டுக் கலக்கவும்.மாவு இட்லி மாவு பதத்திற்கு இருக்க வேண்டும். எண்ணெயும், நெய்யுமாகக் காய வைத்து சின்னக் கரண்டியால் மாவை எண்ணெய் காய்ந்ததும் எடுத்து ஊற்ற வேண்டும். உப்பிக் கொண்டு வரும். பின்னர் திருப்பிப் போட்டுவேக வைக்கலாம்.

குழி ஆப்பச் சட்டியில் ஊற்றுவது எனில் குழி ஆப்பச் சட்டியை அடுப்பில் வைத்து சூடேற்றிக் கொண்டு எண்ணெயை அதில் எல்லாக் குழிகளிலும் இரண்டு டீஸ்பூன் ஊற்றிச் சூடாக்கவும். ஒரு குழிக்கரண்டி மாவை எடுத்து எல்லாக் குழிகளிலும் ஊற்றவும். வெந்ததும் தானே மேலே மிதந்து வரும். அப்போது சின்ன இரும்புக் குச்சியால் திருப்பி விடவும். திருப்பிப் போட்டு வெந்ததும் எடுத்து வைத்துப் பரிமாறவும்.

கேழ்வரகு அடை!

கேழ்வரகு மாவு முக்கால் கிண்ணம்+கோதுமை மாவு கால் கிண்ணம்+அரிசிமாவு கால் கிண்ணம்.

இஞ்சி பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய், தேங்காய்த் துருவல், பெருங்காயம் சேர்த்து மிக்சியில் நன்கு அடித்துக் கொள்ளவும்.

வெங்காயம்(தேவையானால்) பொடியாக நறுக்கவும். அல்லது ஏதேனும் கீரை வகைகள் கூடப்பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம்.

கருகப்பிலை, கொத்துமல்லி பொடியாக நறுக்கியது

கலக்கத் தேவையான நீர், தேவைக்கு உப்பு

வார்த்து எடுக்க சமையல் எண்ணெய்

மேற்சொன்ன மாவுகளைத் தேவையான உப்புச் சேர்த்துக் கருகப்பிலை, கொத்துமல்லி சேர்த்து நன்கு கலக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் அல்லது எந்தக்  கீரை வகைகளையும் சேர்க்கவும்.மிக்சியில் அடித்த காரத்தைக் கலந்த மாவோடு சேர்க்கவும். அரைக் கிண்ணம் நீர் விட்டுப் பிசையவும். மாவு நன்கு பிசைந்தாற்போல் சப்பாத்தி மாவு போல் இருக்கலாம். தோசைக்கல்லை அடுப்பில் காய வைக்கவும். காய்ந்த தோசைக்கல்லில் வாழை இலையால் எண்ணெயைப் பரப்பவும்.  ஓர் இலையில் எண்ணெய் தடவி ஒரு உருண்டை மாவை எடுத்து கால் அங்குல கனத்தில் அடையாகத் தட்டி அதை வாழை இலையோடு சேர்த்து தோசைக்கல் நடுவில் போடவும். வாழை இலையை மெதுவாகப் பிரித்து எடுக்கவும். அடை நடுவில் ஓட்டை போட்டு தேவை எனில் ஓரங்களிலும் ஓட்டை போட்டு எண்ணெய் விடவும். அடை நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு வேக வைக்கவும்.

நெய், வெண்ணெய், வத்தக்குழம்பு,வெல்லம் ஆகியவற்றோடும் கொத்துமல்லிச் சட்னியோடும் இந்த அடை நன்றாக இருக்கும்.

படங்கள் இணையத்திலிருந்தே எடுக்க வேண்டாம் என்பதால் இணைக்கவில்லை. விரைவில் செய்து விட்டுப் படம் எடுத்துப் போடுகிறேன். 

12 comments:

 1. படித்தேன். இதுவரை எதுவும் செய்ததில்லை. எங்கள் அலுவலக ஆரோக்ய சமையல் ஹேமா சில சமயங்களில் செய்து எடுத்து வந்து சுவைக்கக் கொடுத்திருக்கிறார்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ச்ரீராம், பலரும் கேழ்வரகை ஒதுக்குகின்றனர். நம்ம ரங்க்ஸ் உட்பட. அவரும் அதிகம் சாப்பிட மாட்டார். கேழ்வரகு பிஸ்கட் எங்க குழந்தைங்களுக்குச் சின்ன வயசில் நிறையக் கொடுத்திருக்கோம்.

   Delete
  2. ஹிஹிஹி, ஶ்ரீராம், கலப்பையால் திருத்துமுன்னர் வந்துடுச்சு! :)))))

   Delete
 2. நிறைய சொல்லியிருக்கீங்க. ஆனால், கோதுமை மாவுக்கு உள்ள செய்முறைகளையே கேப்பை மாவுக்கு மாத்திட்டீங்களோ?

  நீங்க செய்யறதுக்குள்ள நான் செய்துவிட்டால் படங்கள் அனுப்பறேன். ஆனா படங்களோட போட்டாத்தான் இன்னும் நல்லா இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. நெல்லைத் தமிழரே,கோதுமை மாவு மட்டுமில்லை, மற்ற சிறுதானியங்களின் மாவுகளிலும் இப்படித் தான் செய்ய வேண்டும், செய்வார்கள். கூடக் குறைச்சுச் சேர்க்கலாமே ஒழிய மாறுதல் பெரிய அளவில் இருக்காது.

   Delete
  2. நெல்லைத் தமிழரே என்று போட்டாலும் நான் உங்களைவிட பத்து பதினைந்து வயசாவது சிறியவன்தான், உங்களுக்கு எத்தனை வயசு இருந்தாலும்... ஹா ஹா ஹா

   Delete
  3. எனக்கு ஆயிரம் வயசு! :P :P :P :P ஆதிவெங்கட்டையே நான் நீங்கனு தான் சொல்வேன். நேரில் பார்த்தால் அது வேறே! ஆனால் பொது இடத்தில் மரியாதை கொடுக்கறது தான் சரி. :)

   Delete
 3. கேழ்வரகு உருண்டை, பயத்தமா லட்டு மாதிரி செய்முறை இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. நெ.த. சர்க்கரை, வெல்லம் பாகு வைத்தும் உருண்டை செய்யலாம். உடைக்கக் கஷ்டமா இருக்கும், மற்றபடி எல்லா உருண்டைகளும் செய்முறை இப்படித் தான். பயத்தமாவு, கடலைமாவு, பொட்டுக்கடலை மாவு, ரவை, ஜவ்வரிசி, சிறுதானிய மாவுகள் அனைத்திலும் ஒரே மாதிரி செய்முறைதான் வரும்.

   Delete
 4. கேழ்வரகு உருண்டை சாப்பிட்டதில்லை. அடை அம்மா செய்து சாப்பிட்டதுண்டு.

  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், சின்ன வயசில் நிறையக் கேழ்வரகு அடை சாப்பிட்டிருக்கேன். இப்போ அவ்வளவு இல்லை. :)

   Delete
 5. இதுபோன்ற உணவு வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

  ReplyDelete